POST: 2022-01-10T07:14:18+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 35

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

தமிழ்ப் பண்பாடு காப்போம் !

இந்திய நாடு விடுதலை பெற்றதும் மாநில மக்களரசுகள் பல்வேறு மாநிலங்களில் மலர்ந்தன.

வேறுவேறு கட்சிகள் , மாறிவரும் இயக்கங்கள் எல்லாம் தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவியேற்றன .

முத்தமிழறிஞர் கலைஞர் பொறுப்பேற்றதும் மனத்தளவில் அனைவரிடமும் ஒருமை கண்டு மாற்றுக் கட்சிகளிடையே ஓர் இணைப்பைக் கண்டு மிகப்பெரிய பொதுமையைக் கண்டு நிறுவினார் .

இன்றும் கூட நம் மாண்புமிகு முதலமைச்சர் எல்லோரிடத்திலும் – அனைத்துக் கட்சியினரிடமும் பொதுமை காணும் உயர்ந்த போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்கள் .

இந்த மரபைக் கண்டு பிற இந்திய மாநிலங்கள் வியந்து அனைத்திலும் முதன்மை என்ற ஓங்கிய பெருமையைத் தமிழகத்துக்குச் சூட்டி மகிழ்கிறது .

முத்தமிழறிஞர் கலைஞர் அடிக்கடி நினைவூட்டும் புறநாநூற்றுப்பாடலை இங்கே நினைவு கூற விரும்புகிறோம் .

பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்,

இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து,
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை,
ஒருவழித் தோன்றியாங்கு – என்றும் சான்றோர்

சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.

இது தொடர்பாக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பேசிய நல்லுரையை இப்போது நினைத்தாலும் தமிழினப் பெருமையும் – பண்பாடும் நாம் உணர்ந்து மகிழ முடிகிறது .

இந்த விழாவில் காங்கிரசு சட்டமன்றக் கொறடா விநாயகம் கலந்து கொண்டு உரையாற்றியது பற்றிச் சிலம்புச் செல்வர் அவர்கள் ‘ இந்தத் தமிழ்ப் பண்பாடு வளர வேண்டும் ‘ என்று கூறியது மிக்க பொருத்தமுடையதாகும் !

நான் வெளிநாடு சென்ற வேளையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் சிலம்புச் செல்வர் அவர்கள் ” காங்கிரசு நண்பர்கள் அனைவரும் முதல்வரை வழியனுப்ப விமான நிலையம் வர வேண்டும் ” என்று வேண்டுகோள் விடுத்தார் !

காங்கிரசு நண்பர்கள் அனைவரும் அவ்விதம் விமான நிலையத்திற்கு வரவில்லை.

ஆனால், காங்கிரசு கட்சித் தலைவர் கருத்திருமன் எனது இல்லம் வந்து வாழ்த்தினார் .விமான நிலையத்துக்கும் வந்து வழியனுப்பினார் !

நான் வெளிநாடு சென்ற போது வாழ்த்தி வழியனுப்பக் கட்சித் தலைவர் வந்தார்.

நான் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தபோது, மாணவர்கள் நடத்தும் இதே விழாவில் காங்கிரசு கட்சியின் சட்டமன்றக் கொறடா விநாயகம் வந்திருக்கிறார் !

இது உள்ளபடியே தமிழ்நாட்டு அரசியலில் அதுவும் காங்கிரசு கட்சியில் தகுதியான மாற்றம் – முறையான மாற்றும் ஏற்படத் தொடங்கியிருக்கிறது என்ற திருப்தியை நமக்கெல்லாம் ஏற்படுத்தியிருக்கிறது.

காமராசர் பிறந்த நாள் விழா இதே பாலர் அரங்கத்தில் முன்பு நடைபெற்றிருக்கிறது.

அந்த விழாவிற்கு என்னை அழைக்க காங்கிரசு மாணவர்கள் சிலர் வந்திருந்தனர்.

அவர்களை அழைத்து ” எந்தத் தேதியில் விழா ” என்று கேட்டேன்.

அவர்கள் தேதியைச் சொன்னார்கள். எனது நாள் குறிப்பை எடுத்துப் பார்த்தேன்.

அந்த நாள் எனக்கு வசதியாக இருந்த காரணத்தால் ‘ நிச்சயம் வருகிறேன் ‘ என்று கூறினேன்.

அந்தக் காங்கிரசு மாணவர்கள் விழியை அகலத் திறந்து ஆச்சரியத்தில் மூழ்கினார்கள்.

வர முடியாது என்று சொல்லியிருந்தால் தான் அவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி – அகலக் கண் திறந்திருக்க வேண்டும்.

ஆனால் நான் வருகிறேன் என்று கூறினேன்.

ஒருவேளை அந்தக் காங்கிரசு மாணவர்களில் சிலர் நான் காமராசர் விழாவுக்கு வர முடியாது என்று கூறியிருந்தால் முதலமைச்சரையும் அழைத்தோம்.

வரமுடியாது என மறுத்து விட்டார் ” – என்று குறைகூற எண்ணியிருக்கலாம் !

ஆனால், எனது பிறந்த நாள் விழாவில் காமராசர் கலந்து கொள்ள வேண்டும் என்று கழக மாணவர்கள் அவரை அணுகிக் கேட்டு – விளம்பரம் செய்த பிறகும் அவர் வரவில்லை என்று கழக மாணவர்கள் வருத்தப்பட்டுக் கொண்டார்கள் அன்று !

ஆனால் – எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் தமிழர்கள் என உணர்வில் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ளும் பண்பிலிருந்து வழுவக் கூடாது – என்று அக்கறை கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் வழியில் தான் வந்தவர்கள் நாங்கள்.

அந்தப் பண்பாட்டில் அண்ணா அவர்கள் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார்களோ அவ்வளவு அக்கறை அவரால் உருவாக்கப்பட்டு அவருக்குப் பின் வந்த எனக்கும் இருக்கிறது .

மாணவர்கள் நினைத்ததைச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள். அதனால் தான் விநாயகம் இந்த விழாவுக்கு வரவேண்டும் என்று நினைத்தார்கள்.

விநாயகம் இந்த விழாவுக்கு வந்திருக்கிறார் .

இங்கு வந்துள்ள சிலம்புச் செல்வர் சோவியத்து நாட்டிற்குச் சென்று – பிறகு பாரிசு மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியுள்ளார்.

கவிஞர் கண்ணதாசனும் இரஷ்ய நாட்டிற்குச் சென்று திரும்பி இனிய கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

விநாயகம் – உலகம் சுற்றியிருக்கிறாரா ? என்பது தெரியவில்லை .

புராணத்தில் வரும் சுப்பிரமணியம் உலகம் சுற்றி வந்த போது விநாயகர் தந்தையையும் தாயையும் கற்றிவிட்டு ‘ நீங்களே உலகம் ‘ என்று சொல்லிப் பழம் பெற்றதாகக் கூறுவார்கள், அதுபோல் இந்த விநாயகம் உலகம் சுற்றாமலே அந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறார் .

இவர்கள் அனைவரும் பேசும்போது உலகம் சுற்றியதால் ஏற்படும் உரிய பலன்களைச் செயல் வடிவமாக்க வேண்டும் – எனக் கூறியது தவறாகாது.

ஏனெனில், அரசாங்கத்தின் சார்பில் அரசாங்கத்தின் செலவில் சென்று வந்த நான் – அங்குக் கண்டவற்றில் சிலவற்றையாவது செயலாக்க வேண்டும் – என்பது முறையாகும்.

வெளிநாட்டுக்குச் செல்வது என்பது வேடிக்கையாகவும் கேலியாகவும் – கண்டனத்திற்குரியதாகவும் கருதிச் சிலர் கூறிய கருத்துகளை மாணவ நண்பர்கள் இங்கே கூறினார்கள் !

வெளிநாட்டுக்கு அமைச்சர்கள் செல்லக் கூடாது என்பதில் அர்த்தமே கிடையாது.

ஒரு அமைச்சரல்ல; அமைச்சரவையே செல்ல வேண்டும்; என்று நல்ல – சூடான பதிலைத் தந்தார் விநாயகம் அவர்கள்.

பறவைகள் கூட வெளிநாடுகளுக்குச் செல்கின்றன: வேடந்தாங்கலுக்குச் சென்று பாருங்கள் வெளிநாட்டிலிருந்து பறவைகள் வருகின்றன; இங்கிருந்தும் பறவைகள் வெளிநாட்டுக்குச் செல்கின்றன.

பறவைகள் கூட வெளிநாட்டுக்குச் செல்லலாம் என்றிருக்கும்போது, மனிதர்கள் வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது என்று கூறுவது; – வேடந்தாங்கலிலுள்ள அந்தப் பறவைகளுக்கே வெளிச்சம்
வெளிநாட்டுக்குச் செல்வது குற்றமில்லை : உங்களில் சிலர் வெளிநாடு செல்வதா ? என்பதால் தான் மறுப்பளிக்கிறோம் என்று அந்த நண்பர்கள் கூறுவார்களானால் அவர்களுக்குச் சொல்வேன் .

நிதியமைச்சர் தலைமையில் தமிழ் மாநாட்டிற்குத் தமிழகக் குழு ஒன்று சென்றது.

அதில் பல்வேறு கட்சிச் சார்புடையவர்கள் இருந்தார்கள்.

அப்போது அந்த மாநாட்டில் உரையாற்றுகிறபோது கூறினேன்.

” நாம் பல கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் , ஆனால் இங்கே ஒரே கட்சிதான். தமிழ்க் கட்சிதான் நமது கட்சி என்று !

பாரிசு மாநாட்டில் நான் சொன்ன, அதே கருத்தைப் பற்றி இங்கே விநாயகம் பேசினார்.

நாம் பல்வேறு அரசியல் கருத்துக் கொண்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பதில் மரியாதை செலுத்துவதில் ஒரே நோக்கு கொண்டிருக்க வேண்டும் !

‘ அறிஞர் அண்ணா அவர்கள் வெளிநாட்டிற்குச் சென்றபோது இங்குள்ள மத்திய அரசைக் காட்டிக் கொடுக்கவில்லை ; இழித்துப் பழித்துப் பேசவில்லை .

அண்ணா எதிர்க்கட்சியைப் பாராட்டினார்
‘இப்போது நான் வெளிநாடு சென்றபோது இங்குள்ள மத்திய அரசை – இந்திரா காந்தியாரைக் குறை கூறிப் பேசியிருந்தால் கூட ‘- அதைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டி இறும்பூதெய்துபவர்கள் சிலர் ‘காங்கிரசு கட்சியிலேயே இருந்திருக்கலாம் !

‘ ஆனால், அண்ணா அவர்கள் வெளிநாடு சென்றபோது ‘ காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவு படாமல் ஒன்றாக இருந்த நேரம் அப்போது அண்ணா அவர்களை அணுகி நிருபர்கள் ‘ இந்திரா அரசு எப்படி நடக்கிறது ” என்று கேட்டார்கள்.

காங்கிரசுகாரர்களும், நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க் கட்சித் தலைவர்களாக இருந்த சிலரும் வெளிநாட்டுப் பயணத்தின் இந்திய அரசின் மீது அப்போது கண்டன மழை பொழிந்திருந்தனர் .

அது போல் அண்ணா அவர்களும் ‘இந்திராவுக்கு நாடாளத் தெரியவில்லை.

நிருவாகப் பொறுப்புக்கும் இந்திராவுக்கும் எந்தப் பொருத்தமும் இல்லை ‘ – என்று கூறுவார் என எதிர்பார்த்தார்கள்.

ஆனால், அண்ணா அவர்கள் இந்திரா காந்தியாரின் நிருவாகத்தைப் பற்றி ” மிகவும் திறமையாக ஆட்சி செய்கிறார் ‘ என்று கூறினார் .

” எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடு இருந்தாலும் வெளிநாட்டில் காட்டிக் கொடுக்க மாட்டோம் ” என்று அண்ணா அவர்கள் கூறினார்.

அதுபோலத்தான் நான் வெளிநாடு செல்கிறபோது எடுத்துச் செல்லவிருந்த ஏடுகளில் ஒன்று; நான் ஆற்றிய உரைகளின் தொகுப்பாகும்.

‘அதில் நான் திருச்சி மாநாட்டில் ஆற்றிய உரை; பஞ்சாபில் குருநானக் விழாவில் ஆற்றிய உரை; – கோடம்பாக்கம் கழகப் ‘ பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை ஆகியவை இடம் பெற்றிருந்தன. ‘

– கோடம்பாக்கம் கூட்டத்தில் நான் காமராசரை விமர்சனம் செய்திருந்தேன்.

அந்த உரையும் மொழி பெயர்க்கப்பட்டு – அழகான ‘மேலட்டையோடு அச்சடிக்கப்பட்டிருந்தது.

‘வெளிநாடு செல்ல மூன்று நாள்கள் இருக்கும்போது அது என் ‘கவனத்துக்கு வந்தது.

நம்மிடையே இருக்கும் சண்டை – இங்கேயே இருக்கட்டும்; வெளிநாட்டாருக்கு நாம் காட்டிக் கொடுக்கக் கூடாது – என்று கருதி – அந்த உரையை எடுத்துவிட்டு புத்தகத்தைத் தயாரிக்கச் சொன்னேன்.

ஆனால், புத்தகம் தயாரிப்பது பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும்.

அப்படி ஒரு உரையை மட்டும் ‘திடீரென எடுத்துவிட முடியாது.

புத்தகத்தில் பல பாகங்கள் இருக்கும் ! முதல் பக்கமும் கடைசிப் பக்கமும்கூட ஒன்றாக வரும் ! ஆகவே, அந்தப் புத்தகத் தயாரிப்பாளர் தயங்கினார்.

உடனே புத்தகங்களைக் கிழித்து விட்டாவது இரண்டு நாள்களில் வேறு புத்தகம் தயாரிக்கச் சொன்னேன்.

பிறகு சாதாரண அட்டை போட்டுத் தயாரிக்கப்பட்ட புத்தகத்தைத்தான் எடுத்துச் சென்றேன்.

விநாயகம் அவர்களே ! அறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கிய அந்த அரசியல் பண்பாடு அவரோடு நின்று விடவில்லை .

நாம் மதிக்கிற அளவு, பிற தலைவர்கள் நம்மை மதிக்காவிட்டாலும் வெளிநாட்டினர் அந்தத் தலைவர்களை மதிக்காமல் தவறிவிடக் கூடாது என்று எண்ணும் அண்ணா சகாப்தம் அவரோடு நின்றுவிடவில்லை.

அண்ணா சகாப்தம் – அவருக்குப் பிறகும் தொடர்கிறது ! அப்படி அவருக்குப் பின்னாலும் தொடர்ந்து அந்தப் பண்பு வருவதற்குப் பெயர் தான் சகாப்தம், தலைமை ! அதனால் தான் அண்ணாவின் புகழும் பெயரும் நிலைத்திருக்கின்றன .

கண்ணதாசன் இங்கே ஒரு யோசனை கூறினார் .

கிராமப்புறங்களுக்கு ஏற்றவாறு டாக்டர்களை இரண்டாண்டுப் பயிற்சியோடு தயாரித்தால் வேலை வாய்ப்புகள் அதிகமாகும் என்று கூறினார்.

நல்ல யோசனைதான்; ஆனால் நினைத்தவுடன் செய்கிற காரியமல்ல.

இதற்கும் நாம் ‘ இந்தியன் மெடிகல் கவுன்சில் ‘ என்ற அமைப்பை அணுக வேண்டும்; அவர்கள் அனுமதியைப் பெற்றாக வேண்டும் !.

இவ்விதம் நாம் நமது மாநிலத்துக்குத் தேவையான காரியங்களைச் செய்யக் கூடாத நிலையில் அதிகாரங்கள் எங்கெங்கோ இருக்கின்றன.

சிலம்புச் செல்வர் அவர்கள் சோவியத்து நாட்டில் ‘ மாநிலத்திற்கெனத் தனிக்கொடி இருப்பதாகக் கூறினார்கள். ‘

ஒரு மாதத்திற்கு முன்பே – தமிழ்நாட்டிற்கென ஒரு மாநிலக் ‘கொடி தேவை என்று தில்லிக்கு எழுதியிருக்கிறேன்.

‘- அது தி.மு.கழகக் கொடி போலிருக்குமோ என்று யாரும் ‘எண்ண வேண்டாம்.

எந்தக் கட்சியின் சின்னமும் வராத வரை அது இருக்க வேண்டும்.’

இப்போது தமிழ்நாட்டு அரசுக்குச் சின்னமாயுள்ள ‘ கோபுரச் சின்னமும் – ஒரு மூலையில் தேசியக் கொடியும் அமைக்கப்பட்டு மாதிரிக் கொடிகளையும் அளவையும் நிறத்தையும் குறிப்பிட்டு தில்லிக்கு எழுதியுள்ளோம்.

மாநில சுயாட்சி என்ற கோரிக்கையில் சிலருக்கு இது
தி.மு. க ஆரம்பித்தது என்பதால் ஐயம் வந்திருக்கலாம்.

ஆனால், மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வேண்டுமென்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

இன்றைய தினம் சென்னையில் ஸ்டாண்டர்ட் மோட்டார் கம்பெனி மூடப்பட்டிருக்கிறது.

அந்தத் தொழிற்சாலையில் முதலாளிகள் 35 சதவிகிதம் “?
முதலீடு செய்திருக்கிறார்கள்.

30 சதவிகிதம் லேலண்டு கம்பெனி முதலீடு செய்திருக்கிறது.

வேறு சிலரும் பங்கு போட்டிருக்கிறார்கள்.

தொழிலாளர்களின் கிளர்ச்சியால் ஏற்பட்ட விளைவு தாங்காமல் மூடி விட்டதாக முதலாளிகள் கூறுகிறார்கள்.

நாம் அந்தத் தொழிற்சாலையை உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என்று நினைக்கிறோம்.

தொழிலமைச்சர் மாதவன் முதலாளிகளிடம் உடனே சாவியை வாங்கித் தொழிற்சாலையைத் திறந்து ” வாருங்கள் ! ” தொழிற்சாலை ‘ திறந்து விட்டது ” என்று மகிழ்ச்சியோடு கூற முடியுமா ? இதற்கும் நாம் மத்திய அரசு அனுமதியை வாங்கியாக ‘வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

அவர்களின் தலையீடுகளுக்குத் – தலைகளுக்கு இடையே பணியாற்ற வேண்டிய நிலை இருக்கிறது.

‘ தேசிய வளர்ச்சிக் குழு என்ற பெயரில் முதலமைச்சர்கள் ‘மாநாடு அடிக்கடி நடைபெறுகிறது.

திட்டங்களைப் பற்றி ‘முதலமைச்சர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

ஏற்கெனவே முடிவு எடுக்கப்பட்ட ஒன்றுக்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டுத் ‘திரும்புகிறார்கள்.

முதல் அமைச்சர்கள் மாநாடு என்ற விளம்பரமும் போட்டோவும் தான் மிச்சம்.

ஆனால், சென்ற முறைதான் – சேலம் இரும்பாலைக்கு, ஒப்புதலளிக்காவிட்டால் – வறட்சி நிவாரணத்துக்குப் பணம் ஓதுக்காவிடில் – இந்தத் திட்டத்திற்கு நான்கு கோடி தமிழ் மக்களின் சார்பில் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று கூறினேன்.

இப்படி ஒரு குரல் ஓங்கி ஒலிப்பதைப் பலர் பாராட்டினார்கள்.

ஆயினும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் – பெரிய மந்திரியாகத் தில்லியிலே இருந்தவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.

” அழகாகத்தான் பேசினீர்கள் , கடைசியில் கெடுத்து விட்டீர்களே ! நிபந்தனை போட்டுப் பேசினீர்களே அவர்கள் வீம்புக்காக ஒப்புக் கொள்ளாமல் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார் ! ” போகப் போகத் தெரியும் – என்று தான் கூறினேனே தவிர ஐயோ ! இப்படித் தவறிச் சொல்லி விட்டோமே ! ” என்று நினைக்கவில்லை.

ஏனெனில் – அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்தைத் திறக்க இந்திரா காந்தியார் சென்னை வந்தபோது அவரை வைத்துக் கொண்டே – ”

உறவுக்குக் கை கொடுப்போம் : உரிமைக்குக் குரல் கொடுப்போம்

என்று கூறினேன் .

தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *