கருணீகர் நல்வாழ்வு – அக்டோபர் மாத வெளியீடு – பக்கம் எண் : 10,11,12,13.
வாசிப்புப் பழக்கமே – வாழ்வை வளமாக்கும் !
அண்மைக் காலமாக, நம்மிடையே புதிய நூல்களைத் தேடி வாங்குவதும் ,புதிய நூலை நூலகங்களில் எடுத்து வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகின்றன . அறிவியல் வளர்ச்சியால் அச்சுத்துறையில் புதியதொரு புரட்சியே மலர்ந்தது , நம்மிடத்தில் உடனே அது தொடர்பான மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் வளர்ந்தன . ஆனால், இந்த மகிழ்ச்சி நிலையானதானதாக அமையவில்லை . மின்னணு ஊடகம் – அச்சு ஊடகத்தின் பயன்பாட்டைக் குறையச் செய்தது. பெரும்பாலான செய்தித்தாள்களும் ,இதழ்களும் தொடர்ந்து நிமிர்ந்து நிற்க முடியாமல் சோர்வடைந்துள்ளன . சிலர் ஏறத்தாழ அச்சிடும் பணியையே நிறுத்திவிட்டனர். மக்களிடத்தில், வாசிப்புப் பழக்கம் குறைந்த அளவில் தள்ளாட்டாத்தில் இருந்து வருகிறது என்று பலர் கண்டுள்ளனர் .
வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதற்குக் , சில காரணங்கள் உள்ளன. பெற்றோர்களுக்கு வீட்டில் புத்தகங்களை எடுத்துப் படிக்கும் பழக்கம் அவர்களுக்கும் இல்லாததால், பிள்ளைகளும் அப்படியே அமைந்து விடுகின்றனர் . நூலகம் சார்ந்த கல்வி முறையைக் கணினி வகைத் தொலைபேசிகளால் நமது கல்வித் திட்டத்தில் அழுத்தமாக அமையவில்லை .இணையவழித் தோற்றங்களும் வாசிப்புப் பழக்கத்தை வற்றச் செய்துவிட்டது . தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றே போதும் என்று பெரும்பான்மையர்வார் கருதுகின்றனர். ஆனால், செய்தித்தாள்களுக்கும் , இதழ்களுக்கும் மாற்றுக் கருவியாகத் தொலைக்காட்சி அமைய முடியாது . செய்தித்தாள்களிலும், இதழ்களிலும் மட்டுமே பல்வேறு தலைப்புகளில் அரிய தகவல்கள் களஞ்சியமாகக் குவிந்துள்ளன .
உடலுக்கு நடைப்பயிற்சி ,உடற்பயிற்சி போலவே வாசிப்பு என்பது நம் மனதிற்கும் அறிவுக்குமான உடற்பயிற்சியாகும் என்று ரிச்சர்ட் ஸ்டீல் எழுதினார் . “வாசிப்பு ஒரு முழுமையான மனிதனை உருவாக்குகிறது” என்பது பிரான்சிஸ் பேகனின் கருத்தாகும். “ இந்தத் தொடரை எனக்கு ஏழாம் வகுப்பில் ஆசிரியர் பலமுறை சொல்லிக் காட்டினார் .அனைத்துத் தகவல்களும் கிடைக்கும் ஒரே இடம் நூலகம். நூலகம் இவ்வுலகத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும். “ என சென்னையிலுள்ள பிரிட்டிஷ் நூலகக் கூடத்தில் ( British Council Library ) கூறுகிறது.
ஒருவருக்கு வாழ்க்கைக் குறித்த தமது கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றி, வெற்றி, ,ஊக்கம் ,உறுதி ,மகிழ்ச்சி எனும் நெடிய பாதையை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. காலம் எனும் பெருங்கடலில் நம்மைக் கரை சேர்க்கும் கலங்கரை விளக்குதான் புத்தகங்கள் என்றார் எட்வின் பெர்சி . “பிறர் தம்மை ஏமாற்றும்போது, புத்திசாலி மனிதன் புத்தகங்களின் துணையை நாடுகிறார்” என்பது ஆண்ட்ரூ லாங்கின் கூற்று பொன்மொழியாகும் .
நமக்கு அவ்வப்போது ஏற்படும் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிப்பதற்கும். நம் பொழுதை நல்ல முறையில் கழிப்பதற்கும் புத்தகங்கள் உதவுகின்றன . நூல்கள் வாயிலாக ஒருவர் பெறும் அறிவு அவரை பிறருடன் திறம்பட உரையாடச் செய்வதுடன், சமுதாயத்தில் தனது நிலையை உயர்த்தவும் செய்கிறது. வாசிப்பு நம் அறிவுக்கு வளமூட்டுகிறது என்பதை வெளிப்படையாக நாம் காணலாம் .
எனவே முனைப்புடன் ஆர்வம் ததும்பப் படிப்பது மிகவும் அவசியமானதாகும். இயல்பான ஒரு பேச்சாளராக உரையாடும் திறமை கொண்டவராக உருவாக வேண்டும் , ஒருவர் தீவிர வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். பேருந்துகளிலும், தொடர்வண்டியிலும் புத்தகங்களைப் படிப்பது கண்களுக்கு கேடு விளைவிக்கும்.
சில நாட்கள், நமக்கு சோர்வுடைய நாளாகத் தோன்றும். நல்ல புத்தகங்கள், இந்த மனநிலையை மாற்ற உதவும். ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதைக் காட்டிலும், ஒரு சிறந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நம் மனம் புத்துணர்வு அடைகிறது என கூறப்படுகிறது. மேலும், நாம் படிப்பது சிறந்த புத்தகமாக அமையுமானால் , அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம், தற்போது, அனைத்து வயதினருக்கும் ஏற்ற மற்றும் அனைத்து சூழலுக்கும் பொருத்தமான நூல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.
மன அழுத்தம் நிறைந்துள்ள இன்றைய காலநிலையில் , புத்தக வாசிப்பு நம் மனத்திற்கு ஆறுதல் அளிக்கிறது. இங்கிலாந்தில் உள்ள சசக்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, நாளொன்றுக்கு ஆறு நிமிடங்கள் மட்டுமே படித்தால், நம் மன அழுத்தம் 68 விழுக்காடு குறைகிறது என்று ஆராய்ந்து அறிந்துள்ளனர் .
மற்றொரு ஆய்வில், நாளொன்றுக்கு 30 நிமிடம் புத்தகம் படிப்பதால் நம் வாழ்நாள் மேலும் இரு ஆண்டுகளுக்கு அதிகரிக்கிறது என்று யேல் பல்கலைக்கழக பொது நல வாழ்வுத்துறையில் ஆய்வாளர்கள் உரைக்கின்றனர். புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தால், நம் மூளை சுறுசுறுப்புடன் செயல்படுவதுடன், நினைவாற்றல் திறனையும் அதிகரிப்பதற்கும் உதவுகிறது. இதனால் மறதி போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குறளில் இலங்குநூல் ,நுண்ணிய நூல் ,உரைசான்ற நூல் என்று படிக்கும் நூல்களைப் பாராட்டிக் குறிக்கப்பட்டள்ளது .தொடர்ந்து புதிய நூல்களை ஆர்வத்துடன் நாம் படிப்பதனால் நாம் சில நேரங்களில் வருந்தித் துயர்ப்படும் தனிமை ,வெறுமைகள் நீங்கி விடுகின்றன .இக்கருத்தை சீனப் பல்கலைக்கழகம் ஒரு துறையாகவே ஆராய்கிறது .
எல்லாவற்றுக்கும் இறுதியான முடிவில் உலகமே நிலைகுலைந்து அழிந்த நேரத்தில் தன் தனிமையைப் போக்குவதற்காகத் திருவாசகத்தை ஒரு பிரதியாகச் சிவபெருமான் எடுத்துக்கொண்டார் என்று மனோன்மணீயம் சுந்தரனாரின் வரிகள் படிப்பதன் அவசியத்தை படைத்தவன் எப்படிக் கடைப்பிடிக்கிறான் என்று பாடியுள்ளார் .
கடையூழி வரும் தனிமை கழிக்க அன்றோ அம்பலத்தின்
உடையான் உன் திருவாசகத்தில் ஒரு பிரதி கருதியதே !
– தமிழ்த்தாய் வாழ்த்து.
எனக்குத் தனிமை என்பதே தெரியாது ஏனென்றால் என்னைச் சுற்றிலும் நிலையான நண்பர்கள் புத்தக வடிவத்தில் என்னோடு எப்போதும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று இராபர்ட் சதே பாடியுள்ளார் .
பண்புள்ள நண்பனிடத்தில் பழகுவது ஒரு நூலைப் படிப்பது போல என்பது திருக்குறள் .தளர்ந்திருந்த தமிழ்க்கடல் உ வே சா அவர்களை வீட்டு மாடிக்கு உறவுக்கார இளைஞன் கைபிடித்து அழைத்துச் செல்லும் போது படி படி என்றானாம் .உ வே சா சிரித்துக்கொன்டே நீ சொன்ன பிறகு தெரிகிறது படி படி என்று படித்தால் தான் மேல் ஏறிச்செல்லலாம் என்றாராம் .
தனி வரலாற்று நூல்களைப் படிப்பது மிகவும் பயனளிக்கும். அது ஒருவரின் வாழ்வில் புதிய இலக்குகளை உருவாக்கும் . மேலும் நாம் நம்முடன் வாழ்ந்து வரும் பலரைப் பற்றி மட்டுமல்லாமல், நீண்ட நாட்களுக்கு முன்னர் வாழ்ந்து மறைந்த அறிஞர்களைப் பற்றியும் அறியலாம். அனைவராலும், அயல்நாட்டுப் பயணம் மேற்கொள்ள முடியாது. ஒரு பயண நூல் , பல நாடுகளைப் பற்றிய அரிய பல தகவல்களை நமக்கு அளிக்கும்.பல காட்சிகளை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் .
நாளும் மாறும் குணங்களும், வேண்டாத நடைமுறைகளும் நிறைந்துள்ள இன்றைய நிலையில் , புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் ஒன்றே நம் வாழ்வை வளம்பெறச் செய்யும். வாசிப்புப் பழக்கம் வாழ்க்கைக் குறித்த நேர்மறையான சிந்தனையை உருவாக்கும். பெருந்தலைவர்களின் வாழ்க்கை நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். வாசிப்புப் பழக்கம் நம் வாழ்க்கையை மாற்றி நமக்கே நமக்கு என்ற புதுவித மகிழ்ச்சியளிக்கும் . சிறந்த வாழ்க்கை முறைக்குப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் மிகவும் இன்றியமையாததாகும்.
வாசிப்பு என்பது நாம் நாளும் செய்யும் உடற்பயிற்சியோ தியானப்பயிற்சியோ என்ற அளவில் மட்டும் இல்லை . நம்மைச் சிறப்பான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு தெளிவான பழக்கமாகும். வாசிப்புப் பழக்கம் இல்லாததால், நாம் எவற்றையெல்லாம் இழந்தோம் என்று பலர் அறிவதில்லை.விற்பனையில் நலம் காணும் நூல்களின் விலை உயர்வால், வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது என்று சிலர் கூறலாம்.
புத்தகங்களுக்கான தேவை குறைவதால், சில புத்தகங்களின் விலை உயர்ந்துள்ளது என்று மாற்றிச் சொல்ல இடமுண்டு . எனினும், சில நல்ல புத்தகங்கள், உரிய விலையில் கிடைக்கின்றன. நூலகங்களையும் நாம் நாடலாம். பிறர் படித்த நல்ல புத்தகங்கள்கூடக் குறைந்த விலையில் பெறலாம் . அயல்நாட்டு நூல்களின் இந்தியப் பதிப்புக் குறைவான விலையில் விற்கப்படுகின்றன.
எனினும், சிறிய நகரங்களிலும், சிற்றூர்களிளும் உள்ள மேனிலைப் பள்ளி நூலகங்கள், தகுதியான நூலகர்களின்றிப் பெயர் அளவில் மட்டுமே இயங்குகின்றன. இதனால், மாணவர்களுக்கு, வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் குறித்த கூடுதல் தகவல்களை நூலகத்தில் திரட்ட வாய்ப்பில்லாமல் போகிறது.
கல்வியறிவில் நாம் மேலும் உயர்ந்ததாக வேண்டும் . வெற்றிகரமான எழுத்தறிவுத் திட்டங்களால், மூத்த வயதினரிடையே மட்டும் எழுத்தறிவு நம் நாட்டில் அதிகரிக்கவில்லை. சமுதாயத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அளிப்பதற்கான தேவை பெரிதாக உயர்ந்துள்ளது . மேலும், ஆக்கபூர்வமான சமுதாய மாற்றத்திற்கான நம் பங்களிப்பையும் அதிகரித்துள்ளது ” என்று தேசிய கல்விக் கொள்கை குறிப்பிட்டுள்ளது .
கணினிமயக் கற்றலை நாம் அனைவரிடமும் கொண்டுச் சேர்க்க வேண்டும். ஒரு தலைமுறையில் முதன்முதலாகப் படிப்பவருக்குப் பொதுவாக படிக்கும் பழக்கம் குறைவாக இருக்கும். எழுத்தறிவு மற்றும் சமூக கல்வித் திட்டங்களுக்கான வெற்றி வாசிப்புப் பழக்கத்தையே சார்ந்துள்ளது . வாசிப்புப் பழக்கம் குறைவதால், நம் வாழ்க்கைத் தரமும் குறையும்.
தொழில்நுட்ப வளர்ச்சியால், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக அழிக்க முடியாது. மின்னணுப் புத்தகங்களும் தற்போது பயன்பாட்டில் உள்ளன. பெற்றோர்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்து, கல்வி முறை நூலகம் சார்ந்ததாக இருந்தால் மட்டுமே இன்றைய தலைமுறையினரிடம் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை மேலும் கொண்டு வருவது நல்ல முன்னேற்றமாக மலரும் என்றும் சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர் .
நான் தாய்வான் நாட்டிற்குச் சென்றிருந்த பொழுது ,என்னை அழைத்துச் சென்ற உரைபெயர்ப்பாளர் நண்பர் சொன்னார் ,உலகத்திலேயே இந்த நூலகம் தான் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டேயிருக்கும் ,அன்றிரவு 11 மணியளவில் இளைஞர்கள் பலர் படித்துக் கொண்டிருந்த காட்சியைக் கண்டு மலைத்தேன் .
நாட்டின் வள வாழ்வுக்குப் பொருளாதாரம் போலவே நூலாதாரமும் முதன்மை பெறும் .

Add a Comment