செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 55
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
பாரிமகளிர் அவலப் பாடல் !
வாள் கொண்டான் கையில்;
வள்ளல் தன்மை கொண்டான்
நெஞ்சில் !
வேள்பாரி யெனும் பெயர் கொண்டான் தமிழினத்து
வரலாற்றில் !
மூவேந்தர் ஒன்று கூடி அவன் பறம்புமலை சூழ்ந்து
முற்றுகையிட்டார் எனினும் அஞ்சாமல் நின்றானன்றி
முழங்காலை மடித்துத் தொழுது போற்றித் தன்
முடிதனையே காத்துக்கொள்ள நினைத்தானில்லை !
பாரியெனும் மன்னவனைப் பகைவர் பலர்கூடி வென்றிடலாம்
எனினும்
வாரி வழங்குகின்ற அவன் வள்ளல் தன்மையினை வெல்வார்
யாருமிலர் என்பதாலே –
மாறி மாறிப் பல்லாண்டு சுழன்றபோதும்
மாறிடாத பெயராகப் பாரியின் பெயர் நிலைத்ததிங்கே !
அவனை, வென்றார் ! வீழ்த்தினார் ! கொன்றார் ! எனும்
அரசர் மூவர் பெயர் என்னவென அறிந்திடாது இவ்வையம் !
ஆனால் களம்பட்டு உயிர்விட்டான் எனினும் பாரியின் பெயர்
அழியாமல் மறையாமல் உயிரோடு உலவுதல் ஏன் ?
மறவன் எனும் நிலை மட்டும் மன்பதையில் புகழ்
சேர்ப்பதில்லை !
மனிதனாகவும் வாழ்ந்திடல் வேண்டுமென்ற
அறநெறியை விட்டு அணுவளவும் பிறழாது – ஒருவன்
அளந்து வைக்கும் அடிகள் ஒவ்வொன்றும்தான்
வாழையடி வாழையென வருகின்ற சமுதாயத்து
வழித்தோன்றல்களின் பயணப்பாதையாகும் !
தேருக்கோர் அச்சாணி போல் – பறம்புமலைப்பக்கம் பல
ஊருக்கு மன்னவனாய்த் திகழ்ந்த பாரியினைப்
போருக்கு அழைத்துக் கொன்ற பின்னர்; அவன்
புதல்வியர் இருவரைக் கவர்ந்திட எண்ணிய வேந்தர் மூவரின்
கண்களை மறைத்துக் கபிலர் எனும் புலவர் பிரான் அந்தப்
பெண்களைத் தனது பொறுப்பில் காத்திடத் துணிந்து
முனைந்தார்.
நண்பர்க்கு நல்வாழ்வு வாய்த்தபோது அருகிருந்து
சுவைத்துவிட்டுத்
துன்பத்தால் துயருறும் போழ்து தொலைவில் ஓடுதல்
துரோகமென்பதை
எண்ணியும் பார்க்காப் பிறவிகள் சிலபேர் –
புண்ணியவான்களாய் வேடம் புனையும் இப்புவியில்
தமிழாய்ந்த தமிழ் மகனாம் கபிலர் பிரானை
அமிழ்தாக நினைத்து மகிழ்ந்து; அவர்
அருகிருக்கும் நேரமெல்லாம் குளிர்
தரு விரிக்கும் நிழலின் கீழ் இருப்பது போல் உணர்ந்த பாரி
சிறகொடிந்த பறவைகளாய் செல்வ மகளிர்தமை விடுத்துச்
செத்துவிட்ட செய்தி வந்தவுடன் கபிலப் புலவர் சில
நொடியில்
சிறகானார் பாரிமகளிர் இருவர்க்கும் – அதனாலே மூவருமே
பறந்து போனார்.
பாரி பெற்ற முத்திரண்டைப் பத்திரமாய்ப் பாதுகாக்கப்
பரிவு காட்டும் மாந்தரிடம் ஒப்படைத்தார்; ஓரிரு நாள் !
ஒளிபடைத்த மணி யிரண்டும் ஒப்பற்ற அழகுப் பேழை.
உளிபடாச் சிலையைப் போல உருக்கொண்டு மணக்கும் தாழை.
மாரிக்கிடையே வானைக் கீறுகின்ற மின்னல் போல
பாரிக்கு மகளாய் வாய்த்தோர் விளங்கலானார்.
தங்கியிருந்த இல்லத்து மேல்தளத்தில் அமர்ந்தவாறு
பொங்கி வழியும் பால் பானை வாய் போலத் தோன்றுகின்ற
முழு நிலவின் ஒளி வெள்ளம் பாய்ந்து பரவுவதை – ஒரு
பழுதில்லா எழிலுடைய பாரி மகளிர் பார்த்தனர் விண்ணில் !
அழுதழுது முற்றிலும் வற்றியிருந்தனவாம் நீர்த்துளிகள்
கண்ணில் !
ஆனாலும் அவர் நெஞ்சில் வற்றாத தமிழ் ஊற்றுப் பெருகி
“அற்றைத் திங்கள் வெண்ணிலவில் ” என்ற பாட்டாய் ”
எழுந்ததுவாம் , உளமுருகி !
கடந்த திங்கள் இற்றை நாளில் கடைந்தெடுத்த வெண்ணெய்
போல்
எழுந்த நிலா வானில் திரிந்தபோது எங்களிருவருடன்
பழுத்த மரப் பாரியாம் எங்கள் தந்தை
சிரித்த முகத்துடனே அருகிருந்தார் –
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் எங்கள் தந்தையுமில்லை;
கொற்றவர் மூவர் எமது குன்றமும் வென்றதால்
தந்தையை இழந்து தாயகம் இழந்து
தவிக்கிறோம் இன்று தனிமையில் நின்று
பாரி மகளிர் பாடலைக் கேட்டு மனமிக நொந்து
பரிவுடன் அவர்தம் கூந்தலக் கோதி
பாவலர் கபிலர்… ஆறுதல் சொன்னார்; உம்
காவலராகக் கணவர் வாய்ப்பர் என்று தேறுதல் சொன்னார்….
‘ திங்கள் ஒன்றுக்கு முன்னர் இருந்த குன்றமும் இல்லை
எங்கள் தந்தையும் இல்லை என் செய்க ”
என தங்கப் பதுமைகள் இரண்டும் – துயரத்
தணலில் வீழ்ந்து தத்தளித்த நிலையையும்
சங்கப்பாடலாய்த் தந்தனர் நமக்கு –
சோகப் பாடல் எனினும் – அதிலோர்
சுவையைக் கண்டோம்; சுளைத்தமிழ் உண்டோம் அன்றோ ?
” அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே !
( புறநானூறு : பாடல் : 112
பாடியவர் : பாரி மகளிர் )
பொருள் விளக்கம் :
அற்றைத் திங்கள் = கடந்த மாதம் ! இற்றை = இன்றைய .
வேள் பாரி மூவேந்தருடைய சூழ்ச்சியால் வேள்பாரி இறந்தபின், சான்றோராகிய கபிலர், அவன் மகளிரை வேறொரு நல்ல காப்புள்ள இடத்தே சேர்ந்துவிட, ஆங்கே ஒரு திங்கட்குமேல் அம் மகளிர் அவர் பாதுகாப்பில் இருந்து வந்தனர்.
ஆயினும், அம் மகளிர்க்குப் பாரியை யிழந்த துயரும் பறம்பினைத் துறந்த வருத்தமும் பெருங்கலக்கத்தைத் தந்தன.
ஒரு நாளிரவு முழுத் திங்கள் தன் பானிலவைப் பொழிந்துகொண்டு வானத்தே திகழ்ந்தது.
அது கண்ட அம் மகளிர்க்கு வருத்தம் கையிகப்பதாயிற்று.
அஃதொரு பாட்டாய் வெளிவந்தது.
அஃது இப்பாட்டு.
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்
எந்தையு முடையேமெங் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்களிவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெம்
குன்றுங் கொண்டார்யா மெந்தையு மிலமே. (112)
திணை: பொதுவியல்;
துறை: கையறுநிலை.
பாரி மகளிர் பாடியது.
உரை:
அற்றைத்திங்கள் – மூவேந்தரும் முற்றியிருந்த அற்றைத் திங்களின்; அவ் வெண்ணிலவில் – அவ் வெள்ளிய நிலாவின் கண்; எந்தையும் உடையேம் – எம்முடைய தந்தையையு முடையேம்; எம் குன்றும் பிறர் கொளார் – எம்முடைய மலையையும் பிறர் கொள்ளார்; இற்றைத் திங்கள் இவ் வெண்ணிலவில் – இற்றைத் திங்களது இவ் வெள்ளிய நிலவின் கண்; வென்று எறி முரசின் வேந்தர் – வென்றறைந்த முரசினை யுடைய அரசர்; எம் குன்றும் கொண்டார் – எம்முடைய மலையையும் கொண்டார்; யாம் எந்தையும் இலம்- யாம் எம்முடைய தந்தையையு மிழந்தேம் எ-று.
திங்களை மாத மென்பாரு முளர். ஒருவனை மூவேந்தரும் முற்றியிருந்தும், வஞ்சித்துக் கொன்றமையின் “வென்றெறி முரசின் வேந்த” ரென்றது, ஈண்டு இகழ்ச்சிக் குறிப்பு.
விளக்கம் : தந்தையையுங் குன்றையு மிழந்து தனிமைத் துயருழக்கு மகளிர், இழவாமுன் இருந்த நிலையினையும் உடன் நினைந்து வருந்துமாறு தோன்ற, “அற்றைத் திங்கள் – கொளார்” என்றார். “வென்றெறி முரசின் வேந்தர்” என்றது, நல்வழியால் ன்று முழக்குதற்குரிய முரசினை, அல்வழியால் பாரியைக் கொன்று முழக்குகின்றமை தோன்ற நின்றமையின், இகழ்ச்சிக் குறிப்பினையுடையதாயிற்று.
இவ்வாறு புறநானூற்றுப் பழைய உரை விளக்கம் கூறியது முந்தைய பகுதி நம் சிந்தயைக் கவருமாறு முத்தமிழ் அறிஞர் கலைஞர் புனைந்து காட்டியதை சங்கத்தமிழில் கண்ட வண்ணம் இங்கே காணலாம் .
நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் பின்வருமாறு எழுதியுள்ளேன் .
” உரைசால் வண்புகழ்ப் பாரி ” என ஒளவையார் முதலிய நல்லிசைப் புலவர்களால் புகழ்ந்தேத்தப்பெறும் பறம்பிற் கோமானாகிய பாரியின் அருமைப் புதல்வியர் பாரி மகளிர் எனப் பெற்றனர்.
“ பரந்தோங்கு சிறப்பின் பாரிமகளிர் ” என்றும், பறம்பிற் கோமான் நெடுமாப் பாரிமகளிர் ‘ என்றும் “ வண்பாரி மகளிர் ” என்றும் கபிலர் இவர்களைக் குறிக்கின்றார்.
” கபிலர்பால் தமிழ் பயின்று செந்தமிழ்ப் புலமையில் இவர் சிறந்தனர் போலும் !
கபிலர் பால் பயின்றதற்கேற்ற புலமை நலனும், கைவண் பாரியின் காதற் புதல்வியராதலால், கொடை நலமும் இவர் உடையராயிருந்தனர் என்பதைப் பழமொழி நூலாரும் பாராட்டுவர்.°
பாரி இறந்த பின் அவன்றன் உற்ற நண்பராகிய கபிலர், விச்சிக்கோன் இருங்கோவேள் உழை, இப்பாரி மகளிரைக் கொண்டு சென்றனர், எனவும், அவ்வரசர் அதற்குடம் படாமையாற் கபிலராற் அரவணைக்கப் பெற்றனர் ,
பின் கபிலர் பாரியின் பிரிவாற்றாது வடக்கிருந்தனர் எனவும் புறநானூற்றுப் பாடல்களால் தெளியப்படும்.
தமிழ் நாவலர் சரிதையில், ” பாரி மகள் அங்கவையைக் கொள்ள அரசன் மனமியைந்தான் என்ற பாட்டாலும், செவி வழிச் செய்தியாலும் பாரி மகளிர் அங்கவை சங்கவை என்ற பெயருடையார் என அறியலாம்.
அங்கவை, சங்கவை என்பதன் குறுக்கமே அவ்வாறாயின.
அங்கு, சங்கு, சோணை என மக்கட்குப் பெயரிடும் மரபு பாண்டிய நாட்டில் இன்றும் உளது.
வரம்பில்லாத அன்பு சொரிந்த பறம்பு மலையினையும் வண்புகழ்த் தந்தையையும் இழந்து இவர் வருந்திப் புலம்பினர்.
கலங்கிப் புலம்பிய கண்ணீர்த் துளிகளே அவல ஓவியம் கொண்டாற் போன்ற இவரின் ஒரே செய்யுள் புறநானூற்றில் தொகுக்கப் பெற்றுள்ளது.
இருவர் எங்ஙனம் ஒரு பாட்டினை இயற்றுவர் என எழும் ஐயத்தைப் புலவரிருவர் சேர்ந்து ஒரு பாடல் பாடுவது முன் வழக்கே என இரா.
இராகவையங்கார் தெரிவிக்கின்றார் !
எந்தையுமிலமே ‘ என்று இம்மகளிர் புலம்புவதால், இவர் அன்னையார் பாரிக்கு முன்னே மாய்ந்திருத்தல் வேண்டும்.
பாரி காதையார் பாரி இறந்து வான்புக்கபோது மனைவியும் உடனு யிர் நீத்தாள் என்று ஊகிப்பர் தந்தையொடு தாயும் மாய்ந்திருந்
தால், யாம் எந்தையுமிலமே என்று தந்தையை மட்டும் கூறியிருப்பரோ என டாக்டர் வ.சு.ப. மாணிக்கம் அக்கருத்தை மறுத்தார்.
பாரி மகளிர் பருவம் ஒத்த வயதினராதலின், இரட்டைப் பிள்ளைகள் ஆகலாம்.
இவ்விரட்டைப் பேற்றைத் தாங்காமல் தாய் இவ்விருவரை ஈன்றபின் இறந்திருக்கலாம்.
அதனால் இப்பெண் குழந்தைகள் தாய்முகம் அறியாதவராம் தந்தையின் காப்பிலும், கபிலரின் பொறுப்பிலும் வளர்ந்திருக்கலாம் என்றும் டாக்டர் திரு. வ.சு.ப. மாணிக்கம் ஊகிக்கின்றார்
பாரி மகளிரை மலையர்க்கீந்து பின்பு பெண்ணையாற்றின் தென்கரையில் கனல் மூழ்கிக் கபிலர் உயிர் நீத்தார் என்பர்.
திருக் கோவலூர்க் கீழூர்ச் சாசனத்துள் இது பற்றிய குறிப்பும் உளது.
இச்சாசனச் செய்திக்குப் பழைய நூல்களுள் சான்றிலதென்று திரு.வேங்கடராஜுலு ரெட்டியார் ஐயுறுகிறார்.?
கபிலரும் பாரிமகளிரும் பாரியையும் பறம்பினையும் பிரிந்து அல்லற்பட்டாற்றாது ஒரு நல்லூரில் தங்கியவர், அன்றிரவு முழுநிலாத் தோன்றிய போது முந்திய நிலாக்காலத்து தந்தை யோடினிது மகிழ்ந்தாடியதை நினைத்தனர்.
அந்நாளைய நிலாக் காலம், இந்நாளில் நில்லாக் காலமாகித் ‘தந்தையையிழந்து தண்பறம்பிழந்து தமியோராயுழன்று துயர்கூற மெல்லிய சொற்களால் சொல்லிப் புலம்பிய அல்லல் ஓவியம் பாட்டாய்ப் பிறந்தது.
தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Add a Comment