அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 87
ஈடில்லா உறவு – ஏகாம்பர மாமா
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
ஒருமுறை காஞ்சிபுரத்திற்கு உறவினர்களோடு பயணம் மேற்கொண்ட பொழுது,
‘உணவு உண்ண மாட்டேன்’ என்று நான் அடம் பிடித்தேன்.
பெற்றோர்களைத் தவிர முதல் முறையாக என் முதுகில் ஓங்கி அரைந்த என் சின்னத் தாத்தா ஏகாம்பரம் (09.10.1923 – 10.04.1996) அவர்களைக் கண்டு நடுங்கினேன்.
அன்று முதல் இறுதிக் காலம் வரை அவரைப் பார்க்கும் போதெல்லாம் அச்சம் என் நெஞ்சில் சூழும்.
எந்தையார் மிகவும் போற்றிய மாமனிதராக அவருடைய மாமா இன்முகத் திலகமாக ஏகாம்பரம் திகழ்ந்தார்.
நாங்களும் அப்பாவைப் போலவே அவரை ‘மாமா’ என்று சொல்லித்தான் அழைத்தோம்.
தியாகராய நகரில் அவரும் அத்தை குசலாம்பிகையும் திங்கள்தோறும், பெற்றோர்களுடன் அவர்கள் இல்லத்திற்குச் சென்று சந்திப்பதுண்டு.
வைத்த பொருள் ,வைத்த இடத்தில் வனப்புற வைத்திருக்கும் பாங்கினை என் அத்தை போற்றி மகிழ்ந்தார்கள்.
ஓரிடத்தில் அமராமல், துறுதுறுவென்று அவர்கள் இல்லத்தில் அங்கிங்கெனாதபடி ஏறி இறங்கி பொருள்களை வாரி இறைக்கும் என் பழக்கத்தை மாற்றிய பெருமிதம் என் அத்தையைச் சாரும்.
நாங்கள் மூவரும் இளம்பிள்ளைகளாக இருந்தபோது பெற்றோர்களுடன் பல இடங்களுக்குச் செல்வதுண்டு.
செல்கிற இடங்களிலெல்லாம், அம்மா தொடர்ந்து சொல்லிக் கொடுத்த பழக்கம், ‘
யாரையும் அழைக்கும்பொழுது நீ, வா, போ’ என்று விளிக்காமல், ‘நீங்கள், வாருங்கள்’ என்று சொல்லும் முறைமையை வலியுறுத்தினார்கள்.
‘இளங்கன்று பயமறியாது’ என்ற போக்கிலேயே நானும் என் தம்பி பரதனும், எவரையும் ‘நீ, வா, போ’ என்றுதான் அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தோம்.
‘நீ, வா, போ’ என்ற விளி அடைகளை எங்களிடமிருந்து அறவே நீக்கச் செய்த சிறப்பும் ஏகாம்பரம் மாமா – குசலாம்பிகை அத்தையைச் சாரும்.
எங்கள் மத்தியில் எங்கள் பெற்றோர்களுடன் வனப்பாக ஆங்கிலத்தில் பேசும் திறமை கொண்டவராவார் எங்கள் அத்தை குசலாம்பிகை.
அம்மா அடிக்கடி எங்களிடம் சொல்வார்கள், ‘
குசலாம்பிகை
(26.10.1928 – 11.10.1991) அத்தை வேலூரில் செல்வச் சிறப்புடன் வாழ்ந்த குடும்பத்தைச் சார்ந்தவர்.
அவருடைய தந்தை பரணிப் பிள்ளை வேலூரில் ‘பழநி பீடி மண்டி’ நடத்தியவர்.
பெற்றோருக்கு ஒரே மகளாக, நான் படித்த ஊரிசுக் கல்லூரியில் எனக்கு மூத்த மாணவியாக அத்தை இருந்தார்கள்’ என்பார்கள்.
ஒருமுறை அத்தையும் நானும் எங்கள் நெருங்கிய உறவினர் இல்லத்தில் காலைச் சிற்றுண்டி உண்ணும் பொழுது விருந்துப் படைத்த உறவினர் ஒருவர் என்னிடம் உரிமையாகப்
‘பரிமாறிய இரண்டு இட்டலிக்கு மேல் வேண்டுமென்றால் தயங்காமல் கேள். தருகிறேன்’ என்றார்.
உடனே, என் அத்தை குசலாம்பிகை, விருட்டென்று எழுந்து,
‘அருள் எழுந்திரு. இங்கு நாம் உண்ண வேண்டாம். அது என்ன?
வேண்டுமென்றால் கேள் என்பது! இதுதான் விருந்தோம்பலா?
’ என்று விழிகளை உருட்டி மருட்டியபோது அந்த உறவுப் பெண் கண் கலங்கினார்.
அப்பா அடிக்கடிச் சொல்வது,
‘உணவருந்தும் முறையை நான் ஏகாம்பரம் மாமாவிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன்.
அமிர்தத்தையே மாமாவுக்குப் படைத்தாலும் ஒருமுறைக்கு மேல் மீண்டும் வேண்டுமெனக் கேட்டு உண்ண மாட்டார்’ என்பார்.
எப்போதும் புன்னகை பூத்த முகமும், எதையும் சிந்தித்துச் செயல்படும் திறமும், வெள்ளை வேட்டியும், பல வண்ணச் சட்டைகளையும், அமெரிக்கா சென்று திரும்பிய காலணிகளோடு மிடுக்கான தோற்றப் பொலிவுடைய மாமாவை பலர் ‘அமெரிக்கா ஏகாம்பரம்’ என்று அழைக்கும் அளவிற்கு வாழ்வில் அவர் உயர்ந்ததை ஓர் ஒப்பற்ற சாதனை என்றே பாராட்டலாம்.
அப்பாவின் முதல் மேடைப் பேச்சை எழுதிக் கொடுத்தவர் ஏகாம்பரம் மாமா என்று என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அதேபோல அப்பாவும், ‘ஏகாம்பரம் மாமா தொட்டதால் தான் நான் இவ்வளவு உயரத்துக்கு வர முடிந்தது.
அவர் என்னைத் தன் மகனைப் போல எங்குச் சென்றாலும் அழைத்துக் கொண்டு அரவணைத்தார்’ என்று சொல்வது வாடிக்கையாகும்.
எங்கள் பெற்றோர்கள் இருவரும், ஏகாம்பரம் மாமாவிடம் தான் குடும்பப் பொருண்மைகள் குறித்து நெருக்கமாக அளவளாவி தக்க முடிவெடுப்பதையும் நான் கண்டுள்ளேன்.
கற்பனை வளமும், கலைத்திறமையும்,
சிந்தனைச் செல்வமும் வாய்த்த ஏகாம்பர மாமாவுக்குப் பெண் கொடுக்க மாமன்மார் பலர் முன்வந்தனர்.
ஆனாலும், அவர் விரும்பியபடியே, வேலூரில் செல்வக் குடும்பத்தைச் சார்ந்த குசலாம்பிகை அத்தையை மணந்தார் (09.09.1946).
அவருடைய மூன்று செல்வங்களுக்கும் இனிய தமிழ்ப் பெயர்களான
இளமதி (04.06.1950),
சேரமன்னர் பெயர் கொண்ட வானவன் (04.12.1953),
தேன்மொழி (29.11.1956)
எனச் சூட்டி மகிழ்ந்தார்.
இவர்கள் நன் முத்துக்களாய் இன்றும் நாட்டுக்கும் , குடும்பத்துக்கும் பெருமை சேர்த்து வருகிறார்கள்.
எஸ்.ஐ.டி. மகளிர் கல்லூரி உளவியல் துறை மாணவியாக இருந்த அக்கா தேன்மொழி, எங்கள் இல்லத்திற்குப் பலமுறை வருகை புரிந்து, மகிழ்ச்சியாக அளவளாவுவதும், தான் கல்லூரியில் கற்ற நீச்சல் பயிற்சியையும் எங்கள் மூவருக்கும் பயிற்றுவித்தது மறக்கவொண்ணா நிகழ்வாகும்.
மாமா வானவன், மாநிலக் கல்லூரியில் முது அறிவியல் புவியியல் பயின்றதோடு, சென்னை வானூர்தி நிலையத்துக்கு அருகிலுள்ள, வலவர் மன்றத்தில் உறுப்பினராக இருந்ததைக் குறித்து என் பெற்றோர்கள் சொல்லி வியப்பார்கள்.
அப்பொழுதே அவருடைய மூத்த அண்ணன், இளமதி மருத்துவப் படிப்பை நிறைவு செய்து அமெரிக்கா சென்ற முதல் குடும்ப உறுப்பினர் என்ற பெருமை பெற்றவராவார்.
அவரைப் போலவே அவருடைய தம்பி வானவனும் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார்.
எந்தையார், அலுவலகத்திற்கும் அவர் செல்லும் கூட்டங்களுக்கும் செல்லும் பழக்கத்தை மாமா ஏகாம்பரம் உடன் சென்று மகிழ்ந்தார்.
பல இதழ்களில் கூர்மையான கட்டுரைகளை வடிக்கும் ஆற்றலாளராகவும் விளங்கினார்.
வடார்க்காடு மாவட்டம் வாலாசாப்பேட்டைக்கு அருகிலுள்ள கலவை என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்னுடைய பெரிய தாத்தா
திரு. மா. அண்ணாப் பிள்ளை ஆவார்.
இவர் மேல்நெல்லி கிராமக் கர்ணமாக விளங்கியவர்.
வந்தவாசி வட்டம் சேத்துப்பட்டுக்கு அருகிலுள்ள கோட்டுப் பாக்கம் கிராமக் கர்ணமாக விளங்கிய பெரிய தாத்தா திரு. ஏகாம்பரம் பிள்ளை அவர்களின் புதல்வி என் பெரிய பாட்டி இலட்சுமி அம்மாளைத் திருமணம் செய்த என் பெரிய தாத்தா பெயர் தான் அண்ணாப்பிள்ளை ஆகும்.
அண்ணாப்பிள்ளை – இலட்சுமி அம்மாள் இணையருக்கு இரண்டு பெண் மக்கள் பிறந்தனர்.
மூத்தவர் என் பாட்டி லோகாம்பாள் (1911) ஆவார், உரைவேந்தர் ஔவை துரைசாமிப் பிள்ளையை மணந்தார்;
இளையவர் ஞானாம்பாள் (1918), ஆரணி – திருமணி சுந்தரமூர்த்திப் பிள்ளையை மணந்தார்.
அண்ணாப்பிள்ளைக்கு இரண்டாம் மகவாகப் பிறந்த ஆண்மகனுக்குத் தன் தகப்பனார் பெயரான மாசிலாமணி என்ற பெயரைச் சூட்டினார்.
ஆனால் அம்மகவு இரண்டு வயதிலேயே மறைந்தது.
நான்காவதாகப் பிறந்த பிள்ளைக்கு, தம் அருமைத் துணைவியாரின் (இலட்சுமி அம்மாள்) தந்தையார் பெயரான ஏகாம்பரம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த அண்ணாப்பிள்ளையை பிறந்த பதினொரு திங்களிலேயே மாமா ஏகாம்பரம் இழந்தார்.
தந்தையை இழந்த ஏகாம்பரம், தன் அன்னையும் என் பெரிய பாட்டியுமாகிய இலட்சுமி அம்மாள், தன்னுடைய தமக்கையரான என் பாட்டி லோகாம்பாள், என் சின்ன பாட்டி ஞானாம்பாள் ஆகியோருடன் கோட்டுப்பாக்கம் செல்ல நேர்ந்தது.
திருநாவுக்கரசருக்கு வாய்த்த தமக்கை திலகவதியார் போலும்,
இராஜராஜ சோழனுக்கு வாய்த்த தமக்கை குந்தவி நாச்சியார் போலும்
– திரு ஏகாம்பரத்திற்குத் தமக்கையாராக என் பாட்டி லோகாம்பாள் வாய்த்தார்.
ஆறு வயது நிரம்பிய பருவத்தே, தம் தமக்கையார் இல்லத்தில் சென்று சேர்ந்து, என் தாத்தா பேராசிரியர் ஔவை துரைசாமிப் பிள்ளை அவர்களின் அரவணைப்பில் கல்வி பயிலும் நல்வாய்ப்பைத் திரு. ஏகாம்பரம் பெற்றதையும், செய்யாறுப் பள்ளியில் தாத்தா ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில், மாமா ஏகாம்பரத்தை, உரைவேந்தரின் மாணவர் மேனாள் சட்டப் பேரவைத் தலைவர் புலவர் கா. கோவிந்தன் அவர்கள், செய்யாறு தொடக்கப்பள்ளியில் கைப்பிடித்து அழைத்துச் சென்று சேர்த்ததையும் லோகாம்பாள் பாட்டி பலமுறை சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
தொடரும்…
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின்
‘ஔவையும் புலமையும்’ – (11)
திருவத்திபுரம் ஔவை தமிழகத்தைச் சேர்ந்த வித்துவான் கோமான் ம.வி.இராகவன் அவர்கள் கூறுவதாவது:-
“பெரியார் நரசிம்ம அய்யங்கார் அவர்கள் சில பொருள் பற்றித் தாம் ஆராய்ந்து கண்ட உண்மைகளை நமது பொழில் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர்.
சென்ற யுவ புரட்டாசி ஐப்பசித்திங்கள் இதழ்களில் உரையாசிரியர் ஒருவர்,
‘பேராசிரியர் பலர்’ என்ற தலைப்பின் கீழ் அவ்விருவரை அன்றிப் பிற உரையாசிரியர்கள் பற்றியும் விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று அவரால் வெளியிடப்பட்டு இருத்தல் அன்பர் அறிந்ததொன்று.
அதன்கண் அவர் உண்மையாகச் செய்திருக்கும் முயற்சி பாராட்டத் தக்க ஒன்றாயினும்,
அவர் ஆராய்ச்சிக்கு உரிய நெறிமுறைகளை விடுத்து,
மேற்கொண்டு அவற்றை ஏதும் எடுத்துக்காட்டும் இன்றியே துணிந்து விதித்தாலும்,
சிலவற்றை இல்லாதனவும் கொண்டு,
தன் குறையை குற்றம் படத்தக்க ஏதுக்களால் துணிந்து நிறுத்தியும் முடிவு கூறியுள்ளனர் ….
அவ் ஆராய்ச்சி படிப்பவருக்குப் பொய்ப்பொருளை மெய்ப்பொருள் காட்டி மயங்க வைக்க இருத்தலின், அதனைப் படிப்பார் தாம் காண்பவற்றைக் காணுமாறு கொள்ளாது
தம் உண்மை அறிவான் உணர்தல் வேண்டி அவ்வாராய்ச்சி உரை பற்றிச் சிறிது ஆராயப்படுகின்றது.
இதுகாறும் கூறிவந்த வாற்றான் திரு. அய்யங்கார் அவர்கள் உரையாசிரியர் எனப்படுவார் இளம்பூரணர் என்ற சாத்தியத்திற்குக் காட்டிய சாதனங்களின் பொருத்துகையின்மையும் அவற்றால் சாதிக்கப் பெற்ற சாத்தியத்தின் நிலைமையும் ஒருவாறு விளக்கப்பட்டன.
இவ்வாற்றான் உரையாசிரியர் இளம்பூரணர் அடிகளும் வேறு என்று துணிவார் உளரேல், அன்னாருக்கு அது இன்னமும் அறிஞர் ஆராய்தற்குரிய ஒரு பொருள் ஆதலின், திரு ஐயங்கார் அவர்களின் ஆராய்ச்சியின் நேர்மையின்மை விளக்குவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு எழுந்தது என்பதையும் அறிவுறுத்திச் செல்கின்றேன்.”
தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு – புலமைப் போர்
1) டாக்டர் பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு ஆராய்ச்சி:
திருவையாற்றுக் கல்லூரி முதல்வர், சமற்கிருதப் பேராசிரியர் டாக்டர் பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பதை ஆய்வாளர் பலரும் அறிவர்.
ஆனால் அதுபற்றிய மற்றொரு செய்தியை இற்றைநாள் தொல்காப்பிய அறிஞர்கள் அறிதிருப்பார்களா என்பது ஐயப்பாடே. சிலர் அறிந்திருக்கலாம்,
பலருக்கு வாய்ப்பில்லை.
சாத்திரியாரின் ஆய்வேட்டுக் கருத்துக்களை மறுத்துத் தமிழ்ப்பொழில் இதழில், 12 தொடர் கட்டுரைகளை ஒருவர் எழுதினார்.
அவர் கல்வித்துறைப் பேராசிரியரல்லர், காவல்துறைத் துணை ஆய்வாளர்;
மன்னார்குடி நா. சோமசுந்தரம் பிள்ளை –
சொல்லதிகாரக் குறிப்புரை மறுப்பு:
இந்தச் சொல்லதிகாரக் குறிப்புரை மறுப்புக்கு மறுப்பு :
சாத்திரியாரின் மாணவர் வித்துவான் பி.எஸ் . வேதாசலையர் எழுதினார்.
இதற்கிடையில், ‘சொல்லதிகாரக் குறிப்பு மறுப்பின் மேல் தடைகள்’ செந்தமிழ்ப் பத்திராசிரியர் திரு நாராயண ஐயங்கார் எழுப்பினார்
அந்தத் தடைகளுக்கு விடையளித்தார் நா.சோமசுந்தரம் பிள்ளை,
“நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார் என்னும் திருக்குறளில் ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றது பூத்து காய்த்தூ காய்க்காத மல்லிகை கொடி என்பது போல் நின்றது என்றார் செந்தமிழ் பத்திராசிரியர்;
அவர் ஊழ்த்தும் நாறா மலர் என்ற உண்மை தொக்கு நின்றது என்பதை அறியார் போலும். ஆதலால் வினையெச்சங்கள் யாண்டும் முதனிலை கொண்டே ஒழிய வேண்டும் என்னும் நியமம் இல்லை என்று கூறினார்.
செந்தமிழ்ப் பத்திராசிரியர் சிவஞான முனிவரின் இலக்கணக் குறிப்பைப் பிழைபடவுணர்ந்து பொருளுரைத்தார்;
அது குறித்து, சோமசுந்தரம் பிள்ளை …
சிவஞான முனிவர் வடமொழி தென்மொழி கடல்களின் நிலை கண்டுணர்ந்து தமிழ் இலக்கணம் அமைத்த பெரியார் .
அவர்களில் ஆழத்தைக் கண்டு உண்மைப் பொருளை அறிந்து கொள்வதற்குப் பல பிறவிகளில் அவரைப் பூசித்த தவப்பயன்; ஏனையோருக்கு ஏறாது என்பது தலைமை சான்ற ஞானிகளின் கருத்து” என நயமாக மறுப்புரைத்தார்.
டாக்டர் சாத்திரியாரின் மேற்குறித்த நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டபோது ஒளவையவர்கள் அதிலுள்ள பிழை / தவறு / குற்றம் சுட்டிக்குறித்துக் கட்டுரை எழுதினர்.
அதனுள் ஒரு சிறு பகுதி வருமாறு :
தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பாராய்ச்சி
வித்துவான்
ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை
(தலைமைத் தமிழாசிரியர் திருவத்திபுரம்)
“பிரமஸ்ரீ பிஎஸ் சுப்பிரமணிய சாஸ்திரியாரவர்கள் எழுதிய தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு என்னும் இவ்வரிய நூல் தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குப் பல ஆசிரியன்மா எழுதியுள்ள உரைகளை ஆராய்ந்து உண்மை காணும் ஆராய்ச்சி நூலாகும்.
இதனைப் படிப்பபோர் உரையாசிரியர் முதலிய பல இலக்கண உரையாசிரியர்களின் உரை நுட்பங்களை உணரும் நலம் பெறுவர்.
இக்குறிப்பு நூலை அறிஞர் பலர் ஆராய்ந்து வருகின்றனர்.
மன்னார்குடி தமிழ்ப் புலவர் திரு சோமசுந்தரம் பிள்ளையவர்கள் இதனை விரிவாக ஆராய்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
அவ்வாராய்ச்சியால், தமிழிலக்கணக் கடலில் மூழ்கிப் பண்டையுரையாசிரியன்மார் கொணர்ந்து தந்த உரைமணிகளின் நுட்பங்கள் செவ்வனம் உணரப்படும்.
இடையே, இந்நூல் சென்னைப் பல்கலைக்கழகத்து வித்துவான் வகுப்பிற்குப் பாடமாக அமைக்கப் பெற்றிருத்தலின், இதனைப் படிக்கும் மாணவர் இதனுள் தாம் காண்பவற்றைக் காணுமாறே கொள்ளாது, உண்மை யறிவால் ஓர்ந்துணருமாறு இவ்வாராய்ச்சி செய்யப் பெறுகின்றது.
இதன் முதற் சூத்திரக் குறிப்பினைப் பொழிலில் வெளியிட்டுள்ளோமாகலின் இங்கு இரண்டாவது சூத்திர முதலாக ஆராய்கிறோம் .
அறிஞர்கள் ஆராய்ந்து உண்மை துணிவார்களாக.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment