POST: 2022-04-23T10:21:21+05:30

எக்காலத்திற்கும் பொருத்தமானவர் ஷேக்ஸ்பியர். (23.4.1564) 459 ஆம் பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை

முனைவர் ஔவை அருள்,

இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

அன்பு, பரிவு, மகிழ்ச்சி, இலட்சியம், வெறுமை, பொறாமை, பேராசை மற்றும் துக்கம் போன்ற மனிதர்களின் உணர்ச்சிகளைப் பற்றிய ஆய்வில் ஷேக்ஸ்பியர் ஆழ்ந்த முடிபுகளைக் கொண்டிருந்தார்.

பெரிய அறிவியலின் சாதனைகள் போன்று, ஷேக்ஸ்பியர், ஹோமர், காளிதாசர் மற்றும் வியாசர், சங்கப் புலவர்கள் ஆகியோர் மாந்தர் குணத்தின் நிலையான தன்மையை நொடிக்கு நொடி, அங்குமிங்கும் சுட்டியிருக்கிறார்கள்.

இலக்கியத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படும் பிரச்சினைகளில் ஒன்று, தற்போதுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் காலத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன என்பதாகும்.

இக்காலம் வானியற்பியல், விண்வெளிப் பயணம், நரம்பியல், மூலக்கூறு உயிரியல், கணினிகள் மற்றும் தொலைபேசிகள் போன்றவற்றின் காலமாகும்.

சீர்குலைவு, உடல் தேய்வு, கரோனா தீநுண்மி, சில வகையான புற்றுநோய்கள் மற்றும் நரம்பியல் அழிவு போன்ற சில நோய்களைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் மனிதன் மருந்தைக் கண்டுபிடித்து விட்டான்.

மனித வாழ்வு எவ்வளவுதான் அதிகரித்தாலும், தற்போதைய விஞ்ஞான முடிபின்படி, 115 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட முடியாததாக உள்ளது.

அப்படியானால், இலக்கியம் மற்றும் குறிப்பாக ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் மற்றும் கவிதைகளில் திளைப்பதில் வீணடிக்க வேண்டுமா என்று சிலர் வினவுகின்றனர்?

இக்கேள்விக்குப் பதில் சொல்வது கடினமல்ல.

எல்லாவற்றிற்கும் மேலாக, மேலே குறிப்பிடப்பட்ட பெரிய முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், மனிதன் அடிப்படையில் ஓர் உயிரினம்; மற்ற உயிரினங்களைவிட தனித்துவமானவன்.

அதனையே ‘ஹேம்லெட்’ நாடகத்தில் ஷேக்ஸ்பியர் பின்வரும் வரிகளில் கருதுகிறார்:

“மனிதன் என்னே ஒரு தனித்துவம் வாய்ந்தவன்!
எவ்வளவு உன்னதமானவன்! எல்லையற்ற அறிவுடையவன்!
எதிர்பார்ப்பில் கடவுளைப் போன்றவன்,
உலகின் அழகு,
விலங்குகளின் சிறப்பிற்கோர் எடுத்துக்காட்டு”.

எனவே, முன்னெப்போதையும் விட, கவலை சூழ்ந்த நம்முடைய உலகில், சிறந்த நாடகங்களையும் கவிதைகளையும் படிக்க வேண்டியது கட்டாயமாகும்.

மேலே குறிப்பிட்டுள்ள ஆய்வுப்பொருளில் கவிஞர்கள் தம் எண்ணங்களை எழுதிக் காட்டி, தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால், “நான் அத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்த முடிந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன்” என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்ளும் நிலையில், சொல்லாட்சிக்கலை மற்றும் இசையுடன் தங்கள் கருத்துகளை நாடக மாந்தர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

ஷேக்ஸ்பியரின் கல்வி குறித்து மிகுதியாக அறிய முடியவில்லை.

அவருடைய தாயார் அவருக்குக் கிரேக்கப் பழங்கதைகள் மற்றும் தேவதைக் கதைகளைக் கூறியிருக்கலாம்.

அவற்றில் சில அவருடைய நாடகங்களில் அவர் குறிப்பிடுவதையும், மேற்கோளும் மிகவும் காட்டப்படுகின்றன.

அவர் படித்த முதல் பள்ளியில் எழுத்துகள், எண்கள் மற்றும் இறைவனின் பிரார்த்தனையைக் கொண்ட குழந்தைகளுக்கான அரிச்சுவடி மூலம் தொடக்கக் கல்வியைக் கற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் இரண்டாவதாக, கிங்ஸ் பிளேசில், இலத்தீன் மற்றும் செவ்வியல் இலக்கியங்கள் பற்றிய அறிவைப் பெற்றதனால், அவரது நாடகங்களில் நல்ல விளைவு ஏற்பட்டது.

அவரது கதைக் களங்களுக்கான சில சிந்தனைகள் புளூடார்க்கின் வாழ்க்கை மற்றும் ஹோலின்ஷெட் வரலாற்றிலிருந்து அவர் பெற்றார்.

அப்போது அவருக்கு வாய்த்த சில ஆசிரியர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பட்டதாரிகள் ஆவார்கள்.

அவர் கவிதை ஆர்வத்துடன், பள்ளியில் உடனிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நடத்தை மற்றும் வாழ்க்கை முறை மற்றும் ஸ்ட்ராட்போர்டிலும் பின்னர் இலண்டனில் அவரைச் சுற்றியுள்ள பல்வேறு பிரிவு மக்களைக் கூர்ந்து கவனித்ததில் அவரது சிந்தனை வளமடைந்தது.

இந்தப் பரந்த சிந்தனையானது அவரது நாடகங்களைப் பொன்மயமாக்கியது.

ஷெல்லி தனது “வானம்பாடி” என்ற கவிதையில் பின்வரும் வரிகளை எழுதியபோது அவர் ஷேக்ஸ்பியரை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

“நான் மறைந்த கவிஞன் போல அதை நம்ப முனைகிறேன்.
சிந்தனையின் வெளிச்சத்தில்,
தடையற்ற பாடல்களைப் பாடுவதில்,
உலகை உருவாக்குவதற்கு,
நம்பிக்கையுடன் கூடிய ஒத்துணர்வு சில நிலைகளில் தேவையில்லை”.

இந்த வரிகளை எழுதும் போது, கவிஞர்கள் அவர்களின் சொந்த ஆக்கபூர்வமான தூண்டுதலைத் தெரிவிப்பதற்கு உலகம் அவர்களைக் கவனிக்கும் வரை, யாரும் கேட்காமலேயே கவிதைகளைத் தாமாக எழுதுகிறார்கள்,

வானம்பாடிப் பறவையும் அதே போல் அதன் மெல்லிசைப் பாடல்களை எவரும் அழைக்காமலேயே பாடுகிறது.

நாடகங்களை எழுதுவதற்கும் ஷேக்ஸ்பியரை யாரும் வற்புறுத்தவில்லை.

அவர் தனது சொந்த மகிழ்ச்சிக்காகவும் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காகவும் எழுதினார்.

எனவே, நம் மனநிறைவுக்காக மட்டுமல்ல, அவை தரும் மகிழ்ச்சிக்காகவும் நாம் அவற்றைப் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இருப்பினும், நான் மேலே கூறிய அனைத்தையும் மீறி, ஷேக்ஸ்பியரின் படைப்புகளைப் படிக்கும் ஆர்வமின்மையைப் பொதுமக்களிடையே இருப்பதைக் கண்டு ஏன் இத்தகைய உற்சாகமின்மை ஏற்பட்டது?

புகழ்பெற்ற தத்துவஞானியும் கணிதவியலாளருமான பெர்ட்ரான்ட் ரசலின் கூற்று:-

“பள்ளிக் குழந்தைகள், அவர்களின் சலிப்பூட்டும் வாழ்க்கைமுறையின் விளைவாக, ஷேக்ஸ்பியரின் சில பகுதிகளை இதயபூர்வமாகக் கற்றுக்கொண்டு அவருடன் ஒன்றி விடுவர்.

பள்ளிக்குழந்தைகள், ஷேக்ஸ்பியரை நேரில் சந்தித்திருந்தால், பெரும் வியப்பில் ஆழ்ந்திருப்பார்கள்.

மேலும் அவரைப் பற்றி இதுவரையில் கேள்விப்பட்டிருக்கவில்லை என்றால், அவர் எழுதியதைப் படித்துப் பலருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியால் அவர்கள் வழிநடத்தப்படலாம்.

ஆனால் பள்ளியில் அவர்கள் அவருக்கு எதிராகக் கற்பிக்கப்பட்டிருந்தால் அவர்களால் ஷேக்ஸ்பியரின் எழுத்துகளை முழுமையாக அனுபவிக்கவியலாது.

ஷேக்ஸ்பியரின் எழுத்துகளை பள்ளிக்குழந்தைகளைச் சலிப்பூட்டுவதற்காக எழுதப்படவில்லை.

மாறாக, அவர் பார்வையாளர்களை மகிழ்விக்கும் நோக்கில் எழுதினார்.

அவரது படைப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்றால், நீங்கள் அவரைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது” என்பதாகும்.

என்னைப் பொறுத்தவரை, பள்ளிக்குழந்தைகள் மட்டுமின்றி, அனைவருக்கும் இந்த அறிவுரை பொருத்தமாகும்.

இருப்பினும், ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் ஒருவர் மகிழ்ச்சியைக் காண விரும்பினால், எதிலிருந்து ஒருவர் தொடங்கலாம்?

ஷேக்ஸ்பியரின் அற்புதமான நாடகங்களில் உள்ள சிறந்த பத்திகளின் முழுமையான இசையை அதன் பொருள் புரியவில்லை என்றாலும். முதலில் படித்து மகிழ வேண்டும்.

அவர் இசையை ரசிக்கத் தொடங்கும் போது, படிப்படியாக அதன் பொருளைப் புரிந்து கொள்ளலாம்.

பொருளைப் புரிந்துகொண்ட பிறகு, அவரின் மதிப்பினை உயர்த்துவதற்கு ஷேக்ஸ்பியரின் விமர்சனங்களையும் படிக்கலாம்.

ஹங்கேரிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அட்மேன் ஸ்டீபன் பேக்கர் என்பவர் ஆங்கில மொழியை ஏற்றுக்கொண்டு, அம்மொழியானது,

“தேவதூதர்களின் மொழியாகப் பரலோகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது” என்று எழுதினார்.

ஆங்கிலம் சொர்க்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவருடன் உடன்பட நான் முனைகிறேன்.

ஏனெனில், ஷேக்ஸ்பியரின் மொழியாக அது அடையாளப் படுத்தப்படுகிறது என்று நான் நம்புகிறேன்.

ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனையும், நீல்ஸ்போர், வெர்னெர் ஹெய்சென்பர்க், பால்டைராக் போன்றோரையும் கூட வியந்து போற்றியதுண்டு.

ஹெய்சென்பெர்க்கினுடைய ‘உறுதியற்ற தன்மை கோட்பாட்டைப் படிக்கும் பொழுது அல்லது டைராக்கினுடைய சமன்பாட்டைப் புரிந்து கொள்ளும் பொழுது ஒருவிதக் குதூகலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்.

ஆனால், அதனை, ஹேம்லெட் நாடகத்தில் ‘இருப்பதா? மரிப்பதா?’ அல்லது,

லியர் மன்னனுடைய ‘அன்பார்ந்த இயற்கையே, கேள்! பாசமிகு தேவதையே கேள்’
போன்றவற்றைப் படிக்கும்போது ஏற்படுகின்ற மயிர்க்கூச்செரியச் செய்யும் அனுபவத்துடன் ஒப்பிட முடியாது.

மேலும், நான்டார்வினையும், பிரான்சிஸ்கிரிக், ஜிம்வாட்சனையும் போற்றுகிறேன்.

ஷேக்ஸ்பியர் உன்னதமானதொரு மேதை.

தொழில்நுட்பத்தின் உச்சக்கட்டக் காலத்தில் உருவாக்கப்பட்ட பூதாகரமான எந்திரங்களோ, பேரண்டப் பெருவெளியில் மனிதன் தனது எல்லைகட்டிய அறிவைக் கொண்டு துருவி அறிந்த அறிவாக்கமோ, கேட்கப் படாத மெல்லிசை என்று கிரீஸ் நாட்டுப் பழஞ்சி்ன்னங்களை கீட்ஸ் குறிப்பிட்டானே அதன் இனிமையோ, எல்ஜின் பளிங்குகளின் எழில் நலமோ, உள்ளத்தை உருக்கவல்ல பெத்தோவனின் இசையோ ஷேக்ஸ்பியரின் எழுச்சிமிகு பாடல்கள் முன்னே போட்டியிட்டு வெற்றி கொள்ளவல்லவை அல்ல!

பன்னெடுங்காலத்திற்குப் பின்னர், மனிதயினம் மறைந்து நீண்ட காலம் கழிந்த பிறகு, ஏதேனும் அந்நிய நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் நமது எளிய புவிக்கோளத்திற்கு வருகைதர நேர்ந்தால், ஐன்ஸ்டினுடைய சார்பியல் கொள்கையையோ, டைரேக்கினுடைய குவாண்டம் இயந்திரவியலையோ, டார்வினுடைய பரிணாமக் கொள்கையையோ, கிரிக்கினுடைய இரட்டைச் சுழல் தத்துவத்தையோ, ஆன்மாவை உலுக்கும் சேக்ஸ்பியருடைய கவிதைகளைப் போலவியந்து போற்றப் போவதில்லை!

ஷேக்ஸ்பியர் மீது நான் கொண்டுள்ள அளவுகடந்த ஈடுபாட்டினை, பிரிட்டனின் பலவண்ண வரலாற்றின்பாலோ, பேரரசாக உயர்ந்தது குறித்தோ, பிரித்தானிய நாகரிகத்தின் மேலெழுந்தவாரியான பெருமைகளின் பாலோ பெரும் மதிப்பு கொண்டு விட்டதாகக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

ஏனெனில் பெரும்பாலும் அப்படித்தான் கருதப்படுகிறது.

நான் சேக்ஸ்பியரை மட்டிலிலுமே ஆராதிக்கிறேன்.

மேலும், ஷேக்ஸ்பியர் குறித்துத் தில்லிப் பல்கலைக்கழகத்தில், ‘The Translations and Adaptations of Shakespeare’s plays in Tamil’ என்ற தலைப்பில் 25 ஆண்டுகளுக்கு முன்பு முனைவர் பட்டம் பெற்றவனாவேன்.

ஷேக்ஸ்பியர் எழுதிய 39 நாடகங்களில், 36 நாடகங்கள் தமிழில் பல நிலைகளில் பல அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

1876-ஆம் ஆண்டு முதன்முதலாக, தலைமைச் செயலகத்தின் மொழிபெயர்ப்பாளராக விளங்கிய வி.விஸ்வநாதப் பிள்ளை, ‘வணிகபுரி வணிகன்’ (The Merchant of Venice) என்னும் நாடகத்தைத் தமிழாக்கம் செய்தவராவார்.

நாடகக்கலைத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார். ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களான, ‘அமலாதித்தியன் (ஹேம்லட்), மகபதி (மேக்பத்), ஒத்தெல்லோ, ஆகிய நாடகங்களை மேடை நாடகங்களாக நடத்திய பெருந்தகையாவார்.

பொம்மலாட்டம் என்பதைப் போலப் பம்மலாட்டம் என்றே தமிழறிஞர்கள் அக்காலத்தில் பம்மல் சம்பந்த முதலியாரைப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

நீதியரசர் மகராஜன், பல ஷேக்ஸ்பியர் நாடகங்களைத் தமிழாக்கம் செய்த அறிஞராவார்.

இலங்கையைச் சேர்ந்த விபுலானந்த அடிகள் ஆங்கிலப் புலவர்களுள் சூளாமணியாகத் திகழும் செகசிற்பியருக்கு (சேக்சுபியர்) ‘மதங்க சூளாமணி’ எனப் பெயரிட்டார்.

மதங்கர் என்பது கூத்தரைக் குறிக்கும் சொல்லாகும்.

சூளாமணி என்பது மகுடத்தில் அணியும் மாமணி எனப் பொருள்படும்.

செகசிற்பியருக்கு ‘மதங்க சூளாமணி’ எனச் சுவாமிகள் பெயரிட்டது பொருத்தமாகும்.

மதங்க சூளாமணி என்னும் நூலில் செகசிற்பியரின் நாடகங்களிற் சேக்சுபியர் என்னும் பெயரினைச் ‘செகசிற்பியர்’ எனவும் மாக்பெத், டன்கன், ஆத்ரே, போரெஸ்டர், ரோமியோ முதலிய பெயர்களை முறையே ‘மகபதி, இடங்கன், ஆதிரை, இரம்மியன்’ எனத் தமிழாக்கஞ் செய்தார்.

சேக்சுபியர் நாடகங்களில் பன்னிரண்டினைத் தாமே விரும்பித் தேர்ந்த நிலையில் அவற்றின் சிறப்பியல்புகளை ‘எடுத்துக்காட்டியல்’ என்னும் இயலில் ஒப்பீட்டு வகையில் ஆராய்ந்துள்ளார்.

இந்நூல் மூன்று இயல்களைக் கொண்டது.

இதன் முதலாம் இயலாகிய ‘உறுப்பியலில்‘ நாடக இலக்கணம் பற்றித் தமிழ் இலக்கண நூல்களும் சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களும் காட்டும் கருத்துகள் விரித்துரைக்கப்பட்டுள்ளன.

இதன் இறுதி இயலாகிய ‘ஒழிபியலில்’ வடமொழிப் புலவர் தனஞ்செயன் முதலானோர் கூறியவற்றையும் ஆராய்ந்துள்ளார்.

அடிகள் செகசிற்பியரின் நாடகங்களைப் பெரும்பாலும் தமிழ் உரைநடையில் பெயர்த்துள்ளார்.

அவற்றுட் சுவை மிகுந்த உரையாடற் பகுதிகள் சிலவற்றினை மட்டும் செய்யுளில் மொழி பெயர்த்துள்ளார்.

செகசிற்பியரின் நாடகங்களில் வரும் கருத்துச் சுவைமிக்க தொடர்களை மூலச்சுவை குன்றாத வண்ணம் எவ்வாறு தமிழாக்கம் செய்தார் என்பதற்கு ஒரு சான்று காணலாம்.

‘விரும்பிய வண்ணமே’ (As you like it) என்னும் நாடகத்தில்,

“உலக வாழ்வே நாடகமாகுமென்றும் உலக அரங்கில் தாம் அடைந்த துன்பத்தை விட அதிகமான துன்பத்தைக் கொண்ட காட்சிகளில் மக்கள் அனைவரும் நடிக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.

மனித வாழ்க்கையை ஏழு கட்டங்களாகப் புனைந்தார்.

அங்கண் உலகத்தினையும் ஆடரங்கம் எனலாம் என்று சொன்னார்.

“அஞ்சியர்க்குச் சத மரணம்; அஞ்சாத நெஞ்சத்து ஆடவனுக்கு ஒருமரணம் அவனிமிசை பிறந்தோர் துஞ்சுவர்
(Cowards die many times before their deaths; The valiant never taste of death but once) என்று அறிந்திருந்தும்,

சாதலுக்கு நடுங்கும் துன்மதி மூடரைக் கண்டால் புன்னகை செய்பவன் நான்”

என்ற சீசர் வரிகளைப் பலர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

‘‘பல்லாயிரம் கோணங்களில் சிந்திக்கவல்ல ஷேக்ஸ்பியர்’’ (myriad minded Shakespeare) என்கிறார்.

எந்நாட்டவராலும், எக்காலத்தவராலும் ஒருமித்த குரலில் இம்மண்கண்ட மா மேதை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவர் சேக்ஸ்பியர் ஒருவர் மட்டிலுமே.

ஷேக்ஸ்பியர் இன்று மட்டுமல்ல, பென் ஜான்சன் எழுதியது போலவும் எக்காலத்திற்கும் பொருத்தமானவர்:

“அவர் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமல்லாமல், எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானவர்”.

தொடர்புக்கு:
dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *