POST: 2021-12-05T10:47:14+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 86

உள்ளத்தில் பதிந்த ஓவியம் !

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,

தமிழ்நாடு அரசு

மாநிலக் கல்லூரியில் தமிழிலக்கியம் முதலாண்டு பயிலும் போது ஆங்கிலப் பேராசிரியர் பெர்னாட்ஷா சேக்சுபியரின் ‘வாணிபுரத்து வணிகன்’ நாடகத்தைச் செழுமையான தன் ஆங்கிலத்தில் மூலநூலின்றி அவர் சொன்ன பாங்கினைக் கண்டு நான் மெய் மறந்தேன்.

ஓரிரு வகுப்புகள் முடிந்து, அந்நாடகத்தின் சில பகுதிகளை எந்தையாரிடம் ஆங்கிலத்தில் படித்துக் காட்டினேன்.

அதற்கு உடனே அப்பா சொன்னார், உன் வாழ்வு நீண்ட பெரிய தமிழ் வாழ்வாகும்.

முதற்படியில் நின்று கொண்டிருக்கின்றாய்.

என் மேசையிலுள்ள சைவப் புலமைச் சான்றோர் திலகமான முருகவேளின்
(17.11.1924 – 07.04.1985) நூலை எடுத்து அதன் முதல் பத்தியை உரக்கப்படி என்றார்.

“ஆங்கில மொழியறிவு சிறிதாயினும் உடையார் யாவராயினும், அவரெல்லாம் மில்டன் என்னும் ஞானக் கவிஞர் பெருமானைக் கேட்டாயினும் அறியாதிரார்.

அவர் செகப்பிரியர் என்னும் மாபெரும் கவிஞருக்கு அடுத்தபடி ஆங்கிலக் கவிஞருள் தலைசிறந்து நிற்பவர்.

முதுபெரும் புலவர் வெ.ப. சுப்பிரமணிய முதலியார் தமிழில் மொழிபெயர்த்துள்ள ‘துறக்க நீக்கம்’ (Paradise lost), துறக்க மீட்சி (Paradise Regained) என்னும் மில்டனின் பெருநூல்கள் உலகப் பெருமையுடையனவாகும்.

ஆங்கில மொழி வழங்கும் நாடெங்கணும் பெரிதும் போற்றப்பட்டு வருவதோடு, செகப்பிரியருக்கு அடுத்து மில்டன் என்னும் பெயர் ஆங்கிலேயரிடைய வீட்டியற் ஆர்வச் சொல்லாக வழங்கி வருகின்றது.

மில்டனே! நீர் இப்போது உயிர் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.

இங்கிலாந்து உம்மைப் பெரிதும் வேண்டுகின்றது.

அஃது அழுக்கு நீர் தங்கும் சகதியாக உளது.

சான்றோர்கள், வீரர்கள், கவிஞர்கள், இல்வாழ்க்கையினர், இளைஞர்கள் யாவரும் தங்கள் பழைய மன அமைதியும் இன்பப் பேற்றினையும் இதுபோழ்து இழந்து விட்டனர்.

நாங்கள் தன்னலத்தர்களாக இருக்கின்றோம், நீர் உயிர் பெற்று எழுக!
மீண்டும் எங்கள் பொருட்டு திரும்பி வருக!
எங்கட்கு நல்லொழுக்கத்தையும் நற்பண்பையும், உரிமையுணர்வையும் ஆட்சி நலனையும் தருக!
என்று இங்ஙனம் வேர்ட்ஸ்வர்த் எனும் மற்றோர் ஆங்கிலக் கவிஞர், மில்டனைக் குறித்துப் பாடியிருத்தலின் அவர்தம் பெருஞ்சிறப்பும் புகழும் இனிது புலப்படும்.”

படித்தவுடன் மலைத்துப் போனேன்.

அப்பா தன்னுடைய நூலகத்திலுள்ள ‘சித்தாந்தம்’ இதழ்களையும் இல்லத்துக்குத் தொடர்ந்து வந்த திருக்கோயில் இதழ்களையும் எடுத்துக்காட்டி சித்தாந்த வித்தகர், செந்தமிழ் வேந்தர், புலவரேறு ந.ரா. முருகவேள் அவர்களின் கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்குமாறு அறிவுறுத்தினார்.

அவரின் கட்டுரைகளைப் படிக்கும்போது, ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளை மேற்கோளாகத் தொடுத்து அக்கட்டுரையின் அடியிலேயே அதற்கு உரிய மொழிபெயர்ப்பினைத் தமிழ்ச் செய்யுளாக அவர் தானே எழுதியிருப்பதைக் கண்டு மலைத்தேன்.

அந்நாட்களில் அவர் கட்டுரைகளைப் பயிலும்பொழுதே அவர் எங்களுக்கு நெருங்கிய உறவுடையவர் போல இருந்தவர் என்பதும், அவருடைய அண்ணல் ஒளியகம் ந.ரா. ஆடலரசு பல தமிழ்த் திருமணங்களை நடத்திய சீர்த்தி வாய்ந்தவராவார்.

என்னுடைய பாட்டனார் உரைவேந்தர் இருந்த கரந்தைப் புலவர் கல்லூரியில் புலவர் முருகவேளுடன் சேர்ந்து, மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுத் தெய்வங் கொள்கையினைத் தமது இளம் பருவ முதற்கொண்டே நெகிழ விடாது உறுதியாகக் கடைப்பிடித்த மனத்திண்மை உடையவர் ஆவார்.

தனித்தமிழ் இயக்கம் கண்ட பொதுநிலைக் கழக ஆசிரியர் மறைமலையடிகளாரின் மனங்கவர்ந்த நன்மாணவர்;

தன் பெற்றோரிட்ட பெயர் சௌந்தரராசனையும், பள்ளியில் பயின்ற போது, அழைக்கப்பட்ட சுந்தரராசனையும், ஆசிரியர் போலவே தன் பெயரையும் முருகவேள் என்று தமிழ் மணங் கொண்டதாக மாற்றிக் கொண்டவர்.

பலதுறையும் பன்மொழியும் வல்லவர்.

வாழ்க்கைக் கொள்கைகளையும், நூற் கோட்பாடுகளையும் கசடறத் தெளிந்தவர்.

தமிழுக்கும் சிறப்பாக சைவ வைணவங்கட்கும் இடையறா எழுத்துத் தொண்டாற்றியவர்.

‘திருக்கோயில்’ இதழிலும், ‘சித்தாந்தம்’ இதழிலும் இவர் எழுதிய மெய்ப்பொருட் கட்டுரைகளும், உரைகளும் வரலாறுகளும் பிறநூல் மேற்கோளும் அத்துறைகளில் ‘முருகவேளுக்கு நிகராவார் மற்றொருவர் இல்லை’ என்று இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபொழுது, சைவத்துறைப் பேராசிரியராக வருமாறு சைவமணி முருகவேளை அழைத்த போது, தமிழக அரசு நடத்தும் ‘திருக்கோயில்’ இதழுக்கு இறுதிவரை பணி செய்வேன் என்ற நிறைவே போதும் என்று பணிவோடு மறுத்தவர்.

அக்காலங்களில், கற்றவல்ல முதியோருக்கே தருமையாதீனத்தில் பட்டம் தரப்படுமாம்.

ஆனால், கற்றுத் தேர்ந்த இளைஞராகிய முருகவேளுக்கு ’சித்தாந்தப் புலவர் மணி’ என்ற பட்டத்தைக் கயிலைக் குருமணி அவர்கள் அளித்து போற்றியதை மிகமிகப் பெருமையானது என்று அப்பா பலமுறை சொல்லியது பசுமையாகவுள்ளது.

சிறுவை நச்சினார்க்கினியரால், 1941-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நக்கீரர் கழகம் என்ற இலக்கிய அமைப்பிற்கு ஊன்றுகோலாய் விளங்கி, ‘மறைமலையடிகளார் மாட்சி’ எனும் புகழ் மலிந்த சொல்லோவியத்தைப் புனைந்து, அவர்தம் புலமை நலம் குன்றின்மேல் இட்ட விளக்கென ஒளிவீசியது.

அந்நூலின் முன்னுரையில் புலவரேறுவின் புலமைநலத்தைத் தமிழ்த் தென்றல் திரு.வி.க. பாராட்டுவது பொற்குடத்திற்குப் பொட்டு வைத்தாற்போன்றதாகும்.

புகழை விரும்பவில்லை.
புகழ் மலர்கள் இவரைத் தேடித் திரண்டு அலங்கரித்தன.
பட்டங்களை விரும்பவில்லை. பட்டங்கள் இவரை நாடிவந்தன. பல்கலைக்கழகங்கள் அழைத்து அறக்கட்டளைப் பொழிவுகளை நிகழ்த்த வேண்டினர்.
திருமடங்கள் அழைத்தன.
சைவ சித்தாந்த மாநாடுகள், கல்லூரிகள், உயர்பள்ளிகள் விழாக்கள் இவரை நாடின.

பொன்விழா, மணிவிழா, மலர்கள், திருக்கோயில்களின் குடமுழுக்கு விழா மலர்கள் அத்தனையும் இவர்தம் எழுத்தினை விரும்பி வேண்டி ஏற்றன.

இருபத்து இரண்டரை ஆண்டுகளாகத்
(1962 செப்டம்பர் முதல் 1985 மார்ச் வரை) ‘திருக்கோயில்’ திங்களிதழில் இவர் எழுதியதுபோல் இனி யார் எழுத வல்லார்.

தொல்காப்பியம் முதல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நூல்கள் வரை பொதுவாக முக்கியமான பாடல்கள், பகுதிகள், உரைநடையில் மறைமலையடிகளின் வாசகங்கள், திருக்குறள் பரிமேலழகர் உரை, திருவாசகம், திருக்கோவையார் முதலிய நூல்கள், நூற்றுக்கணக்கான தேவாரத் திருப்பதிகங்கள், பெரிய புராணத்தின் முக்கிய பாடல்கள், சங்கநூல் பாடல்கள், சிலம்பு முதலிய காப்பியங்கள், நன்னூல் முதலிய இலக்கண நூல்கள், குமரகுருபரர், பட்டினத்தார், தாயுமானவர், வள்ளலார் போன்றவர்களின் பாடல்களை மனப்பாடமாகச் சொல்லுகிற மாபெரும் வித்தகத்தையும், இப்பாடல் வரிகளைப் பொருத்தமான மேற்கோள்களாகத் தான் எழுதும் சால்புடைய கட்டுரைகளில் பயன்படுத்துவதையும் அப்பா அடிக்கடிச் சொல்லிக் காட்டுவார்.

திருப்பாவைச் செழும்பொருள், திவ்விய பிரபந்தச் செழுங்கனிகள் போன்ற தொடர் கட்டுரைகளைப் படித்துக் களித்துப்
‘பிரதிவாதி பயங்கரம் மகோ மகோ உபாத்யாய பத்மவிபூஷண். பி.பி. அண்ணங்கராச்சாரிய சுவாமிகள் பாராட்டிப் பல கடிதங்கள் எழுதியுள்ளார்.

என் பாட்டனார் சித்தாந்த கலாநிதி, செந்தமிழ்ப் பெரும்பேராசிரியர், உரைவேந்தரின் மணிவிழா வாழ்த்திதழில் (16.01.1964) இவர் எழுதிய 12 வெண்பாக்களில் ஒரு பொன்னிழையாக,

நூலாரும் நூலாருள் நூல்வல்லார் தாமுமெனச்

சால்பார் இருவகையைச் சார்ந்தோருள், – மேலாய்த்

தலைசிறந்த நூலாருள் நூல்வல்ல சான்றோய்!

நிலைசிறந்து வாழ்க! நெடிது.

எனும் வெண்பாவைக் குறிப்பிட விழைகிறேன்.

குமரகுருபரன், ஞானசம்பந்தம், செந்தமிழ்ச் செல்வி, சித்தாந்தம், திருப்புகழ் அமிர்தம், இராமகிருஷ்ண விஜயம், கலைமகள், வீரகேசரி, ஈழகேசரி, இந்து சாதனம், ஞானபூமி மற்றும் திருக்கோயில் இதழ்களில் அவர் எழுதிய அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்து வெளியிடுகிற பணி வருங்காலச் சைவ உலகிற்கு இன்றியமையாத அரும்பணியாகும்.

அப்பணியை அவரின் மகனார் திரு ஒளியரசும்,

கணினி உலகில் மாமணியாக விளங்கிக் கொண்டும் ஆற்றும் பணிகள் அளவில்லாதன.

சைவ உலகில் பெருமணியாக வருங்காலங்களில் திகழவிருக்கும் என் இனிய இளவல் மறைமலை நாயகன் சங்கரலிங்கம் இப்பணியில் தொய்வின்றிச் செயலாற்ற வேண்டும் என்பது தமிழ்கூறு நல்லுலகத்தின் பேரவாவாகும்.

தென்னவனார் செய்தமிழின் சிவஞானச் சீர்த்தியெலாம் சொன்னவனே!

முருகவேள் எனும்புகழின் மன்னவனே! முன்னவனே

தமிழ் நலத்தால் மூத்தவனே உருவளர்

நல்ஓவியமாய் உளத்தெழுதிப் போற்றுவமே!

என்று வரும் நீண்ட கவிதையை எந்தையார் ஒருமுறை இயற்றியதும் குறிப்பிடத்தக்கது.

——————————-

பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (10)

புலமைப் பூசல்

தமிழ் வரலாற்றுக் காலகட்டம் ஒவ்வொன்றிலும் அவ்வக் காலத்திற்குரிய ஆய்வுப்போக்கு முனைப்புடன் தலைதூக்கி நிற்பதைக் காணலாம்.

20-ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் நிலவிய சூழ்நிலையைக்

“கட்டி இரும்பு தந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை ஈடழித்து வரும் புதுமை நினைக்கையிலே நெஞ்சு பதைக்கும், சாற்ற வாய் பதைக்கும்”

எனும் பாவேந்தரின் பாடல் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.

அன்றைக்குத் தமிழின் உண்மையான தகுநிலையை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் உருவானது.

தாய்மொழி தமிழாயினும், தம்மை ஆரியரெனக் கற்பித்துக் கொண்டு வேண்டுமென்றே தமிழைத் தாழ்த்தியும், முட்டுக் கொடுத்துச் சமற்கிருதத்தைத் தாங்கிப்பிடித்தும், அறிவுகோடிய அறிஞர் சிலரின் அழிவழக்கையும் அழிம்புச் செயலையும் எதிர்த்து நற்றமிழறிஞர்கள் போராட வேண்டியதாயிற்று.

பொழிவுப் போருக்கு மேடைகளும் எழுத்துப் பூசலுக்கு இதழ்களும் வாயிலாகி வழியமைத்துக் கொடுத்தன.

இவ்வகையில் எழுந்த புலமைப் பூசல்கள் சிலவற்றைக் காணலாம்:

அக்காலத்தே நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், சென்னைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் வித்துவான் வே. வேங்கடராசுலு ரெட்டியார் இடையே கருத்து மோதல்கள் அடிக்கடி நிகழும்.

திரு ரெட்டியார் எழுதிய கபிலர் நூலை நாவலரும், பரணர் நூலை ஒளவையும் திறனாய்ந்து மறுத்துள்ளனர்.

கபிலர்- நூல் குறித்து ந.மு.வே. நாட்டார் கட்டுரையிலிருந்து ஓர் எடுத்துக்காட்டு:

“என் நண்பர் வித்துவான் திரு.வே. வேங்கடராஜுலு ரெட்டியார் அவர்களால் எழுதப்பெற்றுச் சென்னைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட ‘கபிலர்’ என்னும் உரைநூல் சென்ற ஆண்டில் அனுப்பப் பெற்று எனக்குக் கிடைத்தது…..

ரெட்டியார் அவர்களது ஆராய்ச்சி அறிவை முன்னமே ‘பரணர்’ என்னும் நூலால் அறிந்துளேன்.

ஆகலின் இப்பொழுது புதிதாக ஒன்றும் தோன்றவில்லை.

செட்டியார் தமது நூலின் முன்னுரையில் இற்றைக்கு 16 ஆண்டுகளுக்கு முன் என்னால் எழுதி வெளியிடப்பெற்ற ‘கபிலர்’ என்னும் உரை நூலைச் சுற்றி இழுக்கவும் இது எழுதியது மிகையாகாது.

அதற்குக் காரணம் கூறுவாராய் நாட்டார் அவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவரின் பயனைக் கருதி நூலை எழுதியுள்ளார் என்றும் அன்னதோர் நோக்கத்தால் எழுதப்பட்டது என்றுரைத்து இரண்டிற்குமுள்ள வேறுபாடு சிலவற்றைக் குறித்திருப்பது, நூலின் சில இடங்களில் அன்னார் கருத்துக்களைத் தாம் வேண்டுமாற்றால் ஆண்டிருக்கின்றனர்.

என்பால் அவர் வைத்துள்ள அன்பிற்கும் மதிப்பிற்கும் அறிகுறியாம் என்றே எண்ணுகிறேன்.

எனினும் எனது நூலின் கருத்துக்களை ஆண்டுள்ள வகைமையில், அதனோடு எனக்கு அமைதியில்லாத வெனத் தோன்றும் அன்னார் பொருளில் சிலவற்றையேனும் வெளிப்படுத்தல் அன்னவர் ஆராய்ச்சி பின்னும் தூய்மையாதற்கும், இந்த நூலின் ஆசிரியர் நட்பின் கிழமைக்கும் மதிப்பிற்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பொருந்தியதாகும் என்பது எனது துணிபு.

அந்நூலில் புதுமையாகக் காணப்படும் சில சொல்லாட்சி முறையை முதலில் ஆராய்தற்கு எடுத்துக் கொள்கிறேன் .

அங்ஙனம் நக்கீரர் காண்கின்றது என்பன முறையே ஆராயப்படும்.

இதற்குப் பொருள்கூறும் இடத்தில் கன்னடத்திலும், தெலுங்கிலும் இது வழங்குமாறும் எடுத்துக்காட்டுகள் காட்டப்பட்டுள்ளன.

சங்கப்புலவர்களைப் பற்றி ஆராய்ச்சி உரை எழுதும் ஆசிரியர் ஒருவர், பிற்காலத்துத் தலபுராணம் ஒன்றில் வருவதைக் கொட்டுவதும், திசைச்சொல் ஒன்றை முதன்மையாக நாட்டுவதும் அதனைப் பழைய தமிழ்ச் சொல் என்று நிறுத்தப்படுவதும் நேர்மை உடையவராகத் தோன்றவில்லை ……..”

மேற்படி ரெட்டியார் எழுதிய பரணர் என்னும் நூலை ஔவையவர்கள் ஆராய்ந்து தமிழ்ப்பொழிலில் தொடர் கட்டுரையாக எழுதிய மறுப்புரையைத் தொகுத்துச் சங்கத்தார் பரணர் என்ற நூலாக வெளியிட்டனர்.

ஔவை எழுதிய மேற்படிநூலை மறுத்து,

“பரணர் மறுப்பின் ஆராய்ச்சி” என்னும் கட்டுரையைப் பொன்னேரி வித்துவான் நடேச பிள்ளை வரைந்தார்.

ஔவையின் மாணவர்கள் மறுப்பு எழுதும் திறன் பெற்று விளங்கினர்.

அந்த அளவுக்கு ஔவை அவர்கள் மாணவர்களுக்கு அத்துறையிலும் பயிற்சியளித்திருந்தனர்;

அந்த மாணவர்களும் பெரும்பேராசிரியர்கள் பரிசோதித்துப் பதிப்பித்த தொல்காப்பியப் பொருளதிகாரத்தையே திறனாய்வு செய்யும் நற்றமிழ் ஆற்றல் பெற்றிருந்தனர் என்பதற்குப் பின்வருவன சான்றாகும்:

(1) தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பாராய்ச்சி

‘சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதிப் பதிப்பாசிரியர் திரு.ச. வையாபுரிப் பிள்ளை அவர்களால் பரிசோதிக்கப்பட்டுத் திரு எஸ் கனக சபாபதிப்பிள்ளை அவர்களால் வெளியிடப்பெற்ற தொல்காப்பியப் பொருளதிகார முதற்பாகம் தமிழ் பயிலும் பலருக்கு ஆதாரமாக விளங்குகின்றது.

அதனை ஊன்றிப்படித்து வருங்காலத்து, பாடங்கள் சில விளங்குவதைக் கண்டு அப்பாடங்களை அவ்வாறே கொள்ளின் உண்மைப்பொருள் காணவியலாது குன்று முட்டிய குருவி போலவும் குறிச்சி புக்க மான் போலவும் படிப்பவர் இடர்ப்படுவர்,

ஆதலின் உண்மைப் பாடங்களை வெளியிடின் அவருக்கு நன்மை பயக்கும் என்று கருதி இதனை எழுததலானேன்’

என்று திருவத்திபுரம்
ஔவை தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர் திரு. கா.கோவிந்தன் குறிப்பிடுகிறார்.

இக்கட்டுரையாளர் கா.கோவிந்தனைப் பற்றி “ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு கறுத்த மேனியும் ,சிரித்த முகமும் ஆர்வ நெஞ்சமும் அடையப் பெற்ற ஒரு சிறுவன் தனித்த முறையில் என்பால் தமிழ் பயின்றார்.

அவனுக்குத் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உரைகாரரான சேனாவரையர், நச்சினார்க்கினியர் மாறுபடுகின்ற இடங்களைச் சுட்டிக் காட்டியபோது, முடிவு காண்பதில் அவனுடைய அறிவு கிச்சென்று உண்மை கண்டு ஒளிவிட்டுத் திகழ்ந்தது.

பயலே நீ, படித்து நீதித்துறையில் செல்வாயானால் சிறப்பாய்” என்றேன்.

அச்சிறுவன் யாரென்று நினைக்கிறீர்கள்.

இன்று தமிழ்நாடு சட்டன்றச் சபாநாயகராக இருந்து, நிகழும் வாதங்களுக்குத் தீர்ப்பு கூறும் வகையில் நாடு புகழும் நலம் பெற்ற மாண்புமிகு புலவர் கோவிந்தன் ஆவர்”

என் 1970-இல் மாநிலத் தமிழாசிரியர் மாநாடு மதுரையில் நடந்தபோது வரவேற்புக்குழுத் தலைவராக இருந்த ஒளவையவர்கள் குறிப்பிட்டார்கள்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *