செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம்-36
தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழி
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்
நெடுங்காலமாக வழக்கத்தில் இருப்பதும், தனித்தியங்க வல்லதும், பிறமொழிகளுக்குச் சொற்களை வழங்க வல்லதுமான மொழியே ‘செம்மொழி’ எனச் செம்மொழி இலக்கணம் வரையறுக்கப்படுகின்றது.
பலரது தொடர்ச்சியான சிந்தனைகளின், செயற்பாடுகளின் மூலமாகத்தான் தமிழ் ஒரு செம்மொழி என்பதற்கான அங்கீகாரத்தை இன்று நாம் வென்றெடுத்துள்ளோம்;
வெற்றிவாகை சூடியுள்ளோம் என்று 20.04.2007-ஆம் ஆண்டில் பெருமிதமாக முத்தமிழறிஞர் கலைஞர் குறிப்பிட்டிருக்கும் வைர வரிகளை இன்று நினைக்கும் பொழுது நெஞ்சம் நெகிழ்கிறது .
தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதியைக் கண் துஞ்சாது ஓய்வறியாமல் ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுத் தந்தது முத்தமிழறிஞர் கலைஞரின் பொற்கரங்களாகும்.
சென்ற வாரம் 12.01.2022 அன்று மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி “உலகம் வியந்து பாராட்டும் பண்பாடு தமிழ் நாட்டினுடையது. அதைக் காக்கவும், கொண்டாடவும் தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகிறோம்.” என்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தைத் திறந்து வைத்துப் பேசியது குறிப்பிடத் தக்கதாகும்.
முத்தமிழறிஞர் கலைஞரின் சலியாத முயற்சியால், பெரும்பாக்கத்தில் தமிழக அரசின் சார்பில் 2007-ஆம் ஆண்டில் 16.586 ஏக்கர் நிலத்தை வழங்கி, 2022-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட 24.65 கோடி மதிப்பில், 70,000 சதுர அடி பரப்பில் மூன்று மாடிகள் கொண்ட கட்டடத்தில் செம்மொழி நிறுவனம் இயங்கவுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர், தான் முதலமைச்சராக இருந்தபோது பாவேந்தர் பாரதிதாசன் பெயரில் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்த எழிலார்ந்த நூலகத்தைத் தன்னுடைய சக்கர நாற்காலியில் சென்று கண்டு மகிழ்ந்தார்.
இன்றைக்கு அதுவே பெரும் நூலகமாகப் பாரதிதாசன் பெயரிலேயே பெரும்பாக்கத்தில் அமைந்திருப்பது சாலப் பொருத்தமாகும்.
முத்தமிழறிஞர் கலைஞர் நுண்ணாய்ந்து
04.10.2000, அன்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் இரண்டாம் மடலம் – இரண்டாம் பாகம் – ஐந்தாம் தொகுதிக்கும்,
20.04.2007 அன்று ஏழு மற்றும் எட்டாம் மடலங்களுக்கும்,
14.12.2009 அன்று அயற்சொல் மடலத்தின் மூன்றாம் தொகுதிக்கும் எழுதிய தீந்தமிழ்ப் பொன்னுரைகளை மீளப் பதிவிடுவதில் பெருமிதமடைகிறேன்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இரண்டாம் மடலம் – இரண்டாம் பாகம் – ஐந்தாம் தொகுதிக்கான முத்தமிழறிஞரின் முகவுரை
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி இரண்டாம் மடலம் – இரண்டாம் பாகம் – ஐந்தாம் தொகுதி நூல் வெளிவருவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தனித்தமிழ் இயக்கத்துக்கு வித்தூன்றி, தம்காலத்திலேயே அதனை நிலைநாட்டிய பெருமைக்குரியவர் மறைமலையடிகள்.
அவருக்குப்பின் அந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்திப் பல்வேறு ஊர்களில் கிளைகளை நிறுவி, பலரையும் தனித்தமிழ்ப் பெயர் தாங்க வைத்து ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கியவர் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்.
புலவர்கள் அளவிலும், ஆர்வமுடைய அன்பர்கள் நிலையிலும் நின்ற தமிழ் இயக்கத்தை நாடெங்கிலும் செயற்படுத்தி, பட்டி தொட்டிகளில் எல்லாம் பைந்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு என்பதை எந்த வரலாற்றறிஞரும் மறைத்துவிட முடியாது.
பாவாணரின் தமிழ் உணர்வைப் போற்றி அவரது சொல்லாராய்ச்சித் திறன், தமிழுக்கு ஆக்கமாக முகிழ்க்க வேண்டும் என்ற உணர்வுடன் 8.5.1974 அன்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககம் என்ற அமைப்பை நிறுவி, அதற்குப் பாவாணர் அவர்களையே இயக்குநர் ஆகவும் நியமித்தது அன்றைய கழக அரசு.
அலுவலக அமைப்பு, உரிய வசதிகள், தக்கார் பணியமர்த்தம் என்றவாறு இத்திட்டப் பணிகள் நடைபெற்றன.
இவ்வேளையில், 1976 – இல் அரசு கலைக்கப்பட்டது.
அதன்பின் சொல்லாராய்ச்சிப் பணிகள் சோர்வடைந்தன.
இதற்கிடையில் பாவாணர் 1981- இல் இயற்கை எய்தினார்.
1974-இல் அகரமுதலி இயக்ககம் தொடங்கப்பட்டாலும், 13.5.1996 வரை இருபத்திரண்டு ஆண்டுகளில் இத்திட்டத்தின்கீழ் இரண்டு தொகுதி நூல்கள் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தன.
ஆனால், 1996 இல் தமிழ் ஆட்சிமொழித் துறை எனப் புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டு, முனைவர் தமிழ்க்குடிமகன் அதன் அமைச்சராக நியமிக்கப்பட்டதையும் தொடர்ந்து நான்காண்டுகளில் மூன்று தொகுதி நூல்கள் உருவாக்கப் பட்டன.
1997-இல் மூன்றாம் தொகுதி நூல் வெளிவந்தது.
16.1.2000 அன்று நான்காம் தொகுதி நூல் வெளியிடப்பட்டது.
இப்போது, 2000 செப்டம்பரில் ஐந்தாம் தொகுதி நூல் 680 பக்கங்கள் கொண்ட பெரிய தொகுதியாக வெளியிடப்படுகிறது.
காலத்தால் அழியாது ஞாலம் முழுவதும் பரந்துள்ள தமிழ் மொழியின் சொல்லாட்சி மாண்புகள் மேலும்மேலும் மெருகடைவதற்கு வழிவகுக்கும் வண்ணம் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் எஞ்சியுள்ள நூல் தொகுதிகள் அனைத்தும் விரைவில் வெளிவருதற்குத் தேவையான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அகரமுதலி இயக்கக நூல்களின் வெளியீட்டு பணிகளுக்கு ஊக்கமளித்து, அடுத்தடுத்து நூல்கள் வெளிவருவதற்கு உதவி வரும் தமிழ் ஆட்சிமொழித்துறை அமைச்சர் முனைவர் மு. தமிழ்க்குடிமகன் அவர்களுக்கும், இப்பணியில் அயராது ஈடுபட்டுள்ள சான்றோர்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள் உரித்தாகுக.
அகர முதலித் திட்டத்தின் ஏழு மற்றும் எட்டாம் மடலங்களுக்கான அணிந்துரை
அகரமுதலித் திட்டத்தின் ஏழு மற்றும் எட்டாம் மடலங்கள் இதழ்களை விரிப்பது கண்டு என் இதயம் பெருமிதம் எய்துகிறது.
ஒவ்வொரு மொழியிலும் அதன் சொற்களுக்கு வேர் மூலம் காண முற்படும்போது, பெரும்பாலான சொற்களின் வேர்மூலங்கள் அடுத்த மொழிகளில் சென்று நிற்கும்.
ஆனால், தமிழில் உள்ள சொற்களின் மூலங்கள் அனைத்தும் தமிழிலேயே அமைந்துள்ளன.
இப்போது நடைமுறையில் வழங்குகிற தமிழ்ச் சொற்களும், உருவாகி வருகின்ற கலைச் சொற்களும், தொழில்நுட்பச் சொற்களும் ஏற்கனவே வழங்கிய வேர் மூலங்களிலிருந்து விரிந்தும் பெருகியும் வந்தனவும் வருவனவும் ஆகும்.
அறிவியல் வளர்ச்சி மிகுந்துள்ள இந்நாளில், செய்தித் தொடர்பாலும் தொழில் நுட்ப வளர்ச்சியாலும் உலகம் சுருங்கிவிட்ட நிலையில், ஒரு மொழியில் அண்டையயல் மொழிச் சொற்களெல்லாம் கலந்து விடுவது இயல்பு.
இத்தகைய சூழ்நிலையிலும் தமிழ் தனித்தியங்க வல்லதாக நெடுங்காலமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது.
இதைத்தான் பாவேந்தர் பாரதிதாசனார் ‘தனித்தியங்கும் தன்மை தமிழினுக்கு உண்டு;
தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு’ என்று ஆணித்தரமாகப் பாடி வைத்தார்.
அவ்வாறு, தமிழ், தான் தனித்தியங்குவது மட்டுமல்லாமல், பிற மொழிகளுக்கும் சொற்களை வாரி வழங்கிக் கொண்டுள்ளது.
தமிழகத்திற்கு அப்பால் தனித்தனியே பிரிந்து வழங்கிவரும் திராவிட மொழிகளுக்கெல்லாம் தமிழ்மொழி வேர் மூலங்களை வழங்கியுள்ளதால், அவற்றின் அடிப்படையிலேயே அம்மொழிகளில் சொற்கள் பெருகியுள்ளமையைக் காண்கிறோம்.
அதனாலேயே, ‘தமிழ் திராவிடத்திற்குத் தாய்’ என்று தேவநேயப் பாவாணர் பறை சாற்றினார்.
இன்னும் பல மொழிகளிலுமுள்ள சொற்களின் வேர் மூலங்களும் தமிழிலேயே இருப்பதைக் காண நேர்கிறது.
இது மொழியியல் உலகின் ஆய்வுப் போக்கைப் பல திருப்பங்களுக்கு உள்ளடக்குகின்றது.
நெடுங்காலமாக வழக்கத்தில் இருப்பதும், தனித்தியங்க வல்லதும், பிறமொழிகளுக்குச் சொற்களை வழங்க வல்லதுமான மொழியே ‘செம்மொழி’ எனச் செம்மொழி இலக்கணம் வரையறுக்கப்படுகின்றது.
தமிழின் இலக்கண இலக்கிய நூல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு மறைக்கப்பட்டிருந்த காலமான கி.பி. 1857 அளவில் தமிழகம் வந்திருந்த கால்டுவெல் பெருமகனார் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஓர் ஒப்புமையைக் கண்டறிந்து, “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” (The comparative grammar of Dravidian Languages) என்ற நூலை வெளியிட்டார்.
அதன் வழி அவர் தன் ஆராய்ச்சியில் கண்ட முடிவு தான், “தமிழ் ஒரு செம்மொழி” என்பதாகும்.
அதன்பின், ஆங்கில அறிஞர்களான, “மெக்ளின்” போன்றவர்கள் தமிழ்மொழியில் உள்ள பதிவுகளையும், தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றையும் அறிவியல், (Primary Classical) வானியல் போன்றவற்றில் அவர்கள் பெற்றிருந்த அறிவாற்றலையும் ஆராய முற்பட்டனர்.
அவற்றின்வழி அந்த அறிஞர் பெருமக்கள் எல்லாம், ‘தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழி’ என்று வழிமொழிந்து சென்றனர்.
இவற்றின் தொடர்ச்சியாகத் தமிழை ஒரு செம்மொழி என அரசே அறிவிக்க வேண்டுமென்று பரிதிமாற் கலைஞர் தன் கோரிக்கையை முதன்முதலில் அரசின் முன்வைத்து வலியுறுத்தினார்.
ஆனால், இதை முழுவதுமாக அறிவியல் வழியாக மொழியியலில் நிறுவுவதற்குச் சொற்களுக்கு உரிய வேர் மூலம் காணும் சொற்பிறப்பியல் பணியே துணை நிற்கும் என்று, தன் வாழ்நாளையே சொல்லாய்வுக்கென ஒப்புவித்துக் கொண்டவர் ‘மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்’.
இத்தகைய பலரது தொடர்ச்சியான சிந்தனைகளின், செயல்பாடுகளின் மூலமாகத்தான் தமிழ் ஒரு செம்மொழி என்பதற்கான அங்கீகாரத்தை இன்று நாம் வென்றெடுத்துள்ளோம்; வெற்றிவாகை சூடியுள்ளோம்.
தமிழ்மொழியில் வழங்கும் சொற்களுக்கெல்லாம் வேர்மூலம் காண்பது என்பது ஆழ்கடலில் முத்தெடுக்கும் பணியினும் கடினமானது; இந்தப் பணியொன்றே தமிழ் செம்மொழி என்பதை ஏற்கச் செய்யும் முதன்மைப் பணியாகும்.
இப்பணியில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பல ஆண்டுகள் உழைத்து ஆராய்ச்சி நூல்கள் பலவற்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார்.
‘உயர்தனிச்செம்மொழி’ (The Primary Classical Language of the World) என்ற நூலைப் பல ஆண்டுகளுக்கு முன்னமேயே வெளியிட்டுள்ளார்.
தேவநேயப் பாவாணரின் இந்தச் சொல்லாராய்ச்சித் திறனை அறிந்து, அவர்தம் பணி தமிழ் உலகிற்குத் தேவை என்று நான் கருதியதால் 8.5.1974 அன்று, ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககம்’ என்னும் ஒரு துறையைப் புதிதாக நிறுவி, அதற்குப் பாவாணர் அவர்களையே இயக்குநராகவும் நியமனம் செய்து அகர முதலித் தொகுதிகள் வெளிவர ஆவன செய்ததை இவ்வேளையில் மகிழ்வுடன் நினைவு கூர்கிறேன்.
அதன் பயனாக, பணிகள் சிறப்பாக நிகழ்ந்து முதல் தொகுதி அணியமாகிக் கொண்டிருக்கும் நிலையில் பாவாணர் அவர்கள் திடீரென மறைந்தார்கள்.
அதற்குப்பின் அவர்தம் நூல்களை அடிப்படையாகக் கொண்டு, அவரின் அணுகுமுறையிலேயே தொடர்ந்து அகர முதலித் திட்டத்தின் அடுத்தடுத்த தொகுதிகள் வெளிவரலாயின.
பாவாணர் மறைவுக்குப் பின்னும், ஒவ்வொரு முறையும் அரசுப் பொறுப்பு ஏற்கிற போதும் இந்தத் துறையின் வளர்ச்சியில் நான் மிகுந்த அக்கறை செலுத்தி வந்துள்ளேன்.
1996 ஆம் ஆண்டில் தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாட்டுக்கு எனத் தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்திற்குத் தேவையான கூடுதல் பணியாளர்கள், கணிப்பொறியமைப்பு போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
இதுவரை, மும்மூன்று தொகுதிகள் கொண்ட ஆறு மடலங்களாக மொத்தம் 18 தொகுதிகள் சென்ற ஆண்டுவரை வெளிவந்து முடிந்துள்ளன.
இப்போது ‘ம’, ‘ய’, ‘வ’ வரிசையில் ஆறு பகுதிகள் வெளிவருவது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். எஞ்சிய பகுதிகளும் விரைந்து வெளிவர வேண்டும் என்பது என் அவா.
இந்த அகரமுதலிப் பகுதிகள் வெளிவர உறுதுணையாய் நின்ற தமிழ் வளர்ச்சி – பண்பாடு (ம) அறநிலையத் துறை சிறப்பு ஆணையர் மற்றும் அரசு செயலாளர் மற்றும் அகரமுதலித் திட்ட இயக்கத்தின் பொறுப்பு இயக்குநர் திரு. து. இராசேந்திரன், இ.ஆ.ப அவர்களுக்கும், நூல்களை உருவாக்கியுள்ள அகரமுதலித் திட்டத்தின் ஆசிரியர், பணியாளர் குழுக்களுக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகள் உரித்தாகுக.
அயற்சொல் மடலத்தின் மூன்றாம் தொகுதிக்கான வாழ்த்துரை
ஒரு மொழியினது சொல்லின் வேரையும், வரலாற்றையும் காட்டும் சொற்பிறப்பியல் அகரமுதலி (Etymological Dictionary) என்பது, மொழி வரலாற்றில் தனியிடம் பெற்றுள்ளது.
செம்மொழியாகிய தமிழுக்கு விரிவான சொற்பிறப்பியல் அகரமுதலி மிகமிக இன்றியமையாதது.
இதனை உளங் கொண்டு மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் அவர்களை இயக்குநராக அமர்த்தி, 1974 ஆம் ஆண்டில், அன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு காலத்தில் உருவாக்கப்பட்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியை 12 மடலங்களில் 31 தொகுதிகளாகக் கலைக்களஞ்சிய அமைப்பில் விரிவாக உருவாக்கி வெளியிடத் திட்டமிட்டது.
அதன்படி, 2007 வரை, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் 9 மடலங்களுக்கான 25 தொகுதிகள் வெளியிடப்பட்டன.
15.9.2009 அன்று, பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் 10ஆம் மடலமாகிய அயற்சொல் மடலத்தின் முதல் இரு தொகுதிகள் வெளியிடப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, அயற்சொல் மடலத்தின் மூன்றாம் தொகுதி, பேரகரமுதலியின் 28ஆம் தொகுதியாகத் தற்பொழுது வெளிவருகிறது.
இலக்கிய வழக்கிலும், நடைமுறை வழக்கிலும் தமிழோடு கலந்துள்ள அயற்சொற்களுக்குரிய பொருள்களுடன், அவற்றுக்கிணையான தமிழ்ச் சொற்களையும் காட்டும் வகையில் அமைந்துள்ள இந்த அயற்சொல் மடலத்தின் தொகுதிகள் தமிழார்வலர்களுக்கும், அறிஞர்களுக்கும் தமிழ் மொழிக்கு மேலும் மேலும் வளம் சேர்க்க உதவும்.
இதனைத் தொடர்ந்து, அகரமுதலிகளில் விடுபட்டுப் போன சொல் தொகுப்புகள் இணைப்பு மடலத்தின் இரு தொகுதிகளாகவும் (தொகுதி 28, தொகுதி 30), சொற்பிறப்பு நெறிமுறைகள் (31ஆம் தொகுதி) இறுதித் தொகுதியாகவும் விரைவில் வெளியிடப்படவுள்ளன.
1974ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த அகர முதலித் திட்டப் பணிகள் விரைவில் நிறைவுபெற்று, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு என்றும் ஓர் அரிய கருவூலமாக நின்று வழிகாட்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இத்திருப்பணியில் ஈடுபட்ட – இன்றும் ஈடுபட்டு வருகின்ற தமிழ் மொழியியல் துறை அறிஞர் பெருமக்கள் அனைவரையும் உளமாரப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Add a Comment