அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 92
திருந்திய தீய மனம்
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் இரண்டாமாண்டு நான் பயிலும் பொழுது,
என்னுடைய நெருங்கிய நண்பர்கள் இரவிசங்கரும், பாபுவும்
அண்ணா நகர் இல்லத்தில் எந்தையாரைச் சந்திக்க விழைந்தார்கள்.
அப்பா அவர்களுடன் மகிழ்ச்சியாக அளவளாவிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது, பாபுவுக்குக் கண்கள் சிவந்திருந்தன.
அவர் விழிகளை ஆழ்ந்து பார்த்த எந்தையார் குறிப்பிட்டார்,
“கல்லூரி நட்பு என்பது கவலைகளை மறப்பதற்கும், கலைகளை வளர்ப்பதற்கும் அமைந்த பல்கலைக்கழகப் பாசறையாகும்.
ஆனால், காலச் சூழலும், கருத்துக் குழப்பங்களும், மாணவர் வாழ்க்கையை மயக்கத்தில் தள்ளுகின்றன.
நண்பர்கள், எப்படியெல்லாமோ பல தீ வலைகளுக்கு ஆளாகி விடுகிறார்கள்.
கள்ளுண்ணாமை என்ற தலைப்பில் திருக்குறள் மட்டுமில்லை, மணிமேகலையும் பல கருத்துக்களை எடுத்துக் காட்டுகிறது.
பிறந்த நாள் தொட்டு, ‘
சீராளனே! என் செல்வ மகனே!’ என்று கனிவு காட்டி ஒரு தாய் தன் மகன் மீது பரிவு காட்டுவதை எவராலும் எளிதில் மறக்க முடியாது.
ஆயினும், அருளுடைய நண்பர் எப்படியோ இந்த மது வலைக்கு ஆளானது வருத்தமளிக்கிறது.
இப்படி இளைஞர்கள் பாழாகிறார்களே என்று சுட்டிக் காட்டி, திருவள்ளுவரின் திருக்குறளை எனக்கு எடுத்துச் சொன்னார்.
“பெற்ற தாய் மனம் நொந்து போய் என் மகன் இப்படி நஞ்சுண்டவனாக மாறி வேளைக்கு வேளைத் தன் வாழ்வை இழந்து வருகிறானே!
எதிரே இருந்துகொண்டே நஞ்சு எதுவென்று தெரியாமல் வஞ்சிக்கப்படுகிறானே!
என்று
“ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்றுச்
சான்றோர் முகத்துக் களி”
ஈன்ற தாயின் முன்பு குடிப்பது துன்பத்தைத் தரும் என்றால், சான்றோர் முன்பு கள்ளினைக் குடிக்கலாமோ!
என்ற அருங்குறள் பொருளைச் சொல்லி, தாயே மகனை வெறுக்க இடம் தரலாமோ என்று தொடர்ந்து கூறினார்.
எனக்கு வியப்பாக இருக்கிறது.
அந்தத் திருக்குறளைத் திருப்பித் திருப்பிக் கூறி என் கல்லூரி நண்பர் தன் மதுப் பழக்கத்தை விட்டு விட்டார்.
அவர் என்னைப் பார்த்த பொழுது, திருக்குறள் தெளிவுரை வாயிலாக அப்பா சொன்ன அறிவுரையுடன்,
என் தாய் கண் கலங்குவதும் தாங்க முடியாத துயரத்தைத் தருவதால் நான் மெல்ல மெல்ல அவர்கள் கலக்கத்தைக் கண்டு, உன் அப்பா சொன்ன விளக்கத்தை ஏற்றுக் கொண்டேன்.
அன்று முதல் கள்ளையும் துறந்தேன். திருந்தி நிற்கும் வேளையில் இன்று என் தாயையும் இழந்தேன் என்று கூறி அழுதான்.
ஒரு குறள் ஒருவரின் குடிப்பழக்கத்தையே திருத்துவது உண்மையில் நம் நெஞ்சில் பெருமிதம் ஊட்டுவதாகும்.
அப்பா எப்பொழுதும், கடுமையான சொற்களைப் பயன்படுத்தவே மாட்டார்.
மிக மென்மையாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலச் சொற்களைச் சொல்லி என்னை தெருட்டுவதை பலமுறை நான் கண்டுள்ளேன்.
பள்ளித் தேர்வில் அதிகமான மதிப்பெண்கள் பெறாமல், அதே சமயம் குறைந்த மதிப்பெண்களும் பெறாமல் தட்டுத் தடுமாறி நான் பெற்ற மதிப்பெண்ணைப் பார்த்து,
‘நீ சராசரி மாணவனை விடச் சரிந்து போனவன்’
என்று அவர் சொல்லும்பொழுதே என் கண்ணில் கண்ணீர் முட்டும்.
அதேபோல அவருடைய ஓட்டுநரைப் பார்த்து, ‘
அவனிடம் எதுவும் கேட்காதீர்கள். அவனுக்கு அவ்வளவு தான் தெரியும்’ என்று சொல்லும் பொழுதே,
குப்பன் என்ற அவருடைய ஓட்டுநர் விம்மி விம்மி அழுதது நினைவுக்கு வருகிறது.
எந்தையார் பல உயர் பொறுப்புகளை அரசில் வகித்தபோது, தன் அலுவலகப் பணியாளர்களை ஒருநாளும் அதிகாரம் செய்யாது, அன்பொழுக, ‘ராஜா’ என விளித்தே அழைப்பார்.
அதே நேரத்தில் அவர்கள் செயலிலோ, பேச்சிலோ, எழுத்திலோ பிழைகள் இருந்தால் அவற்றை உடனுக்குடன் திருத்தி அமைப்பார்.
அவர்களை அதிகமாகக் கடிந்து கொள்ளாமலே அவர்களைத் திருத்தவும் செய்வார்.
கடித்தோசி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்
என்ற குறள்நெறி அறிந்த அருங்குணப் பெட்டகமாவார்.
1986-ஆம் ஆண்டில் பெரும் பொறுப்பிலிருந்த அப்பாவிடம் பலர் நெருங்கிப் பழகுவார்கள்.
பழகுவதோடு அவரிடம் பல உதவிகளையும் கேட்டுப் பெறுவார்கள்.
முடிந்தவரை தகுந்தவர்களுக்குத் தக்கவாறு வழிகாட்டுவதுதான் எந்தையாரின் பாங்காகும்.
தமிழ்ப் பயின்ற ஆசிரியர் ஒருவர் அப்பாவிடம் நெருங்கிப் பழகி, வாய்ப்புகள் கேட்டுப் பெற்று வளர்ந்த போதும், அப்பாவிடம் அவ்வாசிரியர் மனக்கசப்பு கொண்டார்.
அதற்காக வருந்தாத அப்பா, இது எனக்கு வாடிக்கை என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டுத் தன் பணிகளைத் தொடர்ந்தார்.
சில திங்கள் கழித்து அவ்வாசிரியரே தனது பிழையை உணர்ந்து அப்பாவிற்கு தன் கைப்பட 29.09.1986 அன்று எழுதிய கடிதம் பின்வருமாறு:-
“பெருமதிப்பிற்குரிய ஐயா
அவர்கட்குப் பணிவான வணக்கங்கள்.
எளிய நிலையினன் யான்.
தங்கட்கெழுதும் முதன் மடலிது.
தங்களிடம் வாய் திறந்து பேசும் தகுதியில்லை என்ற காரணத்தாலேயே, இச்சிறு மடலை எழுத வேண்டியவனாகி விட்டேன்.
தங்களைப் போன்ற பெரும் பொறுப்பிலுள்ள பெரியோர்கள் உறவு எனக்குக் கிடைத்தது என் தகுதிக்கு மிஞ்சிய ஒன்று என்று பல நாட்களும் எண்ணி நெகிழ்ந்துள்ளேன்.
‘நாய் சிவிகையேறிய’ தொடர் என்னைத் தாங்கள் வண்டியில் அமர்த்தி அழைத்துச் சென்று உண்ண வைத்தனுப்பும் போதெல்லாம் என்னுள் தோன்றி என் கண்களைப் பனிக்கச் செய்திருக்கின்றது.
எல்லோர் மாட்டும் எளிவந்து பழகும் தாங்கள் பண்பால் எல்லோரும் தங்களிடம் ஏதாவது வேண்டுமென்று கேட்டு விடுகிறார்கள்.
அந்த வகையில், யான் என் நிலையறியாது தங்கள் மனவமைதியைப் பாதிக்கச் செய்து விட்டேனே என்று இரவெல்லாம் மிக மிக வருந்தினேன்.
ஒரு மனிதனுக்கு இறைவனது உயர்ச்சியையும், தன்னுடைய தாழ்ச்சியையும் ஒருங்கிணைந்து எண்ணும் போதுதான் பக்தியுணர்ச்சி ஏற்பட முடியுமென்று தாங்கள் சில பொழிவுகளில் குறிப்பிட்டாற் போல், நான் என் தாழ்ச்சியை இன்னும் சரியாகக் கணித்துக் கொள்ளாமல் போய் விடுகிறேன்.
பெரியவர்கள் எளியவர்கட்கு உரிமை கொடுத்தால், அந்த உரிமையை எளியவர்கள் வைத்துக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் திண்டாடுவார்கள்.
இந்நிலைகளெல்லாம் என்னுள் தோன்றிடவே, மனம் பேதுற்று இம்மடலை எழுதியுள்ளேன்.
தனி நிலையற்றுத் தொகுத்தெண்ணும் நீள் நினைப்பில்தான் ஒருவன் தன் துன்பத்தைக் கரைத்துக் கொள்ள முடியுமென்று கருதுகிறேன்.
தங்கள் விருப்பம் போலவே, பொதுநிலை கருதி எனது தனி நிலைத் துன்பங்களைச் சிறிதாகவே கருதி இன்னும் நான் என் தன் ஆய்வு நிலையில் கவனம் செலுத்த முனைகிறேன்.
அருள்கூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள்.”
என்ற உருக்கமான இதுபோன்ற கடிதங்கள் பல அப்பாவின் மேசையில் படர்ந்திருக்கும்.
தமிழ்ப் பேராசிரியர்களுக்குள் எப்பொழுதும் ஒற்றுமை இல்லை என்று பொது அலர் உண்டு.
ஆனால் அப்பா யாரிடமும் பகை கொள்ளாமல் சிரித்த முகத்துடன் தன்னுடைய இலக்கியப் பயணத்தை மிக நேர்த்தியாக நடத்தி வருவதை எண்ணியெண்ணிப் பெருமையடைகிறேன்.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழும் சான்றோர் ஆவார் என் தந்தை.
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின்
‘ஔவையும் புலமையும்’ – (16)
“வாழி ஆதன்” எனத் தொடங்கும் வேட்கைப் பத்து பாடல்
இலக்கணக்குறிப்பு:
“பல பொலிக” என்புழிப் பன்மை மிகுதிப் பொருட்டு, வேட்டாள் என்னும் முற்றுவினை ‘ஆவோ வாகும் செய்யு ளுள்ளே” (தொல். சொல். 211) என்றதனால் வேட்டோள் என நின்றது.
ஏகாரங்கள் யாமே என்புழிப் பிரிநிலையும், யாயே என்புழித் தேற்றமும் ஏனையவிடத்து அசைநிலையுமாம்.
நனைய, சினைய என நின்ற குறிப்புப் பெயரெச்சங்கள் முறையே காஞ்சியும் மீனும் கொண்டன.
யாணர் புதுமை. பாணனும் என்புழி உம்மை இறந்தது தழீஇயிற்று.
இனி ஊரன் என்பதனை அண்மை விளியாக்கி, நீ யென்னும் எழுவாய் வருவித்து உரைத்தலு மொன்று.
அதனாற் சொற்கிடக்கை முறைக்கேற்பப் பொருள் நலம் சிறவாமை அறிக. தலைமகன் புறத்தொழுக்கம் பூண்டொழுகுதலால், தலைமகள் புலத்தற்குரிய காரணம் பல வுளவாகவும், அவன் சோர்வு காக்கும் கடப்பாட்டினால் அவற்றை மனங்கொள்ளாத சிறப்புக் கருதித் தலைமகளை யாய் என்றாள்.
யாமே எனப் பன்மை வாய்பாட்டாற் கூறியது ஆயத்தாரையும் உளப்படுத்தற்கு.
அந்தணர், சான்றோர், அருந்தவத்தோர், அரசர் முதலாயினாரை இன்னவாறு வழிபடுக எனக் கணவன் முதலாயினார் கற்பித்தவாற்றால் வழிபடுதல் கற்பாகலின், வாழி ஆதன் வாழி அவினி யென்றும், இல்லிருந்து நல்லறம் புரிவார்க்கு விருந்தோம்பல் தலையாய அறமாகலின், அது செய்தற்கு, நெற் பல பொலிக என்றும், தங்கண் வந்து இரந்தார்க்குப் பொன் முதலாயின கொடுத்து இசைநடுதல் இல்வாழ்வின் பயனாதல் குறித்துப் பொன் பெரிது சிறக்க என்றும் தலைமகள் வேட்டாள் என்றாள்.”
பழையவுரையில் ‘விருந்தோம்பற் பொருட்டு, ஈதற்பொருட்டு’ எனச் சுருங்கக் கூறியவை ஒளவை உரையில் விரிவு பெறுகின்றன.
ஆனால், ‘காவற்பொருட்டு அரசன் வாழ்க’ என்பது முன்னை உரை,
சான்றோர் ‘கற்பித்தவாற்றால் வழிபடுக’ என்பது ஒளவை உரை.
அருந்திறலரசர் முறைசெயினல்லது, பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது ( சிலப்பதிகாரம் 28: 207-8) என்றும்,
“மன்னவன் புறந்தர வருவிருந்தோம்பித், தன்னகர் விழையக்கூடின்… அது மன்பொருள்” (கலி.8) என்றும்
சான்றோர் கூறுமாற்றால் இவற்றை வேட்டல் தலைமகட்கு அறமாதல் அறிக.
இது புரையறந்தெளிதல்” என எடுத்துக்காட்டுடன் மேலும் விளக்கம் தருகிறது.
இனி யாமே என்பது முதல் தோழி கூற்று.
இல்லறமே நினைந்தொழுகும் தலைமகளின் மாண்பு கருதாது பொது மகளிரையும் அவளோடு ஒப்பக்கொண்டு புறத்தே ஒழுகும் தலைமகன் அவளைப் பிரியேனெனக் கூறிய சூளுரை பொய்த்தலால் வரும் ஏதம் ஆய்ந்து, அஃது உண்டாகாவாறு யாணர் ஊரன் வாழ்க என்றும், அவ்வாறு பொய்த்தற்கு வாயிலாய் நிற்கும் பாணனும் பொய்யனாதற்கு இரங்கிப் பாணனும் வாழ்க என்றும் வேட்டேம் என்றாள்.
பழையவுரைகாரரருக்கும் இதர கருத்தாதல் அறிக என முன்னையுரையையும் போற்றிக் கொள்கிறது.
‘இம் மெய்ப்பாடு தலைமகட்கு உரித்தாகும் ஒன்றித் தோன்றும் தோழி மேன என்னும் விதியினால் சிறுபான்மை தோழி இடத்தும் தோன்றும் என்ப. மேலே தோழி கூற்றுக்களுள் மெய்ப்பாடு தோன்ற வருவதற்கும் இதுவே இலக்கணமாகக் கொள்க.
இது தொழியிடைத் தோன்றிய முன்னிலைப் புறமொழி “முன்னிலைப் புறமொழி எல்லா உயிர்க்கும் பின்னிலை தோன்றும் என்மனார் புலவர்” (தொல்.பொ.167) என்பது இலக்கணம்.
இது “பெறற்கரும் பெரும் பொருள் முடிந்தபின்” (தொல்.பொ.150) என்ற சூத்திரத்து,
“பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய, மரபும் உளப்படப் பிறவும்” என்புழிப் “பிறவும்” என்றதனால், பிரிந்து ஒழுகிப்போந்த தலைமகற்குத் தோழி முன் நிகழ்ந்தது கூறும் பொருளதாகலின், தலைமகள் மாண்புகளையும், தன் செயல்களையும் வகுத்துக் கூறினாள்.
கூறுமிடத்துத் தலைமகனை வாழ்த்துதல் வழுவாயினும் ஏதமஞ்சி மங்கல மொழியால் வாழ்க என்றது, “மங்க மொழியும், வைஇய மொழியும், மாறி லாண்மையிற் சொல்லின் மொழியும், கூறிய மருங்கிற் கொள்ளுமென்ப” (தொல்.பொருள். 244) என்பதனால் அமையும் என அறிக.
கூற்று நிகழ்த்துபவர், கூற்றில் சொல்லப்படும் செய்திகள், அவற்றிற்கான காரணங்கள், அவற்றைச் சுட்டும் தொல்காப்பிய நூற்பாக்கள் முதலானவை, பாடற்பொருளை எளிமையாக்கிப் படிப்பவர் மனம் பற்றுமாறு செய்கின்றன.
“தலைமகளையும் பொதுமகளிரையும் தலைமகன் ஒப்பக் கருதி யொழுகுகின்றான் என்பதனை உள்ளுறையார் கூறினமையின் வெளிப்படக் கூறிற்றிலள்.
காஞ்சியின் பூவும், மீனின் சினையும் ஒப்ப விளையும் ஊரன் என்றதனால் குலமகளிரையும் பொதுமகளிரையும் ஒப்பக் கருதுகின்றான் என உள்ளுறை யுவமம் கொள்ளப்படும்.”
இதனையடுத்து, நான்கு தொல்காப்பியப் பொருளதிகார நூற்பாக்களைச் (298, 300, 242, 303) சுட்டி, உள்ளுறை யுவமம் பற்றிய விளக்கம் அமைகிறது.
தொகுப்பு:
“இதனுள் ஆதனவினியை வாழ்த்தியது கற்பு நெல்லும் பொன்னும் வேட்டது நற்பால் ஒழுக்கமும் என்ற மாண்புகள் என அறிக.
பழியொடு வாராத நற்செயல் புரிந்தமையால், மெய்ப்பாடு: தன் கண் தோன்றிய இசைமை பொருளாகப் பிறந்த பெருமிதம்.
“கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே” (தொல்பொருள் 300) என்பது விதி.
இதனாற் பயன் ஆற்றியிருந்தமை கூறல்”
பாடலில் பயின்ற ஊர்ப் பெயரை நிறுவுதல்
‘திண்டேர்த் தென்னவன் நன்னாதாட்டு ள்ளதை
வேனில் ஆயினும் தண்புன லொழுகும்
தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ’ (54)
இதில் தேனூர் என்ற ஊர் குறிக்கப்படுகின்றது.
ஐந்து கல்வெட்டுக்கள், நாவுக்கரசர்(284:5), ஞானசம்பந்தர் (290:6) ஆகியோரின் தேவாரப் பதிகங்களை ஆதாரமாகக் கொண்டு, இக்கால வேடகத்தேனூரே இச்செய்யுள் குறிக்கும் சங்ககாலத் தேனூர் என நிறுவுகின்றார்.
பிறர் உரையை மேற்கோள்காட்டல் :
‘கழனித் தாமரை மலரும் பழன வூரநீ யுற்ற சூளே’ (53).
பழனம் : ‘பள்ளச் செறுவில் கயல் உகளப் பழனக் கழனி அதனுள் போய்ப் புக்கு, பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங்குடி யானே’ எனும் திருமங்கை மன்னரின் பெரிய திருமொழி (5:12) க்கு உரை எழுதிய சான்றோர்,
‘பழனம் – நீர்நிலைகள்’ என்றனர்’ என்று மேற்கோள் காட்டிப் பொருள் தருகின்றார்.
செய்யுள் அடிக்குறிப்பில் வரும் கூற்று நிகழ்த்துவோர் பற்றித் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் மாறு கருத்துக் கூறும் போது, அடிக்குறிப்பில் சுட்டிய கூற்று நிகழ்த்துவோரே சரி என்று காரண காரியத்துடன் விளக்குகிறார்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment