POST: 2021-12-03T09:38:20+05:30

உரைவேந்தர் ஒளவை துரைசாமியின் (ஆசிரியர்) மாணவருக்கு பதில் கடிதம்

16.7.1940

From
Vidwan A.S. Doraiswamy Piillai,
Head Tamil Pandit, Chengam
செங்கைமா.

இன்ப அன்புகொடு நன்பு புரிமைந்த,

இறைவன் திருவருள் பெருகுக நின்பால்.

வேட்டாங்கு மதிப்புரைத் தாட்டான் இதனொடு,

வரவிடுத்துளன்;

பெற்(று) உறுக பெருஞ் சிறப்பே;

அதா அன்று,

செங்கைமா, செங்கம், செங்கண்மாவெனச்
சங்கச் சான்றோர் சால்புகொடு போற்றிய
இங்கண் எய்தி யிருந்தனென் இனிதே.

மாற்றினர் நல்ல அறிஞர்,

தேற்றாது
ஆற்றவும் அறைவர் அறியார் இந்நகர்.

அன்னோர் போல அறியாது என்பால்,

அன்பால், அவர்தமை வைதனை மன்னோ,

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
நன்றும் தீதும் பிறர்தர வாரா”

ஈண்டோர் இனிய மாண்டமிழ்ப் பணியான்
செய்கின்றேன்,

அது விரைவில் வெளிவரும்.

முத்து மொழி செறிந்த பத்துப் பாட்டின்
மலைபடு கடாம் பெறு மாட்சித்து இந்நகர்;

பெருங்கோசிகன், வேள் நன்னன் சேய் எனும்
இன்னோர் இருந்த ஏற்ற முடையது;

சேயாறு சுரக்கும் திருநீர் வளத்தது;

வீயாச் செந்தமிழ் வீறுமிக வுடையது;

யான்செய் தமிழ்ப்பணிக்கு வான் இடம்தருவது;

கானவாழைத் தேனுறு கனியும்,
ஆசிப் பலவும், ஆய்தரு தேனும்,
துவரையும் அவரையும் துவரவுடையது;

சேலம் செல்வேன்;
திருப்பத்தூ ராம்பூர்
ஏலச் சென்றேன்;

என்பணி விழையும்
மேலவர் பலரெனை விரும்பி வரவேற்றனர்;

திருப்பத் தூரிலும், செங்கண் மாவிலும்
செல்வர் பலர் துணையால் செந்தமிழ்க்கொரு பணி
செயத் துணிந்தேன்;

அவர் செம்பொருள் நல்கினர்,
ஓத்தூர் போல இம்மாத்தூர் ஆகென
முயல்கின்றேன்; செயலும் புரிகின்றேன்;

விரைவில் இந் நகர்க்குப் பெரியோர்
வருகுவர்,

அதுபோது வருதிர் மகிழ்ந்தே.
இங்ஙன்,

அன்பன்,

ஔவை. சு. துரைசாமி

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *