POST: 2021-11-14T11:44:25+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 83

காவிய இளமையும், வாழ்வியல் முதுமையும்

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

இளங்கலை தமிழிலக்கியம்
(1985 – 88) மாநிலக் கல்லூரியில் பயிலும் போது என் தமக்கையார் சுதாவும், மாமா மருத்துவர் நலங்கிள்ளி (தவத்திரு அழகரடிகள் பெயரன்) வியாழன் தோறும் மீஞ்சூரிலிருந்து சென்னைக்கு வரும் பழக்கமுண்டு.

அவ்வப்போது மாநிலக் கல்லூரியிலேயே என்னைச் சந்தித்துத் தங்கள் சீருந்தில் அண்ணா திருவுருவச் சிலைக்கு எதிரேயிருந்த உயர்தர சைவ உணவு விடுதியில் மாலைச் சிற்றுண்டி உண்போம்.

மாமா நலங்கிள்ளி புகழ் வாய்ந்த மருத்துவர்; எளிய நலிவுற்ற மக்களுக்கு உயர்தர மருத்துவ உதவி வழங்குவதில் முனைப்புடன் பணியாற்றும் இயல்புடையவர்.

அவருடைய தந்தையார் மருத்துவர் சண்முகமும் மீஞ்சூரில் புகழ்பெற்ற மருத்துவ மேதையாவார்.

தாயார் குமுதவல்லி அம்மையார் சுவையான உணவுகளைப் படைக்கும் நள மகாராணியாவார்.

அவர்கள் இல்லத்தில் தமிழுணர்வு கொப்பளிக்கும் பாவலர்களின் பாசறையாகவும் திகழ்ந்தது.

நலங்கிள்ளி மாமாவிற்கு வெளிநாட்டுச் சீருந்துகள் ஓட்டுவதோடு, பழுது செய்யும் ஆற்றலும் வாய்ந்தவராவார்.

வாரந்தோறும் புதிய சிந்தனைகளையும், சிறந்த கவிஞர்களையும், புகழ்வாய்ந்த நூல்களையும், கண்கவர் வாகனங்களையும் எனக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சியடைவார்.

அவ்வகையில் அவரால் அறிமுகமான வரலாற்றுப் புதின ஆசிரியர்தான் சாண்டில்யன் (06.11.1910 – 11.09.1987) ஆவார்.

மாமா தவறாமல் என்னைப் படிக்கச் சொன்ன புதினங்கள் தான் கடல்புறாவும், யவனராணியும் ஆகும்.

வரலாற்றுப்புதினங்கள் என்பவை உண்மை வரலாற்றைக் கற்பனை நெய்யுடன் கலப்பவையாகும்.

இப்புதினங்களை படிக்கும்போது நாம் வேறு ஒரு உலகத்தில் இருப்பது போல உணர்வோம்.

வரலாற்றுத் தகவல்களோடு
பக்தி, காதல், வீரம், தந்திரம், வஞ்சகம், துடுக்கத்தனம் போன்ற மெய்ப்பாட்டியல் சுவைகள் சொட்டச்சொட்ட புனைந்தெழுதும் தொடர்கதை மன்னர் சாண்டில்யன் என்றால் மிகையாகாது.

தமிழர் பெருமை, வீரம், நாட்டுப்பற்று, காதல் என அனைத்தையும் அழுத்தமாக இதயத்தில் பதியும் வகையில் எழுதிய ஆற்றலாளர் சாண்டில்யன் எழுதிய யவனராணி 1280 பக்கங்கள் கொண்ட புதினமாகும்.

1800 ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழகத்தைப் பற்றியும், தமிழர்களைக் குறித்தும் புனையப்பட்ட பெரிய புதினமாகும்.

ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட தமிழ் மாணவர்களுக்கான குறிப்பினை மிக நுணுக்கமாக யவனராணியில் குறிப்பிடுவதைக் கண்ணும் கருத்தும் பதித்த என் கருத்துக் கோவையில் 16.11.1987 அன்று குறித்திருந்தேன்.

“குடபுலம், குணபுலம், தென்புலம் என மூவகை பகுப்பு உடைய தமிழகத்தே குடபுலம் சேரர்க்கும், குணபுலம் சோழர்க்கும், தென்புலம் பாண்டியருக்கும் உரியதாயிருந்தது.

திருச்சி ஜில்லாவின் பகுதிகளாகக் கருவூர், ஆமூர், குழுமூர், பேரூர், சோழ வேந்தர்களின் ஊர்களாக அறியப்படுகின்றது.

யவன ராணியில் ஓரிடத்தில் எகிடித் தீவில் ஆட்களைப் பிடித்துக்கொண்டு மேலைநாட்டு அடிமைச் சந்தைகளில் விற்கும் கூட்டம் என்ற தொடர் வரும்.

அதற்கு ஆசிரியர் சாண்டில்யன் அருமையான அடிக்குறிப்பில் வாசகர்களுக்கு, எகிடித் தீவு என்பது கோவா தீவுக்குப் பெயர் என்று கதையோடு வரலாற்றுக் குறிப்பை நுணுக்கமாக அறிமுகம் செய்வது பாராட்டத்தக்கதாகும்.

என்னுடைய பாட்டனார் உரைவேந்தர் தான் எழுதிய ‘பண்டைய நாளைய சேரமன்னர் வரலாறு’ நூலில்

‘தென் கன்னடம் மாவட்டத்திற்கும் வட கன்னடம் மாவட்டத்திற்கும் எல்லையாய் கிழக்கு மேற்காக ஓடிக் கடலில் கலக்கும் ஆறு, ஹோனாவாறு சாராவதி என்பர்.

அதனைப் பண்டையத் தமிழில் வானியாறு என்பார்கள்.

அதேபோல, தென் கன்னட மாவட்டத்துக்கும், மைசூரின் எல்லையாய் நிற்கும் மலைத்தொடர் பெயர், குத்ரமுக்.

அதனை இப்போது சஞ்ச பர்வதம் (சம்ச பர்வதம்) என்பர்.

பண்டைய தமிழ்ப் பெயர் குதிரை மூக்கு மலை, வானியாற்றை வரம்பாகக் கொண்டு ஆண்ட சேரன் வானி வரம்பன் என அழைக்கப்பட்டுப் பின் வானவரம்பன் என அஃது மருவிற்று’

என்று குறிப்பிட்டுள்ள வரிகள் இப்புதினம் படிக்கும்போது நினைவுக்கு வந்தன.

இளஞ்செழியன் வாயிலாக நாகரிகத்தின் சிகரத்தை எட்டிப்பிடித்த ரோம சாம்ராஜ்யத்தையும் கிழக்கே நாகரீகத்திற்கு அணிகலனாய் விளங்கிய தமிழகத்துக்கும் எத்தனை வித்தியாசம், எத்தனை உயர்வு, தாழ்வு என்பதை எண்ணும் காட்சி நம்மை மலைக்கவைக்கும்.

அதேபோல் இன்னொரு பகுதியில் தமிழகத்தின் மாபெரும் புலவர்களால் வியந்து பாராட்டப் பெற்றதும், சோணாட்டகத்தே விளைந்ததுமான வரலாற்று முதற்போரான வெண்ணிப் போரைப் பற்றி பொருநராற்றுப்படையில் குறிப்பிடும் புலவர் முடத்தாமக் கண்ணியார்,

‘ஓங்கிடுஞ் சென்னி மேம்பட
மிலைந்த இருபெரு வேந்தருமொருகளத்தவிய,
வெண்ணித்தாக்கிய வெருவெரு நோன்றாள்
தண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்’

குறித்தும் பட்டினப்பாலை இயற்றிய உருத்திரங்கண்ணனார் வரிகளான,

தலை தவிச் சென்று தன் பணை யெடுப்பி
வெண்பூ கரும்போடு விளக்கி

“இங்கே ஒரு குருஷேத்திரம்” என்ற குறுந்தலைப்பில் புதினத்தைத் தொடங்கி எழுதுவது வியப்பிலும் வியப்பே!

யவனராணி முடித்து எட்டு மாதங்கள் பிறகுதான் கடல்புறா எழுதத் தொடங்கினார் சாண்டில்யன்.

கடல் புறாவில் கதை மாந்தர்களாகக் கருணாகர பல்லவன், அநபாயர், குணவர்மன், காஞ்சனா தேவி, மஞ்சளழகி, அமீர், அகூதா, ஜெயவர்மன், கண்டி தேவன், சேந்தன் அருமையாக படைக்கப்பட்டுள்ளனர்.

744 பக்கங்கள் கொண்ட கடல் புறாவை ஒரு திரைப்படமாக ஏன் யாரும் எடுக்க முன்வரவில்லை என்று படிக்கும் போதே நமக்குத் தோன்றும்.

கடல்புறா கதையை புனையத் தூண்டிய இலக்கியம் ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துபரணி என்று நூலாசிரியர் தெரிவிப்பது பெருமிதமாகும்.

சுமத்திராவின் பழைய பெயர் சொர்ணத் தீவு.

சொர்ணபூமி என்பது தெற்கு பர்மா, மலேயா, சுமத்திராவுக்குப் பொதுப் பெயராகும்.

‘மனிதனை எது விட்டாலும், விடாவிட்டாலும் இளமையில் ஏற்படும் பழக்கவழக்கங்கள் மட்டும் விடுவதில்லை.

இயற்கையின், செயற்கையின், பரம்பரையின், பக்கச் சூழ்நிலையின் காரணங்களினால் இளவயதில் மனிதனைப் பிடித்துக்கொள்ளும் குணாதிசயங்களை வாழ்நாள் முழுவதும் பீடிக்கவே செய்யும் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற பழமொழி காரணமில்லாமலா ஏற்பட்டிருக்கும் நண்பர்களே!’ என்ற கடல்புறா வரிகள் என்னைக் கவர்ந்தவையாகும்.

வரலாற்றுப் புதினங்களை ஆக்கும் முயற்சி மேனாடுகளில் பல நூற்றாண்டுப் பழக்கமுடையது.

தமிழ்மொழியில் இதுகாறும் வெளிவந்துள்ள வரலாற்று புதினங்கள் பலவற்றுள்ளும் சிலவே நம் இலக்கியத்தில் நின்று நிலவும் தகுதியுடையவை என்றும், அச்சிலவற்றின் முன்னணியில் நிற்கும் தகுதி சாண்டில்யன் அவர்களின் இலக்கியப் படைப்புகளுக்கு உண்டு என்றும் நான் கருதுகிறேன்.

வரலாற்றுப் புதினங்களை இயற்றப் புகுவோர்க்கு இலக்கியப் பயிற்சி, பண்டை வரலாற்று நிலையைத் தம் அகக் கண் முன்னே கொண்டு கதை புனையும் ஆற்றல், கற்பனைத் திறன் தேவை.

வரலாறு வரையறுக்காத இடங்களில் தமது கற்பனைத் திறனைக் காட்டலாமாயினும் இக்கற்பனைகள் வரலாற்று உண்மைகளோடு முரணாகாதவாறு அமைத்தல் வேண்டும்.

கலை, இலக்கியம், பேச்சு, மரபு, நியாயம், உணர்ச்சி, அறிவு, ஆற்றல், இயல்பு என்பனவற்றை நன்கு உணர்ந்து கொண்டு அவற்றோடு சிறிது மாறுபடாத வகையில் புனைய வேண்டும் என்று வரையறுத்தவர் சாண்டில்யன் ஆவார்.

என் தந்தையின் நண்பர்.

அவர் இல்லத்திற்கு அப்பாவுடன் நான் சென்றது நினைவிருக்கிறது.

சாண்டில்யன் மகன் திரு. சடகோபன் கல்லூரிப் பேராசிரியராவார்.

இளமை ததும்ப எழுத்தால் கவர்ந்த சாண்டில்யன் முதுமை படர்ந்த வடிவில் பாஷ்யமாக வாழ்ந்தார்.

இது வியப்பாக இருந்தது.
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (7)

ஒருமுறை திருக்காட்டுப்பள்ளிக்கு வந்திருந்த டாக்டர் உ.வே. சாமிநாதையரைக் காணுதற்காக, கரந்தையிலிருந்து சங்கத்தலைவர் தமிழவேள், நாவலர் வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு அரங்க வேங்கடாசலம்பிள்ளை, தண்டாயுதபாணிக் காடவராயர், ஒளவை துரைசாமியார் ஆகியோர் சென்றனர்.

அப்போது ஒருவருக்குத் தேள் கொட்டியது; அவர் மருந்துண்ட பின்பு ‘எப்படியிருக்கிறது’ எனக் கேட்டனர்.

அதற்கு அவர் ‘கடித்த இடம் தான் கடுக்கிறது’ என்று சொல்ல, ‘அது எப்படி’ என்று தமிழவேள் ஐயரைக் கேட்க, அதற்கு விடை அளிக்குமாறு ‘கடி’ என்னும் உரிச்சொல் கடுக்கிறது எனத்திரித்து வினையாயிற்று.

‘கடுத்தது காட்டும் முகம் போல’ என்று ஔவை மறுமொழி கூறினார்.

இதனைக் கேட்ட உ.வே.சா ஔவையை வாழ்த்தியதுடன், அவருக்கு இலக்கணம் கற்பித்த கவியரசையும் பாராட்டினார்.

ஔவையின் ஆசிரியப்பெருமக்கள்
ஔவை தம்முடைய ஆசிரியர்களாகக் கவியரசரை மட்டுமின்றிக் கரந்தையுடன் தொடர்புடைய வேறு புலவர் பெருமக்கள் சிலரையும் குறிப்பிட்டுள்ளார்.

‘எனக்கு இலக்கணம் கற்பிக்கும் பணி தெய்வச்சிலையார் உரை வெளியீடாய் நிலவினமையின், அக்காலைச் சங்கத்தின் நெருங்கிய தொடர்புற்றிருந்த பேராசிரியர்களான ந. மு. வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், உலகநாதப் பிள்ளை முதலியோர்களின் தொடர்பு எனக்கு எய்துவதாயிற்று.

அவரது தொடர்பு அன்பு செய்வதோடு நில்லாது தமிழறிவு நல்கும் ஆசிரியர்களாகவும் இருந்து எனக்கு ஐயமகற்றி அவரது நன்றி மாணவனாய் நிலவுமாறு செய்தது.

அப்போது அவர்கள்பால் என்னைப் பற்றி அன்புரை வழங்கி ஆதரவு செய்த கவியரசரின் கல்விநலத்தை இன்று நினைப்பினும் என் நெஞ்சம் கரைந்துருகுகிறது’ என்று தமது நன்றியுணர்வை ஒளவை வெளிப்படுத்துகிறார்.

கரந்தைத் தமிழ்ச்சங்கத் தொடர்பு ஒளவையின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியது.

நெஞ்சு நேர்ந்த பணி, போற்றிப்புரக்கும் புரவலர்,
கற்பிக்கும் பேராசான்,
கலந்து பழகும் அருந்துணைவர் என்னும் இத்தகைய சூழலில் ஔவையின் கரந்தை வாழ்வு அமைந்தது.

‘கரந்தைத் தமிழ்ச்சங்கம் என் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி வளமான புலமைக்கும், நலமான வாழ்வுக்கும் வழிகோலியது.

கரந்தையில் மூவர் எனக்கு உறுதுணையாயினர்.

ஒருவர் என்னைப் போற்றிப்புரந்த தமிழவேள்;

மற்றொருவர் என் பேராசான் கரந்தைக் கவியரசர்,

மூன்றாமவர் என் வாழ்விலும், தாழ்விலும் பங்கேற்று நானும் எனது நிழலும் போல நாங்கள் உடலால் பிரிந்திருந்தாலும், உள்ளத்தால் இணைந்திருந்த என் உடன்பிறவாச் சகோதரர் சிவ குப்புசாமி’

என்று ஒளவை தெரிவித்திருக்கிறார்.

மேலும் கரந்தையின் தொடர்புக்கு முன்னும் பின்னும் ஒளவையின் வாழ்வு எவ்வாறு அமைந்திருந்தது என்பதை அவரே பதிவு செய்திருக்கிறார்.

‘தமிழ்நலத்தின் செம்மை உணராது வீண்நெறியில் அமிழ்ந்து அமைந்து கிடந்த என்னையும் ஒரு தமிழ்மகனாக்கித் தமிழன்னைக்குத் தொண்டு புரியத்தக்க மனவமைதியையும், தமிழ் அறிவும் ஊட்டி, என்னையும் என் போன்ற பலரையும் நல்லாற்றுப் படுத்திப் பெருந்தமிழ் நிலையமாகிய எங்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் தலைமை தாங்கிப் பெருநலம் புரியும் பெருந்தமிழ் வள்ளல் இராவ்சாகிப், செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள், உயர்திரு த.வே. உமாமகேசுவரம் பிள்ளை பிஏ பிஎல் அவர்கட்கும்,

தமிழ் நூல்களின் நுண்மாண் நயங்களை ஒருங்குகூடித் தேர்வாரைப் போல உடனிருத்தி , உடனாய்ந்து தமிழறிவு கொளுத்திய எங்கள் ஆசிரியப் பெருமகனாரான கரந்தைக் கவியரசு, உயர்திரு வேங்கடாசலம் பிள்ளை அவர்கட்கும், என் தமிழ்ப்பணியின் நலம் முற்றும் உரிமை செய்வதொன்று தவிர, வேறு செய்வதற்குரிய கைம்மாறு யாதுமில்லேன்’
(ஐங்குறுநூறு , 1938 , முன்னுரை – உரிமையுரை)

என்று நெஞ்சு நெகிழும் இக்கூற்றுடன் அமையாது, தமிழவேள் அவர்களின் முழு உருவப் படத்தையும் அச்சிட்டு ஒளவை தமது நன்றியுணைர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழவேள் வடபுலப் பயணத்தின்போது பைசாபாத் என்னும் இடத்தில் இயற்கை எய்தினர்.

அப்பொழுது உரைவேந்தர் கண்ணீர் சிந்தித் தனது ஆற்றாமையை ஓர் இரங்கற்பா ஆக்கினார்:

“தாயாகி உண்பித்தான்; தந்தையாய்
அறிவளித்தான்; சான்றோ னாகி
ஆயாத நூல் பலவும் ஆய்வித்தான்;
அவ்வப்போதயர்ந்த காலை,
ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;
இனி யாரை யுறுவேம்; அந்தோ!
தேயாத புகழான் தன் செயல் நினைந்து
உளம் தேய்ந்து சிதைகின் றேமால்!”

சங்கத் தலைவர் தமிழவேள் உமாமகேசுவரனார் நினைவாக அவர் மறைந்த நாளன்று ‘உமாமகேசுவரர் நோன்பு’ தமது வாழ்நாள்வரை கடைப்பிடித்தொழுகியதை நண்பர்கள் அறிவார்கள்.

ஒளவையவர்கள் 1926 முதல் 1929 வரையில் கரந்தையில் நிலைகொண்ட ஒளவை அவர்கள் பின்னாளில் பெரும்பேராசிரியர் என்று அரும்புகழ் பெற்றமைக்கும், உரைவேந்தர் என்று தனிமுத்திரை பதித்தமைக்கும், சித்தாந்த கலாநிதியாகச் சிறப்புற்றமைக்கும் தமிழ்கூறு நல்லுலகம் எங்கும் நற்றமிழ் வேந்தராக நலம்பொலிய வலம் வந்தமைக்கும் அடித்தளமாக அமைந்தது கரந்தைத் தமிழ்ச்சங்கப் பாசறையே என்பது முற்றிலும் உண்மை.

ஒளவையவர்கள் கரந்தையில் தமிழ்ப்புலமையையும் , தஞ்சை சிவகங்கைப் பூங்காவிலுள்ள அரசினர் இளநிலை பயிற்சிப்பள்ளியில் ஆசிரியத்தகுதியும் பெற்று, தமிழாசிரியர் பணிக்குத் தம்மை முற்றிலும் தகுதியாக்கிக் கொண்டார்.

தமிழ்கற்கும் ஆர்வலராகக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்திற்குள் நுழைந்த சுந்தர துரைசாமி, மூன்றாண்டுகட்குப் பின்னர் தமிழறிஞர் ஒளவை துரைசாமிப்பிள்ளை எனும் வீறார்ந்த தமிழ்ப்பெரும்புலவராக வெளிப்போந்து தமது நீண்ட தமிழ்ப் பயணத்தைத் தொடர்ந்தார்.

“இரவு பகல் தானறியான் இந்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில் – உரமுடையான்
தன் கடன் தாய் நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன் கடன் என்றுரைக்கும் ஏறு!”

– பாவேந்தர் பாரதிதாசன்

புலமை வீச்சு –
ஔவையென்னும் அருந்தமிழாசான்

ஒளவை 1929 முதல் 1941 வரையில் வடஆர்க்காடு மாவட்டத்தில் காவிரிப்பாக்கம், காரை, செய்யாறு, திருவத்திபுரம், திருவோத்தூர், செங்கம் முதலிய இடங்களில் இருந்த உயர்தரக் கலாசாலைகளில் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார் என்பது தமிழ்ப்பொழிலில் அவ்வப்போது அவர் எழுதிய கட்டுரைகளை நோக்குகையில் புலனாகிறது.

(அக்காலத்தில் கல்விநிலையங்கள், 1 முதல் 5 வகுப்பு வரை பள்ளி, 6 முதல் 8 வகுப்புவரை – கல்லூரி / கலாசாலை , 8 முதல் 10 வகுப்பு வரை உயர்தரக்கலாசாலை என்று அழைக்கப்பெற்றன.)

தோற்றப்பொலிவு

நடுத்தர உயரம் , கறுப்பு வெளுப்பின்றி மாநிறத்திற்கும் சற்றே கூடுதல் வண்ணம், அறிஞர் சிலரைப்போல் கீச்சுக்குரலோ, அரசியல்வாதியைப் போல் கட்டைத் தொண்டைக் கரகரப்போ இல்லாமல் கணீரென்ற குரல்;

கறுப்புச் சட்டக் கண்ணாடிக்குள்ளிருந்து, ஆளாயினும் நூலாயினும் எதையும் எடைபோடும் கூர்மையான கண்கள்.

வெள்ளை முழுக்கைச் சட்டை ( ஜிப்பா , வேட்டி அணிந்த அந்த உருவினரே ஔவை அவர்கள்.

ஒளவையின் இயல்புகள்

“பிள்ளையவர்கள் இப்பெறலரும் பண்புகள் அனைத்தையும் கருவிலே வாய்த்த திருவாகப் பெற்ற பிறவியாசிரியர்.

பெருமிதமான தோற்றப்பொலிவு.
சொல்வன்மை இவை நகைதவழும் மலர்ந்த முகம் ;
எடுப்பான இனிய குரல் ;
தெளிவான திருந்திய உச்சரிப்பு , அரிய கருத்துகளையும் எளிய முறையில் எடுத்துச்சொல்லும் பிள்ளையவர்களிடம் சிறப்பாக அனைத்தும் அமைந்திருந்தன.

அவர் ஒழுக்கமும், உறுதியும், ஒழுங்கும் ,மாணவர்களை அவரிடம் பக்தியும்,பணிவும் கொண்டு தமிழாசிரியர்களின் ஊதியம் மிகக்குறைவான அந்நாளில் ஒளவை அவர்கள் எளிமையிலும் வளமை கண்டவர்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *