மாமணியைத் தொலைத்தோமே !
1958 ஆம் ஆண்டிலிருந்து மலர்மாமணி புலவர் திலகம் பெருவளப்பூர் இளஞ்செழியன்
( 22-08-1938 – 31.10.2021)
அவர்களைப் புலவர் பொன்னிவளவனுடன் இணைந்து கரந்தையில் பயின்ற நிலையிலேயே அறிவேன் .
மாசு மருவற்ற மனம் –
மான மறவர்க்கேயுரிய வீறுததும்பும் திருமுகம் ,
வாய் திறந்தால் வசனத்தையும் கூடக் கவிதை வீச்சாக வழங்கியவர் .
என் குடும்பத்துக்குப் பெரிதும் வேண்டியவர் .
மலேசியத் திருநாட்டுத் தமிழர்களின் மனம் நிறைந்தவர் .
எழுத்தாளர் பேரவையினருக்குத் தமிழக அரசின் சார்பில் பெருவிருந்து வழங்கியவர் .
மாநாட்டு மலர்களை வடிவாக்குவதில் இவருக்கு நிகர் எவருமில்லை என்ற நிலையில் மலர்மாமணி என்றே அறிஞருலகம் அழைத்து மகிழ்ந்தது .
ஒப்புரவாளர் பேரவையின் நிறுவனர் தலைவர் .
வண்ண மலர் பூத்துக் குலுங்கும் வளமார்ந்த சோலை போல, புலவர் மாமணி உருவாக்கிய தமிழ் மலர்கள் கருத்து மணம் குறையாமல் நிறம் பொலிய மிளிர்ந்தன.
ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர் போன்ற அழகிய மலர்கள் இவர் கைவண்ணத்தில் பூத்த இலக்கிய நறுமலர்கள் எனலாம்.
இவரால் தோற்றுவிக்கப்பட்ட
இந்திய – மலேசியப் பண்பாட்டுக் கழகம் உறவுப் பாலமாக உலகத் தமிழரிடையே விளங்கி வருவதையும், திருக்குறள் கூறும் விருந்தோம்பலுக்கு இலக்கணமாக இன்றும் அவர் இல்லம் இலங்கி வருவதையும் நண்பர்கள் அறிவார்கள்.
ஒப்புரவாளர் மாநாடு நடத்திய பெருமை இவரையே சாரும்.
ஒப்புரவாளர் என்ற சொல்லை நாவில் நடமிடச் செய்த புகழும் இவருக்கே வாய்த்தது.
தமிழர் வாழும் நாடுகளிலெல்லாம் சற்றுலா மேற்கொண்டு, தமிழுறவு வளர்த்து வரும் தகைமையைத் தமது நோக்கமாகக் கொண்டு உலா வந்தவர் .
பள்ளி ஆசிரியர், நூலாசிரியர், இதழாளர், நடிகர், புலவர், கவிஞர் என்று பன்முகங்களில் படைப்பு வேந்தராக விளங்கிய மலர்மாமணி இளஞ்செழியன் – நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் நட்புக் கனியாகவும் அவர் நிறைநாள் வரை திகழ்ந்தவர் .
அமைச்சரோடு நெருங்கிப் பழகியதோடு, அஞ்சாமல் தன் கருத்தைப் பலமுறை உரிமையோடு வெளியிட்ட மாட்சியும் இவருக்கு வாய்த்த தனித் திறமையாகும்.
அதியமானும் – ஒளவையாரும் போல நாவலர் நெடுஞ்செழியனும் – புலவர் இளஞ்செழியனும் என்று பெருமிதமாக நாவலர் ஒருமுறை நயந்து பேசிய நிகழ்ச்சி என் நினைவில் இன்றும் நிழலாடுகிறது.
நாவலருடன் நெருங்கி நெஞ்சு பிணைக்கும் தோழனாக , தொண்டனாக வாழ்ந்தார் .
எங்கள் பரிவும் – தொடர்பும் அப்படியே என் மகன் அருள் மீது அவருக்கு முழுவதுமாகப் படர்ந்திருந்தது .
ஒரு நாளைக்கு இருமுறையாவது அருளுடன் பேசுவார் .
அருள் எழுதும் ஒவ்வொரு எழுத்தையும் பாராட்டுவார் .
அவருடைய முடிவு நெஞ்சைப் பிழிகிறது !
மலர் உதிர்ந்தது !
மாமணி புதைந்தது !!
ஆறாத துயரத்தோடு
ஒளவை நடராசன்

Add a Comment