அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 82
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர்,
மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
மலையினும் மாணப் பெரிது !
படித்த பலவற்றைத் தொடர்ந்து எழுதி வந்தாலும், அனைத்திற்கும் சிகரமாக விளங்குவது முத்தமிழறிஞர் கலைஞரின் படைப்புலகம்.
நினைவு தெரிந்த நாளிலிருந்தே தினத்தந்தி, தினமணி நாளேடுகளோடு முரசொலி தகத்தகாயாமாக இல்லத்தில் ஒளிரும்.
தொடக்கமாக
” இன்றைய செய்தி
நாளைய வரலாறு ”
என்ற மகுடத் தொடருக்கு ஈடேது ?
முரசொலியில் உள்ள தலையங்கங்கள், முத்தமிழறிஞர் உரை, உடன்பிறப்புக்கு கடிதம் , மறவன் மடல் நீட்டோலை ஆகியவைகளை வாய்விட்டு உரக்கப் படிப்பது என்னுடைய மாறாக் கடமையாகும்.
இளங்கலை தமிழிலக்கிய மாணவனாக இருந்தபோது என் நெருங்கிய நண்பர்கள் இரவிசங்கர் (அரக்கோணம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.கே. இராசு மகன்),
பாபு (கல்லூரிக் காலத்திலேயே சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் திமுக மாணவரணித் தோழராக சிறைசென்ற செம்மல்)
முத்தமிழ் அறிஞரைப் பற்றிப் பேசாத நாளில்லை எனலாம்.
இரவிசங்கர் பழைய சட்டமன்ற விடுதி அறை 50-இல் நிலையாக அவர் தந்தையுடன் தங்கியபடியே கல்லூரிக்கு வருவதுண்டு.
இரவி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர், ஆங்கில வல்லுநர் நாகரத்தினம், அப்பாவின் மனங்கவர்ந்த கவிஞர்கள் குடியரசு ,புலவர் ஆடலரசு மற்றும் எண்ணற்ற திமுக நண்பர்களையும் அன்பர்களையும் சந்தித்து அளவளாவியுள்ளேன்.
நண்பர் இரவி வாயிலாக அறிமுகமான சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதியும் ஆவார் .
முத்தமிழ் அறிஞரின் நூல் வெளியீட்டு விழாக்களுக்குத் தவறாமல் கலந்து உரைகளைக் கேட்பதில் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
நாங்கள் பெசண்டு சாலையில் இருந்த போது அம்மாவும் ,அப்பாவும் அக்காலங்களில் முத்தமிழ் அறிஞரைக் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசியது பற்றி அடிக்கடி குறிப்பிடுவார்கள்.
சில நாள்களில் அவர் காலை நடைப்பயிற்சி உலா வந்ததைக் கண்டதுண்டு.
என்னுடைய கண்ணும் கருத்தும் பதித்த கருத்துக் கோவையில் 7.9.1987 ஆம் ஆண்டு குறித்திருந்த பகுதி:
கணக்குகள் பலவிதம்.
கணக்குப் பார்ப்பவரும் பலவிதம். பாட்டாளியின் வியர்வையிலேயே முதலாளி பார்ப்பதுதான் பணக்கணக்கு.
கூட்டாளி தன் அன்புக்குக் கூலி என்று கேட்பதுதான் பதவிக்கணக்கு.
பாவையவள் பாக்கி விழும் கடனுக்கு அடுக்களையில் கரிக்கோட்டால் கிழிப்பது தான் பால் கணக்கு; தயிர் கணக்கு.
பாவம் – பிள்ளை பள்ளியிலே தப்பிக்க வேண்டும் என்று பெற்றோர் போட்டு தருவதுதான் வீட்டுக் கணக்கு.
பாவ புண்ணியம் பாராத அரசியல் மேதையெல்லாம் மக்களிடம் போடுவதோ ஓட்டுக் கணக்கு.
மந்தையிலே மாட்டுக் கணக்கு; ஆட்டுக் கணக்கு !
பொந்தையிலே மட்டும் போடாதே தப்புக் கணக்கு !
முடிப்பு தான் மிக அருமை.
அதேபோல்
காற்றின் பெருக்கல் புயலாகும்; நாற்றின் பெருக்கல் பயிராகும்; இனிய சாற்றில் பெருக்கல் சுவையாகும்;
ஆற்றின் பெருக்கல் புனலாகும்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் இது திருக்குறள்.
வகுத்தலும் பெருக்கலும் வேண்டாவாம் கூட்டலும் கழித்தலும் ஒழித்து விடின் இது என் தீர்ப்புக்குறள்!
நேருவைப் பற்றி..
இடி இடிக்கும் பேச்சில் –
இளமைத் துடி துடிக்கும் எழுத்தில் – தேன் ஒரு படி இனிக்கும் பண்பில் – அதிர் வெடி முழக்கும் செயலில் – விடாப்பிடியிருக்கும் குணத்தில் – விடுதலைக் கொடியிருக்கும் கையில் – கொஞ்சம் முடியிருக்கும் தலையில்.
படை துள்ளி வரும் –
பகை அள்ளி வரும் –
எரி கொள்ளி வரும் –
கரும்புள்ளி வரும் –
சீனக்கள்ளி வரும் –
எனச் சிலர் எள்ளி வரும்போது – விடிவெள்ளி வரும்
எனப் – பகை கிள்ளி எறிந்தான் – இன்று – திருப்பள்ளி அயர்ந்தான்.
12.04.1973 அன்று புறம்புமலையில் நடைபெற்ற பாரி விழாவில் தமிழ் வளர வழிநடைப் பயணம் என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில்
திரையுலக அண்ணா என்ற தலைப்பில் அப்பா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் கவிதை படித்ததை எப்பொழுதும் சொல்லி மகிழ்வார் !
பதவியொரு முள்மாலை !
இலக்கியப் பணி எனக்கு முல்லைச் சரம் !
பதவியொரு நெடும் பள்ளம் ! பொதுப்பணி எனக்கு பொதிகைக் குன்றம் !
கலைஞர் என்றாலே நாங்கள் கல்லூரியில் அவரின் மூன்றெழுத்து கவிதையை தான் முழங்கிப் பேசுவோம்.
அவருடைய கவிதை தான் வாழ்வின் கொள்கை முழக்கமாகவே மிளிர்ந்தது.
சொல்வதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம்.
பொய்மை தடுப்போம். வாய்மை வளர்ப்போம்.
ஏழைகள் சிரிப்பே இன்பம் என்போம். எல்லோர்க்கும் எல்லாம் கிடைத்திட உழைப்போம்.
வையம் தழைக்க வறுமை தொலைப்போம்.
இத்தனை வருடம் ஒருமுறை பாடுதல் இன்றி வளையாப் பணியாய் வாழ்வினில் கொள்வோம்.
அப்பா அடிக்கடி சொல்வது காக்கைப்பாடினியார், நச்செள்ளையார் பாடி முடித்த வரி செங்களந்துழவுவோள் சிதைந்து வேறாகிய படு மகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிது வந்தனளே! என்று புறநானூறு நிறைவுற்றது.
ஆனால் சங்கத் தமிழில் முத்தமிழறிஞர் கலைஞரின் உரைவிளக்கம் புறநானூற்று வரிகளைத் தாண்டிய சிந்தனை ஒளி இவ்வரிகளில் எப்புலவரும் நினையாத வகையில் புலவர் கோமகனாக கலைஞரின் வரிகள்:
“அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை. அடடா ! கருத்தெறியப் பொய் சொன்ன கயவனெங்கே ?
வாளிங்கே ! அவன் நாக்கெங்கே ? ”
என்றபோது தமிழ் உலகமே எழுந்து நின்று கை குவித்தது என்பார்.
தமிழ் இலக்கிய மாணவர்களாகிய எங்களுக்கு வகுப்பில் எடுத்த சங்கப்பாடல்கள் புரிந்ததை விட முத்தமிழறிஞர் வரைந்த சங்கத் தமிழ் நூல் படித்த பிறகுதான் புரியத் தொடங்கியது.
பாடலின் நலம், வளம் அறிந்து மகிழ்ந்தோம்.
உயரிய தலைப்புகளாக வாடைக் காற்றில் வாடிய தலைவி, பஞ்சணையில் அரசி; பாசறையில் மன்னன்; பழி தீர்த்துப் பகை முடித்தாள், நாடு வாழவும், நலிவு தீரவும், எமக்குத் தென்றல்; எதிரிக்கோ புயல் ! கிலுகிலுப்பை வழங்கும் கிறுகிறுப்பு, நிறைவுக்கிடையே ஒரு குறையும் உளதே !
சங்கத் தமிழிலே நீள்வையம் பெறுகின்ற வளத்திலெல்லாம் சிறந்த வளம்; நிற்காமல் ஊற்றெடுக்கும். கல்வி வளம் ஒன்றேதான் எனக்கண்டு கற்காதோர் வாழும் நாட்டில் பிற வளமெல்லாம் பாழே என்றான்.
ஆசிரியர்களுக்கு ஊறேதும் நேராமல் ஊதியம் மிகுதியாய் அளித்திட வேண்டும் என்றும் எழுதுகோல் பிடித்த விரலை ஒத்திக்கொள்வோம் என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன் புறநானூற்று வரிகளைத் தேன் வரிகளாக முதல்வர் தீட்டியிருந்ததை எந்நாளும் மறவோம்.
என் அன்னை விரும்பாமல் தான் நான் தமிழ்ப் படிக்கச் சேர்ந்தேன் .
படிக்கும்போதே விளம்பர நிறுவனத்தில் நல்ல பதவியில் இருந்தேன் .
பிறகு விளம்பர நிறுவனம் மெலியத் தொடங்கியது .
திருமணம் மகிழ்ச்சியாக நடந்தது .
என் துணைவியார் சிறந்த கணிப்பொறியாளர் , பிறகு இருவருமாக நியூசிலாந்து சென்றோம் .அங்கும் வாய்ப்பில்லை .
பிறகு மின் உருவாக்க திட்டத்தில் மலேசியா வணிக வேந்தர் குமாரோடு பணியாற்றினேன் .
அந்நாளில் தனியார் நிறுவனம் வளம் கொழித்தது .
அரசுடன் இணைய முடியாது போயிற்று .
இப்படிச் சுழன்ற போது என் தந்தையார் முத்தமிழ் அறிஞர் கலைஞரிடம் ( 27 – 6 – 2008 ) அன்று அழைத்துச் சென்றார் .
உன் அப்பாவைப் போல உனக்கு அரசு வேலை வேண்டுமா என்று கேட்டு மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராக ( 6 – 11 – 2009 ) என்னைப் பணி அமர்த்தினார்
.என் தந்தைக்கு வாழ்வு தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் .
எனக்கும் அளித்தது – எனக்கு வாய்த்தப் பெரும்பேறு .
வாழ்விக்க வந்த தலைவரை வணங்கிப் பணியில் சேர்ந்தேன் .
அந்த வாழ்வுதான் இந்த நாளிலும் தொடர்கிறது .
அந்த மனம் மலையினும் மாணப்பெரிது – நிலத்தினும் பெரிதே !
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல்
கரும் கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே (பரிவே )
வாழ்க முத்தமிழ் அறிஞர் !
வெல்க முத்தமிழ் அறிஞர் மரபும் – மாட்சியும் !
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (6)
தொல்காப்பியச் சொல்லதிகார ஒலைச்சுவடி
தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார், தஞ்சைமன்னர் சரபோசியால் நிறுவப்பெற்ற சரசுவதி மகால் நூல்நிலையத்தின் மதிப்புறு மேற்பார்வையாளராக இருந்தபோது, தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு ஓலைச்சுவடி உரை ஒன்று இருப்பதை அறிந்தார்.
அதன் தமிழ்ப்பிரிவுத் தலைவர் பண்டித எல். உலகநாதப்பிள்ளையும், பண்டிதமணி மு. கதிரேசஞ்செட்டியாரும் அதைக் கரந்தைத் தமிழ்ச்சங்கம் வழியே பதிப்பிக்கலாம் எனப் பரிந்துரைத்தனர்.
அப்போது சங்க அமைச்சராகவும் தமிழ்ப்பொழிலின் ஆசிரியராகவும் இருந்த திருவையாற்று அரசர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் அரங்க வேங்கடாசலம் பிள்ளையிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப் பெற்றது.
அது தொடர்பான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
இத்தகையதொரு சூழலில்தான் கரந்தைத் தமிழ்ச்சங்கத்திற்கு ஒளவை வந்துசேர்ந்தார்.
கரந்தையில் முதன்முதலாகக் காலடிவைத்த ஒளவையவர்கள் முன்னரே ஓரளவு அறிமுகம் பெற்றிருந்த தலைமையாசிரியர்
சிவ குப்புசாமியாரை சந்திக்கவே, அவர் சங்கத்தலைவர் தமிழவேளுக்குத் துரைசாமியாரை அறிமுகப்படுத்தினார்.
.
ஒருவரைப் பார்த்த அளவிலே அவரின் திறமையை அளந்தறியும் ஆற்றல்மிக்க தமிழவேள், சுந்தர துரைசாமியாரின் நோக்கையும் போக்கையும் உரையாடல் வழியே உணர்ந்து, அவரைக் கரந்தைத் தமிழ்ச்சங்க ஆசிரியராகப் பணியமர்த்தினர்.
திண்டிவனம் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது தம் தமிழாசிரியருக்காகச் சூளாமணி ஒலைச்சுவடியைப் படித்துப் படியெடுப்பதில் ஓரளவு பயிற்சிபெற்றிருந்த துரைசாமியாருக்குத் தெய்வச்சிலையார் உரையுள்ள ஓலைச் சுவடியைப் படிப்பதும், அதனைப் பெயர்த்தெழுதுவதும் முதன்மைப் பணியாயின.
அத்துடன் சங்க நூலகத்தின் பொறுப்பும் தரப்பெற்றது.
இவ்விரண்டும் ஒளவைக்கு மனம் விரும்பிய பணிகளாக அமைந்தன.
“கவியரசர் கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சரராய் இருந்தபோது தமிழ்ப்பொழில் என்னும் திங்கள் வெளியீடு தோன்றிற்று.
அதன் இரண்டாமாண்டில் எனக்குத் தமிழ்ச் சங்கத்தின் தொடர்புண்டாயிற்று .
சங்கக் கல்வி நிலையத்தில் ஆசிரியர் பணியும் நூல்நிலையப் பணியும் புரியும் பேறு எனக்குக் கிடைத்தது.”
ஒளவை படியெடுத்த ஓலைச்சுவடி நிலை
இவ்வுரைச்சுவடியைப் பெற்றுப் படியெடுக்க முற்பட்டபோது, விழுமிய பொருள்வளம் சான்ற இவ்வுரை கற்றறிஞர் எவராலும் எழுதப்பெறாது கூலிக்கு எழுதுவோர் எவராலோ பிழை மலிய எழுதப்பெற்றிருப்பது புலனாயிற்று.
ண ன ந வேறுபாடுகளும், ல ழ ள வேறுபாடுகளும் அறியாமல் எழுதிய இடங்கள் பலவும், ஒருமை, பன்மை முடிபுப் பிறழ்ச்சிகளும் ஆங்காங்கே காணலாயின.
சிலவிடங்களில் உரைப்பகுதிகள் இல்லை; சில இடங்களில் அவை நிலைமாறியும் காணலுற்றன.
இவ்வோலைச்சுவடியின் கையெழுத்துப் படி ஒன்றும் சரசுவதி மகாலில் கிடைத்தது.
அதை எழுதியவர், சுவடியுரையுடன் தமது உரையையும் இடைச்செருகியிருந்தார்.
அது முற்றிலும் பயன்படவில்லையென்றாலும், சுவடியுரையில் தெளிவில்லாமலிருந்த சில பகுதிகளைச் செப்பம் செய்ய உதவியது.
அரித்துவாரமங்கலம் பெருநிலக்கிழார் கோபாலசாமி இரகுநாத இராசாளியார் அவர்கள் வீட்டிலிருந்து பெற்ற ஒலைச்சுவடியுரையும், மேற்கூறிய உரைகள் போன்றே பெரிதும் உதவவில்லை.
எனினும், இது அவற்றை நோக்கச் சிறிது முற்காலத்தில் எழுத பெற்றதாகத் தோன்றியது.
ஓலைச்சுவடிப் பெயர்- பிழையும் திருத்தமும்
இவற்றின் இறுதியில் ஆத்திரேய கோத்திரம் என்னும் சொற்கள் இருந்தன;
ஆதலால் இது ஆத்ரேய கோத்திரம் பேராசிரியர் உரை என்றும், பேரறிஞர்சிலர் எழுதியுள்ளது பற்றிக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடான தமிழ்ப்பொழில் துணர் 1, மலர் 4- ல் தொல்காப்பியம்-சொல்லதிகாரம் , பேராசிரியர்உரை என்று முதன்முதலில் வெளியாயிற்று.
இந்நிலையில் , சிதம்பரம் மீனாட்சி தமிழ்க்கல்லூரித் தலைவர்
டாக்டர் உ வே சாமிநாதையரிடம் தெய்வச்சிலையார் உரைச்சுவடி ஒன்று இருப்பதையறிந்த அரங்க வேங்கடாசலம் பிள்ளை அச்சுவடியைப் பெற்றுவருதற்காக ஒளவையவர்களை அவரிடம் அனுப்பிவத்தார்
ஒளவை உ.வே.சா. முதல் சந்திப்பு :
டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் ஔவையிடம் தெய்வச்சிலையார் உரைச்சுவடியைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்;
அதைக்கேட்டு மகிழ்ந்த உ.வே.சா ,
“நீங்களும் பழைய நூல்களைக் கண்டு ஆராய்ச்சி செய்யலாம் ; உங்களிடம் உரிய தகுதியுள்ளது” என வாழ்த்தினார்.
அந்தச் சுவடியை வைத்து ஒப்புநோக்கி நூலின் பெயரையும் ஐயர் அவர்கள் தந்த ஏட்டின் முன்னும் பின்னும் கண்டவாறு தெய்வச்சிலையார் உரை எனக் கொள்ளலாயிற்று.
சுருங்கக்கூறின் இவ்விரண்டாம் ஏடு நூலிற்குப் புத்துயிர் தந்தது எனலாம்.
அக்காலைக் கவியரசர் எனக்குத் தமிழ் கற்பிக்கும் பேருதவியைச் செய்தார்கள்.
தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குத் தெய்வச்சிலையார் எழுதிய உரையை வெளியிடும் பணி வந்தது.
ஏடு படித்தலும் பெயர்த்தெழுதலும் என் பணியாயின.
இடையிடை எழும் ஐயங்களை அகற்றுமுகத்தால் ஒரேகாலத்தில் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் என்ற உரையாசிரியர்களின் உரைநலங்களை எனக்குக் கற்பித்து இன்புறுத்துவது கவியரசரின் கல்விப்பணியாய் இயங்கிற்று.
உரைநலங்களைப் படித்து முடித்தேன்.
“நான், கவியரசு அரங்க வேங்கடாசலம்பிள்ளை, உலகவூழியர் அகிய மூவரும் , பெயர்த்தெழுதிய உரையை ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
அப்பொழுது அவர் ( தமிழவேள் )
‘jurisprudence to students’ என்ற ஆங்கிலப் புத்தகத்தைக் கொடுத்து, ‘இதைப் படித்துவிட்டுப் பிறகு அதைப் படியுங்கள்’ என்று சொன்னார்.
தலைவர் தமிழவேள் அத்துடன் அமையாது, அவர்களுக்கு ஏற்படும் ஐயங்களைத் தெளிவுபடுத்தி விளக்கங்கள் அளிப்பதும் உண்டு;
புரவலராக மட்டுமின்றி, ஒருவகையில் ஔவை போன்ற பலருக்கும் அவர்கள் ஆசிரியராகவே அமைந்தனர்.
“திரிபின்மை நீக்கிய விசேடம், இயைபின்மை நீக்கிய விசேடம் என்ற இடங்களிலும் எங்கள் ஐயத்தைத் தமிழவேள் போக்கினார்.
இதுபோல் பல சமயங்களில் எங்கட்கு ஆசிரியராகவும் , சிக்கல்களில் நடுவராகவும் இருந்தார்.
1924 ஆம் ஆண்டிலேயே இதைச் செய்தார்.
அவரிடத்து மீளா அடிமை ஆகக்கூடிய மனப்பான்மை எங்கட்குத் தோன்றியது.
நாங்கள் அவரை ‘வக்கீலையா’ என்றுதான் அழைப்போம்.” என்று தமிழவேளைப் பற்றி ஒளவை மனம் திறந்து கூறியுள்ளார்.
தமிழவேள் அவர்கள் ஆங்கிலம் , தமிழ் ஆகிய இருமொழிகளிலும் பெரும்புலமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது .
அதற்கு ஓர் எடுத்துக்காட்டு: அக்காலத்தில் ஆங்கிலம் கற்றவர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதை நாகரிகத்தின் அடையாளமாகக் கருதிக்கொண்டிருந்தனர்.
ஆங்கிலத்தில் பேருரையாளர் என்று போற்றப்பெற்ற அந்நாளைய சென்னை மாகாண ஆளுநர் சர்.ஆர்தர் ஹோப் என்பவரின் மிக விரைந்த ஆங்கிலப் பேச்சுச் சுருக்கெழுத்தாளரையே திணறடிக்கும் என்பர்.
தமிழவேள் அவரது ஆங்கிலப் பொழிவை அவர் பேசியதைப் போன்று அதே குரல் ஏற்றயிறக்கங்களுடன் அதே 25 மணித்துளிகளில் கையில் குறிப்பேதுமின்றி, இடையிடையே அவையோர் ஆரவாரக் கையொலியெழுப்ப, தமிழில் மொழிபெயர்த்து அனைவரின் பாராட்டைப் பெற்றனர்.
அத்தகைய வியத்தகு ஆங்கிலப்புலமை பெற்றிருந்த தமிழவேள் மற்றவர்களுடன் தமிழில்தான் உரையாடுவார்.
அவர் தமிழ் பேசிய பேச்சுக்கள் எங்களைக் கவர்ந்தன.
அவர் பேச்சில் வேற்றுமொழி கலக்கவே கலக்காது.
எங்களைத் தமிழில் பழக ஊக்குவித்தவர் அவரே என்று நற்றமிழில் பேசும் பெற்றியைத் தான் கற்றமையை ஒளவை தமிழவேளிடமிருந்து நினைந்து போற்றுகிறார்.
ஒருமுறை திருக்காட்டுப்பள்ளிக்கு வந்திருந்த டாக்டர் உ.வே. சாமிநாதையரைக் காணுதற்காக, கரந்தையிலிருந்து சங்கத்தலைவர் தமிழவேள், நாவலர் வேங்கடசாமி நாட்டார் .
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு
“dr.n.arul@gmail.com

Add a Comment