POST: 2022-05-08T10:34:13+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 108

நினைத்தாலே இனிக்கும்

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு

என் பெற்றோர்கள் திருமணம் அவர்கள் விருப்பப்படி 10.12.1961 அன்று மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் சுற்றத்தார் எவருமின்றி எந்தையாரின் குடும்பத்தார் மட்டும் முணுமுணுத்தபடியே நடைபெற்றது.

எளிய மணவிழா உரைவேந்தர் தலைமையில் நடைபெற்ற திருமணத்தின் போது எந்தையாரின் நெருங்கிய நண்பர் அந்தோனி சாமி, தொலைபேசித் துறையைச் சேர்ந்த திரு. இராமநாதன், திரு. அருணாசலம் என்கிற அர்னால்டு இன்று வரை அத்திருமண நிகழ்வைப் பற்றி என்னிடம் பலமுறை எடுத்துச் சொல்லியுள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு தியாகராயர் கல்லூரியின் திடலில் பேராசிரியர்களும், மாணவர்களும் இணைந்து மாபெரும் அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இதில், கூடுதல் சிறப்பு, மாணவர்களே திரண்டு செய்த இவ்வரவேற்பு விழா ஓர் ஆசிரியரின் உயர்ந்த எல்லையைக் காட்டுவதாகும்.

அத்திருமண விழாவில், புகழ்பெற்ற கவிஞர் மீரா, ‘சிக்கல்’ என்ற தலைப்பில் தன் கைப்பட எழுதிய கவிதை, அன்றைய நாளின் பரபரப்புக் கவிதையாகும்.

மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் மணமகன் ஔவை நடராசன் அவர்கட்கு எழுதி வாசித்த கவிதை(1961)

சிக்கல்
—–
நடராசன் நண்பரொடு எங்கும் சுற்றும்
நடைராசன்!

நாம் வெள்ளித் திரையில் காணும்
படராசன் அல்லஇவர் அறிவு வாதப்
படைராசன் பிடித்தபிடி யாகப் பேசும்
அட ராசன்! திட ராசன்!அன்பு ராசன்!
அழகுதமிழ்க் கவிதைகளை நிறுத்தக் காட்டும்
எடை ராசன்!

இவருக்கு எழுந்த சிக்கல்!
இனம்புரியாப் புதுச்சிக்கல்! இன்பச்சிக்கல்!

வீட்டுக்கு வரும்நேரம் காலம் என்னும்
விதிமுறைகள் சதிமுறைகள்!

எனது நட்புக்
கூட்டுறவு நேரத்தைக் குறைய வைக்கும்
குறைபாட்டு திட்டம்தான் என்பார் இன்றோ
மாட்டிக்கொண் டார் பெரிய சிக்கல் தன்னில்!

மரியாதையாய் அந்தி மாலை நேரம்
வீட்டுக்கு வராவிட்டால் என்ன ஆகும்
விழி அம்பு பாயாதா நெஞ்சு நோக்கி!

எட்டுகஜம் பத்துகஜ தூரம் மட்டும்
இருக்கட்டும் உன்வெளிச்சம் நிலவே! என்று
கட்டுதிட்டம் எவன்செய்வான்?

அரட்டை நேரம்
கால்மணிதான் உனக்கென்று வாய் அடைப்புச்
சட்டமிட முடியாது எனக்கு என்பார்
சரியல்ல இனிஅந்தப் பேச்சு!

வீட்டில்
எட்டடிக்கும் முன்இரவில் வருதல் வேண்டும்
இல்லையென்றால் கிளம்பாதா நெருப்பு வார்த்தை!

என்னாடா இதுபெரிய வம்பு வீட்டில்
இருந்திடுவோம் எப்போதும் எனநினைத்தால்
என்னாகும் அப்போதும்?

அடிமை யாக
இருக்கின்றார் மனைவிக்கு என்போம் நாங்கள்!

துன்பம் தான்! சிக்கல் தான்! இந்தச்சிக்கல்
துடைக்கத்தான் நடக்கின்றார் வெளியில் கொஞ்சம்!

அன்புருவ நடராசன் பழைய ஆளா?
ஆகிவிட்டார் இப்போது புதிய ஆளாய்!”

இவ்வரவேற்பு விழாவில் பங்கு கொண்ட மாநிலக் கல்லூரியின் மேனாள் ஆங்கிலப் பேராசிரியர் சிதம்பரம் குமாரசாமி இன்றும் அக்கவிதையை மேற்கோளிட்டுச் சொல்வார்.

சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும்பொழுது, எந்தையார், 1984 ஏப்ரல் 17-ஆம் நாளில் தமிழ் நாட்டரசு தமிழ் வளர்ச்சி-பண்பாட்டுத்துறை என்று புதிய துறை ஒன்றை உருவாக்கி, அரசு தலைமைச் செயலாளர் கு. சொக்கலிங்கம் அவர்களால் பொது (சிறப்பு-அ) வாயிலாக அரசாணை (நிலை) எண்.649, நாள்: 18.04.1984, (சித்திரை – 6 – ரத்தாட்சி, திருவள்ளுவராண்டு 2015) வாயிலாக, மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகவுள்ள டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் மேலே பத்தி-1-இல் ஏற்படுத்தப்பட்டுள்ள பதவியில் தமிழ் வளர்ச்சி – பண்பாட்டு துறையின் அரசு செயலாளராக நியமிக்கப்பட்டார்.

புதிதாக உருவாகிய தமிழ் வளர்ச்சி-பண்பாட்டுத்துறையின் கீழ் அமைந்த ஏறத்தாழ ஒன்பது துறைத்தலைமை அலுவலகங்களும் ஒரு பல்கலைக்கழகமும் இரண்டு கல்லூரிகளும் அவர் பொறுப்பின் கீழ் வந்தன.

அத்துறைத்தலைமை அலுவலங்களாவன:
1. மொழிபெயர்ப்புத் துறை (தலைமைச்செயலகத்தில் உள்ளது)
2. தமிழ் வளர்ச்சி இயக்ககம்
3. கலை-பண்பாட்டு துறை
4. அருங்காட்சியகத் துறை
5. தொல்லியல் துறை
6. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்
7. ஓவிய நுண்கலைக்குழு
8. சுவகர் சிறுவர் இல்லம்
9. இயல் இசை நாடக மன்றம்
10. தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்
11. சென்னை கலை – கைத்தொழில் கல்லூரி
12. மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரி

சட்டத்துறைச் செயலாளரும், சட்டமன்றப் பேரவைச் செயலாளரும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் அல்லாதவர்கள்.

அவர்களைப்போன்றே இ.ஆ.ப. அலுவலர் அல்லாத தமிழறிஞராகத் திகழ்ந்த எந்தையார் முதன் முதலில் அரசு செயலாளராக அமர்த்தப்பெற்றார் என்பது தமிழ்கற்றோர்க்குப் பெருமை அன்றோ?

அரசு செயலாளராக அப்பா பதவியேற்ற பின், தமிழ் வளர்ச்சிக்கு அளப்பரிய தொண்டாற்றியுள்ளார் எனலாம்.

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சி இயக்ககம் தொல்பொருளாய்வுத்துறை ஆகியன பல்வேறு படி நிலை வளர்ச்சிகளைக் கண்டன.

கலை-பண்பாட்டுத்துறை புதிதாக உருவாக்கப் பெற்று வளர்ந்தது இவர் காலத்தில் தான்.

செயலாளரான பிறகும் மொழிபெயர்ப்புத் துறையின் தொடர் வளர்ச்சியில் நாட்டம் கொண்டிருந்தார்.

புதிதாகப் பணியிற் சேருவோர்க்கு ஆழ்ந்த பயிற்சி வழங்கச் செய்தார்;

கா. அப்பாத்துரையாரின் கழகக் கையகராதி நூலை மொழிபெயர்ப்புப் பிரிவில் மட்டுமின்றி அரசுத்துறைகள் அனைத்திலும் பிரிவிற்கு ஒன்று வீதம் வாங்கிப் பயன் கொள்ளச் செய்தது குறிப்பிடத்தக்க ஆட்சிமொழி வளர்ச்சிக்குத் துணை நின்ற செயல் எனலாம்.

——————————-

பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (32)

நற்றிணை முழுதும் அவர் வாழும்போதும், பாடினோர் / பாடப்பட்டோர் வரலாறுகள் மறைந்த பின்னும் அச்சாயின.

கிள்ளிவளவன் முதலிய சிலரது வரலாற்றை எழுதி முடிக்கும் முன் உரையாசிரியர் ‘தேகவியோகம்’ ஆனார்.

பத்துப்பாட்டு முதலிய நூல்கள் கிடைக்காது போயினும், பின்னத்தூரார் அவற்றை உரையுடன் ஒப்பிப்பதில் வல்லர் என்றும், வரலாற்றுச் செய்திகளை “ஒரு கதைசொல்லி போலவும் வரலாற்று ஆய்வாளர் போலவும்” விவரிக்கும் திறலர் என்றும் கூறுவர்.

இப்பதிப்புக்கு 5 ஓலைச்சுவடிகள் உதவின.

ஒப்புநோக்கியபோது 50க்கும் மேற்பட்ட பாட வேறுபாடுகளும் அறியப்பட்டன.

உரையானது பாட்டுக்கு நேரடியாகப் பொருள்தரும் பொழிப்புரையாக அமைகிறது.

பின்னத்தூராரின் இம்முதற் பதிப்பில் – 641 பக்கங்களும், ஏழு பகுதிகளும், கடவுள் வாழ்த்தோடு 400 பாடல்களும், 175 புலவர்களின் வரலாறு, புலவர்கள் பெயர்க் காரணம், எப்பகுதியைச் சேர்ந்தவர், பாடிய பிற சங்கப் பாடல்கள், பாடப்பட்டோர் வரலாறு, 14 மன்னர்களின் அகரவரிசைநிரல் விவரங்களும் அமைந்துள்ளன.

அவற்றிற்கு ஆதரவாக இலக்கண இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் தரப்படுகின்றன.

நரராயண சாமியாரின் ஆய்வுப் போக்கு:

புலவர் பெயர் விளக்கம்:

அஞ்சில் ஆந்தையார் – இவர் ‘அஞ்சில் என்னும் ஊரிலுள்ள ஆதன் தந்தையார், தொல். எழுத்து 348 விதிப்படி ஆதன் +தந்தை ஆந்தை’ என நிறுவுகிறார்.

புலவர் ஊர்: மூவன் என்னும் இயற்பெயருடன் அடைமொழி சேர்ந்ததால் அம்மூவனார் ஆனாரென ஊகிக்கலாம்.

இவர் தொண்டி, மாந்தை முதலிய ஊர்களைச் சிறப்பித்துப் பாடியிருப்பதால், இவர் சேர நாட்டு மேலைக் கடற்கரையில் இருந்தவரென்று கருத இடமுண்டு.

இருந்தாலும், அக்காலத்தில் அந்நாட்டில் மக்களுக்கு அம்மு, திம்மு என்னும் பெயர்களும் வழக்கத்தில் இருந்தமையால், இவரது இயற்பெயர் அம்மூவன் எனக் குறிக்கிறார்.

உய்த்துணர்தல்: இனிச்சந்த நாகனார் (நற்.66). இனிய குரலால் பாடவல்லராதலால் நாகனார் அடைமொழியுடன் பெயர்பெற்றார் என ஊகம் செய்கிறார்.

இதற்குச் சான்று எதுவும் காட்டவில்லை.

ஒளவை பதிப்பில் இவர் பெயர் மிளைக்கந்தன் நாகனார் எனவுள்ளது (புதுப்பட்டி ஏடு); பிறவற்றில் இளைக்கந்தன் நாகனார் எனக் காணப்படுகிறது.

உரையின் கட்டமைப்பு:

மூலப்பாடல் அமைப்பு முறை: திணை, துறை, துறைக் குறிப்பு, புலவர் பெயர், மூலப்பாடல்;
உரையமைப்பு முறை: உரை, பாட வேறுபாடு குறித்தல், அருஞ்சொற்பொருள், உள்ளுறை இறைச்சி, விசேட உரை
மூல செய்யுள் யாப்பமைதி வழுவாது சந்தி பிரிக்காமல் உள்ளது; இது குற்றவர்க்கே பயன்படும்; மற்றவர்க்கு மயக்கம் தரும்.

இருப்பினும் அருஞ்சொல்லுக்கு உடன் விளக்கமும் உள்ளது.

(எ-டு) “பசலை பசத்தல் : இது கண்ணாடி மேல் வாயினால் ஊதிய ஆவி பட்டு அக்கண்ணாடி மழுக்கமடைவது போலத் தலைவியின் நெற்றியிலுள்ள ஒளி தலைவனைப் பிரிதலால் மழுங்கி தோன்றுதல்.

இதனைப் பீர் எனவும் உரைப்பர்” (நற்றிணை 1)
இலக்கண கூறுகளோடு உரை அமைதல்
(எ-டு) “நெஞ்சே, பார்ப்பை யீன்ற பருந்து வருந்தியுறையா நிற்கும். ஆகாயத்தில் மேற்செல்லுகின்ற நெடிய கிளைகளையும் பொரித்த அடியையுமுடைய வேம்பினது புள்ளி போன்ற நிழலின் கண்ணே கட்டளைக் கல் போன்ற அரங்கை வட்டினாலே கீறி ஏனைத் தொழிலொன்றும் கற்றறியாத சிறுவர்கள் நெல்லியங்காயை வட்டாகக் கொண்டு பாண்டிலாடா நிற்கும்.” (நற்றிணை3)

இதில் ‘வருந்தியுறையாநிற்கும்’, ‘பாண்டிலாடாநிற்கும்’ என்பன நிகழ்கால இடைநிலைகள் பெற்றவை; வருந்தி உறையும், பாண்டிலாடி நிற்கும் எனும் பொருள் தரக்கூடியவை.

இவ்வாறு அமைந்த உரையை எளிதாக்கும் பொருட்டு, விசேட உரை தரப்பெற்றுள்ளது.

தேவைப்படும் இடங்களில் இலக்கணக் குறிப்பைத் தருதல், உள்ளுறை, இறைச்சிப் பொருளை விளக்குதல், தொல்காப்பியம் சுட்டும் மெய்ப்பாடு, பயன் இவற்றைக் குறிப்பிடுதல் முதலியவை உரையின் இயல்பைச் சற்றே எளிமையாக்குகின்றன.

சான்றாக நற்றிணை 7ஆம் பாடலில், ஏழாவது அடியில் அமைந்துள்ள, “வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை’. இதற்கு “நெல்லருந்திய யானை கவலை கெடத் துயிலும் என்றது, காதலனுடன் இன்பம் நுகர்ந்த நீ, கவற்சியின்றிச் சேக்கையிலே துயிலப் பெறுவாய் என்பதாம்” என்று கூறிப் பாட்டுள் பொதிந்திருக்கும் இறைச்சிப் பொருளை விளக்குகிறது.

ஒளவையவர்கள் இவ்வுரையைப் பற்றி, “சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் தமிழ்ப்புலமை நடாத்திய சான்றோர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்களால் முதன்முதலாக நற்றிணை வெளியிடப்பட்டது.

அப்பொழுது தமக்குக் கிடைத்த ஓலையேடுகளைக் கொண்டு ஆராய்ந்து, மூலத்தோடு அதற்குத் தாம் எழுதிய புலமை நிறைந்த உரையையும் அவர் அச்சிட்டு வெளியிட்டார்.

தமிழ் பயில்வோர் அனைவரும் அதனை விரும்பிப் படித்து வருகின்றனர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

நற்றிணை – மூலமும் விளக்க வுரையும் (பகுதி I, 1966, பகுதி II – 1968)
உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் பதிப்பு வரலாறு:

சைவசித்தாந்தப் பெருமன்றச் செயலாளர் திரு மா. பாலசுப்பிரமணிய முதலியார் வழியே பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அறிமுகமாகவே, அவர் ஒளவை எழுதிய ஐங்குறுநூறு உரையைப் பாராட்டித் தம்மிடமிருந்த நற்றிணைப் பழைய ஏடு ஒன்றைக் காண்பித்து உரை எழுதுமாறு கேட்டுக்கொள்ள, தமிழ்ச்சான்றோர் பலரின் உதவியால் பல பழைய நற்றிணை ஏடுகள் கிடைத்தன.

அவற்றுடன் பின்னத்தூராரின் அச்சுப் பதிப்பை ஔவை ஒப்புநோக்கியபோது, நற்றிணையில் 1500க்கும் மேற்பட்ட பாட வேறுபாடுகளையும், பெயர்தெரியாத புலவர் பலரின் பெயர்களையும் கண்டறிந்து, அரசினர் வெளியீடான கல்வெட்டுத் தொகுதிகளையும் அறிக்கைகளையும் ஆராய்ந்து உண்மை நிலையை உறுதிசெய்த பின்னர், புதிய உரையை எழுதவே, அருணா பதிப்பகத்தார் அதை இரு பகுதிகளாக வெளியிட்டனர்.

“இரண்டாவது உலகப்போரின்போது சென்னை அரசினர் கையெழுத்து நூல்நிலையம் திருப்பதிக்கு மாற்றப்பட்டது; அது அப்போது திருவேங்கடவன் கீழைக்கலைக் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த ஒளவையவர்கள் அதன்கண் இருந்த நற்றிணை ஏட்டினை ஒப்புநோக்கிப் பாடவேறுபாடுகளைக் குறித்துக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

பின்னர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சித் துறையில் பணிபுரிகையில், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை வைத்திருந்த “தமிழ்ச்சங்க ஏடு” கிடைத்தது.

அங்கே ஒளவையுடன் பணிபுரிந்த ஆராய்ச்சித் துறைப் பேராசிரியர் வெள்ளைவாரணர் அவர்கள் அவ்வேட்டைக் கொண்டு நற்றிணையில் ஆராய்ச்சி செய்தார்கள்.

நூலோடு அமைந்த அவரது மதிநுட்பம் நேரிய பாட வேறுபாடுகளை ஆராய்ந்து மேற்கொள்ள ஒளவைக்கு உறு துணைசெய்தது.

ஆய்வுக்கு உதவிய எடுகள்:

(1) அரசினர் கையெழுத்து நூல்நிலைய ஏடு,
(2) மதுரைத் தமிழ்ச் சங்கத்து ஏடு,
(3) டொம்மிச்சேரி கருப்பையாத் தேவர் ஏடு,
(4) புதுப்பட்டி சிவ முத்தையா செட்டியார் ஏடு.

இவ்வேடுகளை உடன் வைத்து ஆராய்ந்ததில் சுமார் 1500க்கு மேற்பட்ட பாட வேறுபாடுகளும், பெயர் தெரியாதிருந்த பல பாட்டுக்களில் ஆசிரியர் பெயர்களும் தெரியவந்தன.

சில ஆசிரியர்களின் பெயர்கள் திருத்தம் பெற்றன.

அவற்றின் உண்மை வடிவு காண்டற்கும் ஆசிரியர் பெயர்களிலும் பாட்டுக்களிலும் காணப்படும் ஊர்களை அறிதற்கும் அரசு வெளியிட்டிருந்த கல்வெட்டுத் தொகுதிகளும் ஆண்டறிக்கைகளும் போதிய துணைபுரிந்தன.”

உரையின் தேவையும் அறிஞர் வேண்டுகோளும்

‘எடுகளை ஒப்புநோக்கிய போது காணப்பட்ட பாடவேறுபாடுகள் பாட்டுக்கு உரையே வேறு எழுத வேண்டிய இன்றியமையாமை பிறந்தது.

அதனால் எனது இப்பதிப்பு நற்றிணை மூலத்தோடு விளக்க உரை பெற்று வெளிவருகிறது.

மேலும், இவ்வுரையைக் கண்ட தமிழ் அறிஞர்கள் யான் புறநானூற்றுக்கு எழுதியது போல ஒவ்வொரு பாட்டுக்கும் முன்னுரையும் விளக்கமும் வரவேண்டும் என்று உரைத்தனர்.

தமிழறிஞராவார் முன்னுரையும் பாட்டும் படித்துப் பயன்பெறுவரென்றும், தமிழ்பயில்வோர் பாட்டும் உரையும் படித்துப் பயன்பெறுவரென்றும் எடுத்துரைத்து வற்புறுத்தினர்.

அதனால் ஒவ்வொரு பாட்டும் முன்னுரையும் உரைவிளக்கமும் பெற்றுள்ளது.”

ஆய்வுக்கு உதவிய தரவுகள்
சங்ககால வாழ்வுக்கும், இடைக்காலப் பல்லவ பாண்டிய சோழர்கால வாழ்வுக்கும் மிக்க வேறுபாடு காணப்படவில்லை.

சங்ககாலத்தும் இடைக்காலத்தும் பெயர்களும் பழக்க வழக்கங்களும் ஓரளவு ஒத்திருக்கின்றன வாதலால், இடைக்காலக் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் இந்நூலாராய்ச்சிக்குப் பெருந்துணைசெய்தன.

கிடைத்த ஏடுகளும் மிகப்பழமை வாய்ந்து பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயரை ஒவ்வொரு துறையின் இறுதியிலும் விடாது எழுதப் பெற்றிருந்தன.

அது ஒளவையவர்களின் ஆராய்ச்சிக்கு ஊக்கமளித்தது.

வளரும்…

– முனைவர் ஔவை அருள், தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *