கல்லும் சொல்லும் கதை !
அண்ணாநகரில் நான் இப்போது வாழும் இல்லம் எங்கள் மக்கள் மூவருக்கும் உரியது.
என் துணைவியார் டாக்டர் தாரா நடராசன் அவர்கள் ஒவ்வொரு கல்லும் எடுத்துத்தந்து கட்டச் சொன்னார்கள்.
அவர் மருத்துவமாமணி என்றாலும் பொறியியல் திறமையும் – கட்டட நுணுக்கமும் மிக நுணுக்கமாகத் தெளிந்தவர்.
கட்டிடம் கட்ட வந்தவர்கள் ஒருவருக்கு நால்வர் வந்தனர் .
அவர்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் , அம்மா எந்த நேரத்திலும் தங்களை மாற்றி விடுவார்கள் என்று. நாளுக்கொரு மாற்றமும் – வரைபடத்தில் திருத்தமும் அம்மா கூறுவார்கள்.
அந்த வகையில் மின் கம்பி பொருத்தவும் – குழாய்கள் சீராக அமைக்கவும் வந்தவர் திரு.குமரவேலு.
அருளின் மதிப்புமிகு நண்பர் இராஜீவ் ரெட்டியின் பரிந்துரையில் வந்தவர்.
நிறைவாகப் பணிகளை நிறைவேற்றிய நிலையிலும் – நிலை தடுமாறச் செய்யும் குடிப்பழக்கம் அவருக்கு வினையில் முடிந்ததால் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதியன்று அம்மா அவரைப் பணியிலிருந்து நிறுத்திவிட்டார்கள்.
வீடுகட்டிய பிறகு என்னிடம், தன் மகளுக்கு அண்ணாநகரிலுள்ள வள்ளியம்மாள் கல்லூரியில் இடம் வேண்டும் என்று கேட்டபொழுது பரிந்துரைக் கடிதம் வழங்கியதும் ‘இடம் கிடைத்தது’ என்று மகிழ்ச்சியுடன் வந்து சொன்னார்.
திறமையிருந்தும் தீயபழக்கத்தால் குமரவேலு மறைந்தார் என்று அண்மையில் அறிந்தோம். ‘அம்மாவின் பேச்சைக் கேட்டுத் திருந்த முடியாமல் கெட்டேன்’ என்று இறுதி நிலையில் வருந்தினாராம் .
பொறியியல் நுட்பம் வாய்ந்த குமரவேலு மறைவு கேட்டுத் துயரடைந்தோம்!
ஒளவை நடராசன்

Add a Comment