அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 96
நுண்ணிய நூல் பல கல்!
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
சென்னைக் கிறித்தவ மேனிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பின் பொதுத் தேர்வு நிறைவுக்குப்பின், அதே பள்ளியில் பதினோறாம் வகுப்பு M3 பாடப்பிரிவில் இணைந்த பொழுது, எந்தையார் அமெரிக்கா, இலண்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு முதன்முறையாகச் சென்று வந்தார்.
அப்பாவின் வெளிநாட்டு உலா நிகழ்வுகளைக் கண்டு கேட்டு மலைத்து நின்றேன்.
நுண்ணிய நூல்பல கல்! என்ற பழமொழிக்கிணங்க, அவ்வாண்டிலிருந்துதான், செய்தித் தாள்களில் வரும் கருத்துக்களை நறுக்கி ஒட்டி, வெட்டி ஒரு பெரிய குறிப்பேட்டில் சேர்த்து வைப்பது எனக்குப் பெரிய ஊக்கமளித்தது.
இது மெல்ல வளர்ந்து, விளம்பர நிறுவனங்களான, கிளியா மற்றும் பிரெஸ்மென் நிறுவனங்களில் பணியாற்றும்போது இப்பழக்கம் கடமையாகவே மாறியது.
மலேசிய நாட்டுத் தொழிலதிபர் திரு. நல்லகுமாரின் நெருங்கிய நட்பு வலைக்குள் செல்வதற்குச் செய்திக்கோவை வழிகோலியது.
அவ்வண்ணமே, இலண்டன் மாநகரில் ஓராண்டிற்கு மேல் தங்கியிருந்த பொழுது, நாள்தோறும் காலை முதல் அந்தி வரை ஆங்கிலச் செய்தித் தாள்களையும், இலக்கிய நூல்களையும் குறிப்பெடுத்துத் தொகுத்து வைப்பது என் மனவிரிவுக்குப் பெருந்துணையாயிற்று.
அன்று தொடங்கிய இப்பழக்கம், எனக்குப் பெரிய ஊக்கமளித்தது.
அவ்வகையில், மலேசிய நாளிதழ்களிலும் தமிழகத்திலுள்ள தினமணி நாளிதழிலும் 39 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட விளம்பரப் பதிப்புகளையும், செய்தி நறுக்குகளையும் தமிழுலகத்திற்கு வழங்குவதில் பெருமிதமடைகிறேன்.
07.06.1983 அன்று மலேசிய நாளிதழான, ‘தமிழோசை’யில் வெளிவந்த செய்திக் குறிப்பு பின்வருமாறு:-
“ஔவை நடராசன் மலேசியா வந்துள்ளார்!
தமிழ் மொழிப் பேரறிஞரும், சிறந்த இலக்கிய, சமய – சமுதாயப் பேச்சாளருமான ஔவை நடராசன் கோலாலம்பூர் வந்திருக்கிறார்.
குறுகிய கால வருகை மேற்கொண்டு, ம.இ.கா. தேசியத் தலைவரும், பொதுப்பணி பயனீட்டுத்துறை அமைச்சருமான டத்தோ ச. சாமுவேலுவின் சிறப்பு விருந்தினராக மலேசிய இந்துத் திருக்கோயில்களின் பேரவை அழைப்பினை ஏற்று அவர் வந்துள்ளார்.
தமிழக அரசு மொழிபெயர்ப்புத் துறை இயக்குநரும் – மொழித் துறை விற்பன்னருமான அவர், நாட்டின் பல்வேறு திருக் கோயில்களிலும், சமுதாய அரங்குகளிலும் உரையாற்றவிருக்கிறார்.
சிறப்புக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய விரும்புவோர். திரு. ஆர். நடராசா, (தொலைபேசி: 285323) தொடர்பு கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழகத்தின் தலைசிறந்த முன்னணிப் பேச்சாளரும், எழுத்தாளருமான திரு. ஔவை நடராசன் திரு. ஔவை துரைசாமிப் பிள்ளையின் திருப்புதல்வரும், தமிழக அறிஞர் பெருமக்களின் – அரசின் தொடர்பு இயக்குநராகவும் விளங்குகிறார்.”
09.06.1983 அன்று மலேசிய நாளிதழான, ‘தமிழ் நேசனில்’ வெளிவந்த செய்திக் குறிப்பு பின்வருமாறு:-
“மலேசிய இந்து திருக்கோயில்கள் – அமைப்புகளின் பேரவை ஏற்பாட்டில் தமிழகத்திலிருந்து டாக்டர் ஔவை நடராசன் மலேசியா வருகை புரிந்துள்ளார்.
டாக்டர் ஔவை நடராசன் எம்.ஏ., எம்.லிட், பி.எச்டி., டி.லிட்., தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
மலேசிய இந்துத் திருக் கோயில்கள் – அமைப்புகளின் பேரவையுடைய அழைப்பினை ஏற்று வருகை புரிந்துள்ள டாக்டர் ஔவை நடராசன் பேரவை ஏற்பாடு செய்யும்
தமிழ் அர்ச்சனை பற்றிய கருத்தரங்குகளிலும்,
சமய வாழ்வு என்னும் கலந்துரையாடலிலும் கலந்து கொள்வார்.
கடந்த ஆண்டு (1982) அமெரிக்கா சென்று திரும்பிய அவர், தேசியச் சீனப் பண்பாட்டு பல்கலைக்கழகத்திலும், டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.”
15.06.1983 மலேசிய நாளிதழான ‘தமிழோசை’யில் வெளிவந்த செய்திக் குறிப்பு பின்வருமாறு:-
“சாமிவேலு தலைமையில்
ஔவை நடராசன் சொற்பொழிவு.
மலேசியாவிற்குக் குறுகிய கால வருகை மேற்கொண்டிருக்கும், தமிழக மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் டாக்டர் ஔவை நடராசன் எம்.ஏ., எம்.லிட், பி.எச்டி., டி.லிட்.,‘
கூட்டுறவும் சமுதாய மேம்பாடும்’ என்ற தலைப்பில் 15.06.1983 அன்று மாலை 5.30 மணிக்குத் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்க, பங்குனான் துன் சம்பந்தன் மண்டபத்தில் உரை நிகழ்த்துகிறார்.
தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இச்சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ம.இ.கா. தேசியத் தலைவரும், பொதுப்பணி அமைச்சருமான டத்தோ. ச. சாமிவேலு தலைமையேற்பார்.
பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”
15.06.1983 அன்று மலேசிய நாளிதழான ‘தமிழ் நேசன்’-இல் வெளிவந்த செய்திக் குறிப்பு பின்வருமாறு:-
“டாக்டர் ஔவை நடராசன், கூட்டுறவு சங்கப் பங்குனான் துன் சம்பந்தன் அரங்கில் உரை நிகழ்த்துவார்.
இன்று மாலை 5.30 மணியளவில் தேசிய நலநிதிக் கூட்டுறவுச் சங்க, பங்குனான் துன் சம்பந்தன் அரங்கில், ம.இ.கா.வின் தேசியத் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான டத்தோ ச. சாமுவேலு அவர்கள் தலைமையில் தமிழகத்திலிருந்து வருகை புரிந்திருக்கும் தமிழக மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் டாக்டர் ஔவை நடராசன் எம்.ஏ., எம்.லிட், பி.எச்டி., டி.லிட்., ‘
கூட்டுறவும் சமுதாய மேம்பாடும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்துவார்.
பொதுமக்கள் திரளாக வந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறார்கள்.”
17.06.1983 அன்று மலேசிய நாளிதழ் ‘தமிழ் நேசன்’-இல் வெளிவந்த செய்திக் குறிப்பு பின்வருமாறு:-
“போர்டிக்சனில் ஔவை நடராசன் பேசுவார்!
தமிழகப் பேரறிஞரும் – மொழித்துறை விற்பன்னருமான டாக்டர் ஔவை நடராசன் வெள்ளிக்கிழமை 17.06.1983 மாலை 7.00 மணிக்குப் போர்டிக்சன் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில் மண்டபத்தில் மாண்புமிகு எம். முத்து பழனியப்பன் (நெகிரி மாநிலச் சட்டமன்ற நிருவாகக்குழு உறுப்பினர்) தலைமையில்
‘சமயமும் வாழ்வும்’ என்ற தலைப்பில் பேருரை நிகழ்த்துவார்.
பக்தப் பெருமக்கள் அனைவரும் பங்குபெற்றுச் சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”
17.06.1983 அன்று மலேசிய நாளிதழ் ‘தமிழ் நேசன்’-இல் வெளிவந்த செய்திக் குறிப்பு பின்வருமாறு:-
“கிள்ளான் தண்டாயுதபாணி கோயிலில்,
கிள்ளான் ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் (மாரியம்மன் கோயில்) சனிக்கிழமை 18.06.1983-ஆம் நாள் மாலை 5.30 மணியளவில் தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநரும், பேரறிஞருமான டாக்டர் ஔவை நடராசன் ‘
திருமுறை காட்டும் செந்நெறி’ எனும் தலைப்பில் சிறப்புப் பேருரை நிகழ்த்துவார்.
பக்தர்களும், அன்பர்களும் தவறாது கலந்து சமய உரையில் திளைக்க வேண்டுமாய் திருக்கோயில் நிருவாகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.”
18.06.1983 அன்று மலேசிய நாளிதழான ‘தமிழ் நேசன்’-இல் நாளிதழில் வெளிவந்த விளம்பர வரிகள் வருமாறு:-
“டாக்டர் ஔவை நடராசன், பெருங்கவிக்கோ டாக்டர் வா.மு. சேதுராமன் ஆகியோருடன் கலந்துரையாடல், இலக்கிய ஆர்வலர்கள் பங்கு பெறலாம்.
தமிழகத்திலிருந்து வருகை புரிந்துள்ள தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் டாக்டர் ஔவை நடராசன் அவர்களுடனும், பெருங்கவிக்கோ டாக்டர் வா. மு. சேதுராமன் அவர்களுடனும் மலேசிய நாட்டு எழுத்தாளர்களும், கவிஞர்களும், சமூகச் சமய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், இலக்கிய ஆர்வலர்களுக்குமிடையே நடைபெறும் கலந்துரையாடலில் பங்கு கொண்டு தங்களின் பிரச்சினைகளை அவரிடம் எடுத்துக் கூறலாம்.
இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்படி சமூக, சமய அமைப்புகளும், எழுத்தாளர்களும், கவிஞர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை (20.06.1983) மாலை மணி 5.00-க்கு அம்பாங் சாலை பிலால் உணவகத்தில் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குத் திரு. வி. சூரிய ராஜா தலைமையேற்பார். தமிழ்நேசன் ஆசிரியர் திரு. வி. விவேகானந்தன் கலந்துரையாடலைத் தொடக்கி வைத்துப் பேசுவார்.
ம.இ.க. தேசியத் தலைவர் திருச்சுடர் கே.ஆர். இராமசாமி, மணிமன்றங்களின் தேசியத் தலைவர் சங்கநாதம் க. கிருஷ்ணசாமி, தமிழர் பேரவைத் தலைவர் திரு. ந. க. வேலன், ஆகியோர் கலந்து கொள்வர்.
நிகழ்ச்சிக்கு எவ்விதக் கட்டணமும் கிடையாது.
இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி ஏற்பாட்டு குழுவின் சார்பில் புலவர் முருகையன் அறிவிக்கின்றார்.”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (20)
டாக்டர் ஐயர் சிலப்பதிகாரத்தைப் பதிப்பிக்கும் முன்னரே, புகார்க்காண்டத்தைச் சீனிவாச ராகவாச்சாரியார் 1872/1876-லும், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவராகிய பதினாறு கவனர் தி.க. சுப்பராயச் செட்டியார் 1880-லும் பதிப்பித்திருந்தனர்.
அந்த நூலைத் தலைமையாசிரியர் பெற்றிருந்தார்.
அதேபோன்று உயர்நிலை பள்ளியில் தம் தமிழாசிரியர் சீர்காழி கோவிந்தசாமி ரெட்டியார் வைத்திருந்த ஐங்குறுநூற்றின் ஓலைச்சுவடியும் ஒளவையின் கைக்குக் கிட்டியிருந்தது.
ஐயரவர்களின் வழக்குரைஞர் அறிவிப்புக்கு மேற்சொன்ன விளக்கம் அளிக்க விரும்பிய தமிழவேளைத் தலைமையாசிரியர் தடுத்து, ‘வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்போம்’ என இரத்தினச் சுருக்கமாக மறுமொழி விடுக்கச் செய்தார்.
சற்றே விழித்துக்கொண்ட ஐயர் அவர்களும் அதனை அத்துடன் நிறுத்திக் கொண்டார்.
அதற்குப் பின்னர் ஐயரும் தமிழவேளும் சந்திக்க நேர்ந்தபோது, அப்படி ஒரு மிரட்டல் நிகழ்ச்சி நடந்ததாக இருவருமே காட்டிக் கொள்ளவில்லை.
அரும்பாடுபட்டு உரை விளக்கம் எழுதி நற்றமிழ் தொண்டு செய்த ஒளவைக்கும் அடிநாளில் எதிர்பாராத இடத்திலிருந்து எத்தகைய இடர்ப்பாடு வந்தது என்பதைத் தெரிவிக்கவே இவ்விளக்கம் எழுதப்பெற்றது.
இதற்கெல்லாம் இடிந்து போய்விடாமல் முன்னைவிட முனைப்புடன் ஔவையவர்களின் தமிழ்ப் பயணம் தொடர்ந்தது.
புறநானூறு
1894-ஆம் ஆண்டு டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்களால் முதன்முதலாக இந்நூல் பதிப்பிக்கப்பெற்றது;
1 முதல் 267 வரை உள்ள பாட்டுக்கு மட்டும் பழைய உரை ஒன்று உண்டு;
26, 268 ஆகிய இரண்டு செய்யுளும் முற்றிலுமாக இல்லை;
266 முதல் 400 வரையுள்ள பாடல்களுக்கு உ.வே.சா குறிப்புரை உண்டு.
அவர் 21 சுவடிகளை ஆராய்ந்து பதிப்பித்தார்.
அந்தச் சுவடிகளின் நிலை:
“உரை இல்லாத மூலங்கள் எழுத்தும் சொல்லும் மிகுந்தும் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் பலவாறு வேறுபட்டிருந்ததன்றி,
இவற்றுள் சில பாடங்களின் பின் திணை எழுதப்படாமலும், சிலவற்றின் பின் பாடியவர் பெயர் சிதைந்தும்,
சிலவற்றின் பின் பாடப்பட்டவர் பெயர் சிதைந்தும்,
சிலவற்றின் பின் இருவர் பெயருமே சிதைந்தும்,
சில பாடல்கள் இரண்டு எழுதப்பட்டு இரண்டு எண்களை ஏற்றும்,
வேறு வேறு இடத்தில் இருத்தற்குரிய இரண்டு பாடல்கள் ஒருங்கெழுதப்பட்டு ஒரெண்ணை ஏற்றும்,
சில முதற்பாகம் குறைந்தும்,
சில இடைப் பாகம் குறைந்தும்,
சில கடைப் பாகம் குறைந்தும்,
சில முற்றுமின்றியும்,
ஒரு பாடலின் அடிகளுள் ஒன்றும் பலவும் வேறு பாடல்களின் அடிகளோடு கலந்தும்,
ஓரடியே ஒரு பாட்டுள் சிலவிடத்து வரப்பெற்றும்,
பொருளுண்மை காணாத வண்ணம் இன்னும் பல வகைப்பட மாறியும் கையெழுத்துப் பிரதிகள் இருந்தன”.
குடந்தைக் கல்லூரியில் உ.வே.சாவுடன் பணியாற்றிய வரலாற்று பேராசிரியர் துரைசாமி “ஒப்பான பகுதிகளை ஆராய்வதால் சில சொற்களுக்கு உண்மையான பொருளும் திருத்தமான வடிவங்களும் புலப்படலாம்” என்று கூறினார்.
மேலும் அதுபோன்று வெளிவந்த ஒரு பைபிள் நூலையும் காண்பித்தார்.
“அப்போது எனக்குப் புறநானூற்று ஆராய்ச்சியில் புதுமுறை ஒன்று தோற்றியது .
புறநானூற்றிலுள்ள விஷயங்களையும் சொற்களையும் முதலிலேயே அகராதியாகச் செய்துகொண்டு ஆராய்ச்சி செய்தால் உண்மை உருவத்தைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருக்கும் என்று அறிந்தேன், அங்ஙனமே செய்து வைத்துக்கொண்டேன்.”
அதற்குப் பின் புறநானூற்றுக்கு விரிவான ஆராய்ச்சி உரை எழுதப் பெற்றது.
நூலில் கண்டுள்ள நாடுகள், கூற்றங்கள், ஊர்கள், மலைகள், ஆறுகள் முதலியவற்றின் பெயர்களும், பாடினோர் பாடப்பட்டோர் வரலாற்று சுருக்கங்களும் அகராதி முறையில் அமைக்கப்பெற்றன.
பொருளடக்கம், துறை விளக்கம், துறைக் குறிப்பு, அரும்பத அகராதி, மேற்கோள் விளக்கம் ஆகியன சேர்க்கப்பட்டன.
இதுபோன்றதோர் ஆய்வுப் பதிப்புக்குத் தமிழில் அடித்தளம் அமைத்தவர் டாக்டர் உ.வே.சா. அவர்கள்.
அவருடைய முகவுரைகளைப் படித்தாலே ஒருவர் புலவர் ஆகிவிடலாம்’ என்பர்.
ஒளவைக்குக் கிடைத்த புறநானூற்றுச்சுவடி
அரித்துவாரமங்கலம் உயர்நிலைப்பள்ளி அருகிலிருந்த தமிழாசிரியராகப் பள்ளியூரில் பணியாற்றிய கிருட்டிணசாமி சேனைநாட்டார் தலைமையாசிரியர் அவரிடம் சிவ.குப்புசாமியின் நெருங்கிய நண்பர்,
தொல்காப்பியம் இளம்பூரணர் உரை படியும் இருந்தது.
தெய்வச்சிலையார் சுவடி பெயர்த்தெழுதும் பணியிலிருந்த ஒளவை அச்சுவடியை ஒப்புநோக்க விரும்பவே, தலைமையாசிரியர் ஔவையைப் பள்ளியூர் அழைத்துச்சென்று சேனைநாட்டாருக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
ஒளவை அங்கேயே சில நாள் தங்கி உரை ஒப்புநோக்கும் பணியை முடித்தார்.
பின்பு ஒருமுறை ஒளவை பள்ளியூர் சென்றபோது, டாக்டர் உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த புறநானூறு அச்சுப்புத்தகம் வைத்திருப்பதைக் கண்ட சேனைநாட்டார், அரித்துவாரமங்கலம் பெருநிலக்கிழார் திரு.கோபாலசாமி இரகுநாத இராசாளியாரின் பணிப்புரைப்படி அவரிடமிருந்த புறநானூற்று ஓலைச்சுவடியைத் தாம் படியெடுத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.
பெருமகிழ்ச்சியுற்ற ஒளவை அவருடன் தங்கி, தாம் வாங்கி வந்த டாக்டர் உ.வே.சாவின் அச்சுப் புத்தகத்துடன் சேனைநாட்டார் வைத்திருந்த இராசாளியார் படியத்தை ஒப்புநோக்கி, 1927 சூன் 27 அன்று அப்பணியை நிறைவு செய்தார்.
அந்த இராசாளியார் படியுமே ஒளவையின் புறநானூற்று பதிப்புக்கு அடித்தளமாக அமைந்தது;
சிதைந்த பாட்டுகளையும், பாடிய புலவர் பெருமக்களின் பெயர்களையும் கண்டறிய உதவியது.
அரசு வெளியிட்டுள்ள கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவை ஊர்களையும் அவற்றின் அமைவிடங்களையும் வரலாற்று முறையில் உறுதிசெய்ய உதவின.
அவற்றின் அடிப்படையில் பெயர்கள் செப்பஞ்செய்யப்பெற்று உரையும் ஆராய்ச்சி விளக்கமும் வரையப்பெற்றன.
ஔவையவர்களின் உரைவிளக்கத்துடன் புறநானூற்றின் 1 முதல் 200 செய்யுள் அடங்கிய முதற்பகுதியை 1947-ஆம் ஆண்டிலும்,
201 முதல் 400 செய்யுள் கொண்ட இரண்டாம் பகுதியை 1951-ஆம் ஆண்டிலும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் வெளியிட்டனர்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment