செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 43
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
நெஞ்சுக்கு நீதி பிறந்த நிலை !
எழுதுவது ஒரு கலை அதைப்போலவே மேடையில் முழங்குவதும் அருங்கலையாகும் .
பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்குக் கட்டுரைப்போட்டி ,பேச்சுப்போட்டி ,மனனம் செய்த பகுதிகளை தட்டுத் தடங்கலின்றி ஒப்பிவித்தல் என்பதும் ஒரு போட்டியாக இருந்தது .
இந்தக் கலைகளுக்கெல்லாம் அடித்தளமாக ஒரு நூறு தொடர்களுக்கு மேலாக நினைவில் நிறுத்திக்கொண்டு பயிற்சிபெறவேண்டும் என்பது வழக்கமாகும் .
இங்கிலாந்து நாட்டில் கல்வி பயிலச் சென்ற செல்வக் குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள் ஆங்கிலக்கல்வி முறையில் எழுதுவது போலவே மேடையில் சோசியல் கிளப் ( அரசியல் மன்றம் ) என்ற அமைப்பில் வாரந்தவறாமல் பங்குபெற்றுப் பேசவேண்டும் என்ற பழக்கத்தால் தான் அண்ணல் காந்தியடிகள் , நேரு பெருமகனார் , டாக்டர் சுப்பராயன் ,மோகன் குமாரமங்கலம் முதலியோர் எழுத்திலும் – பேச்சிலும் வல்லவர்களாக மாறினார்கள் .
அவ்வாறே சட்டம் பயின்ற மாணவர்கள் சிறந்த பேச்சாளர்களாகத் திகழ்ந்தார்கள் .
ஆனால் சிறந்த பேச்சாளர்களாக மிளிர்ந்தவர் பலர் ,
எழுத்துக்கலையில் முழு வெற்றி பெறவில்லை .
ஆற்காட்டுச் சோதரர்களாகிய ஏ ஆர் முதலியார் , ஏ எல் முதலியார் போன்றோர் உலகப் புகழ் பெற்றார்கள் .
அவர்கள் எழுத்து வடிவத்தில் பெரிய இலக்கியங்களை வழங்கவில்லை .
மேடை மன்னர்களாகவே மிளிர்ந்தார்கள் .
மேதகு குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் எழுத்திலும் – பேச்சிலும் உலக அரங்குகளில் உயரிய புகழ் பெற்றார் .
இந்த வரிசையில் பேரறிஞர் அண்ணா ,எழுத்திலும் பேச்சிலும் இரண்டு நிலைகளிலும் பெரும் புகழ் பெற்றார் .
பேரறிஞர் அண்ணாவைத் தொடர்ந்து இயக்கத் தலைவர்கள் பலர் இரு கலைகளிலும் பங்கு கொண்டார்கள் என்றாலும் முத்தமிழறிஞர் கலைஞர் தம் பேச்சைப்போலவே எழுத்திலும் தலை சிறந்தவராக முதலிடம் பெற்றார் .
சான்றாக ஆறு தொகுதிகளைத் தன் வரலாறாக நெஞ்சுக்கு நீதியை எழுதியிருப்பது கழகத்தின் உயரிய வரலாற்றுப் பெட்டகமாக விளங்குகிறது.
எந்த நிலையில் அவர் எப்படி எழுதினார் என்பதை அவர் சொற்களாலேயே நெஞ்சுக்கு நீதியின் முகப்புரையாக எழுதியிருக்கிறார் .
அது எப்படிப்பட்ட ஊக்கத்தை இன்றைய தமிழக முதல்வருக்கும் வழங்கியிருக்கிறது என்பதை அவர் வெளியிட்ட ” உங்களில் ஒருவன் ” முதற்பகுதி 334 பக்கத்தில் – 27 தலைப்புக்களில் சீர்பெறச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது .
‘ எழுதுவதற்கு முடிகிறதா ? நேரங்கூடக் கிடைக்கிறதா?’ என்று என் அலுவல்களை உணர்ந்தோர் அடிக்கடி கேட்டுக் கொண்டு தானிருக்கிறார்கள்.
ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறேன்.
முப்பதுக்கு மேற்பட்ட திரைப் படங்களுக்கான கதையும் உரையாடலும், ஏன் – பாடல்களுங்கூடத் தீட்டியிருக்கிறேன்.
பத்து நாடகங்களாவது எழுதியிருப்பேன்.
வாரந்தோறும் முரசொலி இதழில் தொடர்கதையென்ன. அரசியல் கட்டுரைகள் என்ன. முப்பதாண்டுக் காலமாக இடைவிடாது எழுத்துப் பணியைத் தொடர்ந்து செய்திருக்கிறேன்.
” எல்லாம் சரி; 1966 வரையில்தானே ? அப்போது உனக்கு நிறைய ஓய்விருந்தது. ஓய்வு கிடைக்காதபோதெல்லாம் மாற்றுக்கட்சியினர் அரசினர் சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்து ஓய்வு அளித்தனர்.
அதனால் எழுத முடிந்தது. இந்த ஏழு ஆண்டுக் காலத்தில் கழகம் ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு நீயும் அமைச்சரான பிறகு, ஏதப்பா எழுதுவதற்கு நேரம் ? ” என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
அமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு எனக்கேற்படுகிற மன உளைச்சல்களை, அயர்வை, சோர்வை அனைத்தையும் போக்குகின்ற அருமருந்தாக அமைந்திருப்பதே எழுத்துப் பணிதான்.
அதுவும் முதல்வர் எனும் சுமை என் தோளில் ஏற்றப்பட்ட பிறகு, இந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் ஓட்டப் பந்தயத்தில் ஒடிவிட்டு வந்தவன் எலுமிச்சம்பழத் தண்ணீரை விரும்புவதுபோல், நானும் களைப்பாற்றிக் கொள்ளக் கவிதை, கட்டுரை, கதை ஏதாவதொன்றை எழுதுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறேன்.
பல்வேறு தலைப்புகளில் முப்பதுக்கு மேற்பட்ட கவியரங்குகளில் ஏற்றுக் கவிதை பாடியிருப்பது இந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் தான் அந்தக் கவிதைகளை எழுதுவதற்கு எனக்குக் கிடைக்கிற இடம் புகைவண்டி தான்.
இரவு நேரத்தில் பத்து மணிக்கு மேல் புகைவண்டியின் பெட்டிக் கதவுகளை மூடிவிட்டுத் தூங்குவது போல ஒரு நடிப்பு ! அதன் பிறகு பார்வையாளர்கள். முறையீடுகள் இல்லை என்று நம்பலாம்.
அதிலும் சில நிலையங்களில் கதவைத் ‘தடார். தடார் என் வெளியே ஆளை இழுத்து, ” பாவம். நல்ல தூக்கம் போலிருக்கிறது. எழுப்பி விட்டுப் பரவாயில்லை . மன்னித்துக் கொள்ளுங்கள் ! ” எனப் புன்னகை புரிகிறவர்களும் – இவைகளுக்கிடையே இருபது முப்பது பக்கங்கள் எழுதி விட்டோம் என்ற மன நிறைவே விடியற்காலை ஐந்து மணிக்குத் தூங்கி, ஆறு மணிக்கு இறங்க வேண்டிய ஊரில் விழிப்பதிலே ஒரு தனி இன்பம் இருக்கத்தான் செய்கிறது.
காலையில் எழுந்ததுமே வீட்டு வாயிற்புறத்தில் ஐம்பது பேர் இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது.
அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்துவிட்டுச் சிற்றுண்டி அருந்துவதற்குள் ஐம்பது நூறாகிறது.
சரியாக அழுக்குத் தேய்த்துக் குளித்தே ஆண்டு ஏழுக்கு மேலாகிறது.
நூறு பேருடைய பிரச்சினைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும்போதே, மேலும் பத்துப் பார்வையாளர் சீட்டுக்களோடு பையன் மேலே வருகிறான்.
அதில் இருபது பேரைப் பார்க்க முடியாமல் போய், கோட்டைக்கு வாருங்கள்; அல்லது மாலையிலே காணலாம் ! ” என்று கூறிவிட்டு, ‘அய்யோ ! இப்படிச் சொல்லிவிட்டுப் புறப்பாடுகிறோமே ! என்ன நினைத்துக் கொள்கிறார்களோ ? ‘ என்ற மன வேதனையோடு காரிலே ஏற வேண்டியிருக்கிறது.
கோட்டையிலே அதிகாரிகளுடன் – அமைச்சர்களுடன் ஆலோசனை. எதிர்பாராமல் எழுகின்ற எத்தனையோ சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டிய இன்றியமையாமை ! மூன்று மணிக்குச் சோறு ! அதற்காக வெளியே கிளம்பும்போது அலுவலகத்தைச் சுற்றிப் பெரியதோர் பார்வையாளர் அணிவகுப்பு.
அவர்களுடைய முறையீடுகளைப் பெற்று அதற்காவன செய்வதாக உறுதியளித்து மீண்டும் மாலை 4 – 30 மணிக்கெல்லாம் வீட்டில் பார்வையாளர்கள் சந்திப்பு இதற்கிடையே சிறப்பு நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள், சுற்றுப் பயணங்கள், சட்டசபை இருந்தால் அந்த வேலைகள் !
இத்தனையிலும் கழக நினைவும், கலை உணர்வும் இழையோடிக்கொண்டிருப்பதால் களைப்பு ஆளை வீழ்த்துவதில்லை.
தாங்கிக் கொள்ள முடிகிறது அரசாங்கப் பொறுப்பு எவ்வளவு மனத்தை அழுத்திக் கொண்டிருந்தாலும் நம் கழக நண்பர்களைப் பார்க்கின்ற போது, சுமை குறைகிறது. சுவை ஏறுகிறது.
அவர்கள் ஏதாவது சூடான செய்திகளைக் கொண்டு வந்திருந்தால் கூடக் கழகத்தைப் பற்றி – சமுதாயத்தின் அடித்தளத்திலே கிடக்கிற மக்களுக்கும் மனம் குளிரத்தக்க வண்ணம் ஒவ்வொரு நாளும் அரசின் சார்பில் ஏதாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும்.
அப்படிச் செயற்படுகிற நாளெல்லாம் உள்ளத்தில் இன்பம் துள்ளும் நாளாகவே இருந்திருக்கின்றது.
சில மாதங்களுக்கு முன் ‘ ஸ்டேட்ஸ் மேன் நிருபரிடம் பேசிய போது.
” வெளிநாடுகளைப் போல, அற்புத விஞ்ஞான முன்னேற்றங்கள் தமிழ் நாட்டுக்கு வர வேண்டுமென்று ஆசையிருந்தாலும் அதற்கு நீண்ட காலம் பிடிப்பதைப் பற்றிக்கூட எனக்குக் கவலை இல்லை.
எங்கள் நோக்கமெல்லாம் இங்குள்ள சாதாரண மக்களை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் வாழச் செய்ய வேண்டுமென்பதுதான் ! ” என்று குறிப்பிட்டேன்.
நிருபர் சென்ற பிறகு நீண்ட நேரம் யோசித்தேன்.
” என்ன செய்திருக்கிறோம். ஏழை எளியவர்களுக்கு ? ”
எல்லாவற்றையும் செய்து முடித்து விடவில்லையென்றாலும், ஏதோ நம்மாலானதைச் செய்திருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து வருகிறோம். அவர்களும் நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களைக் காணும்போதும், அவர்களுடைய உள்ளத்தை உணரும்போதும், உற்சாகம் பீறிடுகிறது. உளைச்சல் நீங்குகிறது. எண்ணங்கள் பூரிக்கின்றன. அவை எழுத்தாரமாவதற்குத்தான் நேரத்தையும் இடத்தையும் தேடியலைய வேண்டும். எப்படியோ முடிகிறது. அந்தப் பணியையும் நிறைவேற்றி வருகிறேன்.
பழைய தமிழகம், புதிய தமிழகம், மக்கள் நிலை, அறிவு வளர்ச்சி, இலக்கிய இன்பம், அரசியல் அலைகள் – அனைத்தையும் பற்றிய விளக்கங்களோடு ஒரு தொடர் கட்டுரை எழுத வேண்டும் என்பது என் நெடு நாளைய அவா.
வெறும் கட்டுரையாக மட்டுமிருந்தால் சுவை குன்றுமோ என்ற நிலையில் தொடர்கதைபோல் அந்தக் கட்டுரையை எழுத எண்ணுகிறேன்.
கதையென்றால் அதற்கு ஒரு இழையோடும் கதா பாத்திரம் வேண்டுமே ! அதற்கு என்னையே நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
” ஏன் இப்படி வளைத்து வளைத்துச் சொல்கிறாய் ? வாழ்க்கை வரலாறு எழுதப் போவதாகச் சுருக்கமாகச் சொல்லி விடுவதுதானே ” என்று கூடத் தோன்றும் உங்களுக்கு,
நான் முன்பு சில இதழ்களில் என் வாழ்க்கைக் குறிப்புகளை எழுதியிருக்கிறேன்.
அதுவல்ல இது, என்னுடைய இந்த ஐம்பதாவது வயது முடிவுக்குள் ஒரு பெரிய சகாப்தம் ஆரம்பமாகி அதனைத் தொடங்கிய சரித்திர நாயகன் மறைந்து போயிருக்கிறான்.
ஆனால் அந்தச் சரித்திரம் மறையாது. என்னை நூலாக வைத்துக் கொண்டு அந்தச் சரித்திர முத்துக்களைக் கோத்திடப் போகிறேன்.
என்னை வெறும் நாராக வைத்துக் கொண்டு அந்த வரலாற்று வேந்தனின் புகழ் மலர்களைத் தொடுத்து மாலையாக்கப் போகிறேன்.
வாழ்க்கை வரலாறு என்ற பெயரால் வரலாற்றை அளிக்கலாம்.
அதிலே அங்கொன்றும் இங்கொன்றும் என்னைப் பற்றிய குறிப்புகள் வராமல், தொடர்ந்து வந்திடும் என்பதால் ‘ சுய புராணம் என்று எண்ணாதீர்கள்,
எம் வரலாற்றுச் சம்பவங்கள், எண்ணத்தைக் கிளறும் அறிவியக்கச் சாதனைகள், உள்ளம் பெருக்கெடுக்கும் இலக்கியக் காட்சிகள், அதிர்ச்சி தரும் அரசியல் மாற்றங்கள் இவைகளை விளக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறேன்.
அவனவனும் தன் நெஞ்சுக்குத் தனக்குத் தானே நீதி வழங்கிக் கொள்ள வேண்டும்.
அதைப் போலவே. ஒரு சமுதாயம், ஒரு கட்சி, ஒரு கூட்டம் தாங்கள் செய்யும் நல்லவைகளுக்கோ – தீயவைகளுக்கோ தங்கள் நெஞ்சுக்கு நீதி வழங்கிக் கொள்ளப் பழக்கப் பட்டாக வேண்டும் .
ஒருவனைக் குறை கூறி விடுவது எளிது. அந்த நாக்கிற்கு இரண்டு கைதட்டல் கிடைக்கும். ஆனால் குறை கூறியவனின் நெஞ்சுக்கு நீதி கிடைக்க வேண்டாமா ?
நான் நேர்மையாளன் என்று எவனும் மார்தட்டிப் பேசி விடுவது எளிது.
நேர்மையைப் பற்றிய நீதியை அவன் நெஞ்சுக்கு அவனே வழங்கியாக வேண்டுமல்லவா ?
நீதி வழங்குவது – தீர்ப்பளிப்பது ! நீதியை ஏற்பது – தீர்ப்பை ஏற்பது ! நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மேல்முறையீடு உண்டு.! நெஞ்சுக்கு வழங்கப்பட்ட நீதிக்கு ‘இணை ஏது ?
தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Add a Comment