அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 95
பெண்ணின் பெருந்தக்க யாவுள
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
சைவப் பேரொளியாகத் திகழ்ந்த அறிஞர் கே.எம். நல்லசாமிப் பிள்ளை அவர்களின் மரபினரும், வழிமுறையினரும் ஆகிய டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பனின் துணைவியார் வாசுகி அம்மையாரின் மரபு, சமய ஒழுக்கச் சால்புடையதாகும்.
தற்காத்து, தற்கொண்டான் பேணி, தகைசான்ற சொற்காத்து சோர்விலாத சுடர்மணியாக வாசுகி கண்ணப்பன் திகழ்கின்றார்.
ஒருவருக்கு உதவி வேண்டுமென்றால், ஓடோடிச் சென்று துணை நிற்பதில் வாசுகிக்கு நிகரில்லை.
அன்னை வாசுகியார் மருத்துவ மாமணி தாரா நடராசனைப் பற்றி எழுதிய செஞ்சொல் காவிய நிறைவுப் பகுதி பின்வருமாறு:-
மருத்துவ மாமணி தாரா நடராசனுக்கு, ‘செய்யும் தொழிலே தெய்வமென’ எண்ணி, எந்த வேலையையும் நுணுக்கமாகச் செய்யும் ஆற்றலுண்டு.
ஒரு நாளைக்குச் சுமார் 700, 800 நோயாளிகளுக்குக் குறைவில்லாமல் சிகிச்சைக்கு வருவார்கள்.
எல்லோரிடமும் பரிவோடு என்ன உடம்பிற்கு என்பதையெல்லாம் பொறுமையாகக் கேட்டு, நோய்க்குத் தகுந்த மாதிரி சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும்.
அதுமட்டுமின்றி, மருத்துவ மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும்.
அதற்காக, அதிக நேரம் படிக்க வேண்டிய நிலையில் சோர்வின்றி அனைத்தையும் சமாளித்திருக்கின்றார்.
அதற்குக் காரணம் மனதில் ஏற்பட்ட உறுதியான எண்ணம் என்பது தான் உணரப்பட வேண்டியது.
இல்லறத்தில் கூட என்றைக்கும் தன்னுடைய வேலைகளை, தன்னுடைய கடமைகளைத் தானே தான் செய்து கொள்ளுவார்.
கணவராக இருந்தாலும். மகன்களாக இருந்தாலும் எதிர்பார்க்கும் பழக்கமே இவருக்கு இல்லை எனலாம்.
இத்தனை வேகமான வாழ்க்கையிலும், சொல்லும்படியான நிகழ்ச்சி என்று பார்க்கும்பொழுது, ‘விமன் மெடிக்கல் அசோசியேஷன்’ அதாவது மகளிர் மருத்துவக் கழகம் என்ற அமைப்பு ஒன்றினைத் தொடங்கியதாகும்.
இந்த அமைப்பிற்கு நல்ல வரவேற்பும் பயனும் இருந்திருக்கின்றது.
மிகச்சிறந்த மகளிர் மருத்துவர்களான திருமதி லலிதா காமேஸ்வரன், மருத்துவர் கொடிமணி, மருத்துவர் சாலினி, மருத்துவர் மாதங்கி இராமகிருஷ்ணன் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார்கள்.
மதுரையில் இருக்கும்போது, மற்றுமொரு செய்தியைக் குறிப்பிட வேண்டும்.
மிகப்பெரிய கருத்தரங்கம் ஒன்று நடத்திப் பலரின் பாராட்டைப் பெற்றவர்.
`தேசிய ஒருமைப்பாட்டு வாரம்`- இந்தக் கருத்தரங்கில், மதுரையைச் சுற்றியுள்ள எல்லாக் கல்வி நிறுவனங்களிலிருந்து, கல்வியாளர்களையும், பேராசிரியர்களையும் அழைத்து நடத்தியுள்ளார்கள்.
இக்கருத்தரங்கம் மிகமிகச் சிறப்பாக நடந்தது என்றும், சென்னையில் கூட இவ்வளவு வருகையாளர்களை அழைத்து எங்களால் நடத்தியிருக்க முடியாது என்று டாக்டர் லலிதா காமேஸ்வரன் அவர்கள் தாரா அம்மாவை வெகுவாகப் பாராட்டிக் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர் தாராவின் கணவர் முனைவர் ஔவை நடராசன் அவர்கள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த போது, தஞ்சை மாநகரத்தின் ஓர் எல்லையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்திருந்ததால், பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்த பேராசிரியப் பெருமக்கள், அலுவலர்கள், குடும்பத்தினர் திருக்கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்றால் அதிகத் தொலைவு செல்ல வேண்டிய நிலை இருந்ததை அங்குள்ளவர்கள் குறைபட்டுக் கொண்டார்கள்.
இதனைக் கருத்திற்கொண்டு டாக்டர் தாரா அம்மா மனதில் ‘ஏன். இவ்வளாகத்திலேயே கோயில் ஒன்றை எழுப்பலாமே!’ என்ற எண்ணம் உதித்தது.
‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்ற நெறிக்கிணங்கக் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும், ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தியதைத் தன் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதிந்திருந்ததைக் கருத்திற்கொண்டு, பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களுக்கும், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்று முழு முனைப்பில் டாக்டர் தாரா அவர்கள் ஆலயப் பணியில் தன்னை முனைப்புடன் ஈடுபடுத்திக் கொண்டு, பொது மக்களிடம் நிதிதிரட்டி, பல்கலை விநாயகர் ஆலயம் ஒன்றினை உருவாக்கி, குடமுழுக்கு செய்ததை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியப் பெருமக்கள் பாராட்டிச் சொன்னது குறிப்பிடத்தக்கது.
கோவில் கட்டுவது என்பது சாதாரணமான செயலன்று.
அவன் அருளால்தான் இறைவனுக்குக் கோவில் உருவாக்கும் புண்ணியத்தைப் பெற முடியும் என்ற நிலையில் மிகச் சிறந்த அறப்பணியைச் செய்துள்ளது காலத்திற்கும் தாரா அம்மாவின் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும்.
இவர், “அறம் செய்ய விரும்பு” – என்று ஔவை சொல்லிக்கொடுத்த மண்ணில் பிறந்தவர் என்பதையும் நிரூபித்தவர்.
தஞ்சையில் அரிமா சங்கம் இருந்தது. இன்றும் இருக்கின்றது.
இவர் அங்குப் பெண் அரிமாவாக இருந்த போது குறுகிய காலத்தில் 100 உறுப்பினர்களைச் சேர்த்துச் சரித்திரம் படைத்திருக்கிறார்.
மக்களுக்குத் தேவையான நற்பணிகளை எல்லாம் செய்து கொடுத்து வியக்க வைத்திருக்கிறார்.
அந்த ஊரில் அப்படி ஒரு பணியா என்று வியந்தவர்களும், இந்த ஊரில் இவ்வளவு பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க முடிந்ததை, அனைவரும் பெரிதும் பாராட்டியிருக்கிறார்கள்.
இப்படிப்பல வழிகளில் மக்களுக்கு நிறைந்த தொண்டுகள் செய்திருக்கிறார்.
எந்தக் கடுமையான வேலை என்றாலும் ஆழ்ந்த சிந்தனையோடு, சரியாகக் குறித்த காலத்தில் மிகச் சிறப்பாகச் செய்யக்கூடியவர் என்ற பாராட்டைப் பெற்றவர்.
எல்லோரிடமும் எளிமையாகப் பழகக்கூடியவர் என்ற நல்ல பெயரைப் பெற்றவர்.
வேலையில் கண்டிப்பாகவும் நேர்மையாகவும் இருந்தவர்.
காலத்தை உயிர் போல் பேணியவர்.
தப்பு என்றால் தப்புதான் என்ற இவருடைய எண்ணத்தை எவராலும் மாற்ற முடியாது.
தான் எடுத்த கொள்கையில் உறுதியாக இருப்பார்.
மதுரை இராஜாஜி மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இவர் இருந்த போது, தன்னுடைய காரோட்டி, காலம் தாழ்த்தி வந்தபொழுது, குறிப்பிட்ட நேரம் ஆனவுடன் சீருந்தை, தானே ஓட்டிக் கொண்டு மருத்துவமனை சென்று விட்டார்.
ஒருநிமிடம் கூடத் தாமதமாக எந்த வேலையையும் செய்ய மாட்டார்.
அப்படியே மற்றவர்களிடமும் எதிர்ப்பார்ப்பார்.
அவர் ஏற்றுக்கொண்ட செய்யும் தொழிலே தெய்வம் என்று ஒவ்வொருவரும் நினைத்துத் தொழில் செய்ய வேண்டும்;
காலம் தவறாமையை மிக முக்கியமாக, கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்;
நல்லனவற்றையே எண்ணுதல் வேண்டும்; நல்லனவற்றையே பேசுதல் வேண்டும்; நல்லவைகளையே செய்ய வேண்டும்; பணிவும், பண்பாடும் கொண்டு வாழ வேண்டும் என்று இவர் கடைப்பிடிக்கும் பொன்மொழிகள் இவரை அடையாளம் காட்ட வல்லது.
இதைத்தான் மற்றவர்களிடமும் எதிர்ப்பார்ப்பவர்.
இத்தகைய அனைத்து நற்குணங்களும் நிறைந்த, முன்னுதாரணப் பெருமாட்டி அவர்களும், தமிழே உயிராக வாழ்ந்து வரும் பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்களும் ஓர் இலட்சியத் தம்பதிகள்.
இவர்கள் இருவரும் மிக எளிமையாகப் பழகக் கூடியவர்கள்.
ஆழ்ந்த அறிவாற்றல் கொண்டவர்கள்.
அன்பிற்குக் கட்டுப்பட்டவர்கள்.
தமிழ் நாட்டில், ஏன், உலக அளவில் கூட ஔவை அவர்கள் இல்லாத இலக்கிய நிகழ்ச்சிகளே இல்லை எனலாம்.
அனைத்து இலக்கிய விழாக்களிலும் இலக்கியத் தம்பதிகளாகப் பங்கேற்றுச் சிறப்பு சேர்ப்பார்கள்.
அவர்கள் இல்லாமல் எங்கள் குடும்ப விழாக்கள் இருக்காது.
எங்கள் இல்ல டாக்டர் கண்ணப்பன்-வாசுகி அறக்கட்டளைச் சொற்பொழிவில் அவர் ஆற்றிய உரை இன்றும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
நாங்கள் படைத்த நூல்களிலெல்லாம் அவர்களுடைய வாழ்த்துரை நிச்சயமாக இருக்கும்.
அவர்கள் வீட்டிற்குச் சென்றால், பெற்ற பிள்ளையைப் போல் எங்களிடம் அன்பு காட்டுவார்கள்.
அவர்களின் அன்பில் கரைந்தவர்கள் நாங்கள்.
கடைசிவரை இணையத் தளம், வலை தளம் என்று இன்றைய காலகட்டத்திற்கு இணையாகத் தன்னை அறிவால் உயர்த்திக்கொண்டவர்.
தன் கணவரைக் கண்ணெனக் காத்த தலை மகள்.
இத்தகைய அன்பாலும், அறிவாலும், ஆற்றலாலும், தொண்டாலும், பாசத்தாலும், நேசத்தாலும் பெண்களுக்கே உதாரணமாகத் திகழ்ந்தவர் டாக்டர் தாரா நடராசன் என்றால் மிகையாகாது.’’
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (19)
எளிதாகக் கருதப்படும் மூங்கில், புல் போன்றவற்றையும், அவற்றைப் பற்றிப் பெரும்பாலோர் அறிந்திராத, ஆனால் அறியப்பட வேண்டிய இன்றியமையாச் செய்திகளை ஆங்கில நூல்களை மேற்கோள் காட்டி விரித்துரைக்கிறார்:
“Bamboos and sugarcane belong to the great family of grass”…
Some of the seeds (வேழம், விடுகு, etc.,)belong to this family.
The grass form a big family, for this three and four thousand different species and more than hundred of these grow wild in the British isles and 800 or more are found in the United States of America.”
“The grasses rare a gracious race, and they have been great agents in the spread of Civilization, for they have enabled man to grow large quantity of food for the support of centralized population and they provide postures for his flocks and herds.
From the earliest times, grass has been the basis of livestock production, but it has been more than a useful friend to man; clothed with beauty and has been a symbol of peace and quiet restfulness”
“An American writer has well said,
“Grass is the forgiveness of nature – her constant benediction …. Forests decay, harvests perish, flowers vanish, but grass is immortal” – (Book of knowledge, p.34)…
ஐங்குறுநூற்றின் முதல் இரண்டு பத்துகள் வேட்கைப்பத்து, வேழப்பத்து ஆகிய 20 பாடல்களுக்கு உரை விளக்கத்தில் 98 இலக்கிய மேற்கோள்களும், 69 இலக்கண எடுத்துக்காட்டுகளும் தரப்பெற்றுள்ளன.
நூல் முழுமைக்கும் சுட்டுகை நூல்களாக 61 தமிழ் நூல்களும் 14 ஆங்கில நூல்களும் அமைகின்றன.
மேலும் நூலின் தொடக்கத்தில் அகத்திணை ஒழுக்கம் பற்றி
27 பக்க முன்னுரையும் உண்டு.
மருதத்திணை மட்டும் 248 பக்கங்கள்;
பழைய உரை நான்கடிப் பாடலுக்கு ஓரிரு வரிகளில் அமையவும், ஒளவை உரைவிளக்கத்தின் சிற்றெல்லை 1 பக்கம், பேரெல்லை 4 பக்கம் என்ற அளவில் உள்ளன.
ஐங்குறுநூறு டாக்டர் உ.வே.சா.-வின் (1920) பதிப்பு 208 பக்கமும்,
உரைவேந்தர் அவர்களின் (1957-58) பதிப்பு 1305 பக்கமும் கொண்டிருக்கின்றன.
இத்தகைய பரந்துவிரிந்த விளக்கவுரை ஔவை என்னும் அருந்தமிழாசானின் அஃகி அகன்ற நுண்மான் நுழைபுலத்தின் பன்முகப் புலமையைப் பறைசாற்றுகிறது.
உரைவேந்தர்,
“சங்கநூற் பெரும்புலவ! சைவ நூற் கலைச்செல்வ!
தமிழர் போற்றும்
துங்கமிகு காப்பியங்கள் மூன்றனுக்கும் ஆய்வு நூல்
சுருக்க நூல்கள்
நன்குமிகத் தொகுத்தளித்து நலஞ் செய்த பேராசான்,
நனிசிறக்க
ஐங்குறுநூற் றெழில்மிகுந்த அரும்பொருள்கள் விரித்துரைத்தோய்!
ஐய, வாழி!
– ந. ரா. முருகவேள்
ஐங்குறுநூறு விளைத்த அவதி
ஐங்குறுநூறு முதலாவது மருதம் மூலமும் விளக்க உரையும் 1938 அளவில் வெளியிடப்பெற்ற பின்னர் நேர்ந்த அவதியை ஒளவை தமக்கே உரிய பெருந்தன்மையுடன் இலைமறைகாயாகத் தமது புறநானூற்று முன்னுரையில் வெளியிட்டிருக்கின்றார்.
“ஐங்குறுநூறு சார்பாக டாக்டர் ஐயர் அவர்களுக்கும் எனக்கும் நடைபெற்ற கடிதப் போக்குவரத்தால் ஏடு தேடி ஒப்புநோக்கி இன்புறும் முயற்சியில் எனக்குண்டான வேட்கை திண்ணியதாய் மேன்மேலும் முயலுமாறு செய்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பின்னர் ஒரு பெரிய போராட்டம் ஒளிந்து கொண்டிருந்ததைக் கரந்தை சிவகுப்புசாமி சொல்லி இந்நூலாசிரியர் அறிவார்.
இதனோடு தொடர்புடைய ஒரு செய்தியையும் இங்கே சொல்லியாக வேண்டும்.
அப்போதைய கரந்தைத் தமிழ்ச் சங்கப் பள்ளியில் உயர்தொடக்க இறுதி வகுப்பு வரை மாணவர்களுக்கு அவர்களது வகுப்புக்குரிய (எஸ்.எஸ்.எல்.சி) தமிழ்ப் பாடமும், ஆங்கிலப் பாடமும் கூடுதலாக, பெரும்பள்ளி இறுதி வகுப்புக்குரிய பாடங்களுடன் சொல்லிக் கொடுக்கப்படும்.
பழைய இலக்கியங்களில் இருந்து ஏதாவது ஒரு பகுதி கல்லூரி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும்.
அந்நிலையில் கரந்தைத் தமிழ்ச்சங்கக் கல்லூரித் தலைமையாசிரியர் சிவகுப்புசாமி அவர்கள் சிலப்பதிகாரம் புகார்க்காண்டத்தைத் தெரிவு செய்து சிறு நூலாக அச்சடித்து மாணவருக்கு வழங்கியிருந்தார்.
இச்செய்தி முன்னரே சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்திருந்த டாக்டர் உ.வே.சாமிநாதையருக்கு எட்டியது.
தமது இசைவைப் பெறாமல் புகார்க்காண்டத்தை வெளியிட்டது தவறு என்றும், அதற்குரிய இழப்பைத் தமிழ்ச்சங்கம் ஏற்கவேண்டும் என்றும், இல்லையேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும், கரந்தைத் தமிழ்ச்சங்கத்திற்கு வழக்குரைஞர் வாயிலாக ஓர் அறிவிப்பை டாக்டர் உ.வே.சா. அனுப்பியிருந்தார் .
இதனைக் கண்ணுற்ற சங்கத்தலைவர் தமிழவேள் அவர்களும் ஐயரின் இசைவு பெறாமல் புகார்க்காண்டத்தை வெளியிட்டது தவறு என்று தலைமையாசிரியரிடம் சினந்து கொண்டார்.
மூன்று நாளுக்குள் சிக்கல் தீர்ந்துவிடும் என்று தலைமையாசிரியர் உறுதி கூறவே, அதன் மேல் ஒருவாறு தமிழவேளும் அமைதியானார்.
இந்நிலையில் இது போன்றதொரு வழக்குரைஞர் அறிவிப்பை ஐங்குறுநூறு மருதத்திணை மூலத்தைத் தமது விளக்க உரையுடன் பதிப்பித்ததற்காக ஒளவைக்கும் டாக்டர் உ.வே.சா. அனுப்பியிருந்தார்.
அதனை எடுத்துக்கொண்டு அவர்கள் தஞ்சைக்கு விரைந்துவந்து அருந்துணைவர் சிவகுப்புசாமியையும், தமிழவேள் அவர்களையும் சந்திக்கவே மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பற்றி அவர்கள் சிந்தித்தனர்.
இதைத்தான் ‘ஏடு தேடி இன்புறும் முயற்சியில் எனக்குண்டான வேட்கை திண்ணிதாய் மேன்மேலும் முயலுமாறு செய்தது’ என்று முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment