செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 47
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
பிறந்த வீடும் புகுந்த வீடும்
மகளிர் வாழ்க்கை மாட்சியுடையது .
மாக்கள் ஐந்தறிவுடையன அதன் உயர்வே மக்கள் என்ற ஆறறிவுடைய பிறவிகளாக அமைந்தன .
மக்களின் சீர்மையே மகள் என்றாயிற்று .
மகளிர் பிறப்பே மக்கட் பிறவியில் அறிவும் – அருமையும் கொண்டது என்று தமிழிலக்கியம் கூறும் .
எனினும் மகளிருக்குத் திருமண வாழ்வு தனித்த திறமுடையது ,
இந்த நிலையில் பிறந்த வீடு – புகுந்த வீடு என்ற இருநிலையில் பெருமிதம் காட்டும் ஒரு பாடல் காதல் சிறப்பைக் கவினுறக் காட்டுகிறது .
பிறந்த இல்லம் பெருமையும் – பெருமிதமும் கொண்டது .
புகுந்த இல்லமோ எளிமையும் – இனிமையும் கொண்டது .
இந்த இருவேறு நிலைகளைக்காட்டும் இந்தப் பாடல் சங்க இலக்கியத்தில் இல்லை என்றாலும் எந்த நூலிலிருந்தோ விடுபட்டிருக்க வேண்டும் .
எப்படியோ தனியாக – கனியாக இந்தப்பாடல் நம் கைக்கும் கிட்டியுள்ளது .
புதுக்கவிதைப் பொலிவோடு பாடலுக்கு விளக்கம் வரைந்துள்ளார் .
நம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் எடுத்துப் படித்த போது இனிப்பு ததும்பியதால் உங்கள் முன் படைக்கிறேன் .நீங்களும் சுவையுங்கள் ….
இமயத்தில் சேரன் எடுத்த கல்லில் – ஒரு சிலையை ஏற்றமிகு கண்ணகிக்குச் செதுக்கிவிட்டு மேலும்
எஞ்சியதில் இவள் மேனிதனைச் செதுக்கினரோ எனும் விதத்தில் கடைந்த கை கால், தோள்கள். அந்தக்
கற்பரசி சிலைமீது சொரிந்த மலர்களிலே சிறந்த மலரின் கவின் இதழ்களால் ஆனதுதான் அவளின் கன்னம்.
அவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் தெவிட்டாத தேனின் கிண்ணம் இனி இணைபிரியாதிருப்பதென இதயத்தில் பதித்துவிட்டார் காதல் சின்னம்
முற்றாமலிருக்கும் போதே அவர்தம் எண்ணத்தை முறித்துவிட வேண்டுமென்று பெற்றோர்கள் திட்டமிட்டார் – உற்றார் உறவினரைக் கூட்டி விட்டார்.
ஏழடுக்கு மாளிகையின் மேலடுக்கில் இருப்பவள் எம் மகள்.
அவனோ எழிலுடையான் ஐயமில்லை.
ஆனாலும் ஏழையன்றோ !
முத்தமணிக் குத்துவிளக்கை மாளிகை முற்றத்தில் வைப்பதன்றி முட்டக்கூரையில்லா வீட்டுத் திண்ணையிலே வைப்பாருண்டோ ?
இருப்பனைய உடலுடைய அடலேறு ! மறுக்கவில்லை ஆனாலும் துரும்பளவுப் பொன் சரடு செய்து நாங்கள் பெற்ற
கரும்பனைய திருமகளின் கழுத்தினிலே கட்டுதற்குக் கடுகளவும் செல்வமில்லாக் கடைந்தெடுத்த வறியனன்றோ ?
நெஞ்சறுதியிலே நிகரற்ற வீரனவன் அட்டியில்லை அதற்காக, நெருப்பின் பீடத்திலோர் மெழுகுப்பதுமையினை வைப்பாருண்டோ?
வஞ்சியெங்கள் குலமகளை வாஞ்சைமிகு வடிவழகை – அன்றாடம் கஞ்சிக்குப் பாடுபடும் குடும்பத்தில் கண்ணீரில் மிதக்கவிட ஒப்பமாட்டோம் !
அடி தோழி !, இங்கேவா ,அழகுமயில், சோலையிலே இருக்கின்றாள் ! முடிவிதுதான் பெற்றோரும் உற்றாரும் எடுத்ததென அவளிடத்தே கூறிவிடு ”
என்றுரைத்த செல்வச் செருக்குப் பெற்றோரின் ஆணைதனைச் சென்றுரைத்து மனம் மாற்றக் கிளம்பிவிட்டாள் அவள் தோழி!
மலர்கூடித் தென்றலிசையில் மகிழ்ந்தாடும் வனந்தனிலே அலர் தூற்றல் பற்றிக் கவலையின்றி வீற்றிருந்த அணங்கின்பால்
முகம் கோணிக்கொண்டு தோழி: முழுக் கதையும் கூறிவிட்டாள் !
தலைவிக்கு; அகம் நெருப்பாய்த் தகித்திடவே சூளுரைத்துப் பதில் சொன்னாள் !
“இரவெல்லாம் பெய்த பெருமழையில் வயல் ஈரங்கண்டு உரமேறிய பனைமரத்து நுகத்தடியைக் கொண்டு
ஆனைகளை ஏரில் பூட்டி ஆழமாய் உழுதுழுது பானைகளில் அள்ளிவந்த வெள்ளிவிதை விதைத்துப்
பொன்னையே விளைச்சலாக என் பெற்றோர் குவித்திடினும் என்னை யொருவற்கு நானே தந்தபின்னர்.
வெள்ளியென்ன பொன் என்ன வைரமணி மாடமென்ன கூடமென்ன துள்ளியோடும் அருவிநிறை தோட்டமென்ன துரவென்ன ?
வேண்டேன் எதுவும் நான் இந்தப் பிறந்தகத்தில் தீண்டேன் ஒரு பொருளும் என்னிரு கரத்தாலே !
கோடிப் பொன் கொண்டு வருவேன் என்றெண்ணிக் கொடியென்னைப் படரவிட அவரும் தோள் தந்தாரில்லை!
செங்கேழ் வரகின் பசுங்கதிர் கொய்து காத்து செங்குன்றந்தனிலே நன்கு உலர்த்தி எடுத்து
ஊடுபதர் போக்கி, உதவினோர்க்குத் தவறாது உதவி காடுதனில் விழுகின்ற விறகுகளைப் பொறுக்கி வந்து –
உப்பின்றி வெந்த குப்பைக் கீரையுடன் உண்ணும் தட்டும் இரவலாய்ப் பெற்று – வரகுச்சோறு
ஒன்றுவிட்டு ஒருநாள் தின்று கிடக்கவும், உடுத்துதற்கு மாற்றுத் துணியுமின்றிக்
கிழிந்த சேலையே அணிந்திடக் கிடைக்கவும் இழிந்ததோர் நிலையே எனக்கு வந்திடுமாயினும்,
அழிந்திடாது எமது காதல் என்றுரைத்திடுக தோழி; ஆளனிருக்குமிடமே எனக்கு அரண்மனை எனக் கூறிடுக ஓடி!
பிறந்த வீட்டில் செல்வப் பெருக்கம் இருக்கலாம் – எனினும் புகுந்த வீட்டுக் கூழ்தான் அமுதமென விளக்கிடுக தோழி!
கணவனென ஒருத்தி வரித்தவருடன் வாழ்வதுதான் கற்புநெறி வாழ்வென்றும் கண்ணியமிகு வாழ்வென்றும்
கணமும் இங்கு நின்றிடாமல் என் பெற்றோரிடம் சென்று கழறிடுக தோழி! காற்றெனவே கிளம்பிடுக தோழி!”
என்றவுடன்.
“இதற்குமேல் இங்கு எனக்கென்ன வேலை!” என்று இறகு கட்டாமலே பறந்து போனாள் தோழி!
மகள் சொன்ன பதிலுரையில் தவறொன்றுமில்லை அதனால்; மறுப்பொன்றும் கூறாமல் பெற்றோரும் மணநாளைக் குறித்துவிட்டார்!
இராமழை பெய்த ஈர ஈரத்துள் பனைநுகங் கொண்டு யானையேர் பூட்டி வெள்ளி விதைத்துப் பொன்னே விளையினும் வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே செங்கேழ் வரகுப் பசுங்கதிர் கொய்து கன்று காத்துக் குன்றில் உணக்கி ஊடுபதர் போக்கி முன் உதவினோர்க் குதவிக் காடுகழி இந்தனம் பாடுபார்த் தெடுத்துக் குப்பைக் கீரை உப்பின்றி வெந்ததை இரவல் தாலம் பரிவுடன் வாங்கிச் சோறது கொண்டு பிறல் அடைத்தே ஒன்றுவிட் டொருநாள் தின்று கிடப்பினும் நன்றே தோழிநம் கணவன் வாழ்வே.
பொருள் விளக்கம்:
நுகம் = நுகத்தடி ஈண்டிய = செல்வ மிகுந்த.
உணச்சி = காயவைத்து.
இந்தனம் = விறகு.
பாடு = விழுதல்.
தாலம் = உண்கலம்.
பரிவு = வருத்தம்.
பீறல் = சேலைக்கிழிவு.
குறிப்பு:
சங்க இலக்கியத் தொகுப்புகளில் இணைக்கப்படாமல் விடுபட்டுப் போன பாடல் இதுவென்றும்; தமிழறிஞர் தேவநேயப்பாவாணர் தேடியெடுத்துத் தந்ததென்றும், இந்தப் பாடலை என்னிடம் மதுரை யாதவர் கல்லூரி முதல்வர் முனைவர் தமிழ்க்குடிமகன் தந்து சங்கத்தமிழ் எழுதிடச் சொன்னார்.
அவருக்கு என் நன்றி.
தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Add a Comment