POST: 2022-04-30T17:02:17+05:30

ஓம் சக்தி – மாத இதழ் – மார்ச் 2022

அருட்செல்வர் 100 –

டாக்டர் ஒளவை நடராசன் –

யாரறிவார் அகலமும் நீளமும் !

கிரேக்க நாட்டில் ஒரு மெய்யறிவாளர் தேல்ஸ் என்ற பெயரில் வாழ்ந்தார்.

அவர் ஒருமுறை,

” நான் மனிதனாகப் பிறந்ததற்காக மகிழ்ந்தேன்.
அதிலும் ஆடவனாகப் பிறந்ததற்குப் பெரிதும் மகிழ்கிறேன். கிரேக்கனாகப் பிறந்ததற்கு மேலும் எல்லை இல்லாத பெருமிதமடைகிறேன் ”
என்று கூறினாராம்.

அதைப் போன்ற ஒரு சொல்லாடல் எனக்கும் எதிர்பாராமல் வாய்த்தது. ”

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த நிகழ்ச்சியை நினைத்து மகிழ்ச்சி அடைகிறீர்கள் ?
தமிழ் முதுகலை படித்ததையா ? அரசுச் செயலாளராக எவரும் பெறாத வாய்ப்பினைப் பெற்றதையா ? பல்கலைக்கழகத் துணை வேந்தராகப் பதவியேற்றதையா ? ” என்று கேட்டபோது,

“ நான் என் வாழ்வில் பெரிதும் மகிழ்ச்சி அடைந்த ஒரே நேரம்
1965 – ம் ஆண்டில் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்களைக் கண்டு அந்த வித்தகரின் அலுவலகத்தில் இராமலிங்கர் பணிமன்றத்தில் பணியாற்றத் தொடங்கியதுதான்.

அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், பின்னாளில் நான் பெற்ற பெருமைக்கெல்லாம் உரமாகவும் அமைந்தது ” என்று குறிப்பிட்டேன்.

தமிழை ஆழமாகக் கற்றது,
ஆங்கில வளம் பெற்றது,
அறிஞர்கள் பலரைக் கண்டு அளவளாவியது,
உலகியலின் விளக்கம் உணர்ந்தது, சமயம் கடந்த சமரசப் பற்றை வளர்த்துக் கொண்டது,
உலகத்தோடு ஒட்ட ஒழுகுவது,
கடல் கடந்து போய்க் கருத்துக்களை அறிவது,
எந்த நிலையிலும் இன்ப துன்பங்களை
ஒரே நிலையில் ஏற்றுக்கொள்வது முதலிய எண்ண முடியாத நலங்களைக் கற்ற, நான் பெற்ற ஒரே இடம் அருட்செல்வர் அவர்களின் நெஞ்சமாகும்.

அருட்செல்வர் அவர்களைக் கண்டு பழகிக் கலந்த முப்பத்தெட்டாண்டு நினைவுகளில் ஒரு நிகழ்வை இப்பொழுது நினைத்து நெகிழ்கிறேன்.

1965-ம் ஆண்டில் இராமகிருஷ்ணர் விவேகானந்தர் சன்மார்க்க சங்க நூற்றாண்டு விழா கோவையில் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.

உத்தமர் ஓமந்தூரார் மூன்றாம் நாளன்று தலைமை தாங்கினார்.

காலைக் கருத்தரங்கத்தில் கடைசிச் சொற்பொழிவாக நான்தான் பேசி முடித்தேன்.

அப்பொழுது நண்பகல் விருந்தின் பொழுதுதான் அருட்செல்வரும், அருட்பா அரசு பிரசாத்தும், ஓமந்தூராரும் ஒன்றாகக் கூடி, சென்னையில் இராமலிங்கர் பணிமன்றம் தொடங்குவதென்று முடிவு செய்தார்கள்.

என்னை மகன் போலத் தழுவிக்கொண்ட அருட்பா அரசு பிரசாத், ” நீங்கள் சென்னைக்கு வந்து விடுங்கள்.
தலைவரிடம் நான் இசைவு பெற்றுவிட்டேன் ” என்றார்.

ஓமந்தூரார் எவரையும் எதற்கு எள்ளளவும் நம்பாதவர்.

எந்தத் தகவலையும் தாமே தெரிந்து, தெளிவு கொண்டு ஏற்பதில் விடாப்பிடியாக இருப்பவர்.

ஓய்வு பெற்றதும் திருவண்ணாமலைக்குச் செல்ல வேண்டுமென்ற
கருத்தில் தான் ஓமந்தூரார் முதலில் இருந்தாராம்.

அவர் மனம் பிறகு எப்படியோ மாறி வடலூருக்கு வந்து தங்கினார்.

நிலங்களையும் ஒரு சிறு மனையையும், ஆதரவற்றோருக்கான ஒரு திடல்வெளியையும் கட்டவேண்டிய ஒரு நிலையில் ஒரு பள்ளியையும் நிர்வகித்த நிலையில் வடலூரிலேயே தங்கிவிட்டார்.

1969-ல் ஒருநாள் திருத்தலப் பயணம் செல்ல வேண்டும், தனக்குக் காரும், நல்ல ஓட்டுனரும், துணைக்கு என்னையும் அனுப்புமாறு அருட்செல்வரிடம் சொன்னார்கள்.

மற்றவர்களுக்கு உதவுவது என்பது அருட்செல்வருக்குச் சர்க்கரைப் பாகு.

அதுவும் தம்முடைய காரைப் பிறருக்குத் தந்துவிட்டு, எதிரே நிற்கும், பழைய பழுதான எந்த வண்டியிலும் புன்னகையோடு செல்வது அவருக்குப் புதுமையில்லை .

ஒருமுறை ஓமந்தூரார் அவர்கள் என் கைகளைப் பிடித்துக் கொண்டு, ” யாருக்குத் திறமையிருக்கிறதோ, யாருக்குப் பெருமை இருக்கிறதோ அவருக்குத்தான் தேசத்தை நிர்வகிக்கும் உரிமை வரவேண்டும்.

என்னால் யாரையும் நம்ப முடியவில்லை.

உன் எதிரிலேயே சொல்கிறேன். உன்னைக்கூட நான் நம்ப மாட்டேன். உங்கள் தலைவர்
நா. மகாலிங்கத்துக்குத்தான் அந்தப் பொருத்தமிருக்கிறது.

அவர் பெரிய மனிதர்.

என் உள் மனம் அப்படிச் சொல்கிறது.

இந்த வடலூர் நிலையங்கள் எண்ணி இருபத்தைந்தாண்டுகளில் எவ்வளவு பெரிய வளர்ச்சியைப் பெறும் என்று என்னால் இப்போது நினைத்துப் பார்க்க முடிகிறது.

அவரைத்தான் நம்பி ஒப்படைக்கிறேன் ” என்று சொன்னபோது அவர் குரல் தழுதழுத்தது.

அருட்செல்வர் ஒருவரைத்தான் ஓமந்தூரார் நம்பினார் !
நம்பாதவர் என்று எல்லோரிடத்திலும் பெயரெடுத்த சென்னை மாநிலப் பிரதமர், ‘ நம்புவதற்கு ஒருவர் அருட்செல்வரே ‘ என்று சொன்னது இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது.

அக்டோபர் வந்தால் எட்டு நாள்கள் சென்னை மாநகரத்தில் அண்ணலார், வள்ளலார் விழா – ஏ.வி.எம் மண்டபத்துக்கே ஏற்றம் தருகின்ற எழில் விழாவாக நிகழ்ந்து வருவதுண்டு..

ஒருமுறை தலைவர் காமராசர், விழாவுக்கு முதலில் வர இசைந்து பிறகு வரமுடியவில்லை என்று சொல்லி அனுப்பினார்.

நான் சென்று கண்டபோது திருவருட்பாப் பதிப்பையும் திருக்குறள் இந்தி மொழிபெயர்ப்பு 5 படிகளையும் அன்று அருட்செல்வர் ஊரில் இல்லை என்று சொல்லி அவர் சார்பில் நூல்களை அளித்தேன்.

எழுந்து நின்றபடியே பேசியவர் ஏதோ சிந்தித்தபடி சிறிது நேரம் அமர்ந்தார்.

” யார் காந்தியை இப்போது நினைக்கிறார்கள்.

சலித்துப் பார்த்தால் ஓரிருவர்தான் தேறுவார்கள்.

உங்கள் மகாலிங்கம் அப்படிப்பட்ட நல்லவர்.

கல்லூரி மாணவர்கள் மாணவிகள் எல்லோருக்கும் ஊக்கமூட்டி வாருங்கள்.

புதிய இந்தியாவை உருவாக்கும் மகாலிங்கம் அவர்களின் முயற்சிக்கு நான் மனதார ஆர்வம் காட்டுகிறேன் ” என்றார்.

” தில்லியில் என் நண்பர்களுக்கு இந்தப் புத்தகங்களை அனுப்புகிறேன் ” என்று எங்களை மீண்டும் கூப்பிட்டுச் சொல்லியனுப்பினார்.
அவர் கனிவோடு பார்த்த பார்வை ‘ ஏதேதோ ‘ நினைக்க வைத்தது.

எங்கே எப்பொழுது சென்றாலும், அந்த இடத்தின் சுற்றுப்புறம், சூழ்நிலை, வயல்வெளிகள், வாழ்கின்ற மக்கள், வீடு, மனைகள், தொழிற்கூடங்கள், ஒவ்வொரு மாவட்டத்தையும் எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்பதற்கு வழிவகை காணும் தொழில் வள அறிவியல் சிந்தனைகள், தாமே வகுக்கின்ற திட்டங்கள், அவ்வப்போது படிக்கும் புத்தகங்களின் கருத்துக்கள், எவ்வளவு பழைமையான நிகழ்ச்சியையும் சரியாக நினைத்துக் கூறுவது, எவ்வளவு தூரம் சென்றாலும், ஓட்டுநர் சிறிது இடறினால்கூட உடனே கண்டறிவது, இருபதாண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பர் இந்த தெருவில் இந்த வீட்டில் இருந்தார் என்று கூற பல ஆண்டுகள் கழித்து, மூலை முடுக்கெல்லாம் கடந்து சரியாக அந்த இடத்தைச் சுட்டிக் காட்டு எந்த அயல்நாட்டில் எங்கு தங்கினாலும் தங்க நாளன்று இரவே. கமக்கு ஏற்பட்ட அனுபவ சிந்தனைகள் பற்றி அப்பொழுதுக்கப்பொழுது ஓட்டல்களின் தலைப்பு எடுகளிலேயே கடிதங்களாக எழுதி அனுப்புவது, அரிய தமிழ் நூல்கள் என்றால் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்.

இந்தியில் மொழிபெயர்க்க வேண்டும் என்று எண்ணி எண்ணியதைச் செய்து முடிப்பது, எதைச் சுற்றி வந்தாலும் சன்மார்க்கத்தைப் பற்றிய கொள்கையைச் சொல்வது, பிறர் மகிழ்ச்சியில் இன்பம் காண்பது, எப்பொழுதும் தனியாக ஒருநாளும் உண்ணாத இயல்பு, எவ்வளவு பெரிய கருத்து வேற்றுமைகளையும், ஒரு பொருளாகக் கொள்ளாத பெருந்தன்மை. எவற்றையும் நிதானமாகச் செய்வது, ஒரு மாம்பழத்தை, ஆப்பிளைக் கலையழகு ததும்ப ஒரு சிறு கத்தியால் அந்தப் பழத்தன் தோல்களை வளையம் வளையமாக நறுக்குவது, துண்டு துண்டாக அவற்றை வரிசையாக எடுத்து வைத்து, இப்பொழுது நீங்கள் உண்ணலாம்’ என்று புன்னகையோடு சொல்கிற கலைத் திறமை, மனத்தில் பட்டதை மறைக்காமல் சொல்லிவிடும் துணிவு, கண நேரத்தில் வரும் கோபம், கண நேரத்தில் அது மறையும் மாயம் என்று நூற்றுக்கணக்கான குணச் செயல்களை ஒவ்வொன்றாக எடுத்து எவ்வளவோ எழுதலாம்.

ஆரறிவார் எங்கள் அண்ணலின் அகலமும் நீளமும் என்றுதான் வியந்து மகிழ முடியும்.

ஆங்கிலக் கவிஞர் வோட்சுவொர்த் பிரெஞ்சு புரட்சியைப் பற்றி எழுதிய பாடலில் ஒரு வரி என் நினைவுக்கு வருகிறது.

” அந்த இனிய நாள்களில் அதுவும் இளமைப் பருவத்தில், ஓர் இமயத்தோடு பழகினோம் என்ற இன்பத்துக்கு ஈடேயில்லை .”

அதுதான் எனக்கு அமைந்த அரிய வாய்ப்பாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *