ஒளி பரவட்டும் – ஏப்ரல் மாத இதழ் – 2022
பேச்சுப் பேரொளிக்குப் பிறந்தநாள் வணக்கம் !
உலகிலுள்ள அனைத்துச் செல்வங்களும் அழியும் தன்மை உடையன.
அவற்றையே பலர் தன் பரம்பரைச் சொத்தாக பாராட்டிக் கொண்டு பரிணமிக்கிறார்கள்.
ஆனால், உலகிலேயே அழிவிலாச் செல்வமாகிய அறிவை தன் பரம்பரைச் சொத்தாகக் கொண்டு தன் மரபுளோர் பெருமையெல்லாம் தன் புகழாக்கிக் கொண்ட ஔவை நடராசனார் அவர்கள் “ உரைவேந்தர் ” என்னும் உரிப்பெயருடன் வாழ்ந்த ஒருபெரும் பேராசிரியர் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் ஈன்றெடுத்த தலைமகனார் ஆவார்.
இவரின் தந்தையார் வாழ்ந்த காலத்திலேயே இவர், தன் புலமைத்திறத்தை நிரூபித்து
ஓங்கிடும் கீர்த்தி பெற்றார்.
இத்தகு சீர்த்தியைக் கண்டு ‘ இவன் தந்தை என்நோற்றான் கொல் ‘ என்னும் சொல்லானது இவரின் தந்தையாரின் செவிகளை எட்டியது. இத்தகைய பெருமையைப் பாராட்டி * கருவிலேயே திருவுடையவர் என்னும் மொழிக்கு ஒர் எடுத்துக்காட்டு ஔவை நடராசன் ‘ என்பார் தவத்திரு ஊரன் அடிகளார்.
மொழிப்பாடம் கற்றவர்களுக்கு வாய்ப்புகள் என்பவை இரு வகைகளில்தான் வரும்.
ஒன்று கையின் மூலம் எழுதுவது, மற்றொன்று வாயாரப் பேசுவது.
இவ்விரு கலைகளும் எவருக்கும் எளிதில் வாய்க்காது.
அப்படி இக்கலைகளில் கரை கண்டோர்க்கு ஆளுமைத்திறன் என்பது அகப்படுவது அரிது.
சரி, இத்துணையும் கிடைத்தாலும் அயல்மொழிகளில் ஆர்வம் இருக்காது.
ஆனால், ஔவையாரோ எழுத்து,பேச்சு, ஆளுமைத்திறன் மற்றும் ஆங்கிலப்புலமை ஆகிய அனைத்தும் பெற்று எல்லாப் பட்டைகளிலும் படரொளி பரப்பும் வைரம் போல் மிளிர்பவர்.
இவரிடம் படித்த மாணவர்களுள் பேராசிரியர் சாலமன் பாப்பையா, கவிஞர் மீ.ராஜேந்திரன் (மீரா), ஆங்கிலப் பேராசிரியர்
சிவகாசி ராமச்சந்திரன், பேராசிரியர் மறைமலை இலக்குவனார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
இவரிடம் முறையாகப் பயிலாவிட்டாலும் ஏகலைவரைப் போல் எட்ட நின்று கற்றவர்களும் பலர்.
அவ்வண்ணம் கற்றவர்களுள் சொல்வேந்தர் சுகிசிவம், கவிப்பேரரசு வைரமுத்து, வழக்கறிஞர் ரவி கல்யாணராமன் என எண்ணற்றோர் நயந்தோர் அவையத்து நண்ணி, தன் நாவன்மையையும் பாவன்மையையும் காட்டி வருகிறார்கள்.
இவர், மகாபாரதத்து துரோணரிலிருந்து மாறுபட்டவர்.
கற்றுக்கொடுககும கலைக்குக் காணிக்கையாக விரலை கேட்காமல் வித்தையை விளைவிக்கும் விரலுக்குக் குரல் கொடுத்து வாழ்த்துச் சொல்பவர்:
கல்லூரியில் பயின்ற கவிப்பேரரசு வைரமுத்து வருடிய கவிதை வரிகளைக் கற்ற இவர்
“ உங்கள் விரல் நுனி வித்தைகள் வெல்க ‘
என்று வாழ்த்து எழுதிக்கொடுத்து வளரும் பயிருக்கு நீர் வார்த்த நல்லேருழவர்.
வாழ்க்கையில் வளர்ச்சி என்றாலேயே அனைவருக்கும் வருவது ஆனந்தம்தான்.
ஆனால், அதே வளர்ச்சி மற்றவர்க்கு வந்தால் சிலரின் மனம் சிதைவடையும்.
ஆனால், அடுத்தவர் வளர்ச்சியில் அகம் மிக மகிழும் ஔவையார் அவர்கள், யார் எந்தத் துறையில் வெற்றி பெற்றாலும் முன்னேறினாலும் முழுமனதுடன் பாராட்டும் சீராளர்.
அவ்வாறு வாழ்த்தும்போது கூட தாமதிக்காமல் தக்க நேரத்தில் வாழ்த்து சொல்பவர்.
ஏனெனில் காலம் கடந்த வாழ்த்திற்கு கடுகளவு கூடப் பயனில்லை என்று கருதுபவர்.
இவர்,அன்பும் அருளும் தவழும் அருட்பிரகாச வள்ளலாரின் கொள்கைகளையும் – மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளையும் ஏற்று போற்றுபவர்.
அதனால்தான் பொள்ளாச்சி வள்ளல் அருட்செல்வர் டாக்டர்.நா. மகாலிங்கம் அவர்கள் சென்னை இராமலிங்கர் பணிமன்றத்திற்கு முதல் செயலாளராக பணியமர்த்தி மகிழ்ந்தார்.
இப்பணியை தலைமேல் ஏற்றுக்கொண்டு இவர் ஆற்றிய பணிகள் ஏராளம்.
பணி மன்றத்தின் செயல்பாட்டைப் பற்றி சொல்வேந்தர் சுகிசிவம் கூறும்போது “ எல்லா மாணவர்களும் காலேஜுக்கு கட் அடித்துவிட்டு சினிமாவிற்கு போவார்கள்.
ஆனால், நானும் என் நண்பர் ரவியும் ஔவை நடராசனார் பணியாற்றும் பணிமன்ற அலுவலகத்திற்குச் செல்வோம்.
அங்கு,ஆத்திகம் முதல் நாத்திகம் வரை அரசியல் முதல் ஆன்மிகம் வரை அனைத்தும் அலசப்படும் ” என்று தான் வளர்ந்த திறத்தைக் கூறினார்.
இதன் மூலம் இவரின் பணிமன்றப் பட்டறையே பலரின் வகுப்பறையாக இருந்ததை அறிய முடிகிறது.
இவர், அரசு செயலாளராக டாக்டர் எம்.ஜி.ஆர், கலைஞர் மு. கருணாநிதி, செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகிய முப்பெரும் முதல்வர்களிடம் பணியாற்றியவர்.
‘ எம்.ஜி.ஆரிடம் பணியாற்றியபோது கார் ஓட்டி ‘ என்று முதலமைச்சர் எழுதிய கோப்பில் ‘ காரோட்டி ‘ என்று திருத்தினார்.
ஏன் இப்படி திருத்தினீர்கள் ? என்று கேட்டபோது உயிர்வரின் உக்குறள்மெய்விட்டு ஒடும் ‘ என்று இலக்கண விதிகளையெல்லாம் கூறி விளக்காமல் “நான் படகோட்டி பார்த்து பழக்கப்பட்டவன் ” என்று எளிமையாக மனம் கொள்ளும் வகையில் கூறினார்.
இது இவரின் நாவன்மைக்கு நலமான சான்றாகும்.
எண்ணற்ற பட்டங்கள் இவரைத் தேடி வந்தாலும் பல பதவிகள் வந்தாலும் பணிவையே தனது குணமாகக் கொண்டு வாழ்ந்து வருபவர்.
ஒருமுறை அழைப்பிதழில் தங்கள் பெயருக்கு முன்னால் எந்த பட்டத்தை போடட்டும் ‘ என்று நான் கேட்டபோது ‘ ஔவை என்ற பட்டத்தை விட வேறொரு பட்டம் வேண்டுமா ? ‘ என்று கேட்டார்.
அப்போதுதான் ‘ சாயக் கண்டது காய்குலைச் செந்நெல் ‘ என்ற பள்ளுப் பாட்டுக்கு எனக்கு ஒரு சரியான சான்று கிடைத்தது.
வாழ்வில் எவ்வளவுதான் உயர்ந்தாலும் எளிமை என்பதையே எப்போதும் பின்பற்றி, யாவரும் எளிதில் அணுகும் வகையில் எல்லோரையும் அரவணைக்கும் மாண்பு மிக்க இவரின் எளிமைக்கு ஓர் எடுத்துக்காட்டு எனக்கு நினைவுக்கு வருகிறது.
‘ நான் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியபோது பல்கலைக்கழக வளாகத்திற்கு பெரும்பாலும் நடந்து செல்வதுதான் வழக்கம்.
அப்போது அங்கு தோட்டத்தில் வேலை செய்யும் தோட்டக்காரர் கூட என் கையைப் பிடித்து அன்புடன் நலம் விசாரிப்பார் ‘ என்று என்னிடம் சொன்னார்.
தலைமைப் பண்பு என்பது ” காவல் புரிவதற்கே அன்றி ஏவல் புரிவதற்கு அல்ல ” என்பதை உணர்ந்த ஔவையார் அவர்கள் உலகப்புகழ் பெற வேண்டியது உரித்தானதாகும்.
ஔவை நடராசனார் அவர்கள், மொழிபெயர்ப்புத் துறையின் இயக்குநராக இருந்தபோது பல நூல்களை மொழிபெயர்த்து பாருக்கு வழங்கி தமிழின் பெருமையை வளர்த்தெடுத்தார்.
இவர் விட்ட பணிகளை தற்போது அவரின் திருமகனார் முனைவர் ந.அருள் அவர்கள் தொட்டுத் தொடர்கிறார்.
இவ்வாறு பேச்சு, எழுத்து, ஆட்சித்திறன், மொழிபெயர்ப்பில் முனைப்பு, எளிமை, புலமை என ஏராளமான மணிகளைக் கொண்டுள்ள மாலையை அணிந்து அவனியில் பவனிவரும் பெருமகனாரின் பாதம்பணிந்து வாழ்த்துவோம்,
வாழ்த்துப்பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.
சிவ.சதீஸ்குமார்
( ஏப்ரல் 24 ஐயா அவர்களின் 87 ஆவது பிறந்தநாள் )

Add a Comment