வரலாற்றுப்பெட்டகம்
தஞ்சை
18.12.96
பெருமதிப்பிற்குரியீர்,
ஒளவை நடராசனுக்கு
வணக்கம்.
வாழ்க தமிழ்.
தாங்கள் நலத்தை அவ்வப்பொழுது தங்களைக் காணவரும் கு.வே.பா. போன்ற பெருமக்கள் மூலம் கேட்டு அறிவேன்.
தங்களைப்பற்றியும், என் தங்கை தாராவைப் பற்றியும் வார இதழ்களில் படித்து மகிழ்ந்தேன்.
தாங்கள் தமிழ் மேலும், தமிழ்மக்கள் மேலும் கொண்ட பற்றும், நோயை வென்று வாழ வேண்டும் என்ற மன உறுதியும், டாக்டர் தாராவின் மருத்துவ சேவையும் தங்களை பிரச்சினையின்றி இன்னும் பல்லாண்டு காலம் வாழ வைக்கும்.
இறைவன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும்.
தங்கள் பிள்ளைகளின் பெருமையைக் காண ஆப்பிரிக்கா போன்ற நெடுந்தூர நாடுகள் சென்று வருவதை டாக்டர்களைக் கலந்து செய்யுங்கள்.
நாங்கள் இங்கு நலம்.
நான் தமிழில் நிறைய சிறுசிறு மருத்துவ நூல்கள் எழுதி வருகிறேன்.
அத்துடன் மற்ற வேலைகள் வழக்கம்போல்.
நேரம் கிடைக்காமல் தவிக்கிறேன்.
நாள் முழுவதும் கடவுளருளால் உழைக்கிறேன்.
இன்னும் என்னால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டியுள்ளதோ தெரியவில்லை.
வருகிற டிசம்பர் கடைசி வாரத்தில் ASI Conference Bombay, 2 ஆய்வுக் கட்டுரைகள் வழங்கச் செல்கிறேன்.
தமிழ் அகராதியை – மருத்துவ ஆங்கில – தமிழ் அகராதியை – எழுத கு.வே.பா. அவர்களுடன் கூடி தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலம் விண்ணப்பித்துள்ளேன்.
எப்படியாவது மருத்துவத்தை, குறிப்பாக, MBBS, Nursing படிப்பை தமிழ்வழிக் கொணர்ந்து தமிழர்வழி புதிய படைப்புகளை, புதிய சிந்தனைகளை, புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்குத் தர வேண்டும் என்பது என் ஆவல்.
இது இன்றைய நிலையில் எவ்வளவு சாத்தியமாகும் என்ற ஐயம் சிலருக்கு இருக்கிறது.
“தூக்க நினைத்தால் இமயம் சிறிது” என்ற கொள்கையுடையவன் நான்.
முயல்வோம். முயன்று கொண்டிருப்போம்.
முடிவில் வெற்றி கிடைக்க இப்புத்தாண்டில் தங்கள் ஆசிகளைக் கோருகிறேன்.
தங்கை டாக்டர் தாரா கணிப்பொறிக் கல்வி பயன்படுகிறதா?
நான் ஒருமுறை தங்கள் இருவரையும் நேரில் வந்து காண வேண்டும்.
டாக்டர் தாராவுக்கும் குடும்பத்திற்கும் என் வாழ்த்துக்கள்.
மற்றவை பின்.
இப்படிக்கு
தங்கள் அன்புள்ள
டாக்டர் சிவராமன்

Add a Comment