POST: 2021-11-13T09:47:48+05:30

தமிழ் இலக்கியத்தின் வரலாறு

பக்கம் எண் 99,100

கலைமாமணி
முனைவர் பால இரமணி

தமிழ் மாணவர்களின் மொழிவளத்தை மேம்படுத்தும் முயற்சியில் தமிழறிஞர்கள் பலர் அயராது பாடுபட்டனர்.

கட்டுரைகளின் மூலமாகவும், கதைகளின் மூலமாகவும், பேச்சாற்றல் மூலமாகவும், தத்துவங்கள் மூலமாகவும், ஆன்மிகத்தின் மூலமாகவும் பற்பல படைப்புகளால் பலர் தமிழிலக்கியத்திற்குப் பெரிதும் துணைபுரிந்தனர்.

இலக்கியத்தையும், இலக்கணத்தையும் அவர்கள் கண்ணெனக் கருதினர் .

ஆதலால் படைப்புகள் பலவற்றையும் அளித்தனர்.
அளித்தும் வருகின்றனர்.

ஒளவை சு. துரைசாமி பிள்ளை , தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்த முன்னோடியாவார்.

சிறந்த உரையாசிரியராகவும், இலக்கணச் செறிவு நிரம்பியவராகவும் விளங்கிய இவர், ‘கலைமாமணி விருது பெற்றவர்.

புறநானூற்றுக்கு உரையெழுதியதோடு, நற்றிணைக்கும் விளக்கவுரை எழுதினார்.

சைவ இலக்கிய வரலாறு,
நந்தா விளக்கு, ஒளவைத்தமிழ், பெருந்தகைப் பெண்டிர்,
சேரமன்னர் வரலாறு, ஞானவுரை, தமிழ்ச் செல்வம், சூளாமணி சுருக்கம், சிலப்பதிகார ஆராய்ச்சி, சீவகசிந்தாமணி ஆராய்ச்சி, மணிமேகலை ஆராய்ச்சி,
யசோதர காவியம் மூலமும் உரையும், சிவஞான போதம் மூலமும் உரையும், பதிற்றுப் பத்து உரை, ஐங்குறு நூறு உரை போன்ற நால்களைப் படைத்தவர்.

இவரின் திருமகனார் ஔவை நடராசன் ஆவார்.

தற்காலம் வாழும் தமிழாகத் திகழும் ஔவை நடராசனின் மேடைப் பேச்சுக்கள் பலவும் நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும்,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர்.

இந்தியத் திருநாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ இவருக்கு வழங்கப்பட்டது .

கலைமாமணி விருதும் பெற்ற ஒளவை நடராசனின் கம்பர் விருந்து, வாழ்விக்க வந்த வள்ளலார் ,சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் போன்ற மேடைப் பேச்சுக்கள் நூலாக வெளிவந்துள்ளன.

தமிழின் வளர்ச்சிக்கு ஓயாது பாடுபட்டு வரும் ஔவை நடராசனின் திருமகனார் ஒளவை ந. அருள், வளர்ந்து வரும் வாலிபத் தமிழாக விளங்குகிறார்.

பாரதியார் பதில்கள் நூறு என்னும் இவரின் நூல், மிகச் சிறந்த ஆய்வு நெறி கொண்டதாகும்.

தமிழ்நாடு அரசின் மொழி பெயர்ப்புத் துறையின் இயக்குநராகப் பணியாற்றும் ஔவை ந. அருள், எண்ணற்ற தமிழ் இலக்கிய நூல்களை மொழிபெயர்த்துப் பெருமை சேர்த்து வருகிறார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *