திருப்பாவை
============
பாவைப் பேருரை – முன்னுரை
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
பாவைப் பேரியக்கம்
———————————–
தமிழிலக்கிய வரலாற்றில் ஆறாம் நூற்றாண்டு முதல் தொடங்கி பன்னிரண்டாம் நூற்றாண்டு முடிவுவரை சமயக் கோட்பாடுகளின் காலமாகும்.
அதனைச் சமய மறுமலர்ச்சிக் காலம் என்பர்.
சைவ வைணவ சமயங்கள் புத்துயிர் பெற்று மக்களிடையே பரவிய காலம் அது.
ஆழ்வார்கள்,நாயன்மார்கள் போன்ற மெய்யடியார்கள் தோன்றியதும் அப்பொழுதுதான்.
தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தங்கள் போன்ற தெய்விக இலக்கியங்கள் பிறந்து தமிழை ஞானத்தமிழ் எனப் பெயர் சூட்டிக் காட்டிய பொற்காலமும் அதுவே எனலாம்.
பொதுவாகத் தமிழகத்தில் பத்தி இயக்கம் தோன்றி வேரூன்றிய காலமும் அதுவே என்றால் மிகையாகாது.
தேவார திருவாசகங்களைத் தமிழ் வேதம் பொதுமறை என்றெல்லாம் சைவப் பெருமக்கள் போற்றுவர்.
வைணவர்களோ நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை செந்தமிழ் வேதம் என்று பாராட்டுவதோடு நில்லாது, அதனைக் கற்று உணர்ந்தோரைச் செந்தமிழ் வேதியர் எனவும் சிறப்பித்து வழங்குவர்.
“பச்சைப் பசுந்தமிழின் பின் சென்ற பைங்கொண்டலே“ எனச் சிவனடியார்களும் பாராட்டுமாறு, திருமாலுக்கு முன்னர் பிரபந்த குழுவினர் பாடிப் போற்றிச் செய்து போவது மரபு.
அந்த மரபு அன்றுமுதல் இன்றளவும் நீடித்து நிலைபெற்று நிற்பதைக் காணலாம்.
இவ்வகையில் சிறப்புற்ற சமய இலக்கியங்களுள் திருப்பாவை,
திருவெம்பாவை எனும் இருபெரும் நூல்களும் தன்னிகரற்றுத் தனிச்சிறப்புப் பெற்றவை ஆகும்.
மார்கழி நோன்பையும் தைந்நீராடலையும் வெளிப்படையாகச் சொல்லும் நூல் வகையுள் மேற்போக்காக அமைந்தவையே இவ்விரண்டும்.
இருந்தாலும், திருப்பாவை, மிக்க இறைநிலை, மேலாம் உயிர்நிலை, தக்கநெறி தடையாகும் ஊழ்வினை, அது நீங்கி வாழும் பேரின்ப வாழ்வு என்பவற்றை விளக்கி இறையருள் விசேடங்களை உள்ளுறையாகக் கொண்டது.
இதைப் போலவே திருவெம்பாவையும் பொங்கும் மவ்விருள் உற்று உறங்காமல், இறைவன் அருட்கயத்தில் மூழ்க வருக என அடியார்களை அழைத்து அவர்கள் எய்தும் சிவானந்தப் பெருவாழ்வின் பேரியல்புகளை எடுத்துரைக்கும்.
இதனால் இவை இரண்டுமே வேத வித்து என்றும் மறைத்தமிழ் என்றும் பேர்பெற்றுச் சிறப்பெய்தி வந்துள்ளன.
இருபாவைகட்கும் இப்படி அருமை பெருமைகள் பல இருந்தாலும் கடந்த முப்பது ஆண்டுகட்கு முன் வரை நாட்டில் இருந்த நிலைமை வேறு.
தமிழிலே புலமை பெற்ற ஒரு சிலரைத் தவிரப் பொதுமக்கட்கு இவற்றின் பெயர்கூடத் தெரிய வராது.
திருப்பாவை செய்தவர் ஆண்டாள்.
அதில் முப்பது பாசுரங்கள் உண்டு என்பதுகூடத் தெரியாத வைணவர்கள் இருந்தனர் என்றால் அது மிகையாகாது.
திருவெம்பாவையினைப் பற்றியோ கேட்கவே வேண்டாம்.
தெரியாதவர்கள் சைவர்களில் பலர் என்பது மட்டுமின்றித் தெரிந்தவர் கூட அதன்பேரைத் திருவெம்பாவை என்றே சொல்லக் கேட்டிருக்கிறேன்.
காரணம் அதுவரை மக்கள் இலக்கியமாகப் பொது மக்களிடையே பயின்று பரவாமை தான்.
பரவாத தன்மை என்பதைக் காட்டிலும் பரவ விடாத புன்மை என்றே சொல்லலாம்.
ஆனாலும் திருப்பாவையின் ஏற்றமுணர்ந்து வைணவ முன்னோர்கள் போற்றிய முறை துறைகளை இன்று நாம் மறக்க இயலாது.
ஆண்டாளுக்குக் கோயில் கட்டி வழிபட்டது.
ஆண்டுதோறும் திருவாடிப்பூர விழா கொண்டாடுவது.
மார்கழி முப்பதும் நாளுக்கு ஒரு பாட்டாகத் திருப்பாவையைப் பாடிப்பரவுவது.
இந்த மாதத்தை அருட்புயர் காலம் எனக் கொண்டு கோயில்களிலும், இல்லங்களிலும் திருப்பாவை மட்டுமே பாராயணம் பண்ணிவருவது, உடையவர் திருப்பாவை ஜீயர் என்றே பெயர் பெற்றுச் சிறந்து நின்றது.
இன்னோரன்னவை அவற்றுள் தலைசிறந்தவை ஆகும்.
செந்தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்க முன்னோர் திருப்பாவை நூலின் உள்ளுறையான சீரிய ஞான நுணுக்கங்களை விரிவுரையாக உரைவளம் கண்டு காட்டிய செயல் திறமே இவையனைத்திலும் மிகச்சிறந்த ஒன்றாகும் எனலாம்.
இருந்த போதிலும் பின்வந்தோர்கள் காலத்திற்கு ஏற்ப அதனை மக்கட் காப்பியம் ஆக்கி, பொதுமக்களோடு தொடர்புப்படுத்த வேண்டிய பெருங் கடமையினை பல நூற்றாண்டுகளாக மறந்தே போய்விட்டனர்.
இதனை நாம் மிகவும் வருத்தத்தோடு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
வரலாறு சுட்டும் இப்பேருண்மையினை, எவரும் மறுக்கவோ அன்றி மறைக்கவோ இயலாதது.
திருப்பாவை நூலைப் பெரிதும் தனிச்சமய நூலாகவே கையாண்டு வந்தனர் அவர்கள். போது போக்கும் உரையினர் என்ற குறுகிய வட்டங்களை அமைத்துக்கொண்டு மரபுப் பொருள் விளக்கங்களையே பலரும் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தனர்.
இதன் பரவுதலைக் குறுகிய வளைவுக்குள்ளேயே சுழலவிட்டு புறம்பு நடமாட விடாமல் அதை இருட்டடிப்புச் செய்த ஒரு பெருங்குறை எவரும் மறுத்தற்கு இயலாத பேருண்மை.
தமிழிலக்கிய வரலாறு இதற்கு நடுநின்று தக்க சான்று கூறும்.
கோதை தமிழ் எனச்சிறப்புப் பெறும் இத்திருப்பாவை நூலுக்கு – சங்கத் தமிழ்மாலை என ஒரு தனிச்சிறப்பு உண்டு.
சங்கத் தமிழ் மாலை என்றது தமிழிலக்கிய வரிசையில் திருப்பாவைக்குரிய இடம் பற்றி வந்த சிறப்பு. கோதை தமிழ் என்பதோ செய்த ஆசிரியரால் பெற்ற ஏற்றம் பற்றி வந்த சிறப்பு.
இவ்விருவகைப் பெருமைகட்கும் தகுந்த முறையில் இந்நூலின் அருமை பெருமைகளைப் பொதுமக்கள் நேற்றுவரை அறிந்து மகிழ முடியவில்லை.
சமயநூல் என்கிற முறையில் பழம் பொருள்களையே திரும்பத் திரும்பச் சொல்லக் கேட்குப் பழகி வந்தனர்.
தமிழிலக்கிய வரிசையுள் திருப்பாவைக்குரிய சிறப்பிடம் எடுத்த கருத்தை வற்புறுத்தும் முறையழகு உள்ளுறையால் அமைந்த பத்தியின் பல்வேறு படிகள், சொற்பொருள் அழகுகள், கருத்தமைதி. அலங்கார மரபுகள், இலக்கண விசேடம், யாப்பமைதியின் திறன். உட்கருத்துக்கு ஏற்றபடி அமைந்த ஓசை நயம். பிறபாவைகளோடு உள்ள ஒற்றுமை வேற்றுமைகள். வேற்றுமையால் அமைந்த சிறப்பியல்புகள். முன்னைய மரபுவழி அழியாது போற்றிய பாங்கு, சமய சமரசக் கோட்பாடுகள்.
இவற்றை எல்லாம், எளிய இனிய தமிழில் எடுத்து விளக்கிப் பொதுமக்கட்குப் புலனாகும் போக்கில், எழுதவோ, பேசவோ செய்திருந்தால் நிலையான பொது மக்கள் காப்பியமாகப் பெயர்பெற்றுச் சிறந்து நிற்கும்.
சைவ சமயத்தினைச் சார்ந்த திருவெம்பாவை நூலின் இயல்பும் இத்தகையதே.
திருக்கோவையார் என்பது திருவெம்பாவை போல மாணிக்கவாசகர் இயற்றிய பிறிதொரு நூல்.
அதற்கு உரைவளம் கண்ட பேராசிரியர் என்பார்.
மாணிக்கவாசகரை அறிவால் சிவனே என்பது தேற்றம்‘ என்று கூறி மகிழ்வர்.
முந்தைய சைவப்பெருமக்கள் அனைவருமே திருநான் மறைமுடிவும் கோவை திருவாசகமும் ஒரு வாசகம்“ என்றே உணர்ந்தும் உணர்த்தியும் வந்தனர்.
திருவாசகம், சதுர்மறையின் சாரம் பிழிந்த சங்கிரகம்‘ என்றது அங்ஙனம் உணர்ந்தோர் உட்கருத்து.
இருந்தும் திருப்பாவைக்குப் போல் நேற்றுவரை திருவெம்பாவைக்கு ஒரு பேருரை காண முடியவில்லை.
காரணம், சித்தாந்த சைவர்களாகிய சிவாச்சாரியர்களும் குருக்கள்மாரும் ஆகம சாஸ்திர வல்லுநர்களாய் சிவ தீட்டிசை புரிவதிலும் ஆலய பூஜா கைங்கரியங்களிலுமே பெரிதும் ஈடுபட்டிருந்தனர்.
அன்றியும் வடமொழி தமிழ் ஆகிய இருமொழிகளிலும் போதிய புலமைபெற்று உரைவளம் காணும் தகுதி பெற்றவர்கள் அருகியும் இருந்தனர்.
இரு மொழிகளிலும் சீரியபுலமை பெற்று ஆதீனத்தலைவர்களாய் இருந்த பெருந்தகையோர் ஒரு சிலருண்டு.
அவர்களை எண்ணிப்பார்த்தால் சமய நூல்களைச் சாத்திரம் தோத்திரம் என இருவகைப்படுத்திக்கொண்டு, தேவார திருவாசகங்களைத் தோத்திரமாக ஆக்கிப் புறக்கணிக்கல் ஆயினர்.
இதன் பயனாய்த் திருவெம்பாவை கோயில்களில் வழிபாட்டு நேரங்களில் மத்தளம் கொட்டித் தாள முழக்கோடு பண்ணிசைப் பாடும் அளவுக்கு நடைபெற முடிந்ததே தவிர திருப்பாவை போலவே இதுவும் மக்கள் இலக்கியமாக மாறி முழுப் பெருமை பெற இயலவில்லை.
எனவே, முற்கூறியபடி திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய இவ்விரு நூல்களும் மக்கள் இலக்கியமாக மாண்புபெறும் மறுமலர்ச்சியினை எதிர்நோக்கி இருந்தன.
இவ்வுண்மை எவருக்கும் சொல்லாமலே துலங்கும் நிலையில் இருந்தன.
இந்தப் பின்னணியோடு இக்கால நிலையில் நாம் சிலவற்றை உற்று நோக்குதல் வேண்டும்.
இன்றோ, திருப்பாவை, திருவெம்பாவை பற்றித் தெரியாத பொது மக்கள் கிடையாது.
ஊருக்கு ஊர் பாவை மன்றங்கள் அமைந்து சிறக்கின்றன.
இலவசமாக விரும்புபவர்கட்கு இருபாவைகளையும் கற்றுத்தரக் காண்கிறோம்.
எழுத்தறிவில்லாத பாலர் முதல் பெண்டிர் வரை அவற்றை மனப்பாடமாக்கி ஒப்புவித்தனர்.
அப்படி, இருபாவைகட்கு ஒப்புவித்தல் போட்டி ஏற்படுத்தி பரிசு வழங்கி மக்களை ஊக்குவித்தும் வருகின்றனர்.
நாடெங்கிலும் பாவை மன்றங்கள் நிறுவி ஆண்டுதோறும் பாவை விழாக்கள் கொண்டாடப்பெற்று வருகின்றன.
பாவைப் பாடல்களைக் கொண்டே முழுக்கச்சேரிகள் நிகழ்வது இன்றைய புதுமை.
பேதமில்லாதபடி மக்கள் இருபாவைகளையும் ஓதி சரிசமமாகப் பாவித்து சமய ஒற்றுமை வளரவும் வளர்க்கவும் காண்கிறோம்.
இனிய எளிய பதவுரை பொழிப்புரையுடன் பாவைகள் இரண்டும் வெளிவருகின்றன.
பாவைக் கூத்து என்ற பெயரால் திருப்பாவை முழுதும் நடன நாடகமாக கலையரங்குகளில் நடிக்கப்பெற்று வருவதனை யாவருமே உணர்வர்.
சிவன் கோயில்களில் திருப்பாவையும், வைணவத்தலங்களில் திருவெம்பாவையும் பொழிவாக நடைபெறுகிறது.
அது மட்டு அன்றி, சைவப்பெருமக்கள் திருப்பாவை பற்றியும் வைணவப் பெரியோர்கள் திருவெம்பாவை பற்றியும் உரையாற்றும் பேரதிசயம் இக்காலத்திலே நிகழ்ந்து வருகிறது.
ஆண்டாள் மாணிக்கவாசகர் திருவுருவப் படங்களை ஒருசேர வைத்து ஆராதிக்கப் படுகின்றன.
இருபாவைகளையும் யானை மீது வைத்து ஊர்வலம் வந்து பொதுப்பட மக்கள் எல்லோரும் வணங்கி வழிபடுகின்றனர்.
தமிழகத்தில் மட்டும் இல்லாமல் தில்லி, கல்கத்தா, ஆந்திரா, கர்நாடகம், கேரளா முதலான பிற மாநிலங்களிலும் பாவை மகாநாடுகள் மிகப் பெருமையோடு கொண்டாடப்பெற்று வருகின்றன.
திருவெம்பாவைக்கு வெகுகாலமாக இல்லாத குறை ஒரு பேருரை இல்லாததே ஆகும்.
அக்குறை இக்காலத்திலே காலஞ்சென்ற மகிபாலன்பட்டி பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களால் நீக்கப்பட்டுவிட்டது.
கதிர்மணி விளக்கம் என்ற வரிசையில் திருவெம்பாவைப் பேருரை ஒன்று வெளிவந்துள்ளது.
மிகவும் போற்றுவதற்குரியது.
ஊர்தோறும் வார வழிபாட்டுக் கழகம் நிறுவப்பெற்று, அதன் சார்பில் வாரம் ஒருநாள் ஆலயத்தில் கூடி கூட்டு வழிபாடு நடந்துவருகின்றன.
அக்கழகச் சார்பில் பாலர் பெண்டிர் உள்பட பலரும் ஒருநாளில் கூடி பாவைப்பாடல்களைச் சொல்லி வழிபாடு செய்கிறார்கள்.
இரு திருப்பாவைகளையும் பாராயணம் செய்து விதிவலம் வந்து பாடிவரும் பழக்கம் பட்டி தொட்டிகளில் கூட இன்றளவும் காட்சிதரும் செய்தியாகும்.
இங்ஙனம் இரு பாவை நூல்களும் மக்கள் காப்பியம் எனும் நிலையிலே மாறி நிற்கிறது.
மறுமலர்ச்சி பெற்று புலவர், பாமரர் வேறுபாடின்றி போற்றுதல் பெற்றும் வருகிறது.
தமிழுணர்வினையும் சமய சமரச நிலையினையும் கூட்டிவைத்து நலம் புரிந்து நிற்கிறது.
சமயப் பற்றினையும் நாட்டில் நிலைபெறச்செய்து செழிப்பூட்டி வைத்திருக்கிறது என்றால் இவ்வளவு மாற்றத்திற்கும் காரணம் என்ன?
இதை ஒவ்வொருவரும் ஆழச் சிந்தித்துச் செயலாற்றக் கடமைப் பட்டிருக்கிறோம்.
இதற்கு எல்லாம் முதன்மையாளராக காமகோடிப் பிடாதிபதி காஞ்சிப் பெரியவராய் விளங்கியவரே என்பது நாடும் நகரும் நன்கு அறிந்த செய்தி ஆகும்.
முப்பது ஆண்டுகட்கு முன்னர் அவர் தொடங்கி வைத்த பாவைப்பேரியக்கம் இல்லையானால் இத்தகைய பெரும் மாற்றங்கள் நிகழ இடமேற்பட்டிருக்க முடியாது.
இன்று மார்கழி மாதம் வந்தால் யாவரும் திருப்பாவையோடு காஞ்சிப் பெரியவரையும் சேர்த்து நினைக்கும் அளவுக்கு அவர் திருப்பெயர் தமிழகத்தில் நின்று நிலைபெற்றுவரும் அளவுக்கு தமிழ்த்தொண்டு பூண்டு செயலாற்றி இருப்பது அவரது தனிச்சிறப்பே என்பதில் தட்டில்லை.
தமிழுணர்வுடன் கூடிய புலமை நிறைவு, கடவுளர் வேறுபாடற்ற சமய மனப்பான்மை, சர்வ சமய சமரச நோக்கு – முதலானவை இன்மையே இதுவரை பாவை மறுமலர்ச்சி கைகூடாத காரணம், காஞ்சிப் பெரியவரிடம் இக்குறைகள் தலைகாட்டாமையோடு, இவற்றுக்கு எதிரிடையான நல்ல பண்பு நல மேம்பாடுகளும் ஒருசேரப் பொருந்தியிருந்தமையாலேயே அவரால் இப்பேரியக்கத்தைத் தோற்றுவித்து வெற்றிகாண முடிந்தது.
சுருங்கச் சொன்னால் காஞ்சிப் பெரியவர்களைத் “தமிழர் மறந்தாலும் தமிழ் மறவாத பெருந் தகையாளர் எனலாம்.
“பாவை மறுமலர்ச்சி காணத் தோன்றிய பெருந்தகை“ என்று சொன்னாலும் அது பொய்யோ, புனைந்துரையோ அன்று என்பது திண்ணம்.
காஞ்சிப் பெரியவர் வடமொழியில் எல்லைகண்ட பெரும் புலமையாளர்.
தமிழையும் அதற்கு இணையான தெய்வமொழி எனப் போற்றி மகிழும் மனப்பான்மையர்.
இப்புனிதமான மனநிலை தான் அவரைப் பாவைப்பேரியக்கத்துக்கு உறுதுணை ஆக்கியது.
பாவைப் பெயருக்கு முன்னர் பலர் பல்வேறு காரணங்கள் சுட்டியுள்ளனர். “
தமிழ்மொழி ஒரு தெய்வம். அதற்கு சைவமும் வைணவமும் இருகண்கள். தமிழ் மறையாகிய திருவாசகமும் திவ்யப்பிரபந்தமும் கண்ணுள் தோன்றும் இருவிழிகள்.
விழிக்குள் சிறந்த பாவை போல திருப்பாவையும் திருவெம்பாவையும் கண்ணுட்சிறந்தது.
கண்மணி மணிகளிலும் சிறந்தது மணியாடு பாவை அதுபோல தமிழ்த் தெய்வத்தின் கண்மணிப்பாவை போன்றது.
ஆகையால் பாவை என்று காரணம் காட்டினார் காஞ்சிப் பெரியவர்.
இப்படி நல்லதொரு பொருத்தமும் திருத்தமும் காட்டிப் பெயர்விளக்கம் சுட்டியது அப்பெரியாரது தமிழுணர்வுடன் கூடிய புலமைத் திறத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டில்லையா?
முன்பு எல்லாம் கடவுளர் வேறுபாடே சமய வேற்றுமை காண இடம் தந்து பகைமையையும் மூட்டியது.
சைவர்கள் திருப்பாவையைக் கண் எடுத்தும் பாரார்.
வைணவர்களோ திருவெம்பாவையினைத் தீண்டவும் நினையார்.
இரு சாராருமே தமிழகத்திலே பிறந்து வாழ்ந்து வருபவர்களே.
ஆயினும் தமிழ்நூல்கள் அவர்கள் கையில் பட்டபாடிது. காஞ்சிப் பெரியவரோ எனில் அரியையும் அரனையும் ஒப்ப நினைக்கும் பெருமகனாய் அத்துவித மரபு வழிவந்தவர்.
அதனாலேயே இங்ஙனம் இருபாவைகளையும் இணைத்து விழாக் கொண்டாட வழிவகுத்துக் கொடுக்க முடிந்தது.
மொழிவேறுபாடு கருதாது, சமயப் பொதுமையை உருவாக்கி, தேசீய ஒருமைப்பாட்டுக்கும் வழி காட்டுவதால் பாவைப் பேரியக்கம் நாட்டிடையே நல்ல வலுப்பெற்று வலுவூன்றி நிற்கிறது.
இதைத் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் தரவேண்டியது இரு சமயத்தார்க்கும் ஒத்த கடமை.

Add a Comment