அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 93
டாக்டர் தாரா நடராசன்
(ஆகஸ்ட் / 1986)
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
‘கருணீகர் நலவாழ்வு’ இதழின் 50-ஆவது அட்டைப்படக் கட்டுரையாக ஆகஸ்ட்/1986-இல், பொறிஞர் பக்தவத்சலம் (நித்திலக்கோ) என் அம்மாவைப் பற்றி எழுதிய கட்டுரைத் தொடர் கல்லூரிக்காலங்களில் என் நண்பர்கள் மத்தியில் பெரும் புகழ் படைத்தது.
அக்கட்டுரை வருமாறு:-
“வடார்க்காடு மாவட்டம் போளூர் அருகிலுள்ள புதூர் ஆதமங்கலத்தைச் சேர்ந்த
திரு மாசிலாமணி பிள்ளை இவரது தந்தையார்.
திருமதி பொன்னம்மாள் இவரது தாயார்.
இவருடன் பிறந்த ஒரே தமக்கையார் திருமதி பரமேஸ்வரி அவர்கள்.
இரு சகோதரிகளும் ‘அக்காளும் தங்கையும் போல் அவையழகாய்ப் போவதைப் பார்’
என்ற கவிமணியின் பாடலுக்கு ஏற்ப, சென்னை இராயப்பேட்டையில் அந்நாளில் ஆங்கிலம் பயிற்று மொழியாகக் கொண்ட ஆங்கிலோ இந்தியக் கான்வெண்ட் சென்று படித்தனர்.
தச்சுத்தொழில் ஒப்பந்தக்காரராக விளங்கிய திரு. மாசிலாமணி பிள்ளை அவர்கள் தம்மிரு பெண்களையும்,
‘கண்கள் இரண்டும் சேர்ந்து ஒன்றினையே காணும் காட்சியது போல’ தன் சொந்தக் காலில் நிற்கும் புதுமைப் பெண்களாக வளர்த்தார்.
திருமதி பரமேஸ்வரி அவர்கள் பள்ளிக்கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்ததும், அஞ்சல் துறை வேலையில் சேர்ந்தார்.
சரியான முகவரி இல்லாக் கடிதங்களை உரியவர்களுக்குத் திருப்பியனுப்பும் ‘இறந்த கடித’ (RLO) அலுவலகத்தில் பல காலம் பணியாற்றினார்.
திரு.சுந்தரமூர்த்தி என்ற பொறியாளரை மணந்திருந்த இவருக்கு இரண்டு பெண்களும் (திருமதி சுதா நலங்கிள்ளி, திருமதி உஷா மதனகோபாலன்)
இரண்டு பிள்ளைகளும் (திரு முரளி, திரு. குமார்) பிறந்தனர்.
இளமை முதலே தொண்டையில் சதை வளர்தல் முதலிய தொந்தரவுகளால், தொடர்ந்து அடுத்தடுத்து அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டிருந்த திருமதி பரமேஸ்வரி அவர்கள், 1980-ஆம் ஆண்டு தாமும் ஒரு திரும்பாத கடிதமாக மண்ணுலகில் இருந்து மறைந்தார்கள்.
1942-ஆம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் உலகப் போர் காலத்தில் சென்னை மாநகர் காலியான போது, தாரா அம்மையார், தம் தந்தை, தமக்கையாருடன் வேலூருக்குச் சென்று ஏழு ஆண்டுகள் தங்க நேர்ந்தது.
அதற்குள் இன்டர்மீடியேட் பயின்றிருந்த தாரா அவர்கள் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவே மீண்டும் சென்னைக்கு வந்தார்.
1956-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்று டாக்டரான தாரா அவர்கள், சென்னை கஸ்தூரிபா காந்தி மகளிர் மருத்துவமனையில் 1958-ஆம் ஆண்டு முதல் பணியாற்றத் தொடங்கினார்.
குழந்தை நல மருத்துவத் துறையில், 1961-ஆம் ஆண்டு சிறப்புத் தகுதி பெற்ற
(Diploma in Child Health, DCH பட்டம்) டாக்டர் அவர்கள் உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை அவர்களின் மூத்த புதல்வர் ஔவை நடராசன் அவர்களை அதே ஆண்டில் (10.12.1961) மணந்தார்.
சென்னை அரசுத் தலைமை மருத்துவமனை,
மதுரை இராஜாஜி மருத்துவமனை, முன்னாள் எர்ஸ்கின் ஹாஸ்பிடல், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை,
இராயப்பேட்டை மருத்துவமனை ஆகியவற்றில் தொடர்ந்து பணியாற்றி, குழந்தை நல மருத்துவத் துறையில் சிவில் சர்ஜன் ஆக இன்று டாக்டர் தாரா நடராசன் சிறந்து விளங்குகிறார்.
அத்தோடு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில்,
குழந்தை நலம் கற்பிக்கும் ஆராய்ச்சி பேராசிரியராகவும் விளங்கும் இவர், தம் மருத்துவ முதுகலை பட்டத்தை (MD) 1977-ஆம் ஆண்டு பெற்றார்.
1979 ஆம் ஆண்டின் பிற்பகுதி ஆறு திங்கள், இலிபியா நாட்டின் கடல் கடந்து சென்று பணியாற்றிய டாக்டர் தாரா நடராசன், தமக்கையாரின் உடல் நலம் குன்றிய செய்தியை அறிந்து உடனே தாயகம் திரும்பினார்.
மரணப் படுக்கையில் ஒரு மாதம் ஊன் உறக்கமின்றி உடனிருந்து சிகிச்சை செய்தும் பயனளிக்காது, தங்கையின் பரிவையும், பாசத்தையும், பற்றையும் கண்டு நெகிழ்ந்த நிலையில், திருமதி பரமேஸ்வரி மறைந்தார்.
அவர் மறைவிற்குப் பிறகு அவரது பிள்ளைகளையும் தம் பிள்ளைகளாகவே கருதி அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறார் டாக்டர் அவர்கள்.
டாக்டர் ஔவை நடராசன்-டாக்டர் தாரா, இல்லற வாழ்வின் நல்லறச் செல்வங்களாக மூன்று ஆண் மக்கள் பிறந்துள்ளனர்.
மூத்த மகன் கண்ணன் இலயோலா கல்லூரியில் M.Sc. விலங்கியல் பயின்று வருகிறார்.
அடுத்தவர் அருள், மாநிலக் கல்லூரியில் தமிழ் இலக்கிய இளங்கலை பயில்கிறார்.
இளைய மகன் பரதன் மேல்நிலைக் கல்வி முடித்து, மேலும் உயரத் தொழில்நுட்ப அறிவியல் கல்வி தொடங்க ஆயத்தமாய் உள்ளார்.
அண்ணா நகரில் ‘தாரகை இல்லம்’ 1974-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
அது முதல், அங்கு வாழ்ந்துவரும் டாக்டர் அவர்கள் மருத்துவம் ,மகளிர் சங்கம் வெளியிடும் அரையாண்டு ஆங்கில இதழான, ‘Southern Scientist’ ஆசிரியர் பொறுப்பையும் அண்மையில் ஏற்றுள்ளார்.
புகழ்பெற்ற தமிழ்க் குடும்பத்தின் மருமகளான டாக்டர் தாரா நடராசன் தமிழ்ப் பற்றுடன் விளங்குவதில் வியப்பேதும் இல்லை.
‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்று சொல்லும்போது, ஔவை வீட்டுக் குடும்ப விளக்கு, தாரா நடராசன் அரங்கேறிப் பேசுவது இயற்கைதானே.
1963-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சைவ மங்கையர் மாநாட்டு தலைமைப் பொறுப்பை இவர் அணி செய்தார்.
அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
‘வந்தாரா நடராசன்
வரவில்லையா இன்னும்’
என்று இலக்கிய ஆர்வலர்கள் காத்திருக்கும் மேடைகளுக்கு,
‘எம் தாராவுடன் வந்தார்’ என்று கவிஞர்கள் நயமாகக் குறிப்பிடும் வகையில் இயன்ற போதெல்லாம் துணைவருடன் சென்று இலக்கிய விருந்து கேட்டின்புறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இவ்வாறு கல்வி கேள்விகளால் நிரம்பிய தாய்க்குலத்தின் பிரதிநிதியான டாக்டர் தாரா நடராசன் அவர்கள் சென்ற திங்களிலிருந்து மாடம்பாக்கம் வாசுதேவப் பிள்ளை அறக்கட்டளையில், தமிழ்நாடு கருணீகர் சங்கத்தின் நல்லெண்ணத் தூதுவராக நியமனம் பெற்றுள்ளதன் வாயிலாக மற்றுமொரு புதிய வரலாறு படைத்துள்ளார்.
வாசுதேவப் பிள்ளை அறக்கட்டளையில் இடம் பெற்ற, ‘முதல் பெண்மணி’ என்ற பெருமை தான் அது.
அத்தோடு அக்குழுவின் செயலாளராகவும் அம்மையார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நம் செவிகளில் இன்பத் தேன் பாய்ச்சும் செய்தியாகும்.
தமிழ்நாடு கருணீகர் சங்கம் தோன்றிய நாள் முதல் இன்று வரை சங்க வளர்ச்சியில் ஆர்வமும் அக்கறையும் காட்டி வரும் புரவலராகத் திருமதி தாரா நடராசன் விளங்கி வருகிறார்.
அவர் வீட்டிலேயே நம் சங்கத்தின் பல கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
அமரர் கௌரிசங்கரிடம் நம் சங்கத்திற்காகத் தமிழ்த் தட்டச்சுப் பொறி ஒன்றை அன்பளிப்பாக வழங்கித் தம் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
வள்ளலார் கல்வி அறக்கட்டளை வாயிலாக ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை, புத்தகம் முதலியன வழங்க ஆண்டுதோறும் நூறு ரூபாயை நன்கொடையாக வழங்கி வருகிறார்.
கருணீகர் குலநலனில் அக்கறை காட்டி, அவர்களுக்கு மருத்துவத் துறையிலும் பெரும் தொண்டாற்றி வரும், டாக்டர் தாரா நடராசன், வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை கல்வி அறக்கட்டளையின் உறுப்பினராகவும் இலங்கிச் சிறந்த பணியாற்றி வருகிறார்.
பாசத்திற்கும் பண்பிற்கும் பெயர்பெற்ற டாக்டர் தாரா நடராசன் அவர்களின் காலத்தில் கருணீகர் குலத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு பாலமாக விளங்கி இளைஞர்கள் முன்னேற்றப் பயனுள்ள வகையில் தொடர்ந்து தொண்டாற்றிச் சிறந்திட நமது வாழ்த்துகளைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது உருவப்படத்தை ‘நல்வாழ்வு’ இதழின் அட்டைப்படத்தில் வெளியிட்டுப் பாராட்டி மகிழ்கிறோம்.
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (17)
செய்யுள் அடி வேறுபாடு
“இந்நூலின் கண் 129,130-ஆம் செய்யுட்கள் ஒரு பிரதியிலும் காணப்படவில்லை.
416, 490-ஆம் செய்யுட்களின் இரண்டு அடிகளில் சீர்கள் குறைந்துள்ளன.
அவற்றை ஒரு பிரதியானும் நிரப்பக் கூடவில்லை.
மூலம், கருத்துரை, பழைய உரை என்னும் மூன்றனுள் எழுத்துக்கள் சிதைந்துபோன பாகத்தை…. இவ்வொற்றைப் புள்ளி நிரைகள் காட்டும்.”
(உ.வே.சா. ஐங்.,1920, முகவுரை ப.5).
இவை ஔவை பதிப்பில் வருமாறு:
செய்யுள் 416 இன் அடி வேறுபடுதல்: உ.வே.சா. பதிப்பு இச்செய்யுளில் 5 அடிகள்; ‘
தாதார்ந்து’ என்பது 2-ஆம் அடியின் முதல் சீர்;
அதில் 2,3,4 சீர்கள் இல்லை.
ஒளவை பதிப்பில் 4 அடிச் செய்யுள், முதலடியில் ‘தாதார்ந்து’-ஐயும் சேர்த்து 5 சீர்கள் உள்ளன.
பாடல் வேறுபாடு – பாட்டு 375
“இதுவென் பாவை பாவை யிதுவென,
அலமரு நோக்கின் நலம்வரு சுடர்நுதற்,
பைங்கிளி யெடுத்த பைங்கிளி யென்றிவை,
காண்டொறுங் காண்டொறுங் கலங்க,
நீங்கின ளோவென் பூங்க ணோளே”
இப்பாடல் ஒளவை ஆய்வுசெய்த சீர்காழி கோவிந்தசாமி ரெட்டியார் படியத்தில் வேறாகக் காணப்படுகிறது:
“இதுவென் பாவைக் கினிய நன் பாவை,
யிதுவென் பைங்கிளி எடுத்த பைங்கிளி
யிதுவென் பூவைக் கினிய சொற் பூவையென்,
றலம்வரு நோக்கி னலம் வருஞ் சுடர்நுதல்,
காண்டொறுங் காண்டொறுங் கலங்கி,
நீங்கின ளோவென் பூங்க ணோளே”
சங்க இலக்கியம்-சமாசம் 1940 பதிப்பிலும்,
மர்ரே 1957 பதிப்பிலும்
இப்பாட்டே உள்ளது.
இருப்பினும், இதற்கு ஒளவையின் விரிவுரை இல்லை, முதற்பாடலுக்கே உள்ளது.
இச்செய்யுளின் கருத்துரையில்,
“இது சேரியும் அயலும் தேடிக் காணாது வந்தாரைக் கண்டு, தலைமகள் தாய் சொல்லியது” என்னும் கருத்துரை உள்ளது.
இதற்கு நச்சினார்க்கினியர் ‘தேடிக் காணாது வந்தாரைக் கண்டு புலம்பியது’ என்பர்.
ஆனால் இளம்பூரணர் ‘இது சேரியோரை வினாயது’ என்பர்
(ப.319).
இதுபோன்ற இடங்களில் ஒளவை தமது கருத்தாக எதுவும் சொல்லவில்லை .
சிதைவுற்ற பாடல்கள்
பாட்டு-490
அந்தீங் கிளவி தான்றர யெம்வயின்
வந்தன்று மாதோ காரே யாவயின்
ஆய்தொடி யரும்படர் தீர,
ஆய் மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே
என்று ஒளவை பதிப்பிலுள்ள தடித்த எழுத்து அடியால் பாடல் முழுமை பெறுகிறது.
பாட்டு 246-3-ஆம் அடி உ.வே.சா வில் இல்லை:
‘புன்புலம் வித்திய புனவர் புணர்த்த’
உ.வே.சா.வில் சில பாடல்கள் கீழ் , பழைய உரை காணப்படவில்லை; அவை ஒளவையில் உள்ளன.
எடுத்துக்காட்டு (291, 416, 343, 450 முதலிய 8 பாடல்கள்).
அதேபோன்று, உவேசா-வில் சில பாடல்களில் காணப்படும் பழைய உரை ஒளவையில் இல்லை.
(242, 356 முதலிய 5 பாடல்கள்)
ஒளவையின் உரையில் ஒவ்வொரு பத்தின் தொடக்கத்திலும் விரிவான முன்னுரை உண்டு.
உலகெங்கிலும் எருமை இனங்கள் பரவியுள்ளன.
எந்தெந்த நாட்டில் எவ்வகையான எருமைகள் உள்ளன,
அந்த எருமைகளின் தனி இயல்புகள், அவற்றால் ஆகும் பயன், பல்வேறு பெயர்கள், அருமை பெருமை, செயல்கள், பயன்கள் என நான்கு பக்க அளவில் விளக்கங்கள் அமைகின்றன.
தாம் சொல்லும் கருத்துக்கு அரணாக ஆங்கில அறிவுக்களஞ்சியம்,
பிற நூல்களிலிருந்து எடுத்துரைக்கும் மேற்கோள்களுக்கு இணையானவற்றைச் சங்கநூல்களில் சுட்டிக் காட்டுவது போன்ற தனிச் சிறப்புகளை ஒளவையது உரை நலம் கொண்டிருக்கின்றது.
எ..டு: எருமைப்பத்து
“நாடு தோறும் அவ்வவ் நிலத்துத் தட்பவெப்ப நிலைக்கேற்ப எருமையினத்தின் உடல் அமைப்பும் கோடுகளின் வளர்ச்சியும் அமைந்திருக்கின்றன.
ஐரோப்பாவில் இப்பொழுது வாழும் எருமை இனம் பலவும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆசிய நாட்டில் இருந்து சென்றவை.
அவற்றின் வழித்தோன்றல்கள் என்பர் ஆராய்ச்சியாளர்.
மேனாடுகளில் எருமையினமும் குதிரை இனமும் தோன்றி மக்களுக்கு வேண்டி உதவிகளைப் புரியத் தொடங்குவதற்கு முன் ஆனேறும், ஆனிரையுமே, அதனை ஆற்றிவந்தன.
பின்னரே எருமை இனம் சென்று அவற்றின் நிலையில் நின்று உழுதல், வண்டி இழுத்தல், சுமை கொண்டு சேறல் முதலிய செயல்களைச் செவ்வே செய்து வந்தன.
அமெரிக்க நாட்டில் காணும் எருமை இனம் பைசன் உண்மை எருமை இனமாகா.
ஆயினும் அவை உழவு முதலியவற்றைச் செய்தலும், பால் வெண்ணெய் இறைச்சி தோல் முதலியவற்றை உதவுதலும் செய்கின்றன.
உடல் உழைப்பால் களைப்பு மிக்கவழி சேற்று நீரில் படிந்து கிடத்தல் இயல்பு.
ஆசிய நாட்டில் இந்தியா, பர்மா, மலேயா முதலிய பகுதிகளில் வாழும் எருமை இனம் ஒரே இயல்பும் பண்பும் உடையனவாய் இருக்கின்றன.
ஆப்பிரிக்க நாட்டுக் காங்கோ எருமையும்
சூடான் நாட்டு எருமையும்
ஆப்பிரிக்க எருமையும் நிறத்தில் வேறுபடுகின்றன.
இவற்றுள் காங்கோ செம்மை நிறமும், சுதணம் சாண நிறமும், மேலை ஆப்பிரிக்க நாட்டவை மிக்க செம்மையும் பிறவும் கலந்த நிறமும் பெற்றுள்ளன.
நம் நாட்டவை கருந்தாளும் செங்கண்ணும் வலியகோடும் மெய் வன்மையும் பெற்றிருக்கின்றன.
இவற்றை நம் தமிழாசிரியன்மார் சிறப்புற விதந்து கூறியுள்ளனர்.
‘கருந்தாள் எருமை’ என இந்நூலிலும், ‘கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை’ என நற்றிணையிலும் கூறப்படும்.
‘நெறிமருப்பு எருமை நீல விரும்போத்து’, ‘கருங்கோட்டு எருமை செங்கண் புனிற்றா”, ‘சேற்று நிலை முனைஇய செங்கட் காரான்’ எனவும், இவை போல்வன பிறவும் மேற்கூறியவற்றை வலியுறுத்தும்.
இவற்றுள் ஆண் எருமை உழவு, சுமைதாங்கி சேறல் முதலியவற்றைச் செய்யும்,
பெண் எருமை பாலும் நெய்யும் தயிரும் வழங்கும். மென்புலத்தை உழுத உழவர், எருமைகளை வன்புலத்து மேய விடுவர் எனப் புறப்பாட்டு ஒரு கூறுகின்றது”.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment