அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 97
நானிலம் போற்றும் நாவேந்தர் ஔவை நடராசன்
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
1
11.06.1983 மலேசிய நாளிதழான ‘தமிழோசை’யில் வெளிவந்த செய்திக் குறிப்பு பின்வருமாறு:-
“சமயச் சொற்பொழிவு:-
எதிர்வரும் 14.06.1983-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை மணி 7.00க்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் மண்டபத்தில் தமிழகத்திலிருந்து வருகை புரிந்துள்ள நாடறிந்த நாவரசரும், அறிஞருமாகிய டாக்டர் ஔவை நடராசனின் சொற்பொழிவு நடைபெறும்.
தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகப் பணியாற்றும் ஔவை நடராசன் சமய வாழ்வு என்னும் தலைப்பில் சிறந்த சொற்பொழிவினை ஆற்றுவார்.
இந்நிகழ்ச்சிக்குத் தேவஸ்தானத் தலைவர் திரு. வி.எல். கோடிவேல் தலைமை தாங்குவார்.”
2
16.06.1983 மலேசிய நாளிதழான ‘தமிழோசை’யில் வெளிவந்த செய்திக் குறிப்பு பின்வருமாறு:-
“ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் இன்று ஔவை நடராசன் பேசுகிறார்:
தமிழகத்தின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநரும், சிறந்த பேச்சாளருமான நாவரசர் திரு. ஔவை நடராசன் நிகழ்த்தும் சொற்பொழிவு இன்று 16.06.1983-ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 7.00 மணிக்குக் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தில் நடைபெறும்.
தேவஸ்தானத்தின் பொருளாளரும், இந்து ஆலய ஒருங்கிணைப்புப் பேரவையின் பொருளாளருமான திரு சி. அம்பிகாபதி இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குவார்.”
3
17.06.1983 (வெள்ளிக்கிழமை) மலேசிய நாளிதழான ‘தமிழ் நேசன்’-இல் வெளிவந்த செய்திக் குறிப்பு பின்வருமாறு:-
“தெமருலோவில் ஔவை நடராசன் பேசுவார்:
வரும் வியாழக்கிழமை 23.06.1983 தமிழகப் பேரறிஞர் மொழித்துறை நிபுணர் டாக்டர் ஔவை நடராசன், தெமருலோ ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் மண்டபத்தில் இரவு 7 மணிக்குத் திரு. அ. பாலுசாமி, ஏ.எம்.என்., பி.ஜே.கே., தலைமையில்
‘நமது சமய நெறி’ என்பது பற்றிப் பேருரை நிகழ்த்துவார்.
அன்பர்கள் அனைவரும் திரளாக வந்து அறிஞரின் சிறப்புரையைக் கேட்டுச் சிறப்பிக்க, கோயில் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”
4
18.06.1983 மலேசிய நாளிதழான ‘தமிழ் நேசன்’-இல் வெளிவந்த செய்திக் குறிப்பு பின்வருமாறு:-
“தமிழகத்திலிருந்து வருகைபுரிந்துள்ள அறிஞர் டாக்டர் ஔவை நடராசன் புதன்கிழமை மாலை தலைநகர் பங்குனான் துங் சம்பந்தன் அரங்கில் கூட்டுறவு பற்றிய சொற்பொழிவு நிகழ்த்தினார்.
நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த அமைச்சர் டத்தோ சாமிவேலுக்கு நிலநிதிக் கூட்டுறவு சங்கத் தலைமை நிருவாகி திரு. கே.ஆர். சோமசுந்தரம் மாலை அணிவித்தார்.
(ஔவை நடராசன் மகாமாரியம்மன் ஆலயத்தில் பேசிய இலக்கியப் பேச்சின் தொடர் திங்களன்று வரும்)”
5
18.06.1983 அன்று மலேசிய நாளிதழான ‘தமிழ் நேசன்’ நாளிதழில் வெளியிடப்பட்ட விளம்பரம் வருமாறு:-
“டத்தோ சாமிவேலு தலைமையில் நகர மண்டபத்தில் ஔவை நடராசன் பேசுகிறார்:
எதிர்வரும் 19.06.1983-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மணி 3.30-க்கு கோலாலம்பூர் நகர மண்டபத்தில் பொதுப்பணித் துறை அமைச்சரும், ம.இ.கா. தேசியத் தலைவருமான மாண்புமிகு டத்தோ ச. சாமிவேலு அவர்களின் தலைமையில் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநரும், நாடறிந்த நாவரசரும், அறிஞருமாகிய டாக்டர் ஔவை நடராசன், எம்.ஏ., எம்.லிட், பி.எச்.டி, டி.லிட்., அவர்களின் இலக்கியச் சொற்பொழிவு நடைபெறும்.
‘வழக்குரைத்த வஞ்சி’ எனும் தலைப்பில் ஔவை நடராசன் சொற்பொழிவாற்றுவார்.
அனைவரும் திரளாக வருகை தந்து சொற்பொழிவினைக் கேட்டுப் பயன்பெற வேண்டுமாய் மலேசிய இந்துத் திருக் கோயில்களின் பேரவைத் தலைவர் திரு. ஆர் நடராசா கேட்டுக் கொள்கிறார்.”
6
21.06.1983 மலேசிய நாளிதழான ‘தமிழோசை’யில் வெளிவந்த செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
“இந்திய வாலிபர் சங்கக் கட்டிடத்தில் டாக்டர் ஔவை நடராசன் பேசுகிறார்:
தமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும், டாக்டர் ஔவை நடராசன், கோலாலம்பூர் செந்தூல் இந்திய வாலிபர் சங்கக் கட்டிடத்தில் இன்று மாலை 7.00 மணிக்கு ‘சிலப்பதிகாரம்’ என்ற தலைப்பில் பேசுவார்.
செந்தூல் இந்திய வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு ம.இ.கா. தேசியத் தலைவரும் பொதுப்பணி அமைச்சருமான டத்தோ ச. சாமிவேலு தலைமை தாங்குவார் என்றும், பொதுமக்கள் திரண்டு வந்து இலக்கிய விருந்தை இரசிக்கும்படி சங்கத்தின் தலைவர் திரு. ஆர்.எஸ் மணியம் கேட்டுக் கொள்கிறார்.
7
21.06.1983 மலேசிய நாளிதழான ‘தமிழோசை’யில் வெளிவந்த செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
“ஔவை நடராசனுக்கு நாவேந்தர் பட்டம்:
மலேசிய இந்துத் திருக்கோயில்கள் பேரவையின் ஏற்பாட்டில் இங்குள்ள நகர மண்டபத்தில், டாக்டர் ஔவை நடராசனின் ‘வழக்குரைத்த வஞ்சி’ எனும் தலைப்பில் ஒரு மணி நேர சொற்பொழிவு இடம்பெற்றது.
இந்தச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு, ம.இ.கா. தேசியத் தலைவரும், பொதுப்பணி அமைச்சருமான டத்தோ. ச. சாமிவேலு தலைமையேற்று, பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார்.
மலேசிய இந்துத் திருக்கோயில்கள் பேரவையின் சார்பில் ‘நாவேந்தர்’ எனும் சிறப்புப் பட்டத்தை டத்தோ ச. சாமிவேலு டாக்டர் ஔவை நடராசனுக்கு வழங்கினார்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இச்சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேரவையின் தலைவர் ஆர். நடராஜா, பொருளாளர் சி. அம்பிகாபதி, ம.இ.கா. பொதுச் செயலாளர் எம். மகாலிங்கம், சிலாங்கூர் மாநிலச் செயலாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியம், மகாமாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் வி.எல். கோடிவேலு ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.”
8
22.06.1983 மலேசிய நாளிதழான ‘தமிழ் நேசன்’-இல் வெளிவந்த செய்திக் குறிப்பு பின்வருமாறு:-
“ஔவை நடராசனுக்கு ‘நாவேந்தர்’ விருது:
தமிழக அரசின் மொழிபெயர்ப்பு இயக்குநர் ஔவை நடராசனுக்கு ‘நாவேந்தர்’ என்ற சிறப்புப் பெயரை மலேசிய இந்து சமய ஒருங்கிணைப்புப் பேரவை, அண்மையில் தலைநகரில் அவருக்குச் சூட்டியது.
‘வழக்குரைத்த வஞ்சி’ என்ற தலைப்பில் கொஞ்சும் தமிழில் இலக்கிய உரையை அவர் கோலாலம்பூர் நகர மண்டபத்தில் நிகழ்த்திய பிறகு, ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோ ச. சாமிவேலு அவருக்குப் பொன்னாடை போர்த்தி நாவேந்தர் பெயரும் சூட்டப்பட்டது.
ஔவை நடராசனுக்கு, டத்தோ சாமிவேலு பொன்னாடை போர்த்திச் சிறப்பிப்பதைப் படத்தில் காணலாம்.”
9
22.06.1983 அன்று ’தினமணி’ நாளிதழில் வெளியிடப்பட்ட விளம்பரம் வருமாறு:-
“மலேசிய இந்து சமய ஒருங்கிணைப்புப் பேரவையில், தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ஔவை நடராசன் ‘வழக்குரைத்த வஞ்சி’ என்ற தலைப்பில் கொஞ்சும் தமிழில் இலக்கிய உரையைக் கோலாலம்பூர் நகர மண்டபத்தில் நிகழ்த்திய பிறகு மலேசிய இந்தியக் காங்கிரஸ் தேசியத் தலைவர் டத்தோ ச. சாமுவேலு, ஔவை நடராசனுக்கு ‘நாவேந்தர்’ என்ற சிறப்புப் பெயரையும் சூட்டிப் பொன்னாடை போர்த்திச் சிறப்பிப்பதைப் படத்தில் காணலாம்.”
10
22.06.1983 மலேசிய நாளிதழான ‘தமிழ் நேசன்’-இல் வெளிவந்த செய்திக் குறிப்பு பின்வருமாறு:-
“ஆர்.ஆர்.ஐ. ஆலயத்தில் ஔவை நடராசன்: சுங்கைபூலோ, ரப்பர் ஆய்வுக் கழகத்தில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆலயத் தலைவர் திரு. முனியாண்டி தலைமையில் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியும், சமயச் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளன.
மாலை மணி 7.00-க்கு நடைபெறவிருக்கும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தின் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் டாக்டர் ஔவை நடராசனவர்கள், ‘அம்மன் அருள்’ பற்றி ஒரு விளக்கவுரை நிகழ்த்தவிருக்கிறார்.
மேலும், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் திரு. கோடிவேலும் சிறப்புரையாற்றுவார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில், பொதுமக்கள் திரளாகக் கலந்து பயனடையுமாறு, ஆலயத்தின் செயலாளர், திரு. ஜி. பத்துமலை கேட்டுக் கொள்கிறார்.”
11
20.06.1983- (திங்கட்கிழமை) அன்று வெளிவந்த ‘தமிழ் நேசன்’ நாளிதழில் வெளியிடப்பட்ட படச் செய்தி வருமாறு:-
“தமிழ் நேசன் அலுவலகத்தில் ஔவை நடராசன். தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் டாக்டர் ஔவை நடராசன், நேசன் அலுவலகம் வந்தபோது பிடிக்கப்பட்ட படத்தை இங்குக் காணலாம்.”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (21)
புறநானூற்று பதிப்புமுறை
“ஒவ்வொரு பாட்டுக்கும், பாடினோர் பாடப்பட்டோர் வரலாறு, பாட்டின் கருத்து, உரை, உரைவிளக்கம் ஆகியவை தரப்பெற்றுள்ளன.
பாடவேறுபாடுகளும் அவற்றைப் பற்றிய குறிப்புகளும் அவ்வப்பாட்டின் உரைவிளக்கம் முதலிய பகுதிகளில் குறிக்கப் பெற்றிருக்கின்றன.
சங்கச் சான்றோர்களைப் பற்றிக் கிடைத்த வரலாற்று குறிப்புக்கட்கேற்ற ஆதரவு நல்கும் கல்வெட்டு முதலிய சான்றுகள் விடாமல் ஆங்காங்கே காட்டப்பட்டுள்ளன; பாடப்பட்டோர் பெயர் தெரியாவிடத்துப் பாடினோர் பெயரும், இருவர் பெயரும் புலப்படாத வழி புறத்துறைப் பெயரும், பாட்டுக்குத் தலைப்பாக இப்பகுதியில் தரப்பட்டுள்ளன.” (ஒளவை, முன்னுரை)
அச்சுப் புத்தகத்தின் முற்பகுதியில் திருத்தம் மிகுதியாக இல்லை; ஆனால் பின்னுள்ள 200 செய்யுளில் காணப்பட்ட சிதைவுகளில் பலவும் செப்பம்பெற இச்சுவடி உதவியது.
ஒளவையின் உரை விளக்கத்தில் சில நெறிமுறைகளும் வரையறைகளும் உள்ளன.
ஒவ்வொரு பாட்டிலும் அறிமுகம், செய்யுள், உரை, விளக்கம் எனும் நான்கு பகுதிகளைக் காணலாம்.
1.அறிமுகம்
(1) ஒவ்வொரு செய்யுளையும் அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு முன்னுரை தருதல்;
(2) அந்த முன்னுரையில் பாடியோர் / பாடப்பட்டோர் பெயர், ஊர், நாடு பற்றிய விவரம் கூறுதல்;
(3) மன்னராயின் குடிபுறந்தரும் கொற்றமும், கோலோச்சிய பெற்றியும், பாடுநர்க்கீந்த பரிசிலும், பகைவிலக்கிய வீரமும், வெற்றியும், ஆட்சியின் மாட்சியும் வீழ்ச்சியும் சுருங்கக் கூறல்;
(4) புலவராயின், அவர்தம் புலமையும் நிலைமையும், வளமையும் வறுமையும், பாடிய பிற பாடலும் தேடிவந்த சூழலும் போன்ற செய்திகளைக் குறிப்பிடல்;
(5) பாட்டின் பலவாய கருத்தைப் படிப்பவர் உளங்கொளும் வகையில் சிலவாய சொற்களில் அமைத்தல். இந்த உத்தி படிப்பவர் மனத்திரையில் ஒரு சொல்லோவியத்தை உருவாக்கி ஆர்வத்தைத் தூண்டுகிறது.
2. செய்யுள் பகுதி
ஓசை நயம்கெடாதவாறு சந்தியுடன் பாடல் அமைப்பு.
3. உரைப் பகுதி
புறநானூறு 266-ஆம் செய்யுள் வரை பழையவுரை உண்டு; அது பொழிப்புரை, நீண்ட தொடர்களால் அமைந்தது.
அதைக் கிடந்தவாறே எளிதாகப் படித்துப் புரிந்து கொள்ளவியலாது.
எனவே, ஒளவையவர்கள் அவ்வுரையின் மொழிநடையை மாற்றாமல் கண்ணழித்து, அதாவது, பொருளமைதிக்கேற்ப சொற்களைப் பிரித்துப் பதவுரையாக அமைத்தனர்.
268, 269 ஆம் பாடல்கள் கிடைத்தில. எனவே, எஞ்சிய 269 முதல் 400 வரையுள்ள பாடல்களுக்குப் புதிய உரையை வரைந்தனர்.
அப்புதியவுரையும் பழையவுரையை அடியொற்றி, இரண்டு உரையையும் எழுதியவர் ஒருவரே என எண்ணும்படி, பழைய மொழிநடையிலேயே வரைந்திருப்பது உரைவேந்தர்க்கு உரித்தான அருந்திறற் பெரும் புலமையாகும்.
4.விளக்கம்
ஒருவர் ஒரு நூலுக்குத் தாமே உரை வரைவது எளிது.
ஆனால், பிறிதொருவரின் உரைக்கு அவர் வழிநின்று உரைகாண்பது அரிது.
அந்த அருங்கலை உரைவேந்தருக்கு நன்கு கைவந்த கலையாகும்.
எடுத்துக்காட்டு: “பாட்டு 112:
அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்”
இப்பாட்டில் வரும், ‘வென்றெறிமுரசின் வேந்தர்’ என்றது, ஈண்டு இகழ்ச்சிக் குறிப்பு – பழைய உரை.
ஒளவை விளக்கம்:
வென்றெறி முரசின் வேந்தர் என்றது நல்வழியால் வென்று முழக்குதற்குரிய முரசினை, அல்வழியால் பாரியைக் கொன்று முழக்குகின்றமை தோன்ற நின்றமையின், இகழ்ச்சிக் குறிப்பினையுடையதாயிற்று.”- (மி, ப.248)
பாட்டு 187: ‘நல்லர்ஆண் மக்கள
ஒளவை விளக்கம்:
நற்பண்பும் நற்செயலுமுடையாரை நல்லர் என்றார். ஆடவன் = இளமைச் செவ்வி நிரம்பினானை ஆடவனென்றல் இயல்பு.
வாழ்விற் பெறற்கரிய நலமும் பெறுதற்குரிய செவ்வியும் இளமை. அதனால் “இளமையின் சிறந்த வளமையு மில்லை” என்ப சான்றோர்.
அவ்வளமைக்குச் சிறப்பு நற்பண்பும் நற்செயலுமுடைமையாதலின், அதனை யுடையாரே நாட்டின் நலத்துக்கும் இசைக்கும் காரணராய் அவற்றைத் தாங்கும் தூண்களுமாவர்.
ஆதலாற்றான், அவர் நன்மையினையே விதந்தோதினார். (மி, ப.407-8)
பாட்டு 17 : ‘அறம் முதல் மூன்றும் பயக்கும்’ – பழைய உரை
ஒளவை விளக்கம்:
மூன்றுமாவன, உயிரும் உடம்பும் படைத்தல் அறம், வேந்தர் தோள்வலி முருக்குதல் பொருள்.
நல்லிசை நிறுத்தல் இன்பம், இவ்வகையாக முதல் மூன்றும் கூறப்பட்டன. மூன்றையும் பாட்டுச் செய்தியுடன் பொருத்தி விளக்கம் கூறுதல். (மி, ப.55)
பாட்டு 159: ‘படு முதல்’ பழைய உரை.
ஒளவை விளக்கம்:
படுமுதல் என்றது பிறர் விதைக்க முடியாது தானே காற்றாலும் நீராலும் பிற உயிர்களாலும் வீசித் தரப்பட்டுத் தானே முளைத்தது என்றவாறு.
முகமாறித் தரும் பரிசில் – வருந்தியும் வருத்தியும் நல்கப் பெறும் பரிசில்.
பரிசிலின் இன்றியமையாமையும் , அதனைப் பெறுதற்குத் தாம் கொண்ட கருத்தும் என இரு கூறாகப் பெருஞ்சித்திரனார் குமணனைப் பரிசில் கடாவும்நிலை கருதத்தக்கது.
சங்க நூல்களிலும் பிற நூல்களிலும் காணப்படும் ஒப்புமைப் பகுதிகளும், வரலாற்று செய்திகளும் மேற்கோளாக எடுத்துக் காட்டப்படுகின்றன.
“இப்பிரதி டாக்டர் ஐயர் அவர்களுக்குக் கிடைக்காது போனது பற்றி என் மனதில் ஐயம் ஒன்று ஊசலாடிக் கொண்டிருந்தது.
டாக்டர் ஐயருடைய முயற்சிக்கும் அகப்படாத நிலையில் ஏடுகள் பல தமிழ்நாட்டில் உள்ளன என்று அறிந்தேன்.”
(ஔவை).
பழைய உரை கிடைக்காத 269 முதல் 400 வரையுள்ள 132 செய்யுள்களுக்கு ஔவை புத்துரை வரைந்திருப்பது தனிப்பெரும் சிறப்பாகும்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment