POST: 2022-01-24T10:51:02+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 37

ஒளவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்

சிந்தனை செய் மனமே !

வாழ்க்கையில் வாய்ப்பு வரும் போதெல்லாம் தான் வளர்ந்த போக்கையும் அவ்வப்போது வளர்த்துக்கொண்ட நோக்கையும் முத்தமிழ்க்கலைஞர் எண்ணி எண்ணி நெகிழ்வது இயல்பாகும் .

சனாதன எதிர்ப்பு ,
சாதிமத ஒழிப்பு ,
மூடநம்பிக்கை எதிர்ப்பு ,முறைகேடாத நிலைமைகளை வேரொடு எடுத்தெறிதல் முதலிய சீர்திருத்தச் சிந்தனைகள் பெரியார் வாழ்வில் எப்படியோ ஊறிவிட்டன .

அவற்றை அப்படியே எழுத்துக்கு எழுத்து வாழ்ந்து காட்டியவர் நம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் .

புதுமைகளால் நாளெல்லாம் பெரியார் தன் வாழ்வை முறுக்கேற்றிக் கொண்டவர் .

அதேபோல் அந்நாளில் எங்கும் அந்தகாரம் சூழ்ந்திருந்த நிலையில் அஞ்சாமை என்று நிமிர்ந்து போராடிய நெருப்புச் சூறாவளியாகப் பெரியார் வாழ்ந்தார் .

என் தோளுக்குச் சூடும் இந்த மாலையைப் பெரியார் தாளுக்குச் சூடுகிறேன் என்று சர் ஏ டி பன்னீர்செல்வம் முழங்கினார் என்பார்கள் .

இந்நிலையில் சிந்தை அணு ஒவ்வொன்றிலும் சிலிர்ப்பைக் காத்துக்கொண்டே வாழ்ந்தவர் கலைஞர் .

இப்படிப் பிறந்த கட்டுரை தான் இங்கும் தொடர்கிறது .

” பாம்பும் கீரியும் கடுமையாகச் சண்டை போட்டுக் கொண்டு; கடைசியில் பாம்பு செத்து விடும் என்றாலும்; கீரியின் உடலில் பாம்பின் நஞ்சு பரவியிருக்குமென்றும் – அந்த விஷத் தன்மையைப் போக்கிக் கொள்ள கீரி; தனக்கு மட்டுமே தெரிந்த ஒரு மூலிகையின் மீது விழுந்து புரண்டு உடலைத் தேய்த்துக் கொண்டு நஞ்சின் வலிமையைப் போக்கிக் கொள்ளும் ” என்றும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அது எவ்வளவு உண்மையோ எனக்குத் தெரியாது

ஆனால் நான் நமது பகுத்தறிவு இயக்கத்தில் இனமான உணர்வுடன் பணியைத் தொடர்பவன் என்பதால் பல முனைகளில் இருந்து பல்வேறு வகையான கணைகள் பாய்ந்து; அதனால் ஏற்படும் காயங்களின் நச்சுத் தன்மையைப் போக்கிக் கொள்ள; கீரிக்குக் கிடைப்பதாகக் கூறப்படும் மூலிகை போல; எனக்குக் கிடைத்திடும் மூலிகையாகத் தந்தை பெரியாரைத்தான் கருதிக் கொள்கிறேன் ”

பெரியார் திடலில் 1971 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15 ஆம் நாள் நடைபெற்ற விழா ஒன்றில்;

அன்றைய முதல்வர் பொறுப்பில் இருந்த நான் கலந்து கொண்டு, எனக்குச் சிலை அமைத்திடப் பெரியார் அவர்கள் அன்னை மணியம்மையாருக்கும் – ஆருயிர் இளவல் வீரமணி அவர்களுக்கும் அன்பு ஆணை பிறப்பித்து; அதற்கான நிதி வசூலையும் அவர் கையாலேயே ஆரம்பித்து வைத்த நிகழ்ச்சியில் தான்;

நான் இந்தக் ” கிரி – பாம்பு சண்டை விஷம் போக்கும் மூலிகை பற்றிப் பேசினேன்.

– பேசுவதும் எழுதுவதும்தானே என் போன்றோர் மனப்புழுக்கத்தை விரட்டுவதற்கான மெல்லிய பூங்காற்றை உள்ளே அனுப்புகிற பலகணிகளாகப் பயன்படுகின்றன.

மூலிகை மட்டுமா பெரியார் ?

மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருந்த மூட நம்பிக்கைக் கந்தகக் கிடங்கில் மட்டப்பட்ட தீப்பிழம்புக்கு : முதன் முதலாகக் கிழிக்கப்பட்ட தீக்குச்சி அல்லவா !

ஊழிக் காற்றெனப்படுவதால் உரசப்பட்ட எரிமலைகளைக்கூட: உதை பந்தாக உருட்டித் தள்ளும் பலம் வாய்ந்த பகுத்தறிவுத் தலைவரல்லவா !

1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று பிறந்து

1891 – 92ஆம் ஆண்டுகளிலேயே தனது 12 ஆம் வயது முதற்கொண்டு ,”

எனக்குச் சிறு வயது முதல் சாதியோ, மதமோ கிடையாது; அதாவது நான் அவைகளைக் கடைப்பிடிப்பது கிடையாது.

ஆனால், நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன்.

அது போலவே, கடவுளைப் பற்றியும், மனத்தில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை.

நான் செய்ய வேண்டுமென்று கருதிய எதையும் – கடவுள் கோபிப்பாரே என்றோ , தண்டிப்பாரே என்றோ கருதி ( எந்தக் காரியத்தையும் ) செய்யாமல் விட்டிருக்க மாட்டேன்.

கடவுள் மகிழ்ச்சியடைவாரென்று கருதியோ, சன்மானம் அளிப்பார் என்று கருதியோ எந்தக் காரியத்தையும் செய்திருக்கவும் மாட்டேன்.

எனது வாழ்நாளில் என்றைக்காவது சாதி – மதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பியிருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன்.

இதற்கு முன்பும் பல தடவை யோசித்திருக்கிறேன்.

எப்பொழுதிலிருந்து எனக்கு இவற்றில் நம்பிக்கையில்லை என்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன்; கண்டு பிடிக்கவே முடியவில்லை ” என்று பலமுறை குறிப்பிட்டுள்ள பெரியார் அவர்கள், 1907ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் இயக்கப் பற்றாளராக இருந்து. 1919 ஆம் ஆண்டு காங்கிரஸ் உறுப்பினராகவே ஆகி: பல போராட்டங்கள் – சிறைவாசங்கள் – எனத் தன் பொது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, எதிர்நீச்சல் போடுவதில் இன்பம் கண்டு காங்கிரசில் இருந்து கொண்டே – வைக்கம் வீரராகி – சேரமாதேவி குரு குலத்தில் சாதி வெறியை எதிர்த்துக் குரலெழுப்பி – வகுப்புரிமைக்காகப் போராடி தனது வகுப்புரிமைத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படாத காரணத்தால் – 1925 ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

பெண்ணுரிமைப் போராட்டம் –
இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் – சாதி ஒழிப்புப் போராட்டம் –
மூட நம்பிக்கை ஒழிப்புக் கிளர்ச்சி – சமத்துவ சமதர்ம முழக்கம் – இவையனைத்திலும் இவரே பெரியாராகத் திகழ்ந்ததால் 1938 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் பெரியார் என பட்டம் சூட்டிப் பாராட்டப் பெற்றார்.

நான் யார் ? என்று பெரியார் தன்னைப் பற்றிக் குறிப்பிடும்போது;” ஈ.வெ. இராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.

அந்தத் தொண்டு செய்ய எனக்கு ‘ யோக்கியதை ‘ இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் முன் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன்.

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்.”

என்று குறிப்பிட்டிருப்பதை இன்றைக்கும் பெரியாரிடத்தில் காணலாம்.

அவரது கையெழுத்துடன் கூடிய வந்த ” சாசனம் நண்பர் ஆனைமுத்துவைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த ” பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் என்ற அரும் பெரும் நூலிலேயும் காணலாம்.

அறிஞர் அண்ணா அவர்கள் நோயுற்று அமெரிக்காவுக்குச் சிகிச்சைக்குச் சென்றபோது; நியூயார்க் மருத்துவமனையிலிருந்து பெரியாருக்கு எழுதிய கடிதத்தில்

பேரன்புடைய பெரியார் அவர்கட்கு, வணக்கம். என் உடல் நிலை நல்லவிதமாக முன்னேறி வருகிறது.

சென்னை மருத்துவமனையிலும், விமான தளத்திலும் தாங்கள் கவலையுடனும் கலக்கத்துடன் இருந்த தோற்றம் இப்போதும் என் முன் தோன்றியபடி இருக்கிறது.

ஆகவே தான் கவலைப்பட வேண்டிய நிலை முற்றிலும் நீங்கிவிட்டது என்பதனைத் தெரிவித்திருக்கிறேன்.

தங்கள் அன்புக்கு என் நன்றி.

தங்கள் பிறந்த நாள் மலர் கட்டுரை ஒன்றில், மனச் சோர்வுடன் துறவியாகி விடுவேனோ என்னவோ என்று எழுதியிருந்ததைக் கண்டு மிகவும் கவலை கொண்டேன்.

தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது.

புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.

நான் அறிந்த வரையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லை,

அதுவும் நமது நாட்டில். ஆகவே சலிப்போ, கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை.”

1949 என்ற ஆண்டு; தந்தையையும் தனயனையும் பிரித்தது என்றாலும்; தன்மானக் கொள்கைப் பற்றும் – தமிழகம் பகுத்தறிவு பூமியாக – பண்பார்ந்த நிலமாக – வளம் பெற்றிட வேண்டுமென்ற குறிக்கோள் உறுதியும் – 1967 இல் இருவரையும் ஒன்று சேர்த்து விட்டது.

இருவரும் இன்றில்லாவிடினும் கொள்கை உருவில் நம் இதயங்களில் குடிகொண்டிருக்கிறார்கள் – அவர்களை நினைத்தாலே நம் நெஞ்சத்தில் எந்தச் சுமையேறினாலும் அதிலும் ஒரு சுவை காணும் இயல்பு நமக்குத் தானாகவே வரும்.

இந்தச் சிந்தனையுடன் செயல்படுவோம்.

31-10-2005

தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *