அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 101
அணி செய்யும் அரசாணைகள்!
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
அண்ணா நகரிலுள்ள வள்ளியம்மாள் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் போது (1975), எந்தையார் அருட்செல்வர் பொள்ளாச்சி ந. மகாலிங்கம் அவர்களின் இராமலிங்கர் பணிமன்றத்தின் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
ஆண்டுதோறும் அக்டோபர் திங்களன்று அண்ணல் காந்தியடிகளையும் அருட்பிரகாச வள்ளலாரையும் போற்றும் விழாவை அருட்செல்வர் நடத்துவதை அனைவரும் அறிவோம்.
அத்தகைய விழாவொன்றில், அப்பாவின் ஆற்றொழுக்கான உரையைக் கேட்ட பிறகு அந்நாளைய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அப்பாவை அருகில் அழைத்து, ‘என்னை வந்து தலைமைச் செயலகத்தில் பார்’ என்று சொன்னார்.
அங்குச் சென்ற பொழுது தான் அப்பாவைத் தலைமைச் செயலகத்திலுள்ள செய்தித் துறையில் துணை இயக்குநராக நியமிக்கப் போகிறேன் என்று தெரிவித்தார்.
எதிர்பாராமல் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை எந்தையார் அடிக்கடி நெகிழ்ந்து சொல்வார்.
பிறகு, அரசின் சக்கரம் சுழலும் போக்கினைப் பின்வரும் ஆணைகள் வாயிலாக அறியலாம்.
தமிழக அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் திரு. பி. சபாநாயகம் அவர்கள் அரசாணை (நிலை) எண்.191/ பொது (செ.ம.தொ.(நிர்-1)) துறை/ நாள்:21.01.1975 வாயிலாகப் பொதுச் (செய்தி, மக்கள் தொடர்பு) துறையின் துணை இயக்குநராகத் தற்காலிகப் பணியமர்த்தம் செய்து ஆணையிட்டார்.
22.01.1975-ஆம் நாளிட்ட இந்து ஆங்கில நாளிதழில் ‘அதிகாரிகள் நியமனம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்
‘Thiru Avvai D. Natarajan is temporarily appointed as Deputy Director, Public (I&PR) Department, in the place of Mr. C.N. Krishnabharathi’ என்ற விவரம் வெளியிடப்பட்டது.
தமிழகத்தின் மேனாள் தலைமைச் செயலாளர் திரு. பி. சபாநாயகம் அவர்கள் அரசாணை (நிலை) எண். 2041 / பொது (மொழிபெயர்ப்பு) துறை / நாள்: 24.06.1975-ன் வாயிலாக, 30.06.1975-அன்று பணி ஓய்வு பெறும் மொழிபெயர்ப்பு இயக்குநர் திரு. கு. இராசவேலு அவர்களைத் தொடர்ந்து தற்காலிகமாக மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக நியமித்து ஆணையிட்டார்.
இவ்விவரம், 24.06.1975-ஆம் நாளிட்ட ‘மெயில்’ ஆங்கில நாளிதழில், ‘அரசு அறிவிக்கைகள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,
‘Mr. Avvai D. Natarajan, Deputy Director of Information & Public Relations, has been posted to act as the Director of Translation’ என்றும்,
25.06.1975 (புதன்கிழமை) நாளிட்ட இந்து ஆங்கில நாளிதழில் பக்கம் 11-இல்
‘Mr. Avvai Natarajan, Deputy Director, Information and Public Relations Department appointed as Director, Translation Department vice Mr. K. Rajavelu, retiring from service’ என்றும்,
25.06.1975-ஆம் நாளிட்ட தினத்தந்தி (பக்கம் 7-இல்) நாளிதழில், ‘அதிகாரிகள் நியமனம்’ என்ற தலைப்பில்
“தமிழக அரசு செய்தி, மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர் ஔவை நடராசன் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்றும்,
25.06.1975 (புதன்கிழமை) நாளிட்ட மாலைமுரசு இதழில்
“தமிழக அரசு செய்தி, மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர் ஔவை நடராசன் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார்” என்றும்,
26.06.1975 ஆம் நாளிட்ட நவமணி இதழில்
ஔவை நடராசனுக்குப் பதவி உயர்வு” என்ற தலைப்பில் “செய்தி மக்கள் தொடர்புத் துறையின் துணை இயக்குநராக இருந்த ஔவை நடராசன் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்” என்றும் வெளியிடப்பட்டது.
அதே பட்டியலில், நினைவில் வாழும் கவிஞர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம், பொது (மொழிபெயர்ப்பு) துறையின் உதவி இயக்குநராக நியமிக்கப் பட்டார்.
அண்ணாநகரில் அப்பாவின் இனிய நண்பர் திரு. என். அமிர்தலிங்கம் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
தமிழக அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் திரு. வி. கார்த்திகேயன் அவர்கள் வெளியிட்ட அரசாணை (நிலை) எண்.1466 / பொது (மொழிபெயர்ப்பு) துறை / 11.05.1976-வாயிலாக, பொது விதி எண்.23(அ)-ன்படி மொழிபெயர்ப்பு இயக்குநர் பதவியில் பணிவரன் செய்யப்பட்டது.
எட்டுத் திங்களுக்குப் பிறகு, மேனாள் அரசு தலைமைச் செயலாளர் திரு. வி. கார்த்திகேயன் அவர்கள் வெளியிட்ட அரசாணை (நிலை) எண்.43 / பொது (மொழிபெயர்ப்பு) துறை / 05.01.1977-வாயிலாக, பொது விதி எண்.27(ஆ)-ன்படி மொழிபெயர்ப்பு இயக்குநர் பதவியில் மனநிறைவளிக்கும் வகையில் தகுதிகாண்பருவம் நிறைவு செய்ததாக அறிவிக்கப்பட்டார்.
ஐந்து திங்களுக்குப் பிறகு, மேனாள் அரசு தலைமைச் செயலாளர் திரு. சி.வி.ஆர். பனிக்கர் அவர்கள் வெளியிட்ட அரசாணை (நிலை) எண்.1345 / பொது (மொழிபெயர்ப்பு) துறை / 04.06.1977-வாயிலாக, 01.07.1975 முதல் மொழிபெயர்ப்பு இயக்குநர் பதவியில் முழுநேர உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்.
இவ்விவரம் தமிழ்நாடு அரசிதழின் திருவள்ளுவராண்டு, 2008, ஆனி மாதம், 8-ஆம் தேதி, பிங்கல ஆண்டு, 22.06.1977-ஆம் நாளிட்ட, 22-ஆம் எண். இதழின் 120-ஆம் பக்கத்தில் அறிவிக்கையிடப்பட்டது.
இச்செய்தி பரல்கள், அரசாணைகள் அனைத்தையும் என் அம்மா, மிக நேர்த்தியாகக் கோத்து ஆவணப்படுத்தியதை நினைந்து நெகிழ்கிறேன்.
இயக்குநர், துணை இயக்குநர், இரண்டு உதவி இயக்குநர்கள், மொழிபெயர்ப்பு அலுவலர்கள் ஐவர், அவர்களின் கீழ் மொழிபெயர்ப்பாளர்கள் என்று ஒவ்வொரு பிரிவும் தனித்தனியாக இருக்கும்.
இதுதான், மொழிபெயர்ப்புத் துறையில் இருக்கும் வழக்கம்.
அந்த அடிப்படையில் தமிழ் நாட்டரசின் தலைமைச் செயலகத்தில் அங்கமாகவுள்ள அரசின் அனைத்துத் துறைகளிலிருந்தும் கோப்புகள்
மொழிபெயர்ப்பிற்காகவும் தமிழாக்கத்தைத் தமிழ் நடையை ஆய்வு செய்து வழங்குவதற்காகவும் வரும்.
அவை அனைத்தையும் பொறுமையாகப் படித்து விளங்கிக்கொண்டு நல்ல தமிழாக்கம் நல்ல தமிழ் நடையில் வழங்குவது மொழிபெயர்ப்புத் துறையின் கடமை.
அதேபோல அறிக்கைகள் மொழிபெயர்க்கப்படும்.
மொழிபெயர்ப்பு அலுவலர் தாண்டி, உதவி இயக்குநர், அதன்பின் துணை இயக்குநர் பார்த்து அறிக்கையைச் சரிபார்ப்பார்கள்.
சில தருணங்களில், இயக்குநர் நெட்டோட்டமாகப் பார்த்த பின்பு அச்சுக்கு அனுப்புவது வழக்கமாகும்.
சுருங்கச் சொன்னால் தமிழ் ஆட்சி மொழியாக அரியணை ஏறி அமர்ந்து கோலோச்சுவதாக இருப்பினும் மொழியாக்கம் என்னும் செல்வச் செவிலித்தாயின் இருகரம் பற்றியே தலைமைச் செயலகத் துறைகளில் தமிழ் தளர் நடைபயின்று வந்தது.
சட்டமன்றப் பேரவையில் இடம் பெறுகின்ற வினாக்கள், துணை வினாக்களுக்கான குறிப்புகள், சட்டமன்றத்தில் கொண்டு வரப்படும் பல்வேறு தீர்மானங்களுக்கான குறிப்புகள், பொதுக்கணக்குக் குழுவிற்கான குறிப்புகள் ஆகியவை யாவும் இயக்குநரின் நேரடிப்பார்வைக்கும் ஒப்புதலுக்கும் வைக்கப்பெறும்.
மேலும் பொதுத்துறை தலைமைச் செயலாளரின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள துறை என்பதாலும், அது முதலமைச்சரின் பொறுப்பில் உள்ள துறை என்பதாலும், மிகக் கமுக்கக் கோப்புகளும் சட்டம் -ஒழுங்குப் பிரச்சனை சார்ந்த குறிப்புக் கோப்புகளும் நீதி விசாரணை அறிக்கைகள் முதலானவையும் மொழிபெயர்ப்பு இயக்குநரின் முதன்மை நாட்டத்திற்கு உரியன.
இக்காலக் கட்டத்தில் முதற்கண் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களிடமும் (1975-76),
பின்னர் (1977-84) புரட்சித் தலைவர் அவர்களிடமும்
(இடையில் 1976-77 ஓராண்டுகாலம் ஆளுநர் ஆட்சி நடைபெற்ற போதும்) மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகச் செவ்வனே அப்பா பணியாற்றினார்.
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (25)
(2) புலவர் பெயர் வேறுபாடு – பாட்டு 1, பெயர் வேறு வேறு
மாதி மாதிரத்தனார்
உ.வே.சா.: “மாதி மாதிரத்தனார் 187ஆம் செய்யுள் இயற்றிய ஆசிரியர் பெயராகச் சில பிரதிகளில் காணப்படுகிறது.”
ஒளவை: “187ஆம் பாடல் ஒளவையார் எனக் கொள்ளல்.”
முரஞ்சியூர் முடி நாகராயர் (2)
ஒளவை: முரஞ்சியூர் என்பது இப்பாட்டின் ஆசிரியர்.
முடிநாகனாரது ஊர்; இவர் தலைச்சங்கப்புலவருள் ஒருவர் என இறையனார் களவியல் உரை கூறுகிறது.
நாகனார் பிற்காலத்து ஏடெழுதினோரால் நாகராயர் எனப் பிறழ எழுதப்பட்டது.
(3) புலவர் பெயரை உறுதி செய்தல்
ஆலங்குடி வங்கனார் (319).
உ.வே.சா: “ஆலங்குடி என்னும் பெயருள்ள ஊர்கள் பல இருத்தலின் இவர் ஊர் என்னவென்று நிச்சயிக்ககூடவில்லை.
ஒளவை: “ஆலங்குடி என்னும் ஊர்கள் பல தமிழ்நாட்டில் உள்ளன.
வங்கனார், சோழருடைய உறையூரையும் அவ்வூரிலுள்ள அறங்கூறவையம் மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அரங்கிடை அறியாது (நற்றிணை, 400) எனச் சிறப்பித்துக் கூறும்.
இவர் சோழ நாட்டவர் எனத் துணிந்து கூறலாம்.”
(4) புலவர் பெயரை உய்த்துணரல்
பேய்மகள் இளவெயினி (11)
உ.வே.சா: “பேய்மகள் – தேவராட்டி: பூசாரிச்சி. பேயினது ஆவேசமுற்றவள்.
இந்த வகையார் இக்காலத்தும் அங்கங்கே உள்ளார்.
பேயே ஒரு மகள் வடிவம் கொண்டு பாடினாளென்று இந்நூலின் பழைய உரையாசிரியர் கருதியதாகத் தெரிகிறது.
எயினி – எயினக் குலத்துப் பிறந்த மங்கை.”
ஔவை: “பேய்மகள் இளவெயினிகட்புலனாகாத வடிவுடையபேய் கட்புலனாமாறு இதனைப் பாடினாளென்று இவ்வுரைகாரர் காலத்தே சிலர் கூறியிருக்கின்றனர்.
போர்க்களத்துப் பிணந் தின்னும் பேய் மகளிரை வியந்து விரியப் பாடிய சிறப்பால் இளவெயினி யார்க்குப் பேய்மகளென்பது சிறப்பு பெயராயமைந்ததாகல் வேண்டும்.
இளவெயினி என்பது இவரது இயற்பெயர்.
குறமகள் இளவெயினி என்பார் ஒருவர் சான்றோர் காணப்படுதலின், அவரின் வேறுபடுத்த இவரை இவ்வாறு சிறப்பித்தனர்.
குறமகள் என்பதைக் குறிஞ்சி நிலத்து நன்மகள் என்று கொள்ளாது குறக்குடியிற் பிறந்த மகளென்று பிழைபடக் கொண்டது போல இவரைப் பேய்மகளென்று கோடல் அறமாகாது.”
(5) புலவர் பெயரை ஒப்புதல்
கணியன் பூங்குன்றனார் (192)
உ.வே.சா: “கணியன் சோதிடம் வல்லோன் பூங்குன்றம் என்பது நாடொன்றில் தலைநகர் நாலடி 128 212 ராமநாதபுரம் ஜில்லாவில் மகிபாலன்பட்டி அருகிலுள்ள சாசனங்களில் அவ்வூர் போன்ற நாட்டுப் பூங்குன்றம் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
அதனால் அது அவருக்குரிய ஊர் என்றும் கொள்ளலாகும்.
இவருக்கு இப்பெயர் தொழிலாலும் இடத்தாலும் வந்தது போதும்.
இப்பெயர் கனி பூங்குன்றனார் எனவும் வழங்கும்.”
ஒளவை: “கணியன் பூங்குன்றனார் இராமநாதபுர மாநாட்டிலுள்ள மகிபாலன் பட்டியென இப்போது வழங்கும் ஊரினர்.
மகாமகோபாத்தியாய பண்டிதமணி கதிரேசன் செட்டியார் ஆகிய தமிழ்ப் பேராசிரியரும் இவ்வூரினர் ஆவார்;
இவ்வூர் பண்டே போல் இன்றும் தமிழ்ப்புலமை சான்றோரைப் பெற்றிருப்பது இதன் சிறப்பை வற்புறுத்துகிறது.”
பக்குடுக்கை நன்களியார் (194)
உ.வே.சா: “நன்கணியார் என்பது இவரது இயற்பெயர்.
கணி – சோதிடம் வல்லவன். உலகத்தை வெறுத்த ஞானி.
ஆதலால் இவர் பையையே உடையாகக் கொண்டு இருந்தனர் என்றும் அதி பற்றியே பக்குடுக்கை என்னும் அடை இவர் பெயருக்கு முன் கொடுக்கப்பட்டது. பக்கு-பை (ஐங்.271)”
ஒளவை: “நன்கணியார் பெயரை அடுத்துச் சிறப்பிக்கும் பக்குடுக்கை என்பது இவரது ஊர் பெயராகலாம் என்றும் பக்கு என்பது பை என்னும் பொருள்படுதலின் இவர் பையையே உடையாக வுடுப்பவர் என்றும் அறிஞர் கருதுகின்றனர்.
ஒருவருக்கு உடுப்பவை இரண்டாக வேண்டியிருப்பவும், ஒன்றையே இரண்டாகப் பகுத்துடுக்கும் காரணத்தால் பக்குடுக்கை நன்கணியார் எனப்பட்டா ரென்றக்கும், ஒருவரது வறுமை நிலையைப் பக்குடுக்கை எனச் சிறப்பித்துரைத்த நலம் கண்டு, சான்றோர் இவரை இவ்வாறு சிறப்பித்துப் பாராட்டினர், என்ற்ற்கும் இடணுண்டு, நன்கணி யென்பது இவர தியற்பெயர்.”
(6) புலவர் பெயரைத் தெரிவு செய்தல்
கோதமனார் (366)
உ.வே.சா: “கோதமனார் கௌதமனார் எனவும் பாலைக் கௌதமனார் எனவும் வழங்கும்.”
ஒளவை: “இப்பாட்டை தருமபுத்திரன் பொருட்டுப் பாடியதாக அச்சுப்படியில் காணப்படுகிறது.
இப்பாட்டின்கண் அறமகனே என வந்திருப்பது கொண்டு அதனைப் பிற்காலத்தார் யாரோ தருமபுத்திரன் என மொழிபெயர்த்துக் கொண்டனர்.
பாண்டவர் தலைவனான தருமபுத்திரன் பாட்டுடைத்தலைவன் எனவும் மூன்றாம் பத்தைப் பாடிய கோதமனார் இவர் எனவும் கருதுபவர் உண்டு.
பாலைபாடிய கோதமனார் ஆயின், பாட்டுடைத் தலைவன் பல்யானைச் செல்கெழு குட்டுவனாதல் வேறு ஒரு சேரமானாதல் வேண்டும்.”
(7) புலவர் பெயரைத் தெளிவு செய்தல்
மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் (59)
உ.வே.சா: “சீத்தலை என்னும் ஓருரில் உள்ள அய்யனார் பெயராகிய சாத்தனார் என்பது இவரது இயற்பெயர் என்பது ஒரு சாரார் கொள்கை.
உண்மை விளங்கவில்லை.”
ஒளவை: “சீத்தலை என்பது ஓர் ஊர்: அவ்வூரினராயினும் மதுரையிலிருந்து கூலவாணிகம் செய்தமையின் இவர் இவ்வாறு கூறப்பட்டார்.
இவர் காலத்து வேந்தன் இப்பாட்டிற்குரிய நன்மாறனே யாவான்.
மணிமேகலை பாடிய ஆசிரியரும் இவரேயென்று பெயரளவே நோக்குமிடத்து புலனாகும்.
மணிமேகலை ஆசிரியர் காலத்துப் பாண்டி வேந்தன் இவனல்லனென்பது சிலப்பதிகாரத்தால் இனிது விளங்குதலின், இச் சீத்தலைச் சாத்தனார் வேறென்பது தெளிவாகும்.
ஆயினும் இது ஆராய்தற்குரியதொன்று.”
மதுரை ஓலைக்கடை கண்ணம்புகுந்தாராயத்தனார் (350)
உ.வே.சா: “ஓலை, ஓலையால் இயற்றப்பட்ட குடை, தாழை முதலியவற்றின் ஒலையுமாம்.
இதனால் இவர் வியாபாரம் செய்பவரென்று தெரிகிறது.”
ஒளவை: ஓலைக்கடை – மேலைக் கடையம் என்பது தென்பாண்டி நாட்டில் உள்ள ஊர்.
சான்றோர் பலர் பிறந்த சிறப்புடையது;
கடையம் என்பது குறைந்து கடை எனச் சுருங்கிற்று.
இப்போதுள்ள மேற்கில் கடையம் என்ற ஊர்கள் இடைக் காலத்தே கோனாட்டு விக்கிரமப் பாண்டிய நல்லூர் ஆன கடையம் என்றும், கோனாட்டுக்கடையம் என்றும் வழங்கியதைக் கல்வெட்டுகளால் அறிகின்றோம்.
மேலைக் கடையத்தார் எனற்பாலது மதுரை ஓலை கடையத்தார் என எழுதப்பட்டுள்ளது.
இக் கடையத்தைச் சார்ந்த ஒரு குடியினர் மதுரையில் தங்கியிருந்தமையின் அவர்மதுரைக் கடையத்தார் என வழங்கப்பட்டனர்.
மதுரை கடையத்தார் என நல்வெள்ளையார் என்ற சான்றோர் ஒருவர் நற்றிணை பாடிய ஆசிரியர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.
மதுரை கடையத்தார் மகனார் கண்ணனார் குறுந்தொகையில் காணப்படுகிறார்.
ஆக, கடையத்தில் இருந்து வந்து மதுரையில் தங்கி வாழ்ந்த கடையக்குடி சிறந்த நல்லிசைப்புலமை பெற்று மேன்மையுற்று வழங்கியமை தெளிவாகும்.”
வளரும்…
– முனைவர் ஔவை அருள், தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment