செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 45
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
மகளிர் மாட்சியும் பெருமிதமும் ( 2…) !
மகளிர் மாட்சி , பெருமை ,உரிமை பற்றி மகிழ்வோடு பேசும் இந்நிலையில் இது தொடர்பாக முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய கட்டுரையோடு இந்திய ஆட்சிப்பணியில் உயர்நிலை அரசு செயலாளராக விளங்கும் திருமதி ஜோதி நிர்மலாசாமி அவர்கள் இன்றைய திங்கள் அமுதசுரபியில் எழுதிய உயர்ந்த சிந்தனை வளம் பொருந்திய அந்தக் கட்டுரையையும் இத்துடன் வெளியிட்டுள்ளோம் .
1928ஆம் ஆண்டு ‘ குடியரசுப் பத்திரிகையில் பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கமே பெண்கள் உரிமைக்காகவும் பெண்கள் விடுதலைக்காகவும் ஆண்கள் குரலெழுப்புவது வெறும் பாசாங்குதான்; உண்மையான உணர்வுடன் ஆண்கள் எவரும் அதற்காகப் பாடுபடுகிறவர்கள் அல்லர் – என்று குறிப்பிட்டு ஆண் ஆதிக்கத்தின் போலிக் குரலில் பெண்கள் ஏமாறக் கூடாது என்று எச்சரித்ததுடன்; அதே தலையங்கத்தில் பெண்களுக்காக பெண்கள் உரிமைக்குரல் முழக்குவதும் அப்படித்தான் பயனற்றுப் போய்விடும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆண்களைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் அய்யா பெரியார் அவர்கள் இப்படித்தான் ஓர் அழுத்தம் திருத்தமான பொதுவான கருத்தைக் கொண்டிருந்தார் என்று நாம் ஓர் அவசர முடிவுக்கு வந்துவிடக்கூடாது.
பாவையர் உரிமைக்கு பாடுபடுவதாக யாரும் வேடம் போடக் கூடாது என்பதே தந்தை பெரியாரின் அடி மனத்தில் பதிந்திருந்த ஆணித்தரமான அபிப்பிராயமாகும்.
கடவுள் பக்தர்கள் என்று கூறிக்கொண்டு அந்தக் கடவுளின் பெயராலேயே கயமைச் செயல்களில் ஈடுபடுகிறவர்களை அடையாளம் காட்டுவதைப் போலத்தான்; பெண்ணுரிமைக்காகப் பேசுவதாக நடிப்பவர்கள்; கடைந்தெடுத்த ஆணாதிக்கவாதிகளாக இருப்பதைப் பெரியார் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
அந்த ஆணாதிக்கத்துக்கு ஒத்துப்போகிற அடிமை மனப்பான்மையில் காலம் காலமாகப் பெண்களும் ஊறித் திளைத்துவிட்ட காரணத்தால் அந்தச் சிறையிலிருந்து விடுபட அவர்களாலும் அவ்வளவு எளிதில் முடியாது என்பதைப் பெரியார், அவருக்கேயுரிய; உண்மை எடுத்துரைக்கும் பாணியில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே நாம் கருத வேண்டும்.
ஆணாதிக்கம் – பெண்ணுரிமை என்ற சொற் பிரயோகங்களும் ஆணாதிக்கத்தை அகற்றிப் பெண்ணுரிமை நிலைநாட்டுவோம் என்ற சூளுரைகளும் – ஆண்களும் பெண்களும் குடும்பம் குடும்பமாக வாழ்க்கை முறை வகுத்துக் கொண்டு வாழ்கிற நிலையை அடியோடு குலைத்து விட்டு. தங்களிஷ்டம்போல் திரிந்து; தேவைக்கேற்ப – அது உணவுத் தேவையானாலும் – அல்லது உடலுறவுத் தேவையானாலும் – உடல் நிலை பேணக்கூடிய தேவையானாலும் – அவற்றுக்காக மட்டுமே சேர்வதும் பிரிவதும் என்ற நிலையை இருபாலாரும் கடைப்பிடிக்கிற வாழ்க்கை முறையில் தான் ஆணாதிக்கம் அகற்றப்படுகிறதென்றோ; பெண்ணுரிமை கொழிக்கிறதென்றோ பொருள் கொண்டு விடுதல் .பழைய பழைய மிகப் பழைய காட்டுமிராண்டிக் காலத்திற்கு நம்மைக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.
எனவே ஆணோ பெண்ணோ மனம் போல் திரிந்து வாழ்வது என்ற நிலையிலிருந்து இணைந்து வாழ்வது என்ற நிலைக்கு மாறிய பிறகு; ஒருவர் புரியும் செயலால் ஒருவர் மனம் புண்படும்போது ஒருவரையொருவர் பிரிவதே பாபம்; சாபம் வந்து சம்பவிக்கும் என்ற எந்த மிரட்டலுக்கும் இடமின்றி – சட்டப்படி அதற்கான சம்மதம் பெற்றுக்கொள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமை வாய்த்துள்ளது இரு பாலார்க்கும் ஏற்றதொரு நன்மையே ஆகும்.
தங்களின் வாழ்க்கைக்காக வழி வகுத்து அதில் வழிதவறி விட்டதை உணர்ந்தால்; வழிவகைப்படுத்திக் கொள்ளவும் சட்ட சம்மதம் பெறுவதற்கு ஆடவர்க்கும் மகளிர்க்கும் சம வாய்ப்பு இருக்கும் ‘சமுதாய அமைப்பில், அவர்கள் பொதுத் தொண்டு புரிந்திட பொது வாழ்வில் ஈடுபட சம உரிமை இல்லை என்பதுதான் பெருங்குறைபாடு .
அப்படியொரு தடையிருப்பதாக யார் சொன்னது ?
மக்களுக்கான பொது நலப் பணியாற்றுவதற்குக் கூட ஆட்சி மன்றங்களுக்குச் செல்லவேண்டுமென்றால் ஆணோ பெண்ணோ பொதுவில் யார் வேண்டுமானாலும் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்று சென்றிடலாமே என்றுதான் கூறத் தோன்றும் !
அது உண்மை நிலை என்றாலும்; உபயோகமற்றுப் போன துருப்பிடித்துக் கிடக்கும் உண்மை நிலை என்பது தான் பொருத்தமானதாகும்.
அதற்கு எடுத்துக்காட்டாகத்தான் பொதுத் தொகுதிகளில் எத்தனை இடங்களில் வேண்டுமானாலும் போட்டியிடக்கூடிய சமத்துவ உரிமை ஆணுக்கும், பெண்ணுக்கும் இருப்பினும்கூட; ஆண்களே மிக அதிக இடங்களை ஆக்ரமித்துக் கொள்ளும் நிலைமை; பெண்களின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை காரணமாகத் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில்
1996 முதல் தி.மு.க. ஆட்சியில் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டப்படி வழங்கப்பட்டு; அந்தப் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டுவிட்டது.
தலித் இன மக்களுக்கான தனித் தொகுதி முறையும் நீடிக்கிற வகையில் உள்ளாட்சிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடும் நடைமுறையில் இருந்து வருகிர்து
பொதுத்தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பளித்து; அவர்களும் நாடாளுமன்ற சட்டமன்றங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் – 33 சதவிகித அளவிலாவது இடம்பெற; மகளிர் ஒதுக்கீடு சட்டப்படி வழங்கப்பட்டாக வேண்டும் என்பதுதான் இன்றைய மகளிர் கோரிக்கை.
இந்தக் கோரிக்கை நிறைவேறிட ; சட்டம் இயற்றாமலே; அரசியல் கட்சிகளே மகளிர்க்கு என இடங்களை ஒதுக்கலாம் என்பது நடைமுறை சாத்தியமல்ல என்பது அனுபவ ரீதியாக உணரக் கூடிய ஒன்று.
நாறு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ அமருகிறவர்களில் 33 பேர் மகளிராக இருப்பதற்கேற்பச் சட்டமியற்றி; தேர்தல் விதிமுறைகளையும் அமைப்பதால் என்ன ஆபத்து வந்துவிடும் !
அனைத்திந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் தடவையாக மூன்று லட்சம் பேர் மகளிர் மட்டுமே கலந்து கொண்டு நடத்திய மகத்தான பேரணியைப் புகழ்ந்து பாராட்டக்கூடத் தேவையில்லை;
அந்த உரிமைக் குரலின் உணர்வையாவது புரிந்து கொண்டு பெரியார் தொடங்கிய பெண்ணுரிமைப் போருக்கு – அண்ணா வழியில் பெரு வெற்றி கிடைத்திடப் பேராதரவு வழங்குவது பெண் வயிற்றில் பிறந்தோரின் பெருங்கடமை என உணர்வோம் !
22-9-2005
உலக மகளிர் நலனை நினைவு கூரும் வகையில் திருமதி ஜோதி நிர்மலாசாமி இ ஆ ப அவர் எழுதி வெளிவந்த கட்டுரையை வெளியிட்டுப் பெருமையடைகிறோம் .
எழுதிய அம்மையாருக்கும் வெளியிட்ட அமுதசுரபி ஆசிரியருக்கும் மனங்கனிந்த நன்றி .
*உலக மக்கள் தொகை 793 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இதில் பாதி மகளிராகத்தான் இருக்க வேண்டும் என்பதே இயற்கையின் நியதி .
ஆனால் அந்த இயற்கையே குழந்தைகளின் பிறப்பு விகிதத்தில் ஆண் குழந்தைகளின் சார்பாகச் சற்று வளைந்தே நிற்கிறது.
1000 பெண் குழந்தைகள் பிறக்கையில் 1050 ஆண் குழந்தைகள் பிறக்கின்றன.
ஓட்டத்தில் பெண்களே முன்னேறியுள்ளனர் .
ஆடவர்களின் ஆயுள் எதிர்பார்ப்பு 70.6 வருடமாக இருக்கையில் பெண்களின் ஆயுட்காலமோ 75.1 வருடங்களாக உயர்ந்திருக்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் அதாவது குறைந்த எண்ணிக்கையில் பிறந்து அதிக வருடங்கள் வாழும் பெண்களின் வாழ்வு நாட்களில் முதன்மை பெருகிறார்களா – சரிநிகர் சமானத்தை அடைந்திருக்கிறார்களா என்பது இன்னமும் சிக்கல் கொண்ட பொருளாகவே தொடர்கிறது.
நடப்பு 2022ஆம் ஆண்டின் உலக மகளிர் தினத்தின் குரல்
‘ஒருசார்பு காட்டும் நிலையை உடைத்தெறிவோம் (#Break the Bias)’ என்பதாகும்.
பெண்களின் பெருமையைக் கொண்டாடுவதும் பாலின வேறுபாட்டை நீக்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் பாலின நிலையை நிகர் அடையும் பாதைகளை அவை முன்னெடுப்பதுமே இதனை நிறைவேற்றும் வழிமுறைகளாக ஐக்கிய நாடுகள் அவை அடையாளம் கண்டுள்ளது.
பிறக்கும் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் தம் வாழ்நாளில் சம எண்ணிக்கையை எட்டுவதோடு அதனை அடுத்த காலகட்டத்தில் எண்ணிக்கையில் அதிகமானாலும் கூட மகளிர் சமூக சமநிலை என்பது இன்னமும் முன்னோக்கி நிற்க வேண்டிய நிலையில்தான் தொடர்கிறது.
குடும்பப் பொறுப்புகளின் அழுத்தங்களாலும் தாய்மைக் கடமைகளின் பொறுப்பாலும் பெண்களுக்குப் பின்னடைவு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது .
சமூகப் பொறுப்புகளின் சுமைகளால்தான் தாங்கள் சமநிலையை அடைய முடிவதில்லை என்ற கருத்து உறுதிப் படுத்தப் படுகையில் அந்தப் பொறுப்புகளில் இருந்து பெண்கள் தங்களை விடுவித்துக் கொள்ளும் முயற்சிகளும் பரவலாகத் தொடங்கியுள்ளன .
திருமண வலைக்குள் வராமல் சேர்ந்து வாழ்வது;
குழந்தை பெற்றுக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்வது;
இதன் மூலம் குடும்ப அலகுக்குள் சிறை பட்டுக் கொள்ளாமல் சுதந்திரமாக இருப்பது;
இவையெல்லாம் பெண் சுதந்திரம் என்ற போர்வையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பின்னடைவான ஏற்பாடுகள்.
காலப்போக்கில் இவை ஆரோக்கிய சமூகத்தின் அடிவேரை அசைத்துப் பார்க்கும் வேதனைகளாக வடிவாக்கம் கொண்டு வளர்ந்து வருவது கவலைக்குரிய செய்தியாகும்.
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பெண்களின் பூரணத்துவ பயணம் இன்னமும் பல நிலைகளைக் கடக்க வேண்டித்தான் உள்ளது.
சட்டமியற்றி பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் இந்தியா போன்ற நாடுகள் இப்பிராந்தியத்தில் இருக்கையில் சட்டமியற்றி பெண்களின் உரிமைகளை ஒடுக்கும் நாடுகளையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அரசியல் அமைப்புகளும் அவை ஏற்படுத்தும் சட்டங்களும் அந்தந்த நாடுகளின் வரலாற்று, சமூக, பொருளாதார மற்றும் கலாசார பின்னணியின் சூழலுக்கு ஏற்றாற்போல் பெண்ணுரிமை வளர்ச்சியில் தங்கள் கட்டமைப்புகளை உருவாக்கி வைத்துள்ளன.
பெண் கல்வியையும் பெண்ணுரிமையையும் காக்கும் சட்டங்களைக் கொண்ட நாட்டின் சமூகம் மனம் ஒவ்வாத திருமணத்தை முடித்துக் கொண்டு வேறொரு வாழ்வைத் தேடிக் கொள்ளும் ஒரு பெண்ணைப் பெரும்பாலும் ஏற்பதில்லை ;
அதே சமயம் மனம் ஒத்துப் போகாத சூழ்நிலையில் உடனடியாக அந்த திருமணக் கட்டிலிருந்து வெளியேறி மறுமணம் முடித்துக் கொள்ள அனுமதிக்கும் இலகுவான சட்டங்களைக் கொண்ட நாட்டின் சமூகமோ அப்பெண்ணுக்கு கல்வி அளிக்கவும் உரிமைகளைத் தரவும் சட்டங்களைக் கொண்டு வர முன்வருவதில்லை.
இது ஒரு சமகால சமூக முரண்.
இவ்வாறு பெண் சமன்பாட்டுச் சிந்தனைகள் வேறுபட்ட அணுகுமுறைக் குறைபாடுகளால் குழம்பிக் கிடக்கின்றன.
ஒரு பக்கம் பெண்ணை தெய்வமெனப் போற்றித் தொழும் சமூகம்,
மறுபக்கம் பெண் குழந்தையைத் தமது இரண்டாவது விருப்பமாகவே வைக்கிறது.
பெண் குழந்தை பிறப்பை வெறுக்காத சமூகம் அப்பெண்ணை உடமையாகப் பார்க்கத் துணிகிறது.
பெண்களின் நிலையை ஒப்பிடுகையில் ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள நாடுகள் எந்த ஒரு காரணியின் கீழும் ஒரே நேர்கோட்டில் வருவதில்லை.
பெண் குழந்தை பிறப்பை வரவேற்கும் மனநிலை,
ஆண் குழந்தைக்கு நிகராக அதனை நடத்தும் சூழ்நிலை,
கல்வி அளிக்க முன் வருவது,
பொருளாதார மற்றும் கருத்து சுதந்திரம் கொடுப்பது ஆகியவற்றில் இந்நாடுகளில் பலவகையான மனப்பண்புகள் விரவிக் கிடக்கின்றன.
இந்தியாவுக்குள்ளேயே கூட, மாநிலங்களிடையே பெண் குறித்த நேர்வுகளில் சமநிலை கிடைப்பது சாத்தியமாக இல்லை.
கேரளத்தில் 1000 ஆண்களுக்கு 1084 பெண்கள் இருக்கையில் ஹரியானாவில் 879 பெண்களே உள்ளனர்.
தமிழகத்தில் இது 996 என்றாலும் தமிழக மாவட்டங்களுக்கிடையேயும் இது வேறுபடுகிறது.
நீலகிரி மாவட்டத்தின் ஆண்-பெண் விகிதம் 1000க்கு 1042;
தர்மபுரி மாவட்டத்தில் 1000க்கு 946. பதினாறு மாவட்டங்களில் பெண்களின் விகிதம் ஆயிரத்துக்கும் மேல் என்பது ஆறுதலான செய்தி.
பிறப்பிலேயே பெண்ணானவள் விருப்பு வெறுப்புக்கு ஆட்படத் தொடங்குகிறாள்.
நமது நாட்டில் சட்டங்கள் மூலமாகவும் சமுதாய விழிப்புணர்வு மூலமாகவும் பெண் குழந்தை பிறப்பின் சமூக தேவை காப்பாற்றப்பட்டு உணரப்படவும் வைக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் முதியவர்களைக் கண் போல் காக்க வேண்டும் என்ற சமூக விழுமியங்கள் உடைந்து வரும் நிலையில், இயலாத முதுமைப் பருவத்தில் தமது பெண் குழந்தைகளிடமே மனப்பூர்வமான சேவையை அனுபவிக்கத் தொடங்கியிருக்கும் இன்றைய சமூகம் பெண் குழந்தைகளைக் கொண்டாடத் துவங்கி உள்ளது ஒரு நல்ல சமூக வெளிச்சம் ஆகும்.
தள்ளாடும் காலத்தில் ஆண் பிள்ளைதான் உடனிருக்க வேண்டும்; அவன் கையால்தான் கொள்ளியிட வேண்டும் என்ற கருத்துகள் மெல்ல மாறி வருகின்றன.
பெண் குழந்தைக்கு கல்வி தரும் சமூக மாற்றமும் இங்கே நிகழ்ந்து கொண்டுள்ளது.
பெண் குழந்தைக்கு கல்வியோடு அவளை இச்சமூகத்தில் தற்காத்து முன்னேறிக் கொள்ள சொல்லித்தர வேண்டியதையும் நாம் உணர்ந்திருக்க வேண்டும்.
சுயமாக சிந்தித்து முடிவெடுக்கவும் உலக அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் சூழ்நிலை அறிந்து பழகிக் கொள்ளவும் ஏமாந்து விடாமல் இருந்து கொள்ளவும் பெண் குழந்தைக்கு சொல்லித்தருவதில் கொஞ்சம் அதிகமாக நாம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
சமூக ஊடகங்களின் சுழலில் சிக்கிக் கொள்ளாமல் அதே சமயம் சுதந்திரமான எண்ணங்களோடு தன்னை கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றிக் கொள்ள அவளை அனுமதிக்க வேண்டியுள்ளது.
பெண்ணானவள் சுய மரியாதையை தனது கவசமாகக் கொள்ள வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு படிக்க வேண்டும்; படித்து முடித்த பின்னரும் உலக அறிவைப் பெருக்கிக் கொண்டு எப்போதும் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு பெண்ணுக்கு கல்வி என்பது ஒரு குடும்பத்துக்கான கல்வி.
அவளது கல்வி அவளது குழந்தைகளுக்கும் உதவும் என்பதால் பெண்ணுக்கு கல்வியே பிரதானமானதாகும்.
கூடவே வளரும் ஆண் குழந்தைக்கும் சிறுவயது முதலே பெண்களை மதிக்கச் சொல்லித் தரப்பட வேண்டும்.
தன்னுடன் இருக்கும் பெண் குழந்தையைப் பெரியவர்கள் நடத்தும் முறையைக் கண்டே அவன் பெண் பற்றிய மரியாதையையும் மதிப்பீடுகளையும் தன் மனதில் பதிந்து கொள்கிறான்.
அவளைவிட இவன் மேம்பட்டவன் என்றோ அவனை விட அவளுக்கு எதுவுமே குறைவுதான் என்றோ அவன் உணராதிருக்கும் வகையில் அவனைப் பழக்க வேண்டும்.
ஆண் குழந்தையானவன் பெண்ணை விட கொஞ்சம் உடல் வலுவானவன் என்பதாலேயே உயர்ந்தவன் அல்ல என்பதையும் பெண்ணை மதிப்பதே அவனது ஆண்மைக்கு அழகு என்பதையும் சொல்லி வளர்க்க வேண்டும்.
இந்த ஆண்டின் உலக மகளிர் தினத்தின் முன்னெடுப்புகளை நோக்கின், அது பெண்ணின் பெருமையைப் பேசுவது என்பதில் தொடங்குகிறது.
பெண்ணின் பெருமைகளைப் பேச முதலில் பெண்களே தாமாக முன் வர வேண்டும்.
பாலின பாரபட்சம் என்பது சட்டத்தின் மூலமும் சமூக பழக்கங்களின் மூலமும் முற்றிலும் புறந்தள்ளப்பட வேண்டியது என்ற செய்தியை இரு பாலருக்கும் உரக்கச் சொல்ல வேண்டும்.
‘உடல் வலிமை உள்ளவன் என்பதால் முதலிடம் ஆனவன்; உடல் ரீதியான அசௌகரியங்களும் பொறுப்புகளும் உள்ளதால் பெண்ணுக்கு அடுத்த இடம்தான்’ என்பதை இயற்கை கூட ஏற்பதில்லை.
‘எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்று பாடிய பாரதியாரே ‘கற்பெனப்படுவதை பொதுவில் வைப்போம்’ என்றும் பாடினார்.
உள்ளம் தொடங்கி உடல் வரை பாரபட்சமின்மையின் பல்வேறு படிநிலைகள் இதுவேயாம்.
ஐக்கிய நாடுகள் சபையின் 2022 ஆம் ஆண்டைய அறைகூவலின்படி “வாய்ப்புகளிலும் வசதிகளிலும் ஆண்களை முன்வைத்து பெண்களைப் பின்வைக்கும் பாரபட்சமான ஒரு பக்கச் சார்பினை உலக மக்கள் அனைவரும் ஒன்றாக நின்று உடைத்தெறிவோம் !.”
தொடர்புக்கு :
thamizhavvai@gmail.com

Add a Comment