POST: 2021-12-27T10:36:14+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம்-33

தமிழ்கூறு நல்லுலகுக்குப் பெய்யெனப் பெய்யும் மழை

ஔவை நடராசன்,

மேனாள் துணை வேந்தர்

தமிழ் மொழியில் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், இதழியல், அறிவியல் என்று பலவாறாகப் பெருகியுள்ளன.

அந்த வகையில் இலக்கியங்களில் அகராதிக்கலை இப்போது மகத்தான வளர்ச்சி பெற்றிருக்கிறது.

தமிழ் அகராதித் துறை மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே தோன்றியது என்பதற்குச் சிறந்த ஆவணமாகத் தொல்காப்பிய இலக்கண நூலில் சொற்களுக்குப் பொருள் கூறும் பகுதிகள் சில விளங்குகின்றன.

தமிழில் அகராதிகள் முற்காலத்தில் பல தோன்றின.

அவற்றுள் மறைந்தவை சில; இருப்பவை சில.

எதையுமே செய்யுள் வடிவத்தில் எழுதும் வழக்கம் இருந்த காலத்தில், அகராதிகளும் அவ்வடிவத்தில் தோன்றி வளர்ந்து நிகண்டுகள் எனப் பெயர் பெற்று இருந்தன.

பிறமொழிச் சொற்களை நீக்கினால் பலமொழிகள் இயங்காது.

ஆனால், தமிழ் மொழி ஒன்றுதான் பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் தானாக இயங்கவல்ல உயர்தனி செம்மொழியாகும்.

ஒரு மொழிக்கு 35 ஒலிகள் இருந்தாலே போதும் என்பார்கள்.

ஆனால், தமிழ், 500 ஒலிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

மொழி வளர்ச்சிக்கு அகரமுதலியின் பங்கு மிகப் பெரியதாகும்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நன்முயற்சியால், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தலைமையில் தோற்றுவிக்கப்பட்டு அகர முதலி 12 மடலங்களாகவும், அவற்றுள் அடங்கிய 31 தொகுதிகளாகவும் வெளியிடத் திட்டமிடப்பட்டது.

உலகின் முதுமொழி நம் தமிழ் மொழி என நிலைநாட்டிய நல்லறிஞர் தேவநேயப் பாவாணரின் நூல்களெல்லாம் முத்தமிழறிஞர் கலைஞரால் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரின் குடும்பத்தாருக்கு உரிமைத் தொகை அரசின் சார்பில் வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கதாகும்.

முத்தமிழறிஞர் கலைஞர் நுண்ணாய்ந்து 25.02.1997 அன்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் மூன்றாம் தொகுதிக்கும், இரண்டாம் மடலத்தின் முதல் பாகத்துக்கு 07.01.2000 அன்று எழுதிய தீந்தமிழ்ப் பொன்னுரைகளை மீளப் பதிவிடுவதில் பெருமிதமடைகிறேன்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி மூன்றாம் பதிப்புக்கான முத்தமிழறிஞரின் முகவுரை

தமிழ் காட்சிக்கு மட்டும் ‘ஆட்சி மொழி’ என்றில்லாமல், ‘மாட்சிமை மிகுந்த மகத்தான மொழி என்பதை உணர்த்தும் பொருட்டுக் கழக ஆட்சி, தேவநேயப் பாவாணர் அவர்களை இயக்குநராகக் கொண்டு 8.5.1974 அன்று “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்” ஒன்றை அமைத்தது.

ஒவ்வொரு நாளும் வழக்கில் சேர்ந்துவிடும் அந்நிய மொழிச் சொற்களுக்கு இணையாகப் புதிய சொற்களை உருவாக்கித் தமிழின் வளமையை மேன்மைப்படுத்தும் உன்னத முயற்சியாய் அது மலர்ந்தது.

1976-ஆம் ஆண்டு கழக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு இப்பணி அன்றைய ஆட்சியாளர்களால் ஆற்றுப்படுத்தப்படாமையால் தொய்வுற்றுப் போய் ஏறத்தாழ 23 ஆண்டுகட்குப் பின் மூன்றாம் தொகுதி வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

கழக ஆட்சி அமையும் போதெல்லாம் அதுவரை நத்தை வேகத்தில் நகர்ந்த இப்பணி முழு மூச்சுடன் முயல் வேகத்தில் முடுக்கி விடப்படும்;

இது மீண்டும் 1989 இல் புதிய உத்வேகம் பெற்றது.

1991 இல் நூல் அச்சடிக்கும் வேலை நிகழும் போது, மீண்டும் கழக ஆட்சி கலைக்கப்பட்டது.

இருப்பினும் பெரும்பாலான பணிகள் முடிவுற்றிருந்ததால் இரண்டாவது தொகுதியை 1992 ஆம் ஆண்டில் வெளியிட முடிந்தது.

அதன்பின் ஐந்தாண்டுகள் கழிந்த நிலையில் மூன்றாவது தொகுதிக்கு முகவுரை எழுதும் பேற்றினைப் பெற்றிருக்கிறேன்.

இயக்ககத்தின் முதல் இயக்குநராகப் பணியேற்று, அரும்பணியாற்றிய பாவாணர் அவர்களுக்கு, மரியாதை செலுத்தும் வகையில் அவர்தம் நூல்கள் எல்லாம் அரசுடைமையாக்கப்பட்டு, அவரது குடும்பத்தாருக்குப் பரிவுத் தொகையாக அரசின் சார்பில் 20 இலட்சம் ரூபாயை வழங்கிப் பெருமைப்படுத்தியிருக்கிறோம் என்பது இந்நேர்வில் நினைவுகூரத்தக்கது.

அகர முதலி தொடர்ச்சியாக இனி விரைவில் வெளிவர வேண்டும் என்பதற்காக – செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தை மேலும் சீரமைத்து, நான்கு ஆய்வாளர்கள் உட்படப் பன்னிரண்டு பேர் புதிதாகப் பணியமர்த்தப்பட்டு, தற்போது பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

எனவே , இனிமேல் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தொகுதிகள் வெளிவருவதில் எந்தவிதமான தடையும் ஏற்படாது என நம்புகிறேன்.

மேலும், தமிழ் வளர்ச்சிக்கென்று தனியாக ஒரு அமைச்சகமும் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஐந்தாண்டுகாலத்திற்குள் அகர முதலியின் அனைத்துத் தொகுதிகளும் வெளிவர வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்.

இந்த மூன்றாவது தொகுதி 427 பக்கங்களைக் கொண்டு வெளிவருகிறது. ‘

உ’ விலிருந்து தொடங்கி ஆய்த எழுத்து ‘ஃ’ வரை விளக்கம் இதில் இடம் பெற்றுள்ளது.

ஆய்வு சிறப்பான முறையிலே செய்யப்பட்டுள்ளது என்பதற்கு அடையாளமாக ஒரு உதாரணம் கூற வேண்டுமேயானால்,.

ஏற்றம் erram , பெ. ( n )

மேல் ஏறுகை ; mounting , as on a ladder , a horse , ascending ;

மேடு; ascent . , acclivity

உயர்கை, கொடியேற்றம்; hoisting , as a flag , raising up

நீர்ப்பெருக்கு : rising , as the flowing tide ; “ஆணையாலே யேற்றந் தொடங்காக் கடலின்” (கம்பரா . நகர்நீ 141 )

புகழ் (திவா.); praise , eulogy

இடிமரம் : heavy wooden rammer set to a frame for pounding parched rice

அதிகப்படி ; increase , increment “மேல் ஏற்றம் ஒரு நாளைக்கு மூன்று மாவாக” (S.I.I . ii . 129)

மிகுதி ; excess ” ஏற்றம் நெல்லுக்குறுணி எழுநாழியும்” (S.I.l.ii.70.5)

மேன்மை ; distinction , superiority , exaltation , pre – eminence “ பத்தர்கட் கேற்ற நல்கினீர்” (தேவா. 599.6 )

நினைவு : remembrance

துணிவு : courage ” ஏற்ற மிலாட்டியென் னேமுற்றாள்” (தொல். சொல். 337, உரை )

ஏற்றமரம்; well sweep, picottah,” ஏற்றமிரண்டுள” (திருமந் . 2873 ) ம. ஏத்தம் , க: ஏத , யாத தெ ஏதமு (ஏறு – ஏற்று – ஏற்றம் (சு.வி .78 )

என்று பன்னிரண்டு வகையான பொருள் இருப்பதை மேற்கோளோடு குறிப்பிடும்போது இதன் தரம் தெரிகிறது .

இப்போது நாம் “உள்ளிருப்பு” என்று சொன்னதும் internal Strike / pen – down strike எனப்படும் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் தான் நினைவுக்கு வருகிறது.

இக்காலத்தில் ‘உள்ளிருப்பு’ க்கு இப்படி ஒரு பொருள் இருந்தாலும், வைப்பு நிதி (reserve cash) எனும் பொருளையும், கருவூலக் காவல் (watching the treasury) எனும் பொருளையும் இந்த நூல் தந்திருப்பதை உணர்கிறோம்.

இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் இலக்கை அடைய முழுமையான ஒப்படைப்புடன் செயற்பட்டுக் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஏற்கனவே காலம் விரயமாகியிருக்கிறது என்கிற எச்சரிக்கை உணர்வை அடிக்கடி மனதில் உச்சரித்துக் கொண்டு ஒவ்வொரு நிமிடமும் அரும் பணியாற்ற வேண்டும்.

தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் முனைவர் தமிழ்க்குடிமகன் முனைந்து பாடுபட்டு இந்த உயர்ந்த பணியைச் செய்து முடிப்பார் என்ற திடமான நம்பிக்கை எனக்கிருக்கிறது.

இந்த மூன்றாம் தொகுதி தமிழ் கூறு நல்லுலகத்திற்கும், பிறமொழி ஆய்வாளர்களுக்கும் பெய்யெனப் பெய்யும் மழை போன்று அமைந்துள்ளது.

தொன்மைச் சிறப்பில் மலை போல் உயர்ந்திருந்தாலும், புதுமைகளைப் போற்றி உள் வாங்கிக் கொள்வதில் கடல் போன்ற ஆழத்தையும் உள்ளடக்கிய உயரிய மொழி தமிழ் மொழி என்பதை உணரச் செய்வதாய் இத்தொகுதி விளங்கிட விழைகிறேன் .

—–

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இரண்டாம் மடலத்தின் முதல் பாகத்துக்குக்கான முத்தமிழறிஞரின் முகவுரை

அய்யன் திருவள்ளுவருக்குக் குமரிமுனையில் சிலை எடுக்கப்படுமென 1975 டிசம்பர் 31 அன்று அறிவிக்கப்பட்ட பணி, தமிழகத்தில் பிற அரசு காலங்களில் இடையிடையே தடைபட்டு, கழக அரசு அமைந்த காலங்களில் மட்டுமே விரைவுபடுத்தப்பட்டுக் கடந்த 1.1.2000 அன்று நிறைவேற்றி முடிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதனை நாடும் மக்களும் நன்கறிவார்கள் .

அதுபோலவே கழக அரசு அமையும் காலங்களில் மட்டுமே கவனம் பெற்றுவரும் மற்றொரு மகத்தான பணி “ செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி” யை உருவாக்கிடும் பெருமைக்குரிய பணி.

“செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி” ஒன்றை உருவாக்கிடத் திட்டமிட்டு, அதன்பொருட்டு, 8.5.1974 அன்று, அன்றைய கழக அரசு புதிய இயக்ககம் ஒன்றைத் தோற்றுவித்தது.

தமிழ்மொழியின் செம்மையையும், செழுமையையும், விரிவையும் வெளிப்படுத்திடும் சீரிய சிந்தனையுடன் சொல்லாராய்ச்சிப் பணிகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் அவர்களை அதன் இயக்குநராகவும் அமர்த்தி , இவ்வரும்பணியை அன்னாரிடம் ஒப்படைத்தது.

அவர் இப்பணியைத் தம் வாழ்வின் மிக உயரியதாகக் கருதி , அதனைச் செம்மையாக நிறைவேற்றிட உறுதிபூண்டு ஊக்கமுடன் ஈடுபட்டார்.

இந்த அகர முதலி 12 மடலங்களாகவும், அவற்றுள் அடங்கிய 31 தொகுதிகளாகவும் வெளியிடத் திட்டமிடப்பட்டு நூல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன.

1976 சனவரி 31 அன்று அன்றைய கழக அரசு கலைக்கப்பட்டபின் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.

எனினும், முதல் படலத்தின் பேரகரமுதலி 1985 இல் வெளியிடப்பட்டது.

தொடர் பணிகள் நின்றன.

1989 இல் கழக அரசு மீண்டும் அமைந்த பின் இப்பணிகளுக்கு அளிக்கப்பட்ட ஊக்கம் காரணமாக முதல் மடலத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு, அச்சுப்பணிகள் நடைபெற்றுவந்த வேளையில் கழக அரசு 1991 சனவரி 31 இல் மீண்டும் கலைக்கப்பட்டது.

அதன் பின்னர் அந்த இரண்டாம் பாகம் 1993 இல் வெளியிடப்பட்டது.

அடுத்த நூல் பகுதிகள் தயாரிக்கப்படுவது அத்துடன் நின்றது.

அடுத்து 1996 இல் கழக அரசு நான்காம் முறையாக அமைந்தபின் , இத்திட்டத்திற்கு அளிக்கப்படும் பேரூக்கம் காரணமாக 1997 ஆம் ஆண்டில் முதல் மடலத்தின் 3 ஆம் பாகம் சிறப்பாக வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 2000 ஆண்டு திருவள்ளுவர் நாளில் இரண்டாம் மடலத்தின் முதல் பாகமாக இந்த நூல் வெளியிடப்படுகிறது.

அடுத்து, இதன் இரண்டாம் , மூன்றாம் பாகங்கள் அச்சில் உள்ளன.

தொய்வின்றித் தொடர்ந்து இப்பணிகள் நடைபெற்று அனைத்து மடலங்களும், அனைத்துப் பாகங்களும் விரைவில் வெளியிடப்படுவதன் மூலம் அன்னைத் தமிழ் மொழியின் சொற்களஞ்சியச் செல்வம் முற்றாக நிரல்படுத்தப்பட்டு, இது உலகினர் அனைவர்க்கும் மிகச்சிறந்த முறையில் பயன்படும் என்பதுடன், இப்பணி உலகப் புகழை ஈட்டி, “உயர்தனி செம்மொழி – தமிழ்” என்பதை உலகில் நிறுவும் எனவும் உறுதியாய் எண்ணுகிறேன்.

முத்திரை பதித்திடும் இவ்வரிய பணியில் ஈடுபட்டுள்ள தமிழ் ஆட்சி மொழித் துறை அமைச்சர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் அனைவர்க்கும் என் உளங்கனிந்த பாராட்டுகள்.

அன்புள்ள

மு.க.

தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *