செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 26
ஒளவை நடராசன்
அதிக உயரம் தாண்டுவதற்கு !
ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்வின் செம்மைக்காக தான் கொள்ளும் நோக்கம் குறித்த தேடலுக்கான தேவை உள்ளது, தான் உயர்வதோடு பிறரையும் வாழ்வித்து உயர்த்த வேண்டும் என்ற உயரிய போக்கு வாய்ந்தவனாக இருக்க வேண்டும் என்ற ஊக்கம் உள்ளது.
குறிக்கோள் குறித்த இந்தத் தணியாத வேட்கை தான் வாழ்வில் நமக்கு அதிக மகிழ்ச்சியையும் நிறைவையும் கொண்டு வரக்கூடிய தேர்ந்தெடுப்புகளை நாம் மேற்கொள்வதற்கு நம்மை உந்தித் தள்ளுகிறது .
ஆங்கிலத்தில் நான் படித்த இந்த வாழ்வியல் உரை முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும் .
பள்ளி மாணவனாகத் தன் உள்ளத்தில் மலரத் தொடங்கிய பகுத்தறிவு , சீர்திருத்தச் சிந்தனை ,எவர் எதிர்த்தாலும் நேர்நின்று தடைசெய்த குன்றுகளைத் தவிடு பொடியாக்க வேண்டும் என்ற நெஞ்சுரம் வாழ்வின் கடைசி மூச்சு வரை கலைஞரை அணிசெய்த அரும்பெரும் திறமைகளாக நிலையாக ஒளிர்ந்தன .
ஆனால் கணத்துக்குக்கணம் மாறிவரும் உலகில், காலப்போக்கில் மதிப்பில்லாத அல்லது பொருளற்ற தேர்ந்தெடுப்புகள் எளிதாக நம் கவனத்தைத் திசை திருப்பிவிடுகின்றன.
எனவே, நாம் விரும்புகின்ற மன எழுச்சியையும் சாதனை உணர்வையும் அடைவதற்கு, எந்தக் கனவுகளும் முன்னுரிமைகளும் இலக்குகளும் நமக்கும் மற்றவர்களுக்கும் நிலையான வாழ்வை வழங்கும் என்று நாம் நம்புகிறோமோ, அவற்றைப் பற்றிய ஒரு தெளிவான காட்சியை உருவாக்கிக் கொள்வதற்கு திண்ணிய நெஞ்சமும் -தெளிவான அறிவும் வேண்டும்.
வாழ்வின் தேடலில் நமக்கு உதவக்கூடிய கொள்கைகள் : பங்களிப்பு , பிறரை உயர்த்துதல் , தடுமாற்றம் இல்லாத உறுதிப்பாடு என்று வகுக்கலாம் .
சிந்தனையும் தோளும் சேர்ந்தது மானிடத்தின் மாட்சியாகும் :
வானையும் மண்ணையும் இணைத்து நிற்கும் மானிடச் சாதியின் சாதனைகள் அனைத்தும் சிந்தனை, செயல் என்ற இரண்டிற்குள் அடங்கியவை. சிந்தனையற்ற செயலாலும் சமுதாயம் பயன் பெறுவதில்லை; செயல் தவிர்த்த சிந்தனையாலும் பயன் விளைவதில்லை.
பண்டை இலக்கியங்கள் என்பவையும் அனுபவங்களின் தொகுப்பு.
ஆனால் அவை நமது முன்னோர்களின் அனுபவங்கள். அவற்றுக்குப் பொருள் காண்பதிலும் கலைஞர் அவர்களின் புதியன, பொருந்துவன தேடும் புலன் ஒளிவிடுகிறது.
பல சான்றுகளைப் பட்டியலிடலாம் என்றாலும் ஒன்று போதும் .
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்
என்ற பாடலுக்கேற்ப வாழ்ந்த பெருமைக்கும் நல்லெண்ணங்களை வரைந்த திறமைக்கும் இந்தக் கடிதம் ஒரு சான்றாகும் .
அறிவாலயத்திற்கு வந்து என்னை ஜெயக்குமார் என்ற இளைஞன்.
அண்ணா அறிவாலயத்திற்கு வந்து என்னைப் பார்த்தான்.
( இப்போது அவர் அறிவாலயத்தில் உயர் அலுவலர் ) எழுதியிருப்பதைப் படித்துப் பாருங்கள் என்று ஒரு தாளைக் கொடுத்தார் .
இடையிடையே பிழைகள் சில தலை நீட்டிடும் வண்ணம் வாக்கியம் அமைந்திருந்தாலும், ஏதோ ஒரு கருத்தை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் இளைஞனுக்கு இருப்பது புரிந்தது.
“தலைவரே ஓயாமல் உழைக்கிறீர்கள் – உழைத்துக் கொண்டே இருக்கிறீர்கள் – உறங்காமல் உழைக்கிறீர்கள் – நானும் உழைக்கிறேன் – ஆனால் உறங்காமல் இல்லை.
உறங்குகிறேன்.உறங்கினால்தானே,நமது குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவுரையின்படி கனவு காண முடியும் ?
பக்கத்தில் இருந்த பேராசிரியர் அவர்கள் அதைப் படித்துவிட்டுப் பாராட்டிப் புன்னகை புரிந்தவாறு அந்தத் தாளை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
அண்ணா அறிவாலயத்திலிருந்து வீடு வந்து சேரும் வரையில், காரில் என் கவனம் அந்தத் தாளின் மீதே இருந்தது.
திரைப்படக் காட்சிகளில் வருவது போல அந்த இளைஞனின் முகமும் அந்தத் தாளில் நிழலாடியது.வியப்பு ! வியப்பு !
அதுவும் விரிவடைந்த வண்ண அடடே ! குடியரசுத் தலைவர் அறிவுரைப்படி நடப்பதற்காக அவன் உறங்குவது மட்டுமல்ல ! என்னையுமல்லவா உறங்கச் சொல்லி மறைமுகமாக உபதேசம் செய்கிறான்.
உறங்காமல் நான் உழைக்கிறேன் என்பது பெரும்பாலும் எழுதுகிற பணி – மக்கள் பயணம் செய்கிற பணி – இவைபோன்ற பணிகளை யாற்றும்போது தானே !
ஊரும் உலகமும் உறங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் அண்ணா உட்கார்ந்து எழுத கண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
அப்படியே பழகிக் கொண்டுமிருக்கிறேன்.
வைகறை தலைகாட்டி , ” வை பேனாவைக் கீழே ” என்று வாங்கி வைக்கிற வரையில் எழுதுவதிலே இருக்கிற உற்சாகம் – வேறு எப்போதும் இருப்பதில்லை.
இளங்காற்றுத் தவழ்ந்து போல வரும் அந்த மெல்லிய ஒலியைத் தவிர, வேறு எந்த ஓசையுமற்ற இயற்கையான அமைதி எழுதுவதற்கு எவ்வளவு பெரிய ஊக்குவிப்பு தெரியுமா ?
அண்ணா வாயிலாக அதையும் பழகியிருக்கிறேன் – அமளி துமளி, சாலையில் வாகனங்கள் போகும் பேரொலி – அச்சகத்தில் அங்குமிங்கும் ஆள் நடமாட்டம் – பார்வையாளர்கள் கூட்டம் – அவற்றுக்கிடையே அய்யா பெரியார் அமர்ந்து அசைவின்றி எழுதிக் குவிப்பாரே: அப்படியும் பழகியிருக்கிறேன் – அதையும் அருகிலிருந்து பகலிலும், இரவிலும் ஈரோடு குடியரசு’ அலுவலகத்தில் பார்த்துப் பார்த்து !
வேறுபாடான இந்த இரண்டும் தெளிவாக்குவது என்ன ? பூங்கா வழிப் பயணத்துக்கு மட்டுமல்ல : புதர் மண்டிப் புயல் வீசும் காட்டுப் பயணத்துக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பது தான் !
மாண்புமிகு அப்துல் கலாம், ” இளைஞர்கள் கனவு காண வேண்டும் ” என்று சொன்னதை இந்தச் சின்னத் தம்பி அப்படியே நேரடியாகப் பொருள் கொண்டு விட்டான் !
“ திட்டினாயே, அதைத் திரும்பப் பெற்றுக் கொள் ” என்றால், அந்தச் சொற்களைக் கையால் எடுத்துத் திட்டு வாங்கியவர் கையிலே கொடுத்து, திட்டியவர் அவர் கையால் அவற்றைப் பெற்றுக் கொள்வது என்று பொருள் அல்ல – திரும்பப் பெற்றுக் கொள்வதாக வாய்மொழியாகக் தெரிவித்தாலே இவ்வளவு காரியங்களும் நடைபெற்றதாகத்தான் கருதிட வேண்டும்.
விழி உணர்வு கொள் என்றால் தூங்கிக் கொண்டு இருப்பவரை தட்டி எழுப்பிச் சொல்லும் வார்த்தைகள் என்று யாரும் கருதுவதில்லை.
சமுதாயத்தில் விழிப்புணர்வையும் வீரத்தையும் காட்டி, அடிமை விலங்கொடிக்க ஆர்த்தெழச் செய்திடும் ஆணையாகவே கருதப்படுகிறது.
அதேபோலத்தான். அப்துல் கலாம் அவர்கள், இளைஞர்களே தான் உறங்குது பின்னர் என் தாலாட்டுக் கேட்டு உறங்கும் போது எதிர் காலம் பற்றிக் கனவு கான்க என்று சொல்லவில்லை.
கனவு காண்க என்பதற்குச் சிந்தனை செய்க – சிந்தித்துச் செயல்படும் போன்ற பொருள்களே பொருந்துவனவாகும்.
இளைஞர்கள் காணும் கனவுகள் வித்தியாசமாக இருக்கும் – அப்படித்தான் இருக்க வேண்டும் – அப்போதுதான் பலவிதத் தேவைகள் உள்ள இந்தத் தேசத்துக்கு அந்தக்ககனவுகளின் பலன்கள் பரிபூரணமாகும்.
இளைஞர்கள் அறிவுகை மேதைகளாகக் கனவு காணலாம் –
அற்புதமான பொறியாளராக – ஆரோக்கியமிக்க சமுதாயத்தை உருவாக்கும் மருத்துவராக – வரலாறு படைப்பவராக – வரம்பிலா வானத்தை, வற்றாத கடலை ஆராய்பவராக – சாதி மத பேதங்களற்ற சமத்துவச் சீலராக – கவிகுராக – ஓவியராக – கல்லில் சிலை வடிப்பவராக –
ஆக்கபூர்வ பணிகளில் அக்கறை கொண்ட அரசியல்வாதியாக – புலவராக – புரவலராக ஒளிர வேண்டுமெனக் கனவு காணலாம்.
முதல் கனவு: இளமையில் நான் காண விரும்பாத கனவு – கல்லூரி வரையில் படிக்க வேண்டும் – அது கலைந்த கனவாகவே ஆகிவிட்டது.
என் மொழி, இனம், நாடு, மக்கள் ,இவற்றின் ஏற்ற சமுதாயத்தில் ஏற்றமே எப்போதும் என் கலையாத கனவாகிவிட்டது ! இப்படிக் கனவு காண்போர் சிலர் விதி விலக்குகளாகத்தான் ” ஏற்பு முத்திரை ” குத்திக் கொள்ள முடியும்.
நன்கு கற்றுத் தெளிந்து தேர்ந்து நாம் ஈடுபாடு கொண்ட துறையில் நடு நின்ற நாயகமாய் நாடு போற்றத் திகழ்வோம், என்பதே ஒவ்வொரு இளைஞனும் காண வேண்டிய கனவு அந்தக் கனவு காண்பதற்காக உறங்க வேண்டிய அவசியமில்லை – மாறாக; அந்தக் கனவு கண்டிட விழித்தெழுக ! விழித்தெழுந்தால் மட்டுமே கனவுகள் நிறைவேறும் – எதைப் பற்றியும் கனவு காண்பது எளிது: அந்தக் கனவு, கடின உழைப்பின்றி
நிறைவேறும் என்பது அரிது !
எனக்கு மிகவும் பிடித்த
பொன்மொழிகளில் ஒன்று;
“ நீண்ட தூரம் ஓடினால்தான்
அதிக உயரம் தாண்ட முடியும் ”
என்பதாகும்.
அன்புள்ள
மு.க.
29.4.2005
தொடரும்

Add a Comment