POST: 2022-05-10T09:06:59+05:30

மக்கள் குரல் :
பக்கம் எண் : 11 –
நாள் : 7 – 5 – 2022

அவ்வை நடராசனுக்கு பட்டும், பொன்னும் பூட்டி மகிழ்ந்த கவிஞர் வைரமுத்து!

பிரபல மூத்த தமிழறிஞரும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான முனைவர் அவ்வை நடராசனுக்கு 87வது பிறந்த நாளையொட்டி அவரை அண்ணா நகர் இல்லத்தில் சந்தித்து, பொன்னோடு, பட்டாடை அணிவித்து கவிஞர் வைரமுத்து வாழ்த்துக் கூறினார்.

‘அவ்வையாரின் தமிழ்ப்பற்றில் தங்கத்தின் வலிமை, தமிழ்ப் பொலிவில் பட்டின் மென்மை, இரண்டின் குறியீடாய் பொன்னும் பட்டும், பூட்டி மகிழ்ந்தேன். ‘

மன்னவர் தமிழாய்ப் மன்னுக பெரும’ என்று தன் வாழ்த்துச் செய்தியில் வைரமுத்து குறிப்பிட்டார்.

நா வன்மையும், பேனா வன்மையும் முனைவர் அவ்வை ந. அருளுக்கு கிடைத்திருப்பது…

அந்தப் பாரம்பரியம் மிக்க குடும்பத்துக்கே (தாத்தா பேராசிரியர் அவ்வை துரைசாமி, அப்பா முனைவர் அவ்வை நடராஜன்) சரஸ்வதி கடாட்சம் அபரிமிதம் என்பதை அனுபவத்தில் உணர முடிகிறது!

மகாகவி பாரதியாரின் குயில் பாட்டை படித்திருப்போம்.

வரிவடிவில் விழிகளால் பார்த்து படித்ததை இசை வடிவில் செவிகளில் ஒலிக்க கேட்டு இருக்கும் இந்த நிமிடம் வரைக்கும் மறக்க முடியாத ஓர் சுகானுபவத்தை ஊட்டியிருக்கும் இசைக்கலைஞன் கலைமாமணி முனைவர் சூரியபிரகாஷை என்னவென்று சொல்வதம்மா?!

இவர் குரல் கொடுத்து பாடியிருக்கும் குயில் பாட்டுக்கு, தன் குரல் கொடுத்து விளக்கம் தந்திருக்கும் அவ்வை ந. அருளின் தமிழும் ஆங்கிலமும் இணைந்த பேச்சுரை

நெல்லிக்கனி சாப்பிட்டு நீர் குடித்த மாதிரி நினைத்தொறும் பேசுதொறும் நெஞ்சு தொறும் தித்திக்கும்… மலர்ந்து மணக்கும் மகரந்தம்!

(இந்த ஒரு வாக்கியம் மட்டும் நயவுரை நம்பி எம்பி ஜெகத் ரட்சகனிடமிருந்து இரவல்).

இந்திய சினிமாவில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் பட நிறுவனம் அமரர் எஸ். எஸ். வாசனின் ஜெமினி. இதன் லட்சினையைப் போல ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் மாதிரி அவ்வை ந. அருளும், சூரியப் பிரகாஷும்.

மனசில் ஒட்டியிருக்கிறார்கள் செவிகளில் ஒலித்து இருக்கிறார்கள்.

பாரதியார் 1908 முதல் 1918 வரை 10 ஆண்டுகள் புதுவையில் வாழ்ந்தார்.

அவர் சென்ற தோப்பு தலைசிறந்த தோப்பு.

பாரதியாருடன் அரவிந்தர் வந்து பேசுவார், வா உ.சு. ஐயர் வந்து பேசி செல்லுமிடம் அந்தக் குயில் தோப்பு.

அந்த தோப்பில் பாரதிக்கு ஒரு நீண்ட கனவு.

அந்தக் கனவு தான் குயில் பாட்டாக மலர்கிறது.

744 அடிகளில் படைக்கப்பட்ட காவியம், ஒன்பது பகுதிகள்.

குக்கூ என்ற குறளில் காதல், அருள், இன்பம், நாதம் தாளம், பண், புகழ், உறுதி, கூடல், சூழல்… ஆகிய 10 பொருமைகளை உணர்கிறார் பாரதி.

பாட்டில் மக்கள் மட்டும் பாத்திரங்களாக வரவில்லை, பேய், பிசாசு, புல், விலங்கு… ஆகியவையும் பாத்திரங்கள் ஆகின்றன.

எல்லா உயிர்களுக்கும் உள்ள காதல் உணர்ச்சி, புதிய முறையில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்தக் காப்பிய பாடல்களை இதுவரை எந்த தமிழ்ப் பாடகர்களும் முறையாக எடுத்துப் பாடியதில்லை. (சூரிய பிரகாஷுக்கு இது தனிச்சிறப்பு இல்லையா?!)

குயில் பாட்டு: 120 இராகங்களில் சூரியபிரகாஷ் மெட்டமைப்பு.

தமிழில் விளக்க உரை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு : முனைவர் அவ்வை ந. அருள்.

குழலி (யூடியூப்) மொழி இசையில் 22 அத்தியாயங்கள் வெளியீடு.

(கோகிலம் என்பது குயிலாகும். அதனால்தான் இசை அரசிக்கு கோகிலவாணி என்று பெயரிட்டார்கள். கோகிலக் குரல் வேந்தர் சூர்யபிரகாஷ்)

‘‘பாரதியார் தன் குயில் பாட்டை காதல் பாட்டாகவே எழுதி வேதப் பொருளை கவிதையின் உட்பொருளாகக் கொண்டு ஒரு கவிதைக் கடலை நம் கண்முன்னே காட்டி உள்ளார்.

பாரதியார், தீந்தமிழ் கவிதை இன்னிசை குயிலாக காட்டி தன் தமிழ் காதலை உருவகப்படுத்தி இருக்கிறார்’’

என்று சொல்லும்போது அருளின் வார்த்தைகளில் தான் எத்தனை பெருமிதம்?!

* காதல் காதல் காதல், அது- போயின் சாதல் சாதல் சாதல்: இது குயில் பாட்டின் இரண்டாம் இயலில் வரும் வரிகள்.

இந்த வரிகள்தான் பாடலின் உயிராக அமைகிறது.

இந்த வரிகள் வைரவரிகள் – சாதனை வரிகள் – கல்வெட்டு வரிகள் சாசன வரிகள்: இளையோரின் இதயகீதம்!

என்று மார்தட்டி சொல்லி மகிழும் போது அதில் அருளின் நெகிழ்ச்சி ரெக்கை கட்டி பறக்கிறது.

சங்கராபரணம் கொஞ்சம் தடம் மாறினால் கல்யாணி ராகம் ஆகிவிடும் என்பர்.

குயில் அவ்வாறு கூறுவது பொருத்தம் தானே?!

ராகம் குறிப்பிடும்போது தாளம் தானாகவே வரும்.

சுருதி மாதா என்றால்… லயம் பிதா என்று சொல்வர்.

எனவே தான் தாளத்துக்கு ஒரு தடை உண்டாயின், கூளம் ஆகி விடும் என்று எடுத்துக் காட்டுகிறார் பாரதி.

கம்பி மேல் நடப்பது போல் ஒரு சாகசம் அது என்று சொல்லும்போது அதன் அருமை, மகிமை ஒளிர்கிறது!

‘‘எந்த ஒரு படைப்பையும் இசையாக மாற்றிக் காட்டுகிறது அந்த விதம், அந்த இசைக்கும் அந்த பாட்டுக்கும் அந்த கருத்துக்கும் ஒரு மாபெரும் சிறப்பு’’ என்கிறார் வால்டர் மேட்டர் என்னும் மேனாட்டு அறிஞர்.

இந்த சிறப்பு குயில் பாட்டில் பொதிந்து கிடக்கிறது.

‘குயில் பாட்டை இசை பாட்டாகவே பாடி காட்டியப் பெருமை சூரியபிரகாஷை சேரும்’ என்று பள்ளி தோழமை காலத்தில் இருந்த நெருக்கம் இன்று அகவை ஐம்பதை கடந்த நிலையிலும். இன்னும் இறுகி, இறுகி முன்னவர் சூரியபிரகாஷ் பாட்டுக்கு முனைவர் அருள் குரல் கொடுத்து சான்றிதழ் அளித்து இருப்பது அணைக்கும் அரவணைக்கும் ஆராதிக்கும் பரந்த தாய் உள்ளத்தை அல்லவா படம் பிடிக்கும்?!

‘‘மனிதர்கள் விரலிலும், குரலிலும், இசைக்கும் பாட்டிலும், வீட்டிலும், வெளியிலும், நாட்டிலும் காட்டிலும் என எங்கெல்லாம் இசை என்னும் இன்ப ஒலி கேட்கின்றதோ அந்தப் பாட்டில் என் நெஞ்சம் பறிகொடுத்த பாவி… நான்’’ என்கிறது அந்த குயில்.

இதை குயிலா பேசுகிறது? குயிலின் குரலில் மகாகவி பேசுவதை அருள் தன் குரல் கொடுத்து ஊருக்குள் ஒலித்து இருப்பது அகம் மகிழும்!

‘‘காத்திருக்கும் நாலு நாட்களும் 10 யுகங்கள் ஆகும் எனக்கு.

இப்போது சென்று வாருங்கள் எனக்கூறிய அந்த குயில் பறந்து மறைந்து விடுகிறது என்று பாட்டுடைத் தலைவர் அந்தப்பகுதியை முடிக்கிறார்’’.

10 யுகங்கள் என்று பாரதி வரியை பாடி விட்டார் சூரியபிரகாஷ், ஆனால் உரை சொல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கும் அருளுக்கு, ஒவ்வொரு யுகமும் எத்தனை எத்தனை ஆண்டுகள் என்பதைச் சொல்லி நேயர்களை வியப்பில் ஆழ்த்த வேண்டிய கடமை உண்டு அல்லவா? அதைத் திறம்பட செய்திருக்கிறார்.

ஒவ்வொரு யுகமும் எத்தனை எத்தனை ஆண்டுகள் என்று பட்டியலிட்டு காட்டி ,

கிருதாயுகம் 17,28,000 ஆண்டுகள், திரேதா யுகம் 92,96,000 ஆண்டுகள், துவாபரயுகம் 8,64,000 ஆண்டுகள், கலியுகம் 4,32,000 ஆண்டுகள்
என்று புள்ளி விவரம் சொல்லியிருப்பதில் நெஞ்சை அள்ளுகிறார் அருள்.

“என்ன நீளமான முகம், நிமிர்ந்த கொம்புகள்’’ அனைவரையும் தோற்கடிக்கும் உடல் திடம், வாலோ வீரத்தின் விளை நிலம், நீ “….மா …” என்று குரல் எழுப்பினால் வானத்தில் இடி முழக்கம்…”

காளையை குயில் வர்ணிக்கும் அந்தக் காட்சிகள் தமிழை விடுங்கள், அதற்கு அருளின் ஆங்கில மொழியாக்கம்: ஓஹோ …

சூரியபிரகாஷுக்கு சொன்ன மாதிரியே தான் என்னவென்று சொல்வதம்மா அற்புதம்…! (குலவிச்சை கல்லாமல் பாகம் படும், நிரூபணம் ஆகிறது)

பாரதியின் உயிர்ப் பாட்டான குயில் பாட்டை இசைத்துக் காட்டி இருக்கிறார் சூரியபிரகாஷ்.

அலை புரள- கரைபுரள, ராகங்கள் அவர் குரலில் வழிந்தன!

காதலோ காதல் … என்ற எட்டாம் பகுதியில் சூரிய பிரகாஷ் பாடிய உருக்கமான பாடலின் ராகம் அவரே புனைந்த சூரிய வசந்தம் என்ற ராகத்தில் மிடுக்காகப் பாடினார்.

அவருடைய தோற்றப் பொலிவு, அவர் பாடிய நயத்தைக் கேட்டு உலகமே சுருண்டது என்றால் அது மிகையாகாது!

அருளின் இந்தப் பாராட்டு விமர்சனம்: சூரிய பிரகாஷுக்கு விமோசனம்!

* நெஞ்சம் எங்கும் பாயும்

சூரிய பிரகாஷின்

நாத வெள்ளம்!

* அவ்வை ந. அருளின்

இருமொழி உரை

இரு உதட்டிலும்

ஒட்டிக்கொள்ளும்!

* வெற்றி நாயகன்

மகாகவி பாரதியார்

பெயரைச் சொல்லும்!

வீ.ராம்ஜீ

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *