வசுமதித் தாயார் வைகுந்தம் சேர்ந்தார் !
மயிலையில் புகழ்வாய்ந்த டி எஸ் ரங்கராஜன் குடும்பத்தில் தலைவியராக வாழ்ந்து தன் முதுமையில் வசுமதித் தாயார் மறைந்த செய்தி பெருந்துயரமாய் முடிந்தது .
வழக்கறிஞர் டி எஸ் ஆர் இந்து வணிகப்பகுதி ஆசிரியர் பி ஏ சேஷனுக்கு நெருங்கிய நண்பராக இருந்தார் .
ஆங்கில இந்து நாளிதழில் வழக்கியல் ஆலோசகராகத் திகழ்ந்தார் .
டி எஸ் ஆர் வாய் திறந்தால் பிரபந்தங்கள் சொல்வார் .பரிவு பாராட்டுவார் .
டி எஸ் ஆர் இல்லத்தை எங்கள் பாட்டி வீடு என்று மிகுந்த பரிவு கொண்டு திருமதி சாந்தி கண்ணன் ஆயிரம் முறை சொல்வார் .
பேரன் – பேத்திமார் கலக்கத்தை அளவிட்டுரைக்க முடியாது .
மூத்த பேத்தியும் – எங்கள் மனையின் மூத்த மருமகளாய் மிளிரும் திருமதி சாந்தி கண்ணன் சென்னை வந்த போதெல்லாம் பாட்டி வீட்டில் தான் இருப்பார் .
திருமதி வசுமதி 91 ஆம் அகவையில் மறைந்த நிலையில் பேத்தி நிகிதா ஆஸ்திரேலேயாவில் இருக்கிறார் .
அவர் மனத் தவிப்பை என்னால் உனர முடிகிறது .
பெற்ற தாயும் போனார் – சீராட்டிய பாட்டியும் போனாரே அப்பா ! என்று அவர் அரற்றுவதைக் கேட்க முடிகிறது .
டி எஸ் ஆர் குடும்பத்தின் மூன்று மக்கட் செல்வங்களும் ஒப்பற்றவர்கள் .
திருமதி விஜயலட்சுமி ஸ்ரீதர், திரு சுந்தர் – திருமதி பிரபா மூவரும் தாயின் மீது அன்பைக் கொட்டியவர்கள் ..
ஒரு முறை சாந்தி என்னை எப்படி பாட்டி என்ற சொல் வழக்கத்தில் வந்தது என்று கேட்டார் .
இராமாபிரான் சீதாபிராட்டி என்று கூறிவந்த வழக்கத்தில் பிராட்டி பாட்டி என்றாயிற்று .
பிரான் என்ற சொல் தாதன் என்று நின்று தாத்தாவாயிற்று என்று பிரபந்தம் பதிப்பித்த பேராசிரியர் சுப்பு ரெட்டியார் என்னிடம் ஒருமுறை கூறினார் என்று நான் விடை சொன்னேன் .
என் பதிலில் எவருக்கும் முழுநிறைவு ஏற்படவில்லை .
என்னைவிட எங்கள் வாழ்வரசியார் தாராவிடத்தில் மிகவும் அன்போடு பேசுவார்கள் .
சாந்தி பாட்டி வீடு செல்லும் போதெல்லாம் பலமுறை தாராவும் உடன்சென்று பேசி வருவார்கள் .
பேசமுடியாத நிலை
இப்போது இருவருக்கும் வாய்த்துவிட்டது .
திரு சுந்தர் அவர்கட்கும் குடும்பத்தாருக்கும் எப்படி ஆறுதல் கூறுவது !
நலிந்த நிலையில் நாள்தோறும்
நாரணனனையே எண்ணிப் படுக்கையில் இருந்த தாயைப் போற்றி வந்த அனைவருக்கும் வசுமதித் தாயாரின் ஆசி என்றும் சூழ்ந்திருக்கும் !
ஒளவை நடராசன்

Add a Comment