POST: 2022-02-28T09:46:52+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 42

ஒளவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்

வாக்குச்சீட்டின் வலிமை

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இதழியற்பணி தமிழக வரலாற்றில் பொன்னெழத்துக்களால் பொறிக்கத்தக்கது .

ஆட்சித் திகிரியைச் சுழற்றுவார் சோர்வின்றி மாலையில் மக்களரங்கில் மனங்கவர உரையாற்றுவார் தளர்ச்சியின்றி: கட்சிப் பணியையும் கவனிப்பார் கருத்தூன்றி இரவு எத்தனை மணியானாலும் முரசொலிக்குத் தலையங்கம் தீட்டுவார் மறுப்பின்றி இடையே குறளோவியம் படைப்பார் சலிப்பின்றி: இவற்றையெல்லாம் காணும்போது. ‘ ஒருநாளைக்கு இவர்க்கு மட்டும் நாற்பத்தெட்டு மணிநேரம் போலும் ‘ என நினைக்கத் தோன்றும்.

எவ்வளவு விரைந்து எழுதினாலும் விறுவிறுப்புக் குறைவதில்லை.

கொள்கை குழறுவதில்லை.

தமிழுக்கும் அவருக்குமுள்ள உறவு இத்தகையது.

இதற்கு முந்தைய கட்டுரைகள் சில நாம் கண்டோம் .

‘ இளைஞர்களே ! கனவு காணுங்கள் ‘ என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியதற்கு இளைஞர்கள் நேர்பொருள் கொள்ளலாமா ?

உறங்கினால் தானே கனவு வரும் என உறங்கப் போகலாமா ?

கனவு காண்க என்பதற்குச் சிந்தித்துச் செயல்படுக என்பதன்றோ பொருள் எனக் கேட்கிறார் அதிக உயரம் தாண்டுவதற்கு என்ற கடிதக் கட்டுரையில்,புரட்சியே பேசுவதாக ஒரு கட்டுரை எழுதி அதற்கு என் பெயர் புரட்சி’ எனத் தலைப்புத் தந்துள்ளார் கலைஞர்.

பொருந்தாத இடங்களில் எல்லாம் என்னைப் போட்டுப் புதைக்கிறார்களே!’
என்று புரட்சி அங்கலாய்க்கிறது .

இனி நான் ஆயுதமேந்திய புரட்சியாக இருக்க மாட்டேன் .

மண்டேலா என்ற கட்டுரை தென்னாப்பிரிக்க நீக்ரோ இனத்தவரின் தலைவரான நெல்சன் மண்டேலா இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பின் விடுதலை அடைந்தமைக்கு மகிழ்ச்சி தெரிவிப்பதோடு தொடங்குகின்றது.

வெள்ளையரின் நிறவெறியையும் ஆதிக்க உணர்வையும் எதிர்த்து அறப்போர்க் கொடி உயர்த்திச் சிறைவாசத்தை மலர்ந்த முகத்தோடு ஏற்ற மண்டேலாவைப் பற்றிக் கலைஞர் இனிய தமிழில் எடுத்துரைக்கின்றார்.

திருக்குறளுக்கு உரைகண்ட கலைஞர் செய்ந்நன்றி என்ற முந்தைய கட்டுரையில் நன்றி என்ற சொல்லை விளக்குவது அவரது ஆழ்ந்த சிந்தனைத் திறந்ததைக்காட்டுகிறது.

நன்றி கூறுவது வேறு.

நன்றி காட்டுவது வேறு என்று கூறிவாயாற் சொல்லப்படும் நன்றியைவிடக் காட்டப்படும் நன்றியே காலத்துக்கும் நிற்பது என விளக்குகின்றார்.

அறிவுப்புரட்சியாக ,
தொழிற்புரட்சியாக ,வேளாண் புரட்சியாக சமூகப் புரட்சியாக சாதனைப்படைப்பேன் என்று நோன்பு கொள்வதுதான் புரட்சி என்கிறார் ஒரு கட்டுரையில் கலைஞர் .

மக்களாட்சியின் நோக்கம் வெற்றி பெற வேண்டுமாயின், மக்கள் வாக்குச் சீட்டின் வலிமையை உணர்ந்து அதனைப் பயன்படுத்த வேண்டுமென்று கூறுவதே இக்கட்டுரை .

மக்களால் அந்த மக்களுக்காகவே அமைக்கப்படுகிற மக்களாட்சியை அமைத்திடுகிற பொறுப்பை ஏற்றிருக்கிற மக்கள், அந்த ஆட்சியை உருவாக்கும் சக்தி, தங்களிடம்தான் இருக்கிறது என்ற உண்மையை மேடைகளில் யாரோ பேசிடக் கேட்கிறார்கள்.

ஏடுகளில் அவ்வாறு எழுதியிருப்பதைப் படிக்கிறார்கள்.

அப்படிக் கேட்கும்போதோ அல்லது படிக்கும்போதோ ஒரு பெருமிதம் அவர்களுக்கு ஏற்படுவதாகத் தெரியவில்லை .

அதைவிட இன்னும் பெரிய வேதனை என்னவென்றால், அவர்களிடமுள்ள அந்த மகத்தான சக்தியை அவர்கள் வெளிப்படுத்தவோ அல்லது பயன்படுத்தவோகூட அவர்களாக விரும்பி முன்வருவதில்லை என்பதை மிகுந்த வெட்கத்துடன் அந்த மக்கள் கூட்டத்தில் நானும் ஒரு துளி என்ற நிலையில் எண்ணிப் பார்க்கிறேன்.

மக்கள் சக்தியின் மாண்பு இவ்வாறு மங்கிப் போனதற்குக் காரணம் என்ன?

மக்களாட்சி எனும் மண்டபம் கட்டுவதற்காக அவர்கள் தேர்வு செய்து நட்ட தூண்கள் சில ஆட்டம் கண்டு விடுவதும், சில தரையில் பிடிப்பின்றித் தடுமாறுவதும்; சில தூண்கள் தம்மைத் தேர்வு செய்து பொருத்தியவர்களின் தலையிலேயே பலமாக இடிந்து விடுவதும்தான் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.

மன்னராட்சி,
எதேச்சாதிகார ஆட்சி,
பிரபுக்கள் சபையின் ஆட்சி,மக்களாட்சி எனப் பலவகை ஆட்சிகள் கூறப்படினும்; குறைந்த அளவு தவறுடையதும் – அந்த ஆட்சியில் நியமிக்கப்படும் அதிகாரிகள் தவறிழைத்தால் அவர்களைத் தண்டிக்கவோ, நீக்கவோ வழியுண்டு என்பதுமான – மக்களாட்சி எனும் ஜனநாயக ஆட்சி முறையே சிறந்தது என்ற முடிவை ஏற்றுக்கொள்கிறார் அரிஸ்டாட்டில்.

எனவே இருக்கின்ற ஆட்சிமுறைகளில் சிறந்த முறையெனக் கருதப்பட்டு. கடைப்பிடிக்கப்பட்டு வருகிற ஜனநாயக முறை நமது இந்தியத் திருநாட்டில் செயலாக்கம் பெற்றுள்ள முறையாகும்.

இந்த முறையிலும் களையென முளைத்துள்ள சீர்கேடுகளை அகற்றிட வேண்டுமேயானால் அதற்கும் அடிப்படையாக அந்த மக்களின் வலிமை அல்லது சக்திதான் தேவைப்படுகிறது.

ஏனெனில் அவர்களால் அமைக்கப்பட்ட ஆட்சியில் தோன்றும் அவலங்களை அறவே போக்கிட அவர்களால்தான் முடியும்.

பெரும்பான்மையோர் எனப்படும் மக்களின் எண்ணிக்கை பலம், எந்தக் கருத்துக்கு அல்லது எவரைத் தேர்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறதோ அந்தப் பெரும்பான்மை எண்ணிக்கையை ஏற்படுத்தக் கூடியவர்கள் மக்களாகத்தானே இருக்கிறார்கள்?

அவர்களின் எண்ணிக்கையை எடுத்துக்காட்டத்தான் வாக்குச் சாவடிகளில் வாக்குகளைப் பதிவு செய்து அவற்றைக் கணக்கிட வேண்டிய தேர்தல் முறை செயல்படுத்தப்படுகிறது.

அந்த வாக்குச்சாவடிகளில் நுழைவதற்கே. இந்தக் காலத்தில் வாக்காளர்களான மக்களுக்கு வரவேற்புத் தோரணங்கள் அமைத்திட வேண்டியிருக்கிறது.

இதில் கொடுமை என்னவென்றால், இந்த ஜனநாயகப் பணி ஆற்றுவதை வாக்காளப் பெருமக்களுக்கு வாய்த்திடும் ஒரு நாள் ஊதிய வேலையாகச் சிலர் கருதுவதும், அதற்கும் சிலர் இணங்கி; அதனைப் பெற்றுக்கொண்டு அந்தப் பணியினை நிறைவேற்றுவதும்தாம். இதில் மறந்து போவதும் – மறைந்துவிடுவதும் மக்களாட்சித் தத்துவம் அல்லவா?

“நீ இந்த நாட்டுக்காரன் – இந்த நாட்டில் மத்தியிலோ – மாநிலங்களிலோ – மாநகர் மற்றும் நகரங்கள், பேரூர் சிற்றூர்களிலோ அமைகின்ற ஆட்சிமன்றங்கள் உன்னால்தான் அமைகின்றன – நாட்டின் வளர்ச்சிக்கோ அல்லது தளர்ச்சிக்கோ நீ அளித்திடும் வாக்குத்தான் காரணம் -” என்று கூறி எந்த மக்களைக் கொண்டு தேர்தல் நடத்தப்படுகிறதோ, அந்தத் தேர்தலில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் பொறுப்பைத் தட்டிக்கழிப்பவர்களும் அதே மக்கள்தாம் என்கிறபோது ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாகி விடுகிறதல்லவா ?

ஓர் அமைப்பை உருவாக்கிட – அந்த அமைப்புக்கு ஒரு தலைமை – ஓர் உறுப்பினர் – தேர்ந்தெடுக்கப்பட நம் கையில் தரப்படும் வாக்குச் சீட்டுக்குள்ள வலிமையையும், மாண்பினையும், நாமே உணரவில்லையெனில் நம்மையும் உள்ளடக்கிய இந்த மக்கள் கூட்டத்திற்கு எள் முனையளவு மதிப்பாவது உண்டென்று கூற முடியுமா ?

எனவே மக்கள். தங்களை வெறும் வாக்காளர்களாக மட்டும் கருதிக் கொள்ளாமல்: இந்த நாட்டின் சிற்பிகள். சமுதாயத்தின் காவலர்கள். எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஏந்தல்கள் – சுருக்கமாகச் சொன்னால் பாரதி மொழிப்படி “எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்” என்பதை நிலைநாட்ட வேண்டும். நிலைநாட்டியே தீர வேண்டும்.

அப்போதுதான் பழுதுபட்டுக் கொண்டிருக்கும் ஜனநாயகம். ஆழ உழுது விளைந்த கதிர் குலுங்கும் கழனியாக மாறும் !

அப்படி மாறி வருவதை நாம் கண்டு மனம் மகிழ்கிறோம் என்று பல்லாண்டுகளுக்கு முன்னர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வலியுறுத்தி எழுதியிருந்தார் .

இப்போது நல்ல மாற்றம் விளைந்து வருகிறது .

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மகத்தான வெற்றிக் கோலத்தோடு நிறைவேறியுள்ளது .

மாண்புமிகு முதலமைச்சர் தம் காணொலி உரைகளைக் கொண்டே மக்களின் மனங்களை வென்றுள்ளார் .

நல்லாட்சியாக நலம்தரும் ஆட்சியாக நாள்தோறும் மக்கள் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் திட்டங்களை அறிவிப்பதோடு மறுநாளே மக்களை அவை சென்றடைகின்றனவா என்று கூர்ந்து ஆராய்ந்து வருவதை நாடு கண்டு வருகிறது .

அங்கிங்கெனாதபடி முதியோர்களை ,
பள்ளிப்பிள்ளைகளை ,நோயால் நலிந்தவர்களை ,மகளிரை ,சில்லறை வணிகர்களை என்று மகிழ்ச்சியோடு அளவவளவுவதைக் கண்டு துயர் களைகிறார் .

இந்த நிலையில் தலைமைச் செயலகத்துக்கு நாள் தவறாமல் சென்று கோப்புக்களை ஆராய்வதோடு அயலக ,உள்ளூர் விருந்தினர்களையும் கண்டு பேசத் தவறியதில்லை .

நேரம் இல்லை என்று எந்த நிலையிலும் – எவருக்கும் சொல்வதில்லை .

இதற்கும் மேலாக அன்றாடம் தம் சிந்தனைகளை வாழ்வியல் வரலாற்றையும் – உங்களில் ஒருவன் என்று கழக உடன்பிறப்புகளுக்குக் கடிதங்களையும் எழுதி வருகிறார் .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *