POST: 2022-05-02T09:36:43+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 51

ஒளவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்

பொன்முடியார் வேந்தரிருவர் தும்பை சூடிப் போருடற்றினாராக, அப்போரில் முன்னாளில் கடுஞ்சமர் புரிந்து வீழ்ந்த பெருவீரனொருவனுடைய மகன் பகைவர் களிறுகள் பலவற்றைக் கொன்றான்.

அக்காலை, பகைவர் எறிந்த அம்பு மார்பில் பாய்ந்து தைத்துக்கொண்டது.

அயினும் அதனைப் பொருட்படுத்தாது மேலும் போரை நடத்தத் தன் கைக்கொண்ட கேடகம் கீழ்ப்பட அதன்மேல் அதனைக் கண்ட தாய், அவனது பிள்ளைப் பருவ நிலைமையை நினைந்து வருந்தினாள்.

சிறிதுபோதில் மறக்குடிமகளாகிய தன் மனத்தைத் தேற்றி, ” மனமே, இவன் பிள்ளைப் பருவத்தில் வள்ளத்தில் பாலேந்தி உண்பித்த போது உண்ணானாகக் கண்டு சிறு கோலை யெடுத்து ஓச்சின காலையில் நம்மைக்கண்டு அஞ்சினான்;

இப்போது, இவன் முன்னாள் போரில் வீழ்ந்த பெருவீரற்கு மகனாதற்கேற்பப் பல களிறுகளைக் கொன்றதனோடு அமையானாய், தன் கேடகம் கீழ்ப்படத் தான் அதன் மேல் வீழ்ந்து கிடக்கின்றான்; இடையே தன் மார்பிற் புண்ணில் பகைவர் எய்த அம்பொன்று தைத்திருப்பதைக் காட்டியபோது யான் இதனைக் கருதிற்றிலேன் என்கின்றான்; இவன் மறம் இருந்தவாறென்னே ! ” எனத் தனக்குள் வியந்து கூறிக்கொண்டாள்.

இதனை நம் சான்றோராகிய பொன்முடியார் இப்பாட்டினுள் அழகுறப் பாடியுள்ளார்.

இக்காட்சி நம் மனத்தை உருக்குவாதாகும் .

இந்த மறக்குடி மாட்சியை வியந்த நம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தீட்டிய ஓவியம் சங்கத்தமிழில் வனப்புறக் காட்சி தருகிறது .

இனி கலைஞர் உரையைக் காணலாம் .

கலைஞர் உரை :

ஒரு தாயின் இரு தாலாட்டு !

பகைவெல்லச் சென்றிருக்கும் கணவனது

பனைவைர நெஞ்சத்தின் வீரத்தை நினைத்தவாறு

பகல் முழுதும் குடும்பத்துப் பணிமுடித்துச் சற்றுப்

படுத்துறக்கம் கொள்வதற்குச் செல்லும் முன்னர்

பாசமுடன் மகனைக் கூவியழைத்துக் ” கண்ணா !

பாலமுதம் இதோ பருகிட வாடா;” என்பேன் !

“வரமாட்டேன் போ” என்று நிலாவெள்ளி ஒளியினிலே

வட்டமிட்டு விளையாட ஓடிடுவான் எதிர்வீட்டுப் பிள்ளையுடன் !

வந்துவிடும் எனக்குக் கோபம் – கோலொன்றை எடுத்தோங்கி

” வரமாட்டேன் என்றா சொன்னாய்? இதோ வந்துவிட்டேன்”

எனத்

துரத்திடுவேன்; அடிக்கமாட்டேன் ! ஆனாலும் என்

தூயமகன் அஞ்சி நடுங்கிப் பதுங்கிடுவான் !

கோலுக்கே இந்தப் பயம் கொள்கின்ற பிள்ளாய்; நீ – நாளை

வேலுக்குப் போர்முனையில் என்ன பதில் சொல்வாய்

என்பேன் !

இழுத்து வந்து செல்லமாய்க் கன்னம் கிள்ளிப்

பழுத்திருக்கும் கோவைக்கனியாம் அவன் இதழில்;

தேன்கலந்த பாலின் கிண்ணம் மெல்லக் கவிழ்த்து

தெம்பாக இருப்பதற்கு முழுவதையும் அருந்தென்பேன் !

அழகுதமிழ் மழலைச்செல்வன் அதனை மறுக்காமல்

அச்சத்தின் காரணமாய் அனைத்தும் பருகிடுவான் !

பிறைபோல இருந்த பிள்ளை முழுநிலவாக உருவெடுத்து

குறையில்லாத் தோற்றமுடன் குன்றம் போல் வளர்ந்து

விட்டான் !

தாலாட்டப் பிள்ளையொன்றைத் தந்துவிட்டுப்

போராட்டக்களம் சென்ற என்னவரோ;

தமிழ் மண்ணின் பண்பாட்டுக் கேற்றவாறு

கட மார்பில் வேல்தாங்கி நடுகல்லாய் நின்றுவிட்டார்

நானும் கல்லாக மனத்தை ஆக்கிக்கொண்டு

வானதிரப் புவி வாழ்த்துகின்ற மானத்தை

வானமின்றிக் காப்பதற்கு உறுதிபூண்டு

உயர் வீரக்குடிமகனாய்ப் பிள்ளை தன வளர்த்தேன் !

கட்டியணைத்துக் களித்த என் கணவனது நெஞ்சகத்தை

வெட்டிப்பிளந்து வீழ்த்திவிட்ட பகைப்புலத்தை;

எட்டியுதைத்துத் துரத்தி ஏற்றிடுக வெற்றிக்கொடி யென்றும்.

எதிரிகளின் கோட்டையிலே நம் முரசு முழங்கட்டுமென்றும்,

உச்சிமோந்து திலகமிட்டுக் குடுமிதனைக் கோதிவிட்டு

உடைவாளைக் கையில் தந்து, ”சென்றுவா மகனே’ என

அனுப்பி வைத்தேன்

அவனோ :

கொடுவாளால் களிறுகளைக் கொன்றுபோட்டுக்

குன்றுகளைப் பந்தாடுதல் போல் அவற்றை உருட்டிவிட்டுப்

படுகளத்தில் விளையாடி வினை முடிக்கின்றான் என்றும்,

நெடுமரம் போல் பகைப்படை வீழ்கின்றதென்றும்,

அடுக்கடுக்காய்த் தித்திப்புச் செய்திகள் வந்திடவே

அடக்கவொண்ணா ஆவலுடன் அது காணக் களம் புகுந்தேன் !

ஐயத்திற் கிடமேயில்லை வெற்றி நமக்கேதான்….

ஆனால் ஒன்று; அங்கே என் மகனைத்தான் காணவில்லை !

குருதி மணம் கமழுகின்ற போர்க்களத்தில்

குமுத மலர் மொட்டுக்களாய் முளைக்கும் தலைகள் !

வீழ்ந்துள்ள வீரர்தம் உடல்களோ கவிழ்ந்துவிட்ட படகுகளாம் !

வெட்டுண்ட கைகால்கள் வேலையின்றி மிதக்கின்ற

துடுப்புகளாய்

சூழ்ந்துள்ள பிணக்குவியல் நடுவில் சென்றேன்.

ஆழ்ந்துள்ளேன் கவலையினால்: அருமை மகனே ! நீ

போர்க்களத்துப் பிணமாகி வாழ்கின்றாயா? அன்றி

புறமுதுகிட்டோடிச் செத்துத் தொலைந்தாயா?” எனக்கேட்டுத்

துடித்திட்டேன்

“வாழ்கின்றேனம்மா வீரனாக” என்றெரு குரல்

தாழ்கின்ற என் தலையை நிமிர்த்திற்றாங்கே!

குரல் வந்த திசைநோக்கிப் பறந்து போனேன்! – ”உள்ள

உரம் வாய்ந்த மகனே! நீ எங்கே?” என்றேன்.

இங்கே’ என்றான்; கண்டு கொண்டேன்! ”வலம்புரிச்

சங்கே!” என்றவாறு தழுவிக்கொண்டேன்! கையில்;

காங்கிப் போரிட்ட கேடயம் தரையில் கிடக்க; அதில்,

தங்கமகன் மார்பில் அம்புதாங்கி வீழ்ந்து கிடந்தான் !

“வெற்றியம்மா வெற்றி” என்றான் – அவன்

நெற்றியிலே முத்தமிட்டு, ‘என் நித்திலமே !

போர்முனையில் உயிர்விட்டு மானம் காத்த தந்தைக்கு

நேர்வழித் தோன்றலாய் வந்துதித்தாய் வாழ்க ! ” என்றேன் !

”ஊடுருவியிருக்கின்றதே மார்பில் அம்பு –

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *