செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 48
உதயத்தின் கையில் ஒளிவீசும் வாள் !
ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்,
முரசொலியும் முளைத்த கதிரொளியும் நீதான் !
“காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான் !
பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த
பத்திரிக்கைப் பெண்ணே“
என்று புரட்சிப் பாவேந்தர் புகழ்ந்து தீட்டிய பாட்டு வரிகள் எழுத்துக்கு எழுத்து பொருத்தமாய் விளங்கி, நாளும் பொழுதும் முன்னேற்ற ஊர்வலம் நடத்தும் முரசொலி இதழுக்குப் பவள விழாக் காண்பது, கலைஞர் நம் தோளைக் கையால் தடவுவது போல் இனிப்பைத் தருகிறது.
கையகத்தாளில் கட்டுரைகளை எழுதி, கால் தேயத் தேய நடந்து, பின்னர் முயற்சியால் முழுத்தாளாகி முழத்தாள் ஆகி, இன்று நாட்டு வளர்ச்சிக்கும் அந்தத் தாள், தீட்டிய ஈட்டி முனை போல அரசியல் தீப்பொறிகளை அவ்வப்போது முரசொலி இதழாக நாளும் வளர்ந்து இன்று ஓங்கி ஒளிர்கிறது.
முரசொலி வெறும் தாளல்ல; இப்போது தளபதியின் கையில் தகத்தகாய ஒளிவீசும் வாள்!
கருத்துக் குருடர்களை வெட்டொன்று துண்டிரண்டாகக் கண் திறக்கச் செய்து விளக்கிக் காட்டும் வெற்றி வரலாற்றின் ஆவணம்.
நூறாண்டுகளைக் கண்டு நூற்றாண்டுகளைத் தாண்டிச் சென்று நம் சிந்தையணு ஒவ்வொன்றுக்கும் சிலிர்ப்பையும் பெருமிதத்தையும் சேர்க்கும் வெற்றி பெறுக என்று போற்றிப் புகழ்வது தமிழ் மக்களின் தனிப்பெருங் கடமையாகும் .
நான் பச்சையப்பர் கல்லூரியில் மாணவனாகப் படித்த நாளில் சென்னை அண்ணா சாலையில் ஆயிரம் விளக்குக்கும் 500 அடி நடந்தால் தென்னகம், திருவிளக்கு , என்றும் கவியரசர் கண்ணதாசன், மதியழகன், இராசாராம், ஏ.கே.வில்வம் பெயர் மறந்த போன அரசியல் வாணர்கள் அணிவகுத்துத் தத்தம் அரசியல் இதழ்களின் அலுவலகங்கள் அங்கே நடத்தி வந்தனர் .
ஒரே ஒரு தாள் தான் நின்றது வென்றது! .
எஞ்சிய தாள்கள் சருகுகளாக எங்கெங்கோ பறந்தன.
நாள் தவறாமல் முத்தமிழ்க் கலைஞரும்,முரசொலி மாறனும் கண்ணின் மணியாகக் காத்து வளர்த்த இதழ் முரசொலியாகும்.
முத்தமிழறிஞர் கலைஞர் 03.09.2005 அன்று தேசியச் சித்த மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் தொடக்க விழாவில் ஆற்றிய உரை:-
மருந்தென ஒன்று !
அண்மையில் சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் தேசியச் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை 3-9-2005 அன்று இந்தியப் பிரதமர் மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
அந்த நிறுவனம் அங்கே அமைவதற்காக என் ஆட்சிக் காலத்தில் 15 ஏக்கர் நிலம் வழங்கி, அந்த விழாவில் அடிக்கல் நாட்டியவன் என்ற காரணத்தினால் சித்த மருத்துவம் பற்றி இந்தியப் பிரதமர் எத்தகைய கருத்து கொண்டுள்ளார் என்பதை அறிந்திட இப்போது நடைபெற்ற தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரையை ஊன்றிப் படித்தேன்.
சித்த மருத்துவம் போன்று நாட்டு வைத்தியம் என்று சொல்லப்படுகிற முறைகளில் மக்களுக்கு ஆர்வம் குறைந்து; நம்பிக்கை ஏற்பட முடியாத சூழல் உருவாகிவரும் இந்தக் காலகட்டத்தில் பிரதமருடைய உரை எனக்கு மெத்தவும் ஆறுதல் அளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.
தலைவலி என்றால் உடனே ஒரு மாத்திரை – காய்ச்சல் வரும் போலத் தெரிந்தால் உடனடியாக டாக்டரைக் கூப்பிட்டு ஓர் ஊசி – இப்படியாக நாட்டு வைத்தியத்தை நடு வீதியில் நிறுத்தி விட்டு; ‘அலோபதி மருத்துவத்தில் மட்டுமே ஆர்வம் காட்டுகிற நிலை நாளும் வளர்ந்து வருகிறது நம் மக்களின் மத்தியில் !
உலகில் இந்தியா போன்ற பல நாடுகளில் சுமார் 30 ஆண்டுகளில் மூன்று மடங்கு மக்கள் தொகை அதிகமாகிவிட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும் போது – மாசு கட்டுப்பாடு பிரச்சினைகளும் – நோய் தடுப்பு முறைகள் போதாமையும் இயற்கையாகவே ஏற்பட்டு விட்டன என்பதை உணர முடிகிறது.
ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மட்டுமே மக்கள் தொகை மிகுதியாயிற்று என்ற நிலை மாறி, கோடிகள் கணக்கில் மக்கள் எண்ணிக்கை பெருகிடும்போது; நோய் நொடிகளும் பெருகிடத்தான் செய்கின்றன.
அந்த நோய்களைத் தடுக்கவும், குணப்படுத்தவும் – பல வகை சிகிச்சை முறைகளும் – மருந்துகளும் இருக்கின்றன.
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில், நோய்களைக் குணப்படுத்திட அறுவைச் சிகிச்சையும்,அலோபதி மருத்துவ முறையும் பெரும்பாலும் வரவேற்கப்படக் கூடியனவாக இருப்பினும் – இடையிடையே சித்த மருத்துவம் போன்ற பச்சிலை மற்றும் மூலிகைகளாலும் நோய்களை எதிர்த்து ஏற்ற பரிகாரம் காண முடியும் என உறுதி கூறும் மருத்துவர்களை நூற்றுக்கு நூறு மடங்கு அப்படியே நோயாளிகள் நம்பி விடுவது இல்லை .
நோயாளிக்கு முதலில் நம்பிக்கை கொள்வது; ஒரு முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிறது.
நாட்டு மருந்து எனப்படுவது எதுவாயினும் அது தரப்படும் முறையின் தரம், காலத்துக்கேற்ப நவீன மயமாக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியம்.
பறித்தெடுத்த பச்சிலை மூலிகைத் தழைகளாகவே கொடுப்பதைக் கண்டு முகஞ்சுளிக்கும் நோயாளி; அதே பச்சிலை அல்லது மூலிகைத் தழைகளைப் பக்குவம் செய்து மாத்திரையாகவோ அல்லது நுண்ணிய குழாயிலிட்டே” தரப்படும்போது முகம்கோணாமல் பெற்றுப் பயன்படுத்திக் கொள்வதைக் காணமுடிகிறதல்லவா !
அலோபதி முறை – நாட்டு மருத்துவ முறை என்ற இரண்டு முறைகளையும் அறவே தள்ளிவிட முடியாத ஏதாவது ஒரு முறை தேவைப்படுகிற அவசியம், சில சூழல்களில் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
அலோபதி முறையை ஒரு மருத்துவமனையில் ஐந்தாவது மாடிக்குச் செல்லும் மின்தூக்கி என்று வைத்துக் கொள்வோம்.
நடக்க முடியாமல் காலில் வலியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதில் குறிப்பிட்ட மாடிப்படிகளைக் கடந்து மருத்துவமனையின் ஐந்தாவது மாடி நீண்ட தாழ்வாரத்தை அடைந்த பிறகு; அப்போதும் காலில் வலியிருக்குமானால்; அந்த நீண்ட தாழ்வாரத்தைக் கடந்திட ‘சக்கர நாற்காலி ‘யைப் பயன் படுத்துவதில்லையா; அந்தச் சக்கர நாற்காலி போன்றதுதான் அலோபதியல்லாத ஏனைய சித்தா முதலிய மருத்துவ முறைகள் ஆகும் !
தேசியச் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத் திறப்பு விழாவில் இந்தியப் பிரதமர் ஆற்றிய உரையில் அலோபதி மருத்துவ முறையையும் – சித்த மருத்துவ முறையையும் – ஒப்பிட்டு இரண்டையும் சிலாகித்திருப்பது இருமுறைகளைக் கடைபிடிப்போரும் ஏற்கக் கூடியதாகும்.
தலைமையமைச்சரின் உரையில் முக்கியமான பகுதி;
” அலோபதி மருந்துகள் பொதுவாக நோய்களைக் குணமாக்குகின்றன.
நமது பாரம்பரியச் சித்தா போன்ற மருந்துகள் நோய்களைக் குணமாக்குவதுடன்; நோய்கள் வராமலே தடுக்கவும் பயன்படுகின்றன.
இவற்றைத் தயார்படுத்த நவீன முறைகளை மேலும் மேம்படுத்திட வேண்டும் ” என்பதாகும்.
” அலோபதி ” முறையில் மட்டுமே தற்காலத்தில் அறுவைச் சிகிச்சையும் நோய்களை நுணுக்கமாகக் கண்டறியும் ஆய்வு கருவிகளும் கையாளப்படுகின்றன –
அலோபதி அல்லாத நாட்டு மருத்துவ முறைகளில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாமல் அன்றாடம் தலைகாட்டுகிற நோய்களை எளிமையாகவும் குணப்படுத்திட முடிகிறது.
அத்தகைய நோய்கள் வராமலே தற்காப்பு செய்து கொள்ளவும் பழங்கள், காய்கறி. போன்றவைகளே மருந்துகள் போலவும் பயன்படுவதை அவரவர் அனுபவத்தில் உணருகிறோம்.
நெல், கோதுமை, பச்சைப்பயறு, துவரை, கொண்டைக் கடலை, மொச்சை, உளுந்து, எள், கொள்ளு ஆகிய நவதானியங்களை நன்றாகச் சுத்தப்படுத்தி, மாவாக அரைத்துப் பொடி செய்துகொண்டு, ஒவ்வொரு நாளும் அதிலே இரண்டு தேக்கரண்டி அளவிற்கு எடுத்து, அத்துடன் சம அளவில் சர்க்கரையைச் சேர்த்துப் பாலில் கலந்து காய்ச்சி அன்றாடம் காலை மாலை வேளைகளில் அருந்தினால் நமது உடல் நலத்துக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் கிடைக்கும் என்றும் , நன்றாகப் பசியெடுக்கும் என்றும், ஜீரணச் சக்தி பெருகுமென்றும், நோய்களை எதிர்க்கக் கூடிய சக்தி உண்டாகுமென்றும், உடலுக்கு நல்ல வலிமை ஏற்படும் என்றும் சிறு வயதில் என்னுடைய திருக்குவளை கிராமத்திற்குப் பக்கத்தில் உள்ள காருகுடி என்ற கிராமத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் ஒருவர் கூறியது எனக்கு இன்றைக்கும் நன்றாக நினைவில் உள்ளது.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என, அன்றைக்கே மருத்துவர்க்கெல்லாம் மேலான மனித நேயமிக்க மருத்துவர் அய்யன் வள்ளுவர்; திருக்குறளில் “அருந்திய உணவு செரிப்பதற்குக் கால அளவு தந்து; பின்ன உணவு அருந்தினால் அவர்க்கு மருந்தென ஒன்று வேண்டாம் என்று கூறியிருப்பது கூர்ந்து கவனித்துப் பின்பற்றத்தக்கது.
தொடர்புக்கு – thamizhavvai@gmail.com

Add a Comment