வெல்லாத வழக்கு !
நாகர்கோயில் வழக்கறிஞர் திரு பாலசுப்பிரமணியன் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக என்னோடு நெருங்கிப் பழகியவர் .
உள்ளத்தில் கள்ளமில்லாமல் ஊராருக்கு நலம் செய்ய வேண்டும் என்ற உணர்வு ததும்ப வாழ்ந்த அவர் திடுமென மறைந்தார் என்று அவர் மகன் கூறக்கேட்டுக் கண் கலங்கினேன் .
திங்களுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு முறையீடுகளோடு என்னை வந்து காண்பதில் மகிழ்ச்சியடைந்தார் .
என் பிள்ளைகளை நாகர்கோயிலுக்கு அழைத்துப் போய் தென்குமரியைக் காட்டியதோடு ஆர்வம் ததும்ப பெரு விருந்தளித்தார் என்பதை என்றும் சொல்லி நெகிழ்வார்கள் .
நீங்கள் சொல்லும் முறையீடுகள் எல்லாம் நிறைவேறுமா என்று நான் கேட்பேன் .
திருப்பதிக்குப் போய் வருவது போலச் சென்னைக்கு வந்து உங்களைக் காண்கிறேன் .
நிறைவேறவில்லை என்றால் திருப்பதி செல்வதையா நிறுத்திவிடுவார்களா என்று பரிவு ததும்பப் பேசிய பாலுவை இப்போது நினைத்தாலும் மனத்திற்குப் பெரிய துயரம் தருகிறது .
இன்னும் இருபதாண்டுகளாவது வாழ்ந்து பலருக்கு நலம் செய்யும் பாலன் மறைவு ஒரு முதுமையாளருக்கு இயல்பான நேரும் முடிவில்லை .
எவருக்கும் சொல்லாமல் இதயக்கதவு திடுமென மூடியது ?
வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் குடும்பத்தாருக்கு என் மனங்கனிந்த ஆறுதல் .
கலங்கிய மனத்தோடு
ஒளவை நடராசன்

Add a Comment