POST: 2022-05-09T10:07:29+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 52

ஒளவை நடராசன்

மேனாள் துணைவேந்தர்

பறம்புமலைப் பாவேந்தர் !

உலகுபுகழும் கொடை வள்ளல் !

வேள்பாரிபால் மகட்கொடை வேண்டி மறுக்கப்பட்ட தமிழ் வேந்தர் அதுவே வாயிலாக அவன்பால் பகைமை மிக்க மூவேந்தரும் ஒருவர் ஒருவராக அவனொடு பொருதற்குத் தொடங்கித் தோல்வி யெய்தினர்.

அதுகண்ட கபிலர், “தமிழ் வேந்தர்களே. ஒருவரேயன்றி மூன்று பேரும் ஒருங்கு கூடி நின்று இப்பறம்பினை முற்றுகையிட்டுக் கொள்ளினும் வேள் பாரியை வெல்லுதலும் அரிது;

பாரியது இப் பறம்பினைக் கைப் பற்றலும் அரிது;

பறம்பு நாட்டவர்க்கு வேண்டும் உணவு வகையில், உழவரது உழவினை வேண்டாதே இப் பறம்புமலை நால்வகை யுணவுப் பொருளை நல்கும்;

அகல, நீள, வுயர, வகையில் பறம்பு வானத்தை யொக்கும்; அதிலுள்ள சுனைகளோ வானத்துள்ள விண்மீன்களை யொக்கும்;

ஆகவே நீவிர் மரந்தோறும் களிறுகளைப் பிணித்து நிறுத்தி, இடந்தோறும் தேர்களை நிறுத்தி, உங்கள் மெய்ம்முயற்சியாலும், வாட்படையாலும், பறம்பினைப்பெறக்கருதுவது முடியாத செயல் எனத் தெளி மின்;

அவ்வாறு கொள்ளக்கருதுவதும் அறியாமை. என்பது எனக்குத் தெரியும் அதனைக் கொள்ளும் வழி.

அஃதோர் அரிய செயலன்று.

நீவிர் நும்வேந்தர் வடிவினை மாற்றிக்கூத்தர் வேடமும், நும்முடைய மகளிர் விறலியர் வேடமும் கொண்டு வேள் பாரியின் திருமுன் சென்று ஆடலும் பாடலும் செய்வீராயின் அவன் ஆடல் பாடல் வியந்து தன்னாட்டையும் மலையையும் ஒருங்கே யளிப்பன்” என இப் பாட்டின்கண் கூறியுள்ளார்.)

தமிழ் வேந்தர் மூவரும் பாரியின் பறம்பைத் தம் பெரும் படையுடன் போந்து முற்றிக்கொண்ட காலையில், கபிலர், அவர்க்குப் பாரியின் போராண்மையும் கை வண்மையும் எடுத்தோதுவாராய், “நீவிர் மூவிரும் கூடிச் சூழ்ந்தாலும் பாரியை வென்று அவன் பறம்பினைக் கைக்கொள்வது முடியாது;

பறம்பு நாடு முந்நூறு ஊர்களையுடையது; அம்முந்நூறூர்களையும் பரிசிலர் அவனைப் பாடித் தமக்குரிமை செய்துகொண்டனர்.

இனி அவனும் யாமுமே யுள்ளோம்; நீவிரும் அவர் போலப் பாடி வருவீராயின், எம்மையும் பெறலாம்; எஞ்சி நிற்கும் இப்பறம்பு மலையினையும் பெறலாம்” என்று கூறுகின்றார்.

வரம்பில்லாத பாரியின்பால் பரிவு கொண்ட நல்லிசைக் கபிலர் பாடிய பாடலை வியந்து அதன் பொருண்மையை நயந்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் காட்டும் உரைநடை ஓவியத்தை இங்குக் காணலாம் .

மீன் சின்னக் கொடி பறந்த பாண்டி நாட்டில்

தேன் கிண்ணத் திருவாதவூரில் கபிலர் பிறந்தார்.

வான் போலக் கொடை வழங்கும் பாரி மீது

மான் கொம்பின் உறுதி போல நட்புக் கொண்டார்.

மலைக்கிருக்கும் அழகெல்லாம் மாரியாலே – பறம்பு

மலைக்கிருக்கும் அழகெனிலோ மன்னன் பாரியாலே – அங்கு

பலாச்

சுளைக்கிருக்கும் சுவை கூட அவனளித்த கொடையெனலாம்.

களைக்கிருக்கும் மதிப்பு கூடத் தன் பொருளின்பால் வைக்காத

பாரிவள்ளல்.

வெடித்திருக்கும் வெண்முல்லை தழுவுதற்குக் கொம்பின்றித்

தவித்தபோது – அந்தக்

கொடிக்கிருக்கும் வீடாக இழையணித்தேர் ஈந்த அண்ணல் !

கதைகளிலே படித்திருப்போம் கலகம் செய் நாரதனும்

கந்தவேள் முன் சென்று ‘நின் காதலுக்கேற்ற – நங்கை,

வள்ளி என்பேன்; வடிவழகி, வட்ட நிலா

அள்ளி உண்பாய் பார்த்து விட்டால் ” என்றவுடன் முருகனுமே

துள்ளியோடித் தோகையினை அடைந்திடவே

புள்ளிமயில் மீதேறிப் புயலாக அலைந்தானாம்.

ஈங்கோர் கற்பனை கேளீர் !

நெடுந்தொலைவு பயணம் செய்தும் நேரிழையைக் காணாமல்

பறம்புமலைப் பக்கம் வந்து பாட்டி ஒருத்தியிடம்

அரும்பு மீசை முருகனுமே வள்ளி எங்கே எனக் கேட்க

பாட்டியோ, “மலைமீது ஏறிடுக, கண்டிடலாம் என்று

நீட்டி முழக்கி நடந்திட்டாள், நெடுவழியில் !

ஈட்டியின் வேகமென ஏறினான் மலைமீது

வள்ளி எங்கே? வள்ளி எங்கே ? ” எனக் கேட்ட

வடிவேலனிடம், “வந்திடுக! கண்டிடுக!” எனக்

காட்டினார் அங்குள்ளோர்; மலையெல்லாம் வள்ளிக்கிழங்கு !

கிழங்களின் குறும்புதான் என்னே … உண்ணும்

கிழங்கினை வள்ளியென்றே உரைத்து நமை

ஏய்த்தாளே பாட்டியென்று – முருகன்

ஏமாந்து பறந்து விட்டான்.

குன்றமெலாம் தேனடையின் அருவியோடி வழிந்திருக்கும்

கொடி வள்ளிக் கிழங்குகளோ அதில் குளித்து நனைந்திருக்கும்

பன்றி வயிற்றில் பால் குடிக்க மோதுகின்ற குட்டிகள் போல்

பலாக் காய்கள் அடிமரத்து வேர்களிலே சூழ்ந்திருக்கும்.

உழுவாரின்றியே விளைகின்ற பாரியின் மலையில்

எழுவானத்து மீன்களை யொத்த எண்ணற்ற சுனைகளாம் !

பழகு தமிழில் சொன்னேன் நான் – கபிலர்

பழைய தமிழில் சொல்வது கேட்போம் :

“உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே

ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளையும்மே;

இரண்டே, தீஞ்சுனைப் பலவின் பழம் – ஊழ்க்கும்மே

மூன்றே, கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே

நான்கே, அணிநிற ஓரி பாய்தலின், மீது அழிந்து

திணி நெடுங்குன்றம் தேன் சொரியும்மே;

வான்கண் அற்று அவன்மலையே வானத்து

மீன் கண் அற்று அதன் சுனையே; ஆங்கு…

( புறநானூறு : பாடல் : 109

பாடியவர் : கபிலர் )

மலைவளமும் மனவளமும் மிகப் பெற்ற பாரிமன்னன்

கலை உளமும் பெற்றதாலே கபிலர்க்கு உயிரே ஆனான்.

மதி இரண்டாய்ப் பிரிந்து வந்து பிறந்தது போல் பாரிவள்ளல்,

அதியழகுச் சிலையிரண்டைப் பெண்களாய்ப் பெற்றான்.

பதியாவோம் அவர்க்கென்று பல மன்னர் பெண்கேட்டுக்

கிடைக்காமல்

படைகொண்டு பறம்புமலைத் தாக்கித் தோற்றார் – தேன்

அடை உடைந்து கிளம்பிவிட்ட ஈக்களே போல் – மூவேந்தர்

தடை தகர்த்துப் பாரி உயிர் போக்குதற்குப் பறம்புமலை

வளைத்து விட்டார்

நடை அமைதி காட்டிக் கபிலர் பிரான் அவர் முன்னே

சென்று நின்று

“வீர மரபில் உதித்தோரே! வெகுண்டெழுந்து வெஞ்சமரில்

குதித்தோரே !

சேர, சோழ, பாண்டியர்காள் !

முத்தமிழ் முழங்கிடும் முரசுகள் அதிர்ந்திடும்

முந்நூறு ஊர் கொண்ட பாரி நாட்டை;

முற்றுகையால் வென்றெடுத்துச் செல்வதற்கு முடியாதும்மால் !

பற்றுக என் சொல்லை !

பாடி ஆடி நாடி வந்து பாரியிடம் பரிசு கேட்ட

பரிசிலர்க்கு அனைத்தையுமே பகிர்ந்தளித்து விட்டான் மன்னன்

பறம்புமலை, பாரிமன்னன், கபிலன் நான் மட்டுந்தான்

பாக்கியிருக்கின்றோம் அறிந்திடுக !

தோள்வலியால் பாரி நாடு பறித்திடவே

தொடர்ந்திடுவீர் போர் எனிலோ – உம்

தோள் மீது தோல்விக் கிளி தொத்திக் கொள்ளும் !

வாள் வீரன் வேள்பாரி வலியறிவீர்

நாள் நூறு கழிந்திடினும் பறம்புமலை, பணிந்திடாது !

‘எவ்வி’ யெனும் குடிப்பிறந்த எம் கோவை

எவ்விதம் நீர் வென்றிடலாம் தெரிவிக்கின்றேன்.

முற்றுகை தளர்த்தி, முடிவினை நிறுத்தி – கோட்டையை

முட்டுதல் ஒழித்து, மூவரும் சென்று

படையினை விடுத்துப் பாரியின் முன்னே

பரிசிலர் போலப் பாடியும் ஆடியும்

கொடையாய் அவனையே பெற்றுச் செல்க!” என்றார் கபிலர்

இவ்வாறு – ஒரு முனையில் நின்று – கபிலர்

செருமுனையில் ஒலித்த

சங்கத் தமிழ், இஃதே :

“கடந்து அடு தானை மூவிரும் கூடி

உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே.

முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல்நாடு;

முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்.

யாமும் பாரியும் உளமே;

குன்றும் உண்டு; நீர் பாடினிர் செலினே.”

( புறநானூறு – பாடல் 110

பாடியவர் : கபிலர் )

நன்னெஞ்சப் புலவர் சொல் மறுத்துவிட்டு

முன்வைத்த காலைப் பின் வைப்பதில்லையென

மூவரசர் முழக்கமிட்டார்.

வன்னெஞ்சர் பின்னித்தந்த சூழ்ச்சி வலையால்

வள்ளல் பாரியின் உயிரை மாய்த்து விட்டார்.

பகம்மலையின் உச்சியிலே கொடி போட்டுப்

புவியாண்ட பாரியின் மகளிர்க்கு

வாழ்வில் விளக்கேற்றி வைப்பதற்கே

ஆழ்கவலை உளத்தேந்தி அலைந்திட்டார் – கபில மேலோன்.

முடிவாகப் பாரிமகள் இருவரையும் – தமிழ்க்

குடிமகளாம் அவ்வையிடம் ஒப்படைத்து

இனி என்வேலை முடிந்ததென்றும் – பாரியின்றித்

தனிமரமாய் வாழ்வது இயலாதென்றும்

அடக்கவொணாப் பிரிவுத் துயர் அடக்குதற்கு

வடக்கிருந்து உயிர் விட்டார் கபிலர் பிரான் !

நடப்புலகில் நட்புக்குப் பொருள் புரியா

கடைமனத்துக் கயவருண்டு !

கதிர் உலாவும் வான் மேவி உயர்ந்து நிற்கும் நினைவுக்

கம்பமன்றோ , கபிலர் – பாரி இருவர் நட்பு !

பொருள் விளக்கம் :

வெதிரி = மூங்கில்.

ஓரி பாய்தல் = தேனடை முதிர்ந்த நிலையில் ஏற்படும் நிறம். கடந்தடுதானை = எதிர் நின்று கொல்லும் படை. உடன்றனிராயினும் = போரிட்டாலும். பாடினிர் செலின் = பாடுநராய் வருக.

தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *