அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 89
பண்பும் பயனும்
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
இரண்டாம் மகன் ‘டாக்டர் வானவன், நிலவியல் முது அறிவியல் மாணவராக மாநிலக் கல்லூரியில் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேர்ந்தவராவார்.
இவர் என் அம்மாவிற்குக் குதியுந்து ஓட்டும் கலையைக் கற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மா வாயிலாக நாங்கள் மூவரும் குதியுந்து ஓட்ட ஊக்கம் பெற்றோம்.
இவர் அமெரிக்காவில் அணுசக்தி பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள தலை சிறந்த நிறுவனங்களில், விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகின்றார்.
இவர் சென்னை திரு. கே. செல்வராசப் பிள்ளையின் புதல்வி ஆனந்தியை மணந்து, இவர்கள் தங்கள் இரு ஆண் மக்களான மனோஜ் மற்றும் மகேஷுடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள்.
மனோஜ் தற்போது ஜப்பானிய மருந்தியல் நிறுவனமான ‘NS Pharma’ நிறுவனத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார்.
மகேஷ் மருத்துவப் படிப்பு நிறைவு செய்து கள மருத்துவராக ஃபுளோரிடாவில் பணியாற்றி வருகிறார்.
ஏகாம்பரம் மாமாவின் ஒரே புதல்வி திருமதி தேன்மொழி, உளவியல் பட்டம் பெற்றுச் சென்னையிலுள்ள ஓர் எஃகு ஆலையில் உருக்குப் பொறியாளராகப் பணியாற்றிய திரு. காசி. இராமச்சந்திரனை மணந்து நவீனன் மற்றும் நந்தினி ஆகிய செல்வங்களின் தாயாகவும், இன்றைக்குப் பாட்டியாகவும் விளங்குகிறார்.
நவீனன், ஜெய்ஸ்ரீயை மணந்து அர்ஜுன் (நான்காம் வகுப்பு), அபூர்வா (யூ.கே.ஜி.) ஆகிய மக்கட்செல்வங்களுடன் அமீரகத்து அரசு வானூர்தி ‘எட்டியாத்’ நிறுவனத்தில் உயர் அலுவலராய்ப் பணியாற்றி வருகிறார்.
தேன்மொழி அக்காவின் மகள் நந்தினி பன்னாட்டு நிறுவனமான ஷெல் நிறுவனத்தில் தணிக்கையாளராக உயர்பணியோடு, அவரின் கணவர் செந்தில் நாதன் பல்மருத்துவராகவும், தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
அவர்களின் மகனான அபிஜித் கிருஷ்ணா பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
ஏகாம்பர மாமா படிக்கும் குழந்தைகளை நோக்கி அடிக்கடி சொல்லும் மேற்கோள்,
‘தாங்கள் பெறுகின்ற மதிப்பெண்கள் தான் உங்களைப் பற்றிப் பேச முடியுமே தவிர, பெற்றோர்களின் பரிந்துரை உங்களுக்குப் பேசக் கூடாது” என்பதாகும்.
என்னுடைய சித்தப்பா திருநாவுக்கரசுடைய திருமணத்தை ஏகாம்பர மாமாவினுடைய நுங்கம்பாக்கம் இல்லத்திலேயே (1974) நடத்தியது இன்றும் எங்கள் நெஞ்சில் நிலைத்துள்ளது.
ஏகாம்பரம் மாமா எழுதிய அரிய கட்டுரை மீளத் தங்கள் பார்வைக்கு வழங்குகிறேன்.
பண்பும் பயனும்:-
மனித இனம் என்பது ஆண் பெண் இரு பாலரையும் குறிக்கும்.
இயற்கையில் இவர்களுள் ஒவ்வொருவரும் தனித்தனித் தன்மைகளுள்ளவர்.
உருவத்தால், இயல்பால், திறனால், குணத்தால் எல்லாவற்றாலும் தனித்தன்மையினர்.
ஒன்றே போல் மற்றொன்று அமைவதென்பது அரிதினும் அரிது.
இடக்கண் பார்வைக் கூர்மையினும் வலக்கண் கூர்மை கூட வேறுபாடுடையது என்பர் உளநூல் வல்லுநர்.
குயிலெழுப்பும் ஒலியினும் மாறுஒலியும் (எதிரொலி) சிறிது வேறுபடும்.
சிற்பி வடிக்கும் ஒரே வடிவமைப்புள்ள இரு சிற்பங்களும் கூட வேறுபடும்.
எனவே ஒருவரைப் போல மற்றவர் அமைவது இயற்கையில் முரண்பாடுடையது.
தனித்தன்மைகள் இன்பத் துன்பங்களுக்கெல்லாம் அப்பாற் பட்டவை.
மனிதன் இன்பமாக வாழவேண்டுமென்பதில் இடையறா வேட்கையுடையவன்.
செயல்களே இன்பத் துன்பங்களுக்கெல்லாம் அடிப்படை. இருவேறு பொருள்களின் இணைப்பில் தான் செயல் பிறக்கும்.
காற்றில்லாத கால்பந்து வெறும் சடம்; அத்துடன் காற்றினை அடைக்கும் பொழுது விளையாட்டிற்குப் பயன்படும்.
நிலத்துடன் நீர் சேர்வதால் பயிர்கள் முளைவிடும்.
நீருடன் காற்று சேர்வதால் அலைகளும், நீர்க்குமிழிகளுமென மன மகிழ்ச்சியை எழுப்பும்.
மின்சாரம் கண்ணிற்குத் தெரியாதது; அதுவே கம்பிகள் மூலம் இணையும் போது வெளிச்சமும், இயக்குமெனப் பலவாறாகப் பரிணமிப்பதைப் பார்க்க முடியும்.
இங்ஙனம் இருவர் இணைவதில் தான் இன்பம் பிறக்கும் எனக் கண்டு ஆண் பெண் இருவர் இணையும்
இல்வாழ்வே இன்பமயமாக அமையக் கூடியது என்ற நிலை ஏற்பட்டது.
இதனையே சிவசக்தி
(அர்த்த நாரீஸ்வரர்) தத்துவம் என வகுத்தனர் மதநூலோர்.
இன்ப நகர்ச்சிக்குத் துணை தேவை.
துன்பத்திற்குத் தனிமை தேவை.
விருந்தைப் பகிர்ந்து கொள்ள வருபவர் எண்ணிக்கையில், நஞ்சினைப் பகிர்ந்து கொள்ள எத்தனை பேர் முனைவர்?
ஆனால் வாழ்நாள் முழுதும் இன்பமாக வாழ வேண்டுமென்ற வேட்கையிலேயே திருமண நிகழ்ச்சியை மேற்கொள்கின்றனர்.
எனினும் இருவேறு தன்மையினர் இணைவதில் இணக்கத்தை விடப் பிணக்குகளே மலிகின்றன;
இல்வாழ்க்கை துன்பமயமாகி விடுகின்றது.
உடற் கவர்ச்சியோ கல்விச் செருக்கோ, செல்வச் சிறப்போ, அதிகார வரம்போ எதுவுமே இணக்கத்திற்கு நீண்டதூரம் துணைபோக முடிவதில்லை.
பருவ மாறுதலுக்கேற்ப இன்பமென்ற வேட்கை வேறுபடும் .
எது எதில் இன்பம்? என்பவையெல்லாம் பரந்து விரிபவை.
எனவே இல் வாழ்க்கையின் பயனான இன்பத்திற்கு ஒரு வரையறை வகுத்துக் கொண்டாலன்றிப் பயன் பொருளற்றதாகிவிடும்.
அன்பு பிறவியிலேயே முகிழ்ப்பது.
குழந்தைகள் கூட அன்பில் அகமகிழ்வதையும் அதனையே எதிர்பார்ப்பதையும் காணமுடியும்.
தாயன்பிலோ தந்தையன்பிலோ தளர்ச்சி ஏற்படும்போது மக்களின் வளர்ச்சியிலும் தளர்வு காணப்படும்.
இங்ஙனம் அரும்பி மலரும் அன்பே நாளடைவில் உயிர்களின் மீது ஈகை , கருணை, பரிவு என்றெல்லாம் விரிவடையும்.
அதுவே மற்றவரை அரவணைத்துச் செல்லவும் வழி கோலும்.
இவ்வன்பொன்றே பயிற்சியும், பாசமும் தவறு நிகழ்கையில் நடுக்கவும் திருத்தவும் என்ற உரிமைகளை வழங்க வல்லது.
அதனைத்தான்
“அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை யென்னும் வழக்கு” என்றார் வள்ளுவர்.
ஆகவே அன்பே பண்பாவது.
இந்தப் பண்பு ஒன்றேதான் கணவன் – மனைவி என்ற இருவரையும் பிணைக்கவல்லது;
பிணக்குகளையும் இணைக்கும் பாலமாக அமைவது.
இந்த அன்பிற்குக் கல்வியறிவோ, செல்வமோ, ஆடம்பரமோ அல்ல ஆதாரம்.
இருவர் இணைவது இன்ப வாழ்விற்கு எனக் கண்டோம்.
எல்லா இன்பங்களும் இடையறாது நிற்பதில்லை.
வந்து வந்து மறைவன.
சதா இன்பம் தர வல்லது அறம் ஒன்றே.
அதனால் தான் இல்வாழ்க்கை என்பதே இல்லறம் என வகுத்தனர்.
கணவன் மனைவி வாழ்ந்து முடித்த பின்பே இல்லறம் இன்பமானதா அல்லதா எனக் கணிக்க முடியும்.
உணவு உடலுக்கு எவ்வித ஊறும் விளைவிக்காது செறித்த பிறகே நல்ல உணவு என ஏற்பது சாலும்.
இளமைக் காலத்தை இழந்த இறுதிக் காலத்தில் தான் நல்ல மனைவியா எனக் கணிப்பிட முடியும்;
போரில் வெற்றி கண்ட பின்னரே சிறந்த வீரனாக ஏற்க முடியும்.
அவை போன்றதே வாழ்க்கையும்.
“அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்தே புகழு மில”
என இன்பத்திற்கு ஓர் எல்லைக் கோட்டினையும் வள்ளுவர் வகுத்துக் காட்டுகிறார்.
அறமென்பதை விரிவாகக் காட்டுவதற்கே விருப்பு வெறுப்பற்ற துறவு மனம் அழுக்காறு – அவா – வெருளி – இன்னாச் சொல் இல்லாமை, அன்பு, இன்சொல், பிறன்மனை விழையாமை, பிறன் செல்வம் விரும்பாமை, புறங்கூறாமை, பொய்யாமை, கொல்லாமை எனக் கோடிட்டுக் காட்டி இதனடிப்படையில் எழுப்பப் பெறும் அன்பு வாழ்க்கை இல்லறம் என்றும் குறிப்பிடுவார்.
சுருங்கச் சொன்னால் “மனத்துக் கண் மாசிலனாதல்” அனைத்து அறன். எனவே அன்பு என்பது கணவன் மனைவியரிடையே நிலவ வேண்டிய பண்பு;
அறங்களைப் பின்பற்றி வாழ்வதால் விளையும் பயன் இன்பமாக அமையும் என்பதனை வற்புறுத்துவதே
“அன்பும் அறனும் உடைத் தாயின் – இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
என்ற குறளாகும்.
இந்தக்குறளை பெரும்பாலான திருமண அழைப்பிதழில் காண முடிகிறது.
ஆனால் இதனைத் தம்பதியரோ, அழைப்பவர்களோ, பிறரோ புரிந்து கொண்டு வாழ்கிறார்களா என்பது பெரும் புதிராக அமைந்து விடுகிறது!
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின்
‘ஔவையும் புலமையும்’ – (13)
புலமை வளம் – புலமை வித்து – ஒர் உளவியல் பார்வை
டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் அரும்பாடுபட்டு வெளியிட்ட புலமை நலம் பொதிந்த புறநானூறு வெளிவந்தது .
அதனைப் பார்த்த அறிஞர் பெருமக்கள் பேருவகை கொண்டு போற்றினர், வரவேற்றனர்.
ஒளவையவர்களும் கண்டனர், இடை இடையிடையே சிதைந்திருந்த பாடல் அடிகளையும் உரையையும் கண்டபோது அவர்களுக்குள் ஓர் உணர்வு தோன்றிற்று.
அந்த உணர்வு அவர்களுக்கு மட்டும் தோன்றக்காரணம் எதுவாகலாம் என்று சற்றே எண்ணுங்கால் உளவியலார் முன்வைக்கும் ஓர் அடிப்படை உண்மை புலனாகிறது .
ஒருவர் ஓர் அருஞ்செயலைத் தமது வாழ்வின் வளர்ந்த நிலையில் செய்கின்றார் என்றால் , அதற்கான ஒரு வித்து அவருடைய மனத்தில் 7 முதல் 9, உச்சமாக 11 அகவைக்குள் விழுந்திருக்க வேண்டும்.
பின்னர் வாய்ப்பு நேரும்போது இளைஞர் பருவத்திலோ ஏன் முதுமையிலும் கூட அது உருவாகலாம் என்பது உளவியலார் உறுதி செய்த உண்மை.
ஒளவையவர்கள் கருவிலே திரு உடையவர்கள்;
அவர்தம் தொடக்ககாலத் தமிழ் அவர் தந்தையார் மரபுவழிச் சொத்து சொத்து – என்றால் நஞ்சை – புஞ்சை மனைபோன்ற பருப்பொருளுடன் , நுண்பொருள் சொத்தாகி அறிவும் அதில் அடங்கும்.
அதையே திருவள்ளுவர் உண்மை அறிவு என்ற சொல்கின்றார்;
“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்” என்று குறிப்பிட்டார்.
இந்த உண்மை அறிவு மாந்தர் அனைவருக்கும் பிறக்கின்ற போதே 40 விழுக்காடு உண்டு.
பின்னாளில் அவரவர் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப இந்த விழுக்காடு 50, 60, 70 எனப் படிப்படியாக வளர்ந்து மிக உச்சமாக ஓர் அறிஞர் என்பவருக்கு 110 அல்லது 120 வரை செல்லும் என்பர்.
இதை ஒரு வாய்ப்பாடு வழியே கணக்கிட்டு அதற்கு நுண்ணறிவு ஈவு என்று உளவியலார் பெயரிட்டனர்.
“பரந்த உலகமே எனது பல்கலைக்கழகம்”
(universe is my university)
என்று மாக்சிம் கார்க்கி கூறியதைப் போன்று உலகைப் படித்து நுண்ணறிவை வளர்த்துக் கொள்பவர்களும் உண்டு.
கல்விக்கற்று புலமை நலம் பெறுவோரும் உண்டு;
இவை ஏதும் இன்றிச் சிவனே என்று கிடந்து சீவனை விடுபவர்களும் உண்டு.
அத்தகைய நுண்ணறிவு ஒளவையவர்களுக்குக் கருவிலே வாய்த்த திருவாகி, அவர்களுக்கு உந்துவிசையாக அமைந்தது எனலாம்.
“சுமார் நாற்பது ஆண்டுகட்கு முன்னர் யான் தமிழறிவு ஓரளவு பெற்றுப் பழந்தமிழ் இலக்கியங்களைப் பயின்று இன்புற்றகாலை, சில நூல்கள் குறையுற்றிருந்தமை கண்டு, எங்ஙனமேனும் முயன்று நிறைவுசெய்வது தமிழன்னைக்குச் செய்யத்தக்க பணியென்ற கருத்தையுட்கொண்டதோடு, அதனையே என் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டேன்.”
உரையெழுதத் தகுதியாக்கிக் கொள்ளல்
உரையாசிரியராதற்கு ஒளவையவர்கள் தம்மைப் பண்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்திருந்த காலத்தில் அவரோடு உடனிருக்கும் வாய்ப்பு பெற்றிருந்த மாணவர் திரு இராகவன் ஒளவையின் உழைப்பையும் உரைகண்ட சிறப்பையும் எடுத்துரைக்கிறார் :
“உரையாசிரியப் பண்பு பிள்ளையவர்கட்குக் கருவிலே வாய்த்த திரு.
அதற்கான இயல்பூக்கம் உரம்பெற வளர்ந்து அவர் புலவரானதும் திறன்பெறச் செயல்படத் தொடங்கியது.
அதன் பயனாக அவர் பழந்தமிழ் இலக்கிய இலக்கண உரைகளிடம் அடங்கா ஆர்வமும் அவற்றை ஆக்கிய ஆசிரியர்களிடம் ஆழ்ந்த பற்றும் அளவற்ற மதிப்பும் உடையவரானார்.
இலக்கிய நூலாயினும் இலக்கண நூலாயினும் அதன் பண்டைய உரைகளை ஆழ்ந்து பயின்று தோய்ந்து நுகர்ந்து ஆய்ந்து தெளிந்தார்.
அவ்வுரையாசிரியர்கள் நூல்களை அணுகுமுறை, உரைகாணும் நெறி , உரைவகுக்கும் திறம் ஆகியவற்றை அறிந்தார் .
பிறர் கருத்தோடு மாறுபட அமைந்திருக்கும் உரையை உடனே பிழையுரை என்று முடிவு செய்துவிடாமல் அவர் அவ்வாறு உரை வகுத்திருப்பதற்குரிய காரணத்தைக் கண்டறிந்தார்.
அக்காரணம் அவ்வாசிரியர் காலத்திற்கு மட்டுமன்றிப் பொதுவாக எக்காலத்திற்கும். சிறப்பாக இக்கால வழக்குக்கும் பொருந்தாதாயின் பொருத்தமான புத்துரை காண முயன்றார்.
முன்னோரின் ஆய்வுரைகளைக் காய்தல் உவத்தலின்றி நடுநின்று நெடிது ஆராய்ந்தார்.
இலக்கிய இலக்கண உரைகளை அன்றிச் சிவஞானபோதம், மாபாடியம் போன்ற சமயச் சார்பான சரித்திர பேருரைகளையும் பலகாலும் படித்துத் தெளிவுற விளக்கம் கண்டார்.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்த வியாக்கியானங்கள் மரபறிந்த வடமொழி வல்லுநரின் துணைகொண்டு விரும்பிப் பயின்றார் .
அவை பதசாரம் கூறும் முறை அவரை மிகவும் கவர்ந்தது.
ஆங்கில மொழியிலுள்ள சட்டங்களையும் அவற்றின் விளக்கங்களையும் – அவை பற்றிய அறிஞர்களின் வரலாற்று ஆய்வுரைகளையும் நடுவர்களின் முடிவுரைகளையும் பெற்றுப் படித்தார்.
சட்டநூற்புலவர்களும் நீதிமன்ற நடுவர்களும் சட்ட விதிகளுக்கு விளக்கம் காணும் முறையையும் நடுவர்கள் முடிவு கூறும் திறனையும் தெளிவுபெற அறிந்தார் .
வெவ்வேறு சமயச் செய்திகளை அவ்வச் சமய அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளல், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களின் நூல்களையும் கல்வெட்டுகளையும் அவை பற்றிய விளக்க நூல்களையும் படித்தறிதல், தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் வரலாற்று செய்திகளை வகைப்படுத்தி ஆராய்தல்,
இவ்வாறு பல ஆண்டுகள் முயன்று பழந்தமிழ் நூல்களுக்கு நயம்பட உரைகாணும் பண்பும் பாங்கும் உரமும் திறமும் பெற்றார்.”
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment