POST: 2022-01-31T11:09:16+05:30

செங்கோல் ஏந்திய
செம்மொழிச் சிகரம் – 38

ஒளவை நடராசன்

அகராதிக்கலை நாளும் வளர்க !

தமிழ் மொழியில் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், இதழியல், அறிவியல் என்று இன்று பலவாறாகப் பெருகியுள்ளன.

அந்த வகையில் இலக்கியங்களில் அகராதிக் கலை என்பது இப்போது மகத்தான வளர்ச்சி பெற்றிருக்கிறது.

மதிப்பிற்குரிய ஆங்கிலப் பேராசிரியர் உலகப்புகழ் பெற்ற கே. சுவாமிநாதன் தில்லிக்குப் பிரதமர் நேருவால் அழைக்கப்பெற்றுக் காந்திய நூல்களை 100 தொகுதிகளாகத் தொகுத்த பெருமிதமானவர்.

அவர், அடிக்கடி ஒரு பொன்மொழி சொல்வாராம், ‘

A good student reads a book always with a dictionary.’

வெள்ளிநாப்புலவர் என்று உலகம் பாராட்டிய சீனிவாசச் சாஸ்த்திரியார் தன் கையில் எப்போதும், ஆக்சுபோர்டு அகராதியை வைத்துக் கொண்டிருந்தாராம்.

தமிழகராதிகள் பெருகுவது இன்றியமையாததாகும்.

தமிழில் அகராதிகள் முற்காலத்தில் பல தோன்றின.

அவற்றுள் மறைந்தவை சில; இருப்பவை சில; எதையுமே செய்யுள் வடிவத்தில் எழுதும் வழக்கம் இருந்த காலத்தில், அகராதிகளும் அவ்வடிவத்தில் தோன்றி வளர்ந்தன.

நிகண்டுகள் எனப் பெயர் பெற்று இருந்தன.

அக்காலத்து மாணவர்கள் மனப்பாடம் செய்து நினைவில் வைத்துப் பயன்படுத்துதற்கு உரிய வகையில் அமைந்தன.

ஒரு கலையாக வளர்ச்சி பெற்ற தமிழகராதித்துறை 3000 ஆண்டுகட்கு முன்பே தமிழில் தோற்றம் எடுத்தது என்று அறிஞர்கள் இப்பொழுது கிடைத்திருக்கும் தமிழ் நூற்களுள் முற்பட்டதாகவும், 3000 ஆண்டுக்கு முன்பு தோன்றியதாகவும் கருதப்படும் தொல்காப்பியம் என்னும் பெரிய இலக்கண நூலில் சொற்களுக்குப் பொருள் கூறும் பகுதிகள் உள்ளன.

தொல்காப்பியத்தில் சொல்லதிகாரத்திலுள்ள ‘உரியியல்’ என்னும் பிரிவில் 120 சொற்கட்குப் பொருள் கூறியுள்ளார் ஆசிரியர் தொல்காப்பியர் என்று பலர் எடுத்துக் காட்டியுள்ளனர்.

அதே அதிகாரத்திலுள்ள ‘இடையியல்’ என்னும் பகுதியிலும் சொற்கட்கு உரிய பொருள்கள் தரப்பட்டுள்ளன.

பொருளதிகாரத்திலுள்ள ‘ மரபியல் ’ எனும் பகுதியிலும் சொற்பொருள் அறிவிக்கும் பகுதி அமைந்துள்ளது.

இம்மூன்று இயல்களுக்குள்ளேயே உரியியலில் தான் முழு அளவில் அகராதிக்கூறு அமைந்துள்ளது.

எனவே, இதனை முதல் தமிழ் அகராதி என்று கூறலாம் என்று பேராசிரியர் சுந்தரச் சண்முகனார் குறிப்பிட்டுள்ளார்.

அகராதிகள் சொற்களையும் அவற்றின் வழியே மக்களினத்தின் தொல்மரபு, பழக்க வழக்கம், பண்பாடு, அரசியல், வாணிகம் உள்ளிட்ட வரலாறுகளையும் பாதுகாத்து, வரும் தலைமுறையினருக்குக் கொண்டுசெல்லும் சொற் கருவூலங்களாகும்.

மொழியைக் காக்கவும், மொழிப் புலமையை வளர்த்தெடுக்கவும் துணைசெய்யும் அகராதிகளை உருவாக்குவதென்பது நுட்பமான பணியாகும்.

சொற்கள் காலந்தோறும் மாற்றத்திற்குட்படுபவை என்தனால், மொழி உள்ளளவும் அகராதிப்பணி என்பது இடையறாமல் தொடருகிற அறிவுப் பணியாகும்.

சொற்களே மொழியின் வளம் காட்டும் அளவுகோல் ஆகும்.

சொற்களின் வளம் வளர்ந்தால் மொழியின் நலம் மிளிரும்.

ஒரு மொழி வாழும் மொழியாக நிலைக்க வேண்டுமென்றால் அம்மொழியின் சொற்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுப் புழக்கத்தில் இருத்தல் வேண்டும்.

சொற்கள் பாதுகாக்கப்படவில்லையென்றால் நாளடைவில் நினைவில் அகன்று வழக்கொழிந்துவிடும்.

அதன்பின்னர், மொழியின் சொல்வளம் குன்றிப் பிறமொழிச் சொற்களின் தாக்கம் அதிகமாகிவிடும்.

இந்நிலை ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு மொழியிலும் அம்மொழி சொற்களைப் பாதுகாக்க வேண்டியது பெருங் கடமையாகிறது.

அவ்வகையில், தொன்மைமிகு தமிழ்மொழியின் சொல்வளங்களை அகராதிகளில் பதிவு செய்து, பாதுகாப்பதற்கென்றே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம் தோற்றுவிக்கப்பட்டது.

இயக்ககம் வாயிலாக வெளியிடப்பட்ட அகரமுதலிகளுக்கு முத்தமிழறிஞர் வரைந்த பொன்னுரைகளான முன்னுரைகளை எழுத்தெண்ணிப் பயின்றால் தமிழ் மொழியின் செழுமையையும், வளமையையும் கண்டு மகிழலாம்.

16.07.2009-ஆம் நாளன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தீட்டிய பொன்னுரையான இவ்வணிந்துரை பின்வருமாறு:-

“ மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களை இயக்குநராகக் கொண்டு 1974 – இல் அமைக்கப்பட்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 12 மடலங்களில், 31 தொகுதிகளாகச் ” செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி ” வெளியிடத் திட்டமிட்டது.

திட்டமிட்டவாறே, இதுவரை 10 மடலங்களில் ‘அ’ முதல் ‘ஔ’ வரை உயிரெழுத்துகளில் 3 தொகுதிகள், ‘

க’ முதல் ‘வௌ’ வரை உயிர்மெய் எழுத்துகளில் 21 தொகுதிகள்,

தமிழ் அகரமுதலி வரலாறு 1 தொகுதி என மொத்தம் 25 தொகுதிகளை வெளியிட்டுள்ளது.

அவற்றைத் தொடர்ந்து தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள் தொடர்பாக “அயற்சொல் மடலம்” 10-வது மடலமாக 3 தொகுதிகள் வெளியிடத் திட்டமிடப்பட்டு, அதில் முதற்கட்டமாக இரண்டு தொகுதிகள் தற்போது வெளியிடப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து மற்ற இரு தொகுதிகளுடன் 12-வது இறுதி மடலமும் மிக விரைவில் வெளியாகி இவ்வரும் பணி நிறைவு பெறவிருக்கிறது.

இந்திய மொழிகளில் இதுவரை வெளிவந்துள்ள சொற்பிறப்பியல் அகரமுதலிகளில் இதுவே மிகவும் விரிவானதும், செறிவானதும் ஆகும்.

அனைத்துச் சொற்களுக்கும் எழுத்துப் பெயர்ப்புடன், இலக்கணக் குறிப்பு, தமிழ் மற்றும் ஆங்கிலப் பொருள்கள், காலந்தோறும் மாறிவந்துள்ள பொருள்கள், திராவிட மொழிகளில் சென்றுள்ள ஒலி வடிவங்கள், பழமொழிகள், பல்வேறு சொல் வழக்குகள் ஆகியவற்றுடன் தேவைப்படும் இடங்களில் பட விளக்கங்களும் இப்பேரகரமுதலியில் இடம் பெற்றுள்ளன.

அனைவர்க்கும் பயன்படும் பொதுவகை அகரமுதலியாகவும், மொழியியல் மற்றும் திராவிட மொழிகள் ஆராய்ச்சியாளருக்குப் பெரிதும் பயன் தரும் ஒரு சிறந்த நூல் கருவி நூலாகவும் உருவாகியுள்ள இந்த “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி” தொகுதிகளின் துணையோடு தமிழ் மொழியைப் பேணிக்காத்திடத் தமிழார்வலர்கள் முனைந்திடல் வேண்டும்.

இந்த அரும்பெரும் தமிழ் மொழிக் கருவூலத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுத் தமிழ் மொழிக்கு அணிசேர்த்துள்ள அறிஞர் பெருமக்கள், பணியாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் உரித்தாகுக.”

26.05.2010-ஆம் நாளன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் வெளியீட்டிற்கு வரைந்த வாழ்த்துரை பின்வருமாறு:-

“செந்தமிழ் மொழியின் வேர்ச்சொல் வித்தகர் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களை இயக்குநராகக் கொண்டு, 1974-ஆம் ஆண்டில், அன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு காலத்தில் உருவாக்கப்பட்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியை 12 மடலங்களில் 31 தொகுதிகளாகக் கலைக்களஞ்சிய அமைப்பில் விரிவாக உருவாக்கி வெளியிடத் திட்டமிட்டது.

அதன்படி, இதுவரை, 11 மடலங்களில் 28 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நூல் தொகுதிகளில் விடுபட்ட சொற்கள் தொகுக்கப்பட்டு, ஒன்பதாம் மடலத்தின் இணைப்பாக இரண்டு பாகங்கள் 29, 30 ஆகிய இரு தொகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த இரு நூல்களும் கோவை மாநகரில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வெளியிடப்படுவது மிகுந்த பாராட்டுக்குரியது.

இதனைத் தொடர்ந்து, 12-வது மடலமாக, அதாவது, 31-ஆம் தொகுதியாகச் ‘சொற்பிறப்பு நெறிமுறைகள்’ என்னும் பெயரில் இறுதித் தொகுதி விரைவில் வெளியிடப்படவுள்ளது.

கழக அரசு அமையும் காலங்களில் மட்டுமே கனிவோடு கவனம் செலுத்தப்பட்டு, கடந்த 36 ஆண்டுகளாக நடைபெற்று வரும் செந்தமிழ் சொற்பிறப்புப் பேரகரமுதலி திட்டத்தின் நூல்கள் அனைத்தும் அன்னைத் தமிழின் அரிய அணிகலனாகவும், ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்றதோர் கருவூலமாகவும் திகழும் என உறுதியாக நம்புகிறேன்.

இப்பணியில் ஈடுபட்ட தமிழறிஞர் பெருமக்கள் அனைவரையும் உளமாரப் பாராட்டி வாழ்த்துகிறேன்.”

18.02.2011-இல் முத்தமிழறிஞர், எண்ணிலடங்கா வாழ்த்துரைகளுக்கு மத்தியில் அகரமுதலி வெளியீட்டிற்கு வரைந்த நிறைவு அணிந்துரை இதுவேயாகும்.

“மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களை இயக்குநராகக் கொண்டு, செம்மொழியாம் தமிழ்மொழியின் தனித்தன்மையையும், தொன்மையையும், மேன்மையையும் புலப்படுத்தும் நோக்கில் ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி’ ஒன்றை உருவாக்கும் திட்டத்தை, 8.5.1974 அன்று நான் முதல்முறை முதலமைச்சராக விளங்கிய காலத்தில் உருவாக்கினேன்.

தமிழ்மொழி உயர்தனி செம்மொழி மட்டுமன்றி, உலகத் தாய்மொழி என்னும் முடிவை உலகு ஒப்பிடுமாறு, பற்பலச் சான்றுகள் தந்து நிறுவிடும் தொண்டினில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, தமது வாழ்நாள் பணியாகச் செய்துவந்த பாவாணரே, இந்த அரிய பணியை நிறைவேற்ற வல்லவர் என்பது நாடறிந்த உண்மை.

அவர்கள் பணியிடையில், 16.1.1981 அன்று இயற்கை எய்த நேரிட்டது பேரிழப்பாகும்.

எனினும், அப்பணியைப் பாவாணர் ஆய்வு நெறியில் தோய்ந்து தேர்ந்த முனைவர் இரா.மதிவாணன் பொறுப்பேற்றுத் தொடர்ந்து பணியாற்றி, அகர முதலியின் மடலங்களை அச்சியற்றி வெளியிட்டு, அதன் இறுதி மடலமாகிய பன்னிரெண்டாம் மடலத்தினை, திட்டத்தின் 31-வது வெளியீடாகக் கொண்டு வந்துள்ளது காண மகிழ்கின்றேன்.

நமது தமிழ்மொழி ‘செம்மொழி’ என்பதை மைய அரசு ஏற்று அறிவித்து, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் கோவையில் சிறப்பாக நடைபெற்று, உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் ஒருங்குறி (Unicode) பயன்படுத்தக்கூடிய நிலை உருவாகியுள்ள நல்லதொரு சூழலில், தமிழ் ஆர்வலர்களும், ஆய்வாளர்களும், ஆசிரியர்களும், எழுத்தாளர்களும், கலைத் துறையினரும் இடம்பெற்றுள்ள நாடுகளிலெல்லாம், செம்மொழித் தமிழுக்கு ஒருபெரும் வரவேற்பு மலர்ந்து வருவதை நாம் காண்கிறோம்.

இந்நிலையில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி திட்டப் பணி நிறைவெய்தியுள்ளது மிகவும் வரவேற்கப்படுவதாகும்.

இத்திட்டத்தில் பங்கேற்று, பல நிலைகளில் பணியாற்றித் திட்டம் முழுமை பெறத் துணை புரிந்துள்ள அனைவருக்கும் எனது பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்.”

கடந்த ஆண்டு 2021 இறுதியில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் வாயிலாக வெளியிடப்பெற்ற ஆய்வு மலருக்கு முதன் முதலாக மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் வரைந்த வாழ்த்துரை பின்வருமாறு:-

“ஒரு மொழியின் தொன்மையைப் போலவே அதன் இளமையும் – எளிமையும் பெருமைக்குரிய ஒன்றாகும்.

அதனடிப்படையில் இனிமை, வளமை, செம்மை, வியன்மை போன்ற சிறப்புகளை ஒருங்கேயுடைய தமிழ்மொழியை என்றும் குன்றாத வண்மொழியாக மிளிரச் செய்வதற்குச் சொல்லாக்கம் மிகவும் இன்றியமையாததாகும்.

” ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி
ஓதி வளரும் உயிரான உலகமொழி
நம்மொழி நம்மொழி அதுவே
செம்மொழி செம்மொழி – நம் தமிழ்மொழியாம் !
வாழிய வாழியவே ! ”
என்று முழங்கிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால், உலகின் மூத்த மொழியாம் நம் தமிழ் மொழி இன்று செம்மொழியாக உயர்ந்து மிளிர்கிறது.

ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் வளர்ச்சியடைந்துள்ள மொழியை அறிவியல் மொழியாகவும், நாளும் மாறிவரும் புதிய உலகிற்கான வளமொழியாகவும் வன்மை பெறச் செய்வதற்குச் செழுமையான சொற்களஞ்சியம் இருத்தல் வேண்டும்.

பண்டைய காலத்திலிருந்தே, பொருத்தமான சொற்களைத் தமிழர்கள் உருவாக்கினர்.

” பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லினாகும் என்மனார் புலவர் ”

( சொல். பெயரியல்: 2)
எனச் சொல்லின் பொருட்தன்மையை ஒல்காப்புகழ் தொல்காப்பியம் வாயிலாக அறிகிறோம்.

உலகில் புதிதாக மலரும் கலைச்சொற்களை ஏற்றுக் கொண்டு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஆங்கிலம் வளர்ந்து வருவதைப் போல, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையிலும்,

” சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் ”
என்ற தேசியக் கவிஞர் பாரதியாரின் கூற்றுக்கிணங்கவும், கலைச் செல்வங்களைப் போலவே, ‘புதிய கலைச் சொற்களையும்’ தமிழில் திரட்டிச் சொல் வளத்தைப் பெருக்குவதற்கு உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.

தற்போதைய அகராதியியல் அமைப்பு முறைக்கு அடித்தளமிட்ட வீரமாமுனிவரைப் போற்றும் வகையில், அவரின் பிறந்த நாளான நவம்பர் எட்டாம் நாளைத் ‘தமிழ் அகராதியியல் நாள்’ விழாவாக அரசு சார்பாகக் கொண்டாடப்படுகிறது.

“வெளியுலகில் சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு
தெளிவுறுத்துப் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்”

என்ற கவிஞரின் விழைவிற்கிணங்க, அகராதியியலாளர், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், ஊடக நண்பர்கள், மாணவச் செல்வங்கள் கலைச்சொல்லாக்கத்தில் ஈடுபட்டு “சொற்குவை” (www.sorkuvail.com) வலைத்தளத்தில் அனைத்துத் துறைகளின் கலைச்சொற்கள் இடம்பெற வகை செய்ய வேண்டும்.

அறிஞர் பெருமக்களின் செறிவார்ந்த கட்டுரைகளைக் கொண்ட அகராதி ஆய்வு மலர்-2021, தமிழுலகில் என்றென்றும் மணம் பரப்ப என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் வளர்ச்சியைச் சிறப்பாக வழிநடத்தும் மாண்புமிகு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களுக்கும்,

தமிழ் வளர்ச்சித் துறையின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும், உறுதுணையாகத் திகழும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் அவர்களுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

தொடர்புக்கு:- thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *