மார்ச் எட்டு – மகளிர் மாட்சி
ஆடவர் , மகளிர் என்று இருவேறு இனத்தவர் என்று வேறு பிரித்துக் கருதிய காலம் இப்போதில்லை .
எனினும் மகளிர் அறிவாற்றலில் தலைமையான இடத்தை ஆடவர்களை விஞ்சிப் பெற்றுத் வருவது உலகுக்குப் பெருமை தருவதாகும் .
அண்மையில் நடந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சிகளில் தலைவராக மகளிர் 60 % முடி சூடியிருக்கிறார்கள் .
மாநகரத்தந்தை என்ற வழக்காறு இருந்தது .
இனிமேல் மாநகரச் சீராளர் என்று இருபாலருக்கும் பொருந்துமாறு அழைக்கலாம் என ஒரு கருத்து உலவுகிறது .
ஒருவன் , ஒருத்தி என்ற இரு சொற்களையும் பிரித்துக்காட்டாமல் ஒருவர் என்ற சொல் தமிழில் அமைந்தது பெருமிதமாக உள்ளது .
இதனைக் கற்பனைக்களஞ்சியம் சிவப்பிரகாசர் தன் பாடலில் குறித்துக் காட்டியிருக்கிறார் .
கல்வி வளம் நூற்றுக்கு நூறு ஓங்கி வளரும் போது மகளிர் பால் காட்டும் வல்லுறவு பற்றிய இழிசெய்திகள் நாளிதழ்களில் வேறு நாடுகளில் இந்த அளவுக்கு வருவதில்லை என்று ஊடக நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள் .
இயல்பாகவே மகளிர்க்கு கூர்த்த மதியும் – சீர்த்த சிந்தனையும் அமைந்திருப்பதை நரம்பியல் மருத்துவர்கள்
கண்டுள்ளனர் .
வருங்காலத்தில் மகளிர் , ஆடவர் வேறுபாடுகளைக் கூந்தலில் , நடையுடைகளில் நாம் காணக்கூடாது என்று தந்தை பெரியார் எழுபதாண்டுகளுக்கு முன்னரே வலியுறுத்தியதை தன்மான உலகம்
தலைமேல் வைத்துப் போற்றுகிறது .
மகளிர் மாட்சி நாளும் உயர்ந்து ஓங்குமாக !
ஒளவை நடராசன்
8.3.2022

Add a Comment