தினசெய்தி. 24.4.2022,பக்கம் 4
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 106
நாவலர் போற்றிய நாவேந்தர்
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
சங்க இலக்கியங்களில் தோய்ந்தவரும், நாட்டுப்புற இலக்கியங்களைத் தொகுப்பதில் முன்னோடியான, புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலைச் சிவபுரிக்கு அடுத்துள்ள வேந்தன்பட்டி ஊரைச் சார்ந்தவர் பேராசிரியர் மெ. சுந்தரம். இவர் சிறந்த பேச்சாளர்.
பாரதியாரின் நூறு கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு, ‘குமரன்’, ‘செட்டிநாடு’ போன்ற இதழ்களின் ஆசிரியராகவும் மிளிர்ந்துள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரியின் தலைமைப் பேராசிரியராகவும், தமிழ்த் துறையின் தலைவருமாகவும் விளங்கிய முனைவர் மெ. சுந்தரம் 09.08.1974-ஆம் ஆண்டு எந்தையாருக்கு (கைப்பட எழுதி) வழங்கிய பாராட்டுக் கடிதம்:-
“This is to certify that Thiru Avvai Natarajan, M.A., M.Litt., Ph.D., is known to me for the past so many years.
He had been a student of mine in the Theyagaraja College, Madurai.
I have observed him to be an excellent gentleman with affable manner. He comes from a traditional family of Tamil scholars and is himself a good Tamil scholar.
His talents for research have been recently rewarded with the award of Ph.D.
He is also a popular orator.
I wish him all success.”
எந்தையாருடன் இணைந்து பணியாற்றிய
திரு. கு. பாலசுப்பிரமணியன் மடல் வாயிலாக அண்மையில் எனக்குத் தெரிவித்த தகவல்:-
“அமெரிக்காவிலுள்ள உலகப் பல்கலைக்கழகம் சார்பாகப் பேராசிரியர் ஜோனாஸ் நெகால்காவும், நீதியரசர் மோகனும் இணைந்து முனைவர் ஔவை நடராசனுக்கும், திரு. இராஜவேலு, எழுத்தாளர் விக்ரமன், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ஆகியோருக்கு மதிப்புறு முதுமுனைவர் பட்டம் 14.09.1979 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் மாவட்ட மைய நூலகம், எல்.எல்.ஏ. கட்டடம் அண்ணாசாலையில் வழங்கிய நிகழ்வில் வழங்கிய கலந்து கொண்ட பெரும்பேறு கிடைக்கப் பெற்றேன்.
அவ்விழாவில் ‘சத்தியக் கங்கை’ இதழின் ஆசிரியர் திரு. பகீரதன் விருதாளர்களைப் பற்றிய அறிமுக உரையையும்,
வரலாற்று புதின ஆசிரியர் திரு. சாண்டில்யன் பாராட்டுரையும் வழங்கியதோடு,
இவ்விழாவைச் சீரும் சிறப்புமாக டாக்டர் கிருஷ்ணா ஸ்ரீனிவாஸ் நடத்தியதும் குறிப்பிடத்தக்கதாகும்.
எங்கள் இயக்குநர் பெருந்தகை, 1981-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டிற்கு வரவேற்புக்குழுச் செயலாளராக இருந்து, அறிஞர் பெருமக்களை
மாடமலி கூடற்பெருநகர்க்கு அழைக்கும் பெருமை பெற்றவராவார்.
அவ்வமயம் என்னையும் அவர் பணிக்குத் துணைபுரிய அவருடைய அணுக்க உதவியாளராக என்னை அமர்த்தினார்.
அரசு ஈப்பு ஒன்று என் பொறுப்பில் விடப்பட்டு, அறிஞர், எழுத்தாளர், கவிஞர் அனைவருக்கும் மாநாட்டிற்கான அரசு அழைப்பிதழை நேரில் கொடுக்கும் பணியைச் செவ்வனே செய்யும் பெருமை பெற்றதை எந்நாளும் மறவாமல் என் நினைவில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளதை உங்களிடம் மீளத் தெரிவிப்பதில் பெருமிதமடைவதோடு, 1981-ஆம் ஆண்டு, மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், மாண்புமிகு இந்தியத் தலைமை அமைச்சர் திருமதி இந்திரா காந்தியின் ஆங்கில உரையினை நேரடித் தமிழ் உரைபெயர்ப்பு செய்த பெருமையும் எங்கள் இயக்குநர் பெருந்தகை ஔவை அவர்களையே சாரும்.
மாநாடு நிறைவடைந்த பிறகு, மாண்புமிகு நிதியமைச்சர் டாக்டர் இரா. நெடுஞ்செழியன், எங்கள் இயக்குநர் ஔவை அவர்களுக்கு அரசு நேர்முகக் கடிதம் (எண். 84961/உதம/80, நாள்: 15.07.1981) வாயிலாகத் தெரிவித்த பாராட்டு மடலின் படி ஒன்று, நாற்பதாண்டுகளுக்கு மேல் என்னுடைய தனிக் கோப்பில் திரட்டி வைத்திருந்ததை உங்கள் பார்வைக்குப் பதிவிடுவதில் பெருமிதமடைகிறேன்.
“பேரன்புடையீர்,
பொருள்: ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு – மதுரை, 1981 – மாநாட்டு பணி பாராட்டிதழ்.
1981 சனவரித் திங்கள் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் சிறப்பான வெற்றிக்குத் தாங்கள் (டாக்டர் ஔவை நடராசன், மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர்) பெரிதும் துணை புரிந்தீர்கள்.
தமிழ் நாடு அரசு சார்பாக உங்களுக்கு என் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசின் பாராட்டுதலின் சின்னமாகத் தஞ்சாவூர் கலைத்தட்டு ஒன்றை வழங்கி மகிழ்கிறேன்.”
எங்கள் இயக்குநர் பெருந்தகை, அந்நாட்களில் தலைமைச் செயலாளர், பொதுத் துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர் என்று அனைவரிடமும் வாய்ப்பு நேர்ந்தபோது என்னை உயர்வாக அறிமுகம் செய்துள்ளார்.
இதன் காரணமாகவே, நான் நிதித்துறை வரவு-செலவு திட்ட வெளியீடுகளின் மொழியாக்கப் பொறுப்பு அலுவலராக ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வாய்ப்பும் பெருமையும் பெற்றவன் ஆவேன்.
தமிழ் நாட்டரசில் இன்றளவும் இந்திய ஆட்சிப்பணி சார்ந்த உயர் அலுவலர்கள் என்மீது அன்பும் பெருமதிப்பும் காட்டிவரும் சிறப்பினை நான் பெறுவதற்கு அத்தனை பெருமையும் ஔவையையே சாரும் என்று பணிவுடன் தெரிவிக்க விழைகிறேன்.
ஔவை அவர்கள் பல்வேறு காலக் கட்டங்களில் எங்கள் துறைப் பணியாளர்களுடன் அமர்ந்து பல்வேறு சுவையான விவாதங்களை நடத்துவதுண்டு.
இலக்கியச் செல்வராக விளங்கிய இயக்குநர் அவர்கள், எல்லோரும் இலக்கியப்புலமை, தமிழ்ப்புலமை மற்றும் ஆங்கிலப் புலமையுடையவராக இருக்க வேண்டும், புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார்.”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (30)
பழையவுரை:
சேரலாத (16) கடுஞ்சின விறல் வேள் களிறூர்ந்தாங்கு (28) யானை (18) யெருத்த மேல் கொண்டு பொலிந்த நின் (19) பலர் புகழ் செல்வம் கண்டிகும் (20) என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற் சொல்லியது.
அவன் வெற்றிச் சிறப்பு கூறியவாறாயிற்றென்பது.”
ஔவை: செவ்வேள்கடல் புகுந்து சூருடை முழுமுதல் தடிந்து களிறூர்ந்தது போலச் சேரலாதனும் கடல் புகுந்து கடம்பு முதல் தடிந்து யானை யெருத்தம் மேல்கொண்டு பொலிந்ததும், ஆரிய மன்னர் மறந்தபக் கடந்ததும் கூறியது அவன் வெற்றிச் சிறப்பு; “நின்பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகும்” என்பது செல்வச் சிறப்பு. (பக். 71-72)
ஒளவையவர்கள் பழைய உரையாசிரியர் கருத்துக்களை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை;
அந்த உரையைச்சில இடங்களில் தழுவுதல்,
சில இடங்களில் அதற்கு மேலும் விளக்கம் அளித்தல்,
சில இடங்களில் அவற்றை மறுத்தல்,
சிலபாடல்களுக்குப் புத்துரை வரைதல் எனும் நிலையில் உரைப்போக்கு நூல் முழுதும் தொடர்கிறது.
பழைய உரையைத் தழுவுதல் /விளக்குதல்
பழையவுரைகாரர் “தொழில் நவில் யானை” என்றது போர்க்குரிய யானை என்று எல்லாரானும் சொல்லப்படுகின்ற யானை என்றவாறு என்றும், ‘இச் சிறப்பானும் முன்நின்ற அடைச்சிறப்பானும் இதற்கு ‘தொழில் நவில் யானை’ என்று பெயராயிற்று’ என்றும் கூறுவர்.
ஒளவை: “துதிக்கையை யுயர்த்து நெற்றியை மேலே நிமிர்த்து போர்வெறி கொண்டு மறலும் யானையின் செயலை, ‘நுதலணந்து எழுதரும்’ என்றார்.
முரசு முழக்கம் கேட்டதும் வெளிலிடத்தே பிணிக்கப் பெற்றிருக்கும் பிணிப்பினை யவிழ்த்து விடுத்தற்குட் கழியும் காலத்தினருமையையும், அதனால் விளையும் கேட்டினையும் நுனித்துணர்ந்து ஒழுங்கு குலையாது போர்க்குரிய செயல் மேற்கொண்டு பாசறை நோக்கித் தானே செல்லும் சால்புடைமையை விதந்து “தொழில் நவில் யானை” எனச் சிறப்பித்தமையால் இப்பாட்டு இப்பெயர் பெறுவதாயிற்று”.
முன்னே வினை நவில் யானை (82) என்று கூறிய உரை காண்க. (ப.566)
“களிறுகள் மத வெறி கொண்டு மிக்க சினத்துடன் பாகர்க்கும் அடங்காது மறலும் வழி, அம் மதம் தணிதற்பொருட்டுப் பிடியானைகளைக் கொணர்ந்து புணர்விப்பது இயல்பு.
அங்ஙனம் களிறுகள் பிடிகளைப் புணர்ந்தும் மதம் தணியாது போர் வேட்டு திரிந்தன என்பார், ‘வினைநவில் யானை பிடி புணர்ந்தியல’ என்றார்.
புணர்ந்தென்புழிச்சிறப்பும்மை தொக்கது,‘பிடி புணர்ந்தியல’ வென்றது.
வினைநவில் யானை கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி அச்சினத்திற்கேற்பப் போர் பெறாமையின் பாகன் அதன் சினத்தை அளவு படுத்தற்குப் பிடியைப் புணர்க்கையான் அப் பிடியோடு புணர்ந்தும் போர்வேட்டுத் திரிய வென்றவா” றென்பது பழையவுரை” (ப. 559)
(2) புதிய உரை:
2. கயிறு குறு முகவை (3ஆம் பத்து)
“பொன்செய் கணிச்சித் திண்பிணி யுடைத்துச்
சிரறு சில வூறிய நீர் வாய் பத்தற் கயிறு குறு முகவை”
(12-14).
“இரும்பினாற் செய்த கோடரியால் திண்ணிய வன்னிலத்தை உடைத்துத் தோண்டப்பட்ட படியால் சிதறுண்டு சிறிதே ஊறிய நீர் பொருந்திய கிணறுகளில் நீண்ட கயிறு கட்டிச் சேந்தப்படும் குறுகிய முகவைகளை….”
பொன் என்றது ஈண்டு இரும்பினை. இரும்பினைக் கரும்பொன் என்றும் வழங்குப.
கருங்கல் நிறைந்த வலிய நிலமாதல்பற்றி, வன்னிலத்தைத் திண்பிணி என்றார்.
மண்ணும் கருங்கற் பாறைகளும் கொண்டு இறுகப்பிணித்தது போறலின், வன்னிலம் பிணி எனப்பட்ட தெனினுமமையும். நிலத்தை நீர் வேண்டி யகழுமிடத்து கற்பாறைகள் ஒழுங்கின்றிப் பல்லாறாக உடைந்து சிதறி நீர் மிக வூறும் வாய்ப்பின்றி இருப்பது தோன்ற. ”
சிரறுசில வூறிய நீர் வாய்ப்பத்தல் என்றும், நீர் வாயாத வழி பத்தலிடத்தே முகவைகள் உளவாகாவாதலின், “நீர் வாய் பத்தல்” என்றும் கூறினார்.
சிரறுதல் ஒழுங்கின்றிச் சிதறுதல். “சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பு” (கலி. 88) என்றாற் போலச் சிரறுதல் வேறாதலென்றுமாம்.
வேறாதல் பிளந்து வேறாதல், “சிரறுதல் சிதறுத லென்றும், சில வூறிய வென்றது பல்லூற்று ஒழியச் சில்லூற்றா யூறிய வென்றவாறு என்றும் பழையவுரைகாரர் கூறுவர்.
கனிச்சீர் குழித்த கூவல் நண்ணி ஆன் வழிபடுநர் தோற்றிய பத்தல் (நற்றிணை 240) என்பதனால் பத்தல் ஊற்றினர் என்றும் சொல்லப்படும் மேலே அகலமாக அகழ்வது கூவல் என்றும் அதனுள்ளே குறுகிய வாயுடைய ஆழமாய்த் தோண்டப்படுவது பத்தர் என்றும் கொள்க.
இப்பத்தலைப் பிள்ளைக் கிணறு என்றும் கொங்கு நாட்டவர் கூறுப.
முகவை நீர் முகக்கும் கருவி, இதுமரத்தால் செய்யப்படுவது.
நீரின் தன்மை குறித்தும், குறித்தும் நீரும் மிக ஆழத்தில் இருப்பது பற்றியும் குறு முகவை கொள்ளப்பட்டது;
இயல்பாகவே மிக ஆழ்ந்து இருப்பதுடன் நாடோறும் சுரண்டுவதால் அவ்வாறு மிகுந்த வண்ணம் இருப்பதால் நீண்ட கயிறு கொண்டு முகத்தில் அல்லது இறங்கி வந்து முகத்தல் கூடாமையின் கயிறு குறு முகவை என்றதற்கு நீண்ட கயிறு கொண்டு நீர் சேந்தப்படும் குறு முகவை எனப் பொருள் கூறப்பட்டது.
இனிப் பழையவுரைகாரர் “தன்னால் நீர் வாங்குவது பெரிதன்றித் தன்கயிற்றையே நின்று வாங்கப்படும் முகவை” என்றவாறு என்றும், இச்சிறப்பானே இதற்குக் கயிறு குறு முகவை என்று பெயராயிற்று” என்றும் கூறுவர் என்பது நீர் முகப்பது கருதி இடப்பட்ட முகவை நீரை முகவாது இட்ட கயிற்றையே முகக்கும் என்றும், இவ்வாறு கூறிய சிறப்பு கருதியே இப்பாட்டு இத்தொடராற் பெயரெய்திற்றென்றும் கூறியவாறாம்” (பக்கம் 160-161)
(3) மறுப்புரை
ஏறாவேணி (5ஆம்பத்து)
“கடவு ணிலைஇய கல்லோங்கு நெடுவரை,
வடதிசை யெல்லை யிமய மாகத்,
தென்னங் குமரியொ டாயிடை அரசர்” (4-6)
இதற்குப் பழைய உரைகாரர் ‘கல்லொன்று நெடுவரை ஆகிய இமயம் தென்குமரியோடு வடதிசை எல்லையாக என மாறிக் கூட்டுக’; என்று கூறுவர் (ப.307)
இமயம் தெற்கிலுள்ள குமரியடன் சேர்ந்து வடக்குத் திசைக்கு எல்லையாக எப்படி முடியும்.
இது பொருந்தா உரை.
எனவே ஔவை இதற்கு மாறு பொருள் கூறுவர்.
கற்களால் உயர்ந்த நெடிய மலையாகிய இமயமலை வடக்கெல்லையாக, தெற்கெல்லை குமரியாக அவற்றின் இடையேயுள்ள நிலத்தின் கண் உள்ள அரசர் எனப் பொருள் கூறுவர்.
குமரியொடு ஒடு எண்ணுப்பொருட்டு (ப. 307)
(4) பொருத்துரை
3. ஏறா வேணி (5ஆம்பத்து )
மன்றம் படர்ந்து மறுகு சிறப்புக்குக்
கண்டி நின் கோல் கொண்டு களம் வாழ்த்தும்
அகலவன் பெறுக மாவே… (26-28)
ஒளவை உரை: ஊர் மன்றத்தே இருந்து பாடுதற்கு உரியன தலைவன் புகழ்களை எண்ணித் தெருக்களின் இருமருங்கும் சென்று தலைவன் பொருது வென்ற போர்க்களத்தை வாழ்த்திப் பாடும் பாணன் குதிரைகளைப் பெறுக என்றவாறு,
“மறுகு சிறை – தெருக்களின் இருமருங்கும்” என்பது இதற்குப் பொருள்.
ஆனால் டாக்டர் உ.வே.சாமிநாதையர் ‘மறுகு சிறை’ என்றது ஆரோகண அவரோகணக் கிரமம் போன்றார் இசை முறை போலும்’ என்பர்.
ஆரோகண அவரோகனம் கிரமத்தை ஆளத்தி என்பவாகலின் இதற்கு வேறு பொருள் கொள்ளப்பட்டது.
மறுகு சிறை இசை வகையாயின், மன்றத்திலிருந்து பாடுவதும், தெருவிலே நடந்து பாடுவதும் ஆகிய பாடல் வகைகளுள் ஒன்றாகக் கருதுவது பொருத்தமாம்.” (ப.313)
7.தொடர்ந்த குவளை (3ஆம் பத்து)
“தொடர்ந்த குவளை தூநெறி யடைச்சி
அலர்ந்த வாம்ப லகமடி வையர்
சுரியலம் சென்னி பூஞ்செய்கண்ணி” (2-5)
ஒளவை உரை: “விளங்குகின்ற வளையினை அணிந்த இளமகளிர் இடையறவின்றித் தொடர்ந்து மலரும் குவளையின் முழுப் பூவைச் சேர்த்து, ஆம்பலின் மலர்ந்த பூக்களை அவற்றில் இடையே அகப்படத் தொடுத்த தழையினையுடுத்து..” என்பது பொருள்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment