POST: 2022-03-27T10:37:11+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 102

ஔவையைப் போற்றிய திருவாசகமணியின் பொன் வரிகள்!

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக முனைவர் ஔவை நடராசன் தலைமைச்செயலகத்தில் பணியாற்றிய காலத்தில், தொடக்க நிலை மொழிபெயர்ப்பு அலுவலராகப் பணியில் சேர்ந்த திரு. கு. பாலசுப்பிரமணியன், எந்தையாரைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,

“மொழிபெயர்ப்பு இயக்குநர் ஔவை நடராசன் கட்டளையிடும் பணிகளைச் செவ்வனே மன நிறைவுடன் ஆற்றிய பெருமையும் வாய்ப்பும் பெற்றவன் யான.;

அவருக்குரிய தலைசிறந்த சிறப்பு

-எல்லாக் காலத்திலும் எல்லாவிடத்திலும் யாவரும் உணர்ந்து அறிந்த சிறப்பு-

அவர் எப்பொருள் பற்றியும் எந்நேரமும் யாவரையும் ஈர்க்கும் வகையில் ஆற்றொழுக்காக உரையாற்றும் வன்மையை, நாவன்மையைப் பெற்றிருந்தார் பெற்றிருக்கிறார் என்பதேயாகும்.

“கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்னும் குறட்பாவிற்கு அவரது உரையில் இடம் பெறுகிற சொற்களே எடுத்துக்காட்டும் விளக்கமும் ஆகும்.

அதனால் தான் அவர் நாடு போற்றும் நாவேந்தராக உரையாற்றும்; உரைவேந்தராகத் திகழ்கின்றார்.

இவருடைய நாவன்மை தமிழ் மொழி இலக்கியத் துறையிற் போலவே இலக்கிய வரலாறு, இலக்கியப் பண்பாடு, இலக்கியச் சமூகவியல், இலக்கியக் கவிதைகள், படைப்பிலக்கியங்களின் திறனாய்வு ஆகிய துறைகளிலும் பெருவீச்சு உடையதாக இருந்தது.

தொடக்கக் காலத்தில் மூத்த பேராசிரியர்களான அ.சா.ஞானசம்பந்தனார் போன்றோர் தலைமையில் உரைகளும் ஆற்றினார்.

பின்னர் இவரே பட்டிமன்ற நடுவராகப் பொறுப்பேற்றுப் பல இலக்கிய, சமுதாயத் தலைப்புகளில் அமைந்த பட்டிமன்றங்களில் தமது அறிவாற்றல் மிக்க உரைப்பெருக்கினை வழங்கியுள்ளார்.

பல்வேறு அவைகளிலும், மன்றங்களிலும் பேசுகின்ற இவரது பேச்சைக் கேட்க அந்நாளில் கல்லூரி மன்றங்களில் கூட்டம் அலைமோதும்.

வாரியார் சுவாமிகளுக்கு அடுத்த நிலையில் பெருங்கூட்டத்தினரை ஈர்த்தபெருமை இவருக்கு உண்டு.

அக்காலத்தில் அரசியல் தலைவர்களாக விளங்கிய பேரறிஞர் அண்ணா, இனமானப் பேராசிரியர் அன்பழகனார், நாவலர் நெடுஞ்செழியனார், முத்தமிழறிஞர் என என்றும் போற்றப்படும் கலைஞர் ஆகியவர்களுக்கு அடுத்த நிலையில் பேச்சினால் பெருங்கூட்டத்தைக் கட்டிப் போடுகின்ற பெருவல்லமை ஔவை அவர்களுக்கு இருந்தது.

தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் தங்கு தடையின்றிச் சொற்பொழிவாற்றுகின்ற திறமை இவருக்கு இருந்ததை அறிந்து நாங்கள் வியந்ததுண்டு.

இதனால், இப்பெருமகனார் நான் அரசு பணியாற்றிக்கொண்டிருந்த அந்நாளில், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகப் பணியில் அமர்த்தப்பெற்றுப் பொறுப்பேற்றார் என்பதில் வியப்பேதுமில்லை!

மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகப் பணியில் சேருவதற்கு முன்பே, நாடுபோற்றும் திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் தில்லை நகர் திருச்சிராப்பள்ளியிலிருந்து, 04.11.1968-இல் ஔவையைக் குறித்து ஆங்கிலத்தில் வரைந்த அறிமுகச் சான்றுக் கடிதம் வருமாறு:-

I have known Mr.Avvai D. Natarajan, from his childhood.

Being the son of Prof. Avvai. S. Doraisamy Pillai, a renowned and illustrious Tamil Scholar whose achievements in the field of Tamil research are historic and highly commendable, Avvai Natarajan who is just now a chip of the old block, is fast proving the block itself.

He is a smart, strong, intelliegent, enthusiastic and ardent young man with a born flair for Tamil Literature and its varigated charms.

Besides his academic distinctions of M.A. and M.Litt. he is an intrinsically able scholar whose aptitude and innate love for research in Tamil are really remarkable.

He is one of the foremost speakers and writers in the Tamil language among the youths of today.

He bears an excellent character and he is loyal, obedient to the superiors, straight forward and simple.

He can be trusted to prove himself competent to discharge duties of any post which require scholarship and research.

அதேபோல, பொருளாதார நிபுணரும், ‘கிசான் உலகம்’ ஆங்கில இதழின் ஆசிரியரும், தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினரும், அருட்செல்வர் பொள்ளாச்சி ந. மகாலிங்கத்தின் நேர்முக உதவியாளராக மிளிர்ந்த பேராசிரியர் சி.எஸ். மகாதேவன் 13.08.1974-இல் ஔவையைக் குறித்து ஆங்கிலத்தில் வரைந்த அறிமுகச் சான்றுக் கடிதம் வருமாறு:-

Dr. Avvai D. Natarajan is known to me for the last seven years as an Assistant Professor and as the Secretary of the Ramalingar Mission.

Avvai Natarajan coming of a family of reputed and distinguished Tamil scholars is himself quite at home in the language and literature.

His flair for oratory and felicity of writing are noteworthy.

No Tamil Research is full without his Name.

His impressive eloquency, scholarly outlook his zest for learning and acumen of research are praise-worthy.

He has a sweetness of temper and suavity of manners which have endeared him to his colleagues.

He has contributed a number of articles in our house journals which always glow with subtle humour and wisdom.

I am always thinking of a day when he bears the torch of Tamil culture out of India in international zones.

He is bound to make success in any walk of his life which requires contact and dealing with respectable peoples.

He bears an exemplary conduct and character.

I wish him all success.

நாவேந்தர் ஔவை நடராசனைப் போற்றும் கடிதக் கரும்புகளைப் படிக்கும் பொழுது நம் எண்ணமெல்லாம், சிந்தையெல்லாம் பூரிக்கிறது.

வருங்காலத் தமிழிளைஞர்களுக்கு இவைகளெல்லாம் வரலாற்று பெட்டகங்களாகத் திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.”
——————————-

பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (26)

8) ஊர்ப் பெயரை உறுதி செய்தல்
கூடலூர்க்கிழார் 229

ஒளவை: கூடலூர் கிழாரது கூடலூர் பாலைக்காட்டு வட்டத்து நடுவட்டம் என்ற நாட்டில் உள்ள ஓர் ஊர்.

கூடலூர் மலைநாட்டின் கண்ணதாகிய ஊர்.

அதனை இருப்பிடமாக உடையவர்.

எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் (397)
உ.வே.சா.: “எருக்காட்டூர் என்பது திருவாரூருக்குத் தென்மேற்கில் மூன்று நாழிகை வழி தூரத்தில் உள்ளது என்பர்.

கண்ணன் என்பது கிருஷ்ணன் என்னும் தெய்வப் பெயரின் சிதைவு போலும்.

கண்ணன் என்பது கரியோன் என்னும் பொருள் தோல் பற்சிதைவு திருக்கோவையார் 53 பேர் என்பது அறியற்பாலது..”

ஒளவை: “எருக்காட்டூர் சோழநாட்டு தஞ்சை சில்லாவில் நன்னிலம் தாலுகாவில் உள்ளது;

குளிக்கரைப் புகைவண்டி நிலையத்திற்கு மேற்கில் இவ்வூர் இன்றும் இருந்து வருகிறது.

அதனை எருக்காட்டூர்ச் சேரிக்கு எனத் திருக்கடவூர் கல்வெட்டுக்கள் (ஏ.ஆர்.என்.32 38 /1960) கூறுகின்றன.

தாயன் என்பவருக்கு மகனாதலால் இவர் தாயங்கண்ணனார் எனவும், தாயங்கண்ணனார் என்ற பெயருடைய பலர் இருத்தலின் அவரின் வேறுபடுத்த இவர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் எனவும் சான்றோரால் குறிக்கப் படுவராயினர்.”

(9) மாறு கருத்து / மறுப்புரை
குண்டுகட்பாலியாதனார் – 387

உ.வே.சா: “குண்டு கண் ஆழமான கண்.

பாலி ஒரு ஊர்.

இவருக்கு இப்பெயர் சினையாலும் இடத்தாலும் வந்தது.”

ஒளவை: “குன்றுகட்பாலியாதன் என்னும் சான்றோரையும் செல்வக்கடுங்கோ ஆதரித்துள்ளார்.

பாலியாதனார் என்பது இவரது இவர் இயற்பெயர்.

ஆதன் என்றும், ஊர் குன்றுகட்பாலி என்றும் அறிக.

இது நாளடைவில் குன்றுகட்ட பாலியாதனாரெனச் சுருங்கிப் பின் குண்டுகட்பலியாதனார் எனத் திரிந்து விட்டது.

குன்று கட்பாலி என்பது இப்போது பாலிக்குன்னு என்ற பெயருடன் மலையாளம் ஜில்லாவைச் சேர்ந்த கோழிக்கோடு பகுதியில் உள்ளது”

(10) சிறப்பு விளக்கம்
வெண்ணிக் குயத்தியார் (66)

உ.வே.சா: “வெண்ணி ஓரூர். குயத்தி சாதியில் பிறந்த மாது.”

ஒளவை: “வெண்ணி என்பது தஞ்சை மாநாட்டில் உள்ளதோர் ஊர்.

வெண்ணில் என்றும் வழங்கும். குயத்தியார் என்பது இப்புலவர் பெருமாட்டியின் பெயர்.

வேட்கோவரில் சிறந்தோர்க்குப் பண்டை நாளில் வேந்தர் குயம் என்னும் பட்டம் தந்து சிறப்பித்தல் மரபு.

இவர்குயத்தியார் எனப்படுதலால் வேட்கோவருள் சிறந்தவரென்பது துணிபாம்.

இம்மரபு பத்தாம் நூற்றாண்டு வரையில் இருந்திருக்கிறது”

(11) விளக்கம்
வீரை வெளியனார் (320)

உ.வே.சா.: வீரை என்பது இவரது ஊர்.

வெளியன் என்பது இயற்பெயர்.

இந்த ஊர் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள நாட்டைச் சேர்ந்தது.

புதுச்சேரி வீராம்பட்டினம் என இப்போது வழங்குகிறது.

அகநானூற்றில் காணப்படும் சான்றோருள் ஒருவரான வீரை வெளியனார் இவருடைய மகன் ஆவார்”

(12) கூடுதல் விளக்கம்
ஊன் பொதி பசுங்குடையார் (10)

உ.வே.சா: “இராமச் சரித்திரக் குறிப்பு.”

ஔவை: “இவரது இயற்பெயர் தெரிந்திலது.

பனையினது பச்சோலையால் உட்குடையுடையதாகச் செய்யப்படுவது.

பனங்குடை உணவுண்டற்கும் பூப்பறித்தற்கும் மக்கள் பயன்படுத்துவர். ‘

எய்ம்மான் எறி தசை பைஞ்ஞிணம் பெருத்த பசு வெள்ள மலை, இரும்பனம் குடையின் மிசையும்’ (புறம் 177) என்றும், ‘

அவல் வகுத்த பசுங்குடையாற், புதல் முல்லைப் பூப் பறிக்குந்து’ (புறம் 352) என்றும் சான்றோர் கூறுதல் காண்க.

வேண்டுமாயின் இதனிடத்தே சோறு பொதிந்து கொண்டு போவது மரபு;

‘ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண்குடை’ (அகம் 121) என வருவது காண்க.

இதனிடத்தே ஊன் பொதிந்து கொண்டு செல்வதை வியந்து இவ்வாசிரியர் ‘ஊன்பொதி பசுங்குடை’ யென்று பாடிய சிறப்பால் இவர் ஊன்பொதி பசுங்குடையார் எனப்படுகின்றார்.

இவர் பாட்டில் நகைச்சுவையும், இயற்கை நவிற்சியும், அறவுணர்வும் விரவி இவரது பெருமாண் புலமை நலத்தைப் புலப்படுத்தி நிற்கின்றன.”

குட்டுவன் கீரனார்

உ.வே.சா: “குட்டுவன் குட்ட நாட்டில் உள்ளவன்.

கீரனார் இவரது இயற்பெயர்.

இப்பெயர் உள்ள புலவர் சிலர் இருப்பவரின் இவர் பெயருக்குத் தேயப் பெயரை அடை மொழியாக்கினர் போலும்.”

ஒளவை: “மேலைக் கடற்கரையில் பொதிகை மலையை நடுவாகக் கொண்டு வடக்கிலும் தெற்கிலும் பரந்துகிடந்த நாடு வேளிர்க்குரிய வேணாடாகும்.

இதன் வடக்கில் குட்ட நாடும் தெற்கில் குமரிப்பகுதியான தென்பாண்டி நாடும் இருந்தன.

இவ்வேணாட்டை மேனாட்டு தாலமி முதலிய அறிஞர் ஆவிநாடெனக் குறித்தனர்.

இதனை ஆண்ட வேந்தர் வேள், வேளிர், வேண்மான் என்றும், வேணாட்டடிகள் என்றும் தம்மைக் கூறிக் கொண்டனர்.

இந் நாட்டின் தென் பகுதியில் பொயிலை சூழ்ந்து ஆய் அண்டிரனது நாடு இருந்தது.

செங்கோட்டை வட்டத்தில் ஆய்குடியைத் தலைமையாகக் கொண்டு ஆய்குடிப்பகுதி என்ற ஒரு பகுதி உள்ளது.

குட்ட நாட்டுச் சேரர்களுக்கும் தென்பாண்டி வேந்தர்க்கும் இடையிலிருந்த ஆய்நாடு கி.பி. எட்டு – ஒன்பதாம் நூற்றாண்டு வரையில் பல இன்னல்களுக்கிடையே ஆய்க் குடியில் தோன்றிய வேந்தர் ஆட்சியில் இருந்து வந்தது.

ஆய் அண்டிரன் ஆய்குடியைத் தோற்றுவித்த முதல்வனாகலாம் எனக் கருதுவர்.

குடட்டுவன் கீரனார் சிறப்புடைய குட்டுவர் குடியில் பிறந்தவர்.

கீரன் என்பது அவரது இயற்பெயர்.”
அள்ளூர்நன்முல்லையார் (306)

உவே.சா: “அள்ளூர் என்பது பாண்டி நாட்டில் சிவகங்கை கண்ணதோர் ஊர்;

இது ‘கொற்றச் செழியன் பிண்டநெல்லி னள்ளூ ரன்னவென், ஒண்டொடி’ (அகநா. 46) என்னும் இவர் பாடலால் விளங்குகின்றது.”

ஒளவை: “இவரது ஊர் அள்ளூர் என்பது.

தஞ்சை மாநாட்டில் உள்ள திருவாலங்காட்டிற்கும் அள்ளூரென்பது பெயர் என அவ்வூர் கல்வெட்டு (ஏ.ஆர். எண் 79 / 1926) கூறுகிறது.

திருநெல்வேலிக் கோயில் கல்வெட்டு ஒன்றில் (SSI Vol.5, N 438) அள்ளூர் ஒன்று காணப்படுகிறது.

இவரும் கொற்றச் செழியன் பிண்டநெல்லின் அள்ளூர் (அகம் 46) என்று பாண்டியனைக் குறித்துள்ளார்.

ஆதலால் இவர் பாண்டிநாட்டு அள்ளூரினரெனத் தெளியலாம்.”

கள்ளில் ஆத்திரையனார் 17
உ.வே.சா: “கள்ளில் என்பது தொண்டைநாட்டிலுள்ளதும் ஸ்ரீ ஞானச் சம்பந்தர் தேவாரம் பெற்றதுமான ஒரு சிவஸ்தலம்.

ஆத்திரையன் – அத்திரி குலத்தில் பிறந்தவன்.

இவரது இப்பெயர் குடிப்பெயர். இதனால் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்”

ஒளவை: “ஆத்திரையன் என்பது இவரது இயற்பெயர்.

இது ஆத்திரேயன் என்பதன் மரூஉ என்றும் எனவே இவர் பார்ப்பனர் ஆவார் என்றும் கருதுவர்.

இதனை ஆதிரையான் என்பதன் மரூஉவாகக் கொள்ளும் இடம் உண்டு”.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *