POST: 2022-04-15T10:06:59+05:30

உரைவேந்தர் ஒளவை துரைசாமி
புகழ் வணக்கப் பா !

ஆன்றோர் ஔவை
துரைசாமி
அவர்நூல் யாவும்
நீ சேமி !

ஊன்றிப் படித்தே
வருவாய் நீ
உயர்வாய் வாழ்வில்
பெரிதாய் நீ !

படிப்படி யாகவே
வளர்ந்திட்டார்
பல்கலைக் கழகமும்
நுழைந்திட்டார் !

துடிப்புடன் விரிவுரை
ஆற்றிட்டார்
தொல்தமிழ்ப்
பெருமிதம்
சாற்றிட்டார் !

ஔவை பெயரில்
அவர்குப்பம்
அறிவுக் கடலில்
அவர்தெப்பம் !

ஔவை குப்பமே
முன்னொட்டு
அவரோ தமிழின்
தேன்சிட்டு !

பாரோர் வியக்கும்
உரைவேந்தர்
பண்பில் சிறந்த
தமிழ்மாந்தர் !

சீரோர் போற்றும்
நிறைவேந்தர்
செயலை முடிக்கும்
மறவேந்தர் !

ஆய்வுக் கட்டுரை
எழுதிட்டார்
அருந்தமிழ் இதழ்களில்
வெளியிட்டார் !

ஓய்வே இன்றி
உழைத்திட்டார்
உலகில் தமிழால்
நிலைத்திட்டார் !

பட்டம் பதக்கம்
குவித்திட்டார்
பன்முக ஆற்றல்
படைத்திட்டார் !

தொட்ட யாவும்
முடித்திட்டார்
தோல்வியை விரட்டி
அடித்திட்டார் !

சேர மன்னன்
வரலாறே
செய்தார் பற்பல
பலவாறே !

நேரம் கருதி
நடந்தாரே
நெருப்பாய் எதிலும்
நிமிர்ந்தாரே !

ஆற்றொழுக் காண
மாணாக்கர்
அமைந்திட இவரே
உருவாக்கர் !

நூற்றுக் கணக்கில்
கற்றிட்டார்
நுண்மாண் நுழைபுலம்
பெற்றிட்டார் !

அச்சில் வராத
நூலுண்டு
அவையும் சுவைத்தேன்
கற்கண்டு !

உச்சிப் புகழைத்
தான்கொண்டு
ஓங்கும் இவர்போல்
யாருண்டு ?

வேங்கட சாமி
விட்டதையே
வீறுடன் இயற்றிய
துரைசாமி !

தாங்கிடத் தமிழுரை
தந்தவரை
தாங்குவோம் வையகம்
உள்ளவரை !

– தனித்தமிழ் வேங்கை

மறத்தமிழ் வேந்தன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *