தினமணி நாளிதழில் 8.5.2022 ( ஞாயிறு ) அன்று
” தமிழ்மணி ” – ( பக்கம் எண் – 6 ) . பகுதியில் வெளியான
முனைவர் ஒளவை அருள் எழுதிய ஒப்பியல் இலக்கணம் – ஒளிவிளக்கு !
– கட்டுரைக்கு வரப்பெற்ற கருத்துரைக் கடிதம்
தினமணி – தமிழ்மணி – 15.5.2022 பக்கம் எண் : 6 –
ஏற்புடைத்தன்று
கால்டுவெல் பற்றி முனைவர் ஔவை ந அருள் எழுதியுள்ள கட்டுரையைப் படித்து மகிழ்தேன். ‘
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி ‘ என்னும் ஔவை பாட லில் ‘ வான்கோழி ‘ என்னும் சொல் பயில்வதால் அப்பாடல் ஐரோப்பியர் இந்நாட்டுக்கு வணிகர்களாக வந்ததன் பின்னரே எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று கால்டுவெல் ஆராய்ந்து கூறினார் ‘ என்று அதிற் குறிப்பிடப்பட்டிருந்தது.
‘ வான்கோழி ‘ என்பதை ஐரோப்பியர் இந் நாட்டுக்குக் கொணர்ந்த ” turkey bird ” என்பதைக் குறிக்கவே இன்று பயன்படுத்துகின்றோம்.
அப்பொருளில் இக்கூற்று சரியாகவே தோன்றக்கூடியது.
ஆனால் ‘ வான் ‘ என்பதற்கு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி தரும் பதின்மூன்று பொருள்களுள் ” Greatness, largeness பெருமை ‘ என்பதும் ஒன்று.
அளவிலோ சிறப்பிலோ மிக்கு விளங்குவதைக் குறிக்கும் அடைமொழியாக ‘ வான் ‘ பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ‘
வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு ‘ என்னும் பாரதி கூற்றில் வான் என்னும் சொல் இப்பொருளில் வந்துள்ளது.
காட்டுக்கோழி வீட்டுக்கோழியைவிட அளவிற் பெரிதாக இருக்கக்கூடியது மட்டுமல்ல, வண்ணங்களும் கூடுதலாக உள்ளவை ஆகும்.
எனவே, காட்டுக்கோழி பெரிதாகவும் வண்ணங்கள் கொண்டதாகவும் இருப்பினும் வண்ணமயிலுக்கு இது ஈடாக முடியாது என்னும் பாடற்பொருள் எளிதில் விளங்குகின்றது.
‘ தமிழ்நூற்கடல் ‘ தி.வே. கோபாலய்யர் பாடலின் முதல் அடி ‘ கான மயிலாடக் கண்டிருந்த கான்கோழி ‘ என்றிருக்க வேண்டுமென்று கருத்துக் கூறியுள்ளார்.
இது நான் குறிப்பிட்ட பொருள் மாறாமல் இருப்பதோடு மோனையழகையும் கொண்டு அமைந்துள்ளது.
எப்படியும், ‘ வான் ‘ கோழியோ ‘ கான் ‘ கோழியோ, ஔவை அருள் குறிப்பிடுவது இக்காலத்திய வான்கோழி என்னும் கால்டுவெல் கூற்று ஏற்புடைத்தன்று.
– மரு. டி. ஆர். சுரேஷ், சென்னை .

Add a Comment