பெருமக்களே,
இன்றைய நாள் மிக மகிழ்ச்சியாக உள்ளது.
பாரதியின் பிறந்த நாளான இன்று பேருவகை கொண்டுள்ளேன். கடந்த 22 வாரங்களாக, தொடர்ந்து மகாகவி பாரதியாரின் குயில்பாட்டினை அற்புதமாக உலகிலுள்ள அனைத்துத் தமிழ் நெஞ்சங்களும் ஏன் ஆங்கில நண்பர்கள் பலரும் குயில்பாட்டினைக் கேட்டு இன்புற்று மகிழ்ந்தனர்.
குயில்பாட்டுடைய நிறைவுப் பகுதியில் இன்று நாம் உள்ளோம்.
என்னுடைய இனிய நண்பர் சென்னை கிறித்துவ மேனிலைப் பள்ளியில் நானும் கலைமாமணி முனைவர் சூரியப் பிரகாஷ் அவர்களும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை இணைந்து படித்த தோழர்களாவோம்.
நண்பர்களே! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் பயின்ற பழைய நண்பர்கள் மாமல்லையில் ஒன்றுகூடிச் சந்தித்த பொழுது, கலைமாமணி சூரியப் பிரகாஷ் என்னிடம் நெருங்கி வந்து, ‘பாரதியின் பாடல்களை நான் பாடுகிறேன்.
அப்பாடல்களுக்கு நீ உரை சொல்லுகிறாயா?’ என்று கேட்டபோது நான் பெருமிதமடைந்தேன்.
நண்பர்களே. ஆனாலும், சிறிது கலங்கினேன்.
காரணம், நண்பர் சூரியப் பிரகாசுடைய இணையற்ற குரலுக்கும், ஒப்பற்ற பாடும் திறமைக்கு நிகரில் நான் என்ன விளக்கம் சொல்லிக் காட்டப் போகிறேன் என்று நினைத்துச் சில நாட்கள் அவரிடம் பேசாமல் ஒதுங்கினேன்.
ஆனால் நண்பர்களே, நடந்தது வேறு. மகாகவி பாரதியின் குயில் பாட்டை ஓராண்டுக்கு முன்பு அவர் பாடத் தொடங்கிய போது என்னை உரைவிளக்கம் தருக என்று கேட்ட பொழுது மறுப்பேதும் சொல்லாமல் தொடங்கிய பயணம் இன்றோடு வெற்றிகரமாக நிறைவு பெறுகிறது என்று எண்ணும் பொழுது விம்மிதமடைகிறேன்.
கலைமாமணி சூரியப் பிரகாஷ் பாடிய பாடல்களை அவர் தங்கை துபாயிலிருந்து செப்பமாகச் செதுக்கிய இசைப் படத்தை யூடியூப் பார்வையாளர்கள் கண்டு பாராட்டினார்கள்.
நண்பர் சூரியப் பிரகாஷின் பெற்றோர்கள், துணைவியார், பிள்ளைகள் இணைந்து பாரதி பயணத்தில் சூரியப் பிரகாசுக்கு ஒளி விளக்காகத் திகழ்ந்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
மக்களிடம் எடுத்துச் செல்லும் இந்த அரிய முயற்சிக்கு நானும் என் பங்காக அங்கிங்கெனாதபடி, சூரியப் பிரகாஷ் பாடிய பாடல்களுக்கு ஏற்ப எனக்குத் தெரிந்தவரை, நான் படித்த சில பகுதிகளிலிருந்து, நான் விரும்பிய சில தொடர்களையெல்லாம் எடுத்துக் கொண்டு பாரதியின் குயில்பாட்டை இப்படியெல்லாம் நாம் விவரிக்கலாமா? என்று சொல்லிச் செய்த இந்த அருமையான முயற்சியை நீங்கள் அனைவரும் பாராட்டியதில் பெருமிதமடைகிறேன்.
பெருமக்களே இம்முயற்சிக்கு எனக்குப் பெருந்துணையாக இருந்த நான் போற்றும் என்னுடைய சிறிய தந்தை, என்னுடைய சித்தப்பா, மருத்துவ மாமணி டாக்டர் ஔவை மெய்கண்டான் அவர்களுக்குக் கடன் பட்டுள்ளேன்.
மதுரையில் வாழும் சித்தப்பாவிடம் குயில் பாட்டு பாடல்களில் எங்காவது ஐயங்கள் வரும்பொழுதெல்லாம், அப்பாவைக் கேட்பதைவிடச் சித்தப்பாவிடம் மிக நெருக்கமாக ‘பாரதி இப்படி எழுதியிருக்கிறாரே, எப்படிப் பொருள் சொல்வது? என்று கேட்ட போதெல்லாம், இதற்குப் பொருள் இதுதான், இப்படிச் சிந்தித்துப் பார் என்று பல புதிய பரிமாணங்களை எனக்கு மருத்துவமாமணி டாக்டர் ஔவை மெய்கண்டான் அவர்கள் தான், ஒளி விளக்காக இந்த முழு முயற்சிக்கும் எனக்கு உறுதுணையாகக் கடந்த 22 படலங்களுக்கும் என்னை அவர் செதுக்கி வந்ததை நான் இங்குக் குறிப்பிடுவதற்குப் பெருமிதமடைகிறேன்.
மிகப்பெரிய நரம்பியல் நிபுணராக இருந்தாலும், தமிழ் கற்ற ஒரு பேரறிஞருடைய நிகரற்ற சிந்தனைக்கு உரிமையாளராகச் சித்தப்பா ஊட்டிய இந்த முயற்சிக்கு அவருக்கு நான் நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்.
சித்தப்பா கைப்பட எழுதித் தந்த கருத்துக் கோவைகளை எந்த நேரத்திலும் முகம் கோணாமல் உடனுக்குடன் தட்டச்சு செய்து தந்த மொழிபெயர்ப்புப் பிரிவின் உதவிப் பிரிவு அலுவலர்கள் திருமதி அனிதாவுக்கும், திருமதி சித்ராவுக்கும் நான் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
அவ்வண்ணமே, நான் பேசிய இந்த ஒளியிழையை இரு பகுதிகளாகப் பதிவு செய்த என்னுடைய செல்வ மகள் ஆதிரையையும், அவற்றை ஒரே காணொலிப் பதிவாக நுட்பமாகச் செதுக்கித் தந்த அமெரிக்கவாழ் ஆசிரியப் பெருந்தகை திருமதி தேமொழி அவர்களையும் நெஞ்சாரப் பாராட்டக் கடமை பட்டுள்ளேன்.
இத்தொடரைத் தொடங்கும்பொழுது அண்ணாநகர் இல்லத்திலுள்ள தோட்டத்தில் அமர்ந்து நான் பேசிய பொழுது, என் அருகில் என் அம்மா இருந்து வாழ்த்தியதை நினைந்து நினைந்து உருகுகிறேன்.
எல்லாரைக் காட்டிலும் இன்றைக்கு இந்த நிறைவுரைப் பகுதியை என் அம்மா கேட்டிருந்தால் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.
அவர்களுக்கு என்மீது உள்ள ஒரே குறை நான் பேசுகிற கூட்டங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வதில்லை என்பது ஒன்றுதான்.
பாரதியாருடைய தலைசிறந்த படைப்புகளில் தத்துவ நோக்கத்திற்காக எழுதிய குயில்பாட்டு நிறைவடைகிறது.
இன்னும் பல பாடல்கள் உள்ளது.
தெய்வீக உணர்ச்சிக்கான கண்ணன் பாட்டையும்,
தேசிய எழுச்சிக்கான பாஞ்சாலி சபதத்தையும்
நண்பர் கலைமாமணி சூரியப் பிரகாஷ் பாட நேர்ந்தால் அவருக்கு உறுதுணையாக விளக்கம் சொல்லக் காத்திருக்கிறேன் என்று சொல்லி அமைகிறேன்.

Add a Comment