செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 57
அண்ணா அணிவித்த கணையாழி !
கழகத்தில் சம்பத்தின் செயல்கள் மூலம் புகைச்சல் உருவாகிக் கொண்டிருந்த அந்த வேளையில்தான்.
சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தல் வந்தது.
சென்னையில் உள்ள நூறு இடங்களுக்கும் 402 பேர் போட்டியிட்டார்கள்.
கழகம் அதுவரையில் மாநகராட்சி மன்றத்தில் கழகச் சார்பில் யாரையும் உறுப்பினராகப் பெற்றிருக்கவில்லை .
தோழர்கள் வி.முனிசாமி, அ.பொ.அரசு ஆகிய இருவரும் கழக நண்பர்களாயினும் சுயேச்சை உறுப்பினர்களாகத் தாம் மாநகராட்சியில் வீற்றிருந்தனர்.
1959 – இல் கழகம் முதன் முதலாகச் சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலில் தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்துவது என்று தீர்மானித்தது.
நூறு இடங்களுக்கும் கழகச் சார்பில் 90 வேட்பாளர்களை நிறுத்துவது என்று தேர்வுக் குழுவின் தலைவன் என்ற முறையில் நான் தீர்மானித்தேன்.
கம்யூனிஸ்ட் கட்சி 17 வேட்பாளர்களை நிறுத்திற்று.
ஜனசங்கம் 15 பேர்களை நிறுத்தியது .
சோஷலிஸ்ட் கட்சி 18 பேர்களை நிறுத்தியது .
பி.சோ. கட்சி 5 பேர்களை நிறுத்திற்று.
காங்கிரசுக் கட்சியோ நூறு இடங்களிலும் போட்டியிட்டது.
அண்ணா அவர்கள் நான் தந்த வேட்பாளர்களின் பட்டியலை வாங்கிப் படித்துப் பார்த்தார்.
90 பேர் நிற்பது நல்லதல்ல; ஆரம்பத்திலேயே அகலக் கால் வைக்க வேண்டாம் என்று மறுத்துரைத்தார்.
நாமும் மற்றக் கட்சிகளைப் போல் 20 அல்லது 30 இடங்களுக்குப் போட்டியிட்டால் போதும் என்பது அண்ணாவின் முடிவாகும்.
ஆனால் நான் மிகப் பிடிவாதமாக 90 வேட்பாளர்களைக் கழகச் சார்பில் நிறுத்த வேண்டும் என்று அண்ணாவிடம் வலியுறுத்திக் கூறினேன்.
என்னுடைய ஆர்வத்தை அண்ணா பாராட்டினார் என்றாலும் நான் புரியாமல் அதிக ஆர்வம் காட்டுகிறேன் என்ற கோபத்தில், நான் கொடுத்த பட்டியலை வீசியெறிந்து – ” எப்படியாவது யாரையாவது நிறுத்திக் கொள் ! ” என்று கூறினார்.
உள்ளபடியே பொறுமை இழந்து அந்தப் பட்டியலை வீசியெறியவில்லை.
அந்தக் கோப நடிப்பைப் பார்த்தாவது. நான் வேட்பாளர்களுடைய எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ள இணங்க மாட்டேனா என்பதுதான் அவருடைய நோக்கமாகும்.
ஆனால் அண்ணாவை எப்படியும் சமாதானம் செயது கொள்ளலாம் என்ற உறுதியில்தான் நான் அண்ணாவின் கோபத்தைப் பாராட்டாமல் 90 வேட்பாளர்களுடைய பெயரையும் வெளியிடுவதற்கு இரவெல்லாம் அவரோடு வாதாடி அனுமதியும் பெற்றுவிட்டேன்.
” 80 பேர்களில் எத்தனை பேர்கள் வருவார்கள் என்று எண்ணுகிறாய் ? ” – இது அண்ணாவின் கேள்வி.
” நிச்சயம் 40 பேருக்கு மேல் வருவார்கள் என்று எண்ணுகிறேன் ! ” என்பது என்னுடைய பதில். ”
அப்படி 40 பேர்கள் வெற்றியடைந்தால் நான் உனக்கு என் சொந்தச் செலவில் ஒரு கணையாழி அணிவிக்கிறேன் ! ” என்று அண்ணா என்னிடம் ஒரு பந்தயமே கட்டினார்.
இறுதியாகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கழகச் சார்பில் 45 பேர் வெற்றி பெற்றார்கள்.
இந்த வெற்றிச் செய்தி வெளிவரும் பொழுது. அண்ணா அவர்களும் நானும் திருவாரூரில் இருந்தோம்.
திருவாரூருக்கு அருகில் ஒரு பொதுக்கூட்டத்தில் அண்ணா அவர்கள் பேசிவிட்டுத் திருவாரூர் நிகழ்ச்சி யொன்றில் கலந்து கொண்டிருந்த என்னைக் காணத் திருவாரூருக்கு வந்தார்கள்.
அப்பொழுதுதான் சென்னை மாநகராட்சி மன்றத்தில் நம் தோழர்கள் அடுக்கடுக்காக வெற்றி பெறுகின்ற செய்திகளை நான் அவருக்கு அறிவித்தேன்.
ஆனால் அப்படி அந்த நேரம் வரையில் கழகச் சார்பில் 30 பேர்தாம் வெற்றி பெற்றிருந்தார்கள்.
மறுநாள் அண்ணாவும் நானும் சென்னை வந்தடைந்தோம்.
45 பேர் வெற்றி பெற்றார்கள் என்ற செய்தியைக் கேட்டதும், அண்ணா அவர்கள் என்னைப் பார்த்து, “ 45 பேர் வெற்றி பெற்றார்கள்; ஆனால் நான் உன்னிடம் தோற்றுவிட்டேனே ! ” என்று சிரித்துக்கொண்டே கூறினார்கள்.
காங்கிரசு சார்பில் 37 பேரும், கம்யூனிஸ்டுகள் இருவரும், சுயேச்சைகள் 13 பேரும் மற்றக் கட்சிகள் ஒன்றிரண்டும் என்ற அளவில் இடங்களைப் பெற்றார்கள்.
மாநகராட்சியில் தனிப் பெரும் கட்சியாகக் கழகம் வெற்றி பெற்றாலும் கூடப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது சந்தேகம்தான் என்ற பொருள்பட அண்ணா அவர்கள் திருவாரூர்க் கூட்டத்தில் பேசியது எல்லாப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது.
அப்போது ‘ மெயில் ‘ ஆங்கில நாளேட்டில் மாநகராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைப் பற்றி ஒரு தலையங்கம் தீட்டப்பட்டு, ” வெற்றி பெற்ற பிறகு அண்ணாதுரை பொறுப்பை ஒப்புக்கொள்ளப் பின் வாங்கி நழுவப் பார்க்கிறார். அது நல்லதல்ல ! ” என்று சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
அதற்குப் பதில் சொல்லும் வகையில் அண்ணா அவர்கள் 15 – 4 – 59 அன்று கடற்கரையில் நடைபெற்ற மாநகராட்சி மன்ற வெற்றி விழாக் கூட்டத்தில், ”
சென்னை மாநகர நிர்வாகப் பொறுப்பை தி.மு.கழகம் ஏற்கத்தான் வேண்டுமா ? வேண்டுமென்று விரும்புகிறவர்கள் மட்டும் ‘ ஆம் ‘ என்று கூறிக் கைகளை உயர்த்துங்கள் ! ”
என்று தேங்கி நின்ற இலட்சக்கணக்கான மக்களைப் பார்த்துக் கேட்டார்.
” ஆம் ” என்ற குரல் விண்ணை முட்டிற்று.
கூடியிருந்த ஐந்து இலட்சம் மக்கள் தங்கள் கரங்களை உயர்த்திக் காட்டினார்கள்
. அது கண்டு அண்ணா அவர்கள், ” கழகம் மாநகர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயார்.
நீங்கள் தீர்ப்பு அளித்து விட்டீர்கள்.
உங்கள் தீர்ப்புக்கு அடிபணிய வேண்டிய பொறுப்பு காங்கிரசுகாரர்களுடையது ! ”
என்று பேசினார்.
காங்கிரஸ்காரர்கள் அவ்வளவு சுலபமாகக் கழகத்திடம் பொறுப்பை ஒப்படைக்கத் துணிய மாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
ஆகவே, தனிப் பெரும் கட்சியாகக் கழகத்தை மாநகராட்சியில் வெற்றி பெறச் செய்யப் பிடிவாதமாகப் பேசி, அதற்கெனப் பணியாற்றிய என்னிடம் மேயர் பதவி வெற்றிக்கான பொறுப்பையும் அண்ணா அவர்கள் ஒப்படைத்தார்கள்.
அப்படி ஒப்படைத்த அந்தக் கூட்டத்தில்தான் அண்ணா அவர்கள் என்னிடம் கட்டிய பந்தயத்தின் அடிப்படையில் எனக்குக் கணையாழி அணிவித்தார்.
அப்போது அவர் பேசினார்.
” நம்முடைய கருணாநிதி இந்தக் குழுவிற்குத் தலைவராக இருந்த காரணத்தினால்தான் பல இடங்களில் வெற்றி பெறும் என்று என்னிடம் சொன்னார்.
முடியாது என்றேன் நான்.
அவசரப்பட்டுத்தான் சொல்லிவிட்டேன்.
இப்போது வருத்தப்படுகிறேன். ‘
அப்படி வெற்றி பெற்றால் என்ன தருவீர்கள் ? ‘ என்று கருணாநிதி கேட்டார்.
நான் எதுவும் தர வேண்டிய அவசியம் இருக்காது என்ற எண்ணத்தில், ‘ ஒரு பவுனில் தங்க மோதிரம் போடுகிறேன் என்று சொன்னேன்.
நான் என் மனைவிக்குக்கூட ஒரு நகை வாங்குவதற்காகக் கடைக்குப் போனது கிடையாது.
ஆனால், இந்தப் பொல்லாத தோழர்கள் பெற்ற வெற்றியினால் இந்தக் கட்டிளங்காளைக்கு நானே கடைக்குச் சென்று கணையாழி வாங்கி அளிக்க வேண்டியவனாகிவிட்டேன்.
இந்தத் தேர்தலில் மிகச் சுறுசுறுப்பாகப் பணியாற்றி, அதிகமான கூட்டங்களில் கலந்து கொண்டு நாவலர் நெடுஞ்செழியன் போன்றவர்களோடு உடன் இருந்து திறம்படப் பணியாற்றிய கருணாநிதி என் பாராட்டுதலுக்கும் என்னுடைய பெருமதிப்பிற்கும் இலக்காகக் கூடியவர்.
ஆகையினால் நீங்களெல்லாம் மகிழத்தக்க அளவிலேயும் நான் கொஞ்சம் வருத்தப்படத்தக்க அளவிலேயும் இந்த மோதிரத்தை அவருக்கு அளிக்கிறேன்.
இந்த மோதிரம் அவரது உழைப்புக்குப் பலன் என்று அர்த்தமல்ல: மோதிரத்திற்கும் மேலான என்னுடைய உள்ளன்பை அவர் பெற்றிருக்கிறார் என்பதே அதற்குப் பொருள்.
” நண்பாகளே ! நான் கணையாழி கொடுத்ததைப் பார்த்தீர்கள்.
அது தங்கம் அல்லவா என்று சந்தேகம் உங்களில் சில பேருக்கு இருக்கலாம்.
உறுதியாகச் சொல்கிறேன் அது தங்கமேதான்.
நல்ல தங்கக் குணம் படைத்த கருணாநிதியிடம் அது செல்கிறது.
அது அவருக்கு நலத்தின் மேலும் அவர் பெறும் கீர்த்தியின் மூலம் நம்முடைய கழகத்திற்கு நாம் பெருமையையும் நிச்சயம் தேடித் தரும்.
கடற்கரையில் எனக்குக் கணையாழி அணிவிக்த என் தலைவா.
அந்தக் கடற்கரையில் ஓர் ஓரத்தில் இப்போது உறங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நான் கணந்தோறும், அவர் அளித்த கணையாழியைப் பார்த்துக் கண் கலங்குகிறேன்.
அந்தக் கணையாழி சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் போது காணாமல் போய்விட்டது.
அதைத் தேடி எடுக்க நான் பட்டபாடு கொஞ்சமல்ல .
என் உயிரையே யாரோ பறித்துக் கொண்டுவிட்டது போல் உணர்ந்து கலங்கினேன்.
நான் தங்கியிருந்த ஓட்டல், அந்த ஓட்டலின் சாக்கடை, சந்து பொந்துகளில் எல்லாம் ஆட்களை விட்டுத் துழாவியும். அது கிடைக்கவில்லை.
நீண்ட நேரம் கழித்து நான் பொதுக்குழுக் கூட்டத்தில் அமாந்திருந்த நாற்காலியிலேயே அந்தக் கணையாழி விழுந்திருந்ததாக, அதையெடுத்து வந்த திருச்சி காமாட்சி அவர்கள் என்னிடத்தில் கொடுத்த பிறகுதான் எனக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
கடற்கரையில் கணையாழி பெற்ற கையோடு மேயர் தேர்தலில் ஈடுபட்டேன்.
கோவை நகராட்சியின் கீழ் கம்யூனிஸ்டு கட்சிக்குக் கழகம் ஆதரவு அளிப்பதென்றும். சென்னை மாநகராட்சியில் கழகத்திற்குக் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளிப்பதென்றும் ஒப்பந்தம் ஆயிற்று. ஏனைய சுயேச்சை உறுப்பினர்களோடும் நானும் பொதுச் செயலாளர் நாவலரும் நண்பர் என்.வி.என். அவர்களும், கலந்து பேசி அவர்களுடைய ஆதரவையும் பெற்று, 30 – 4 – 59 – இல் கழகத்தின் முதல் மேயராக அ.பொ.சரசு அவர்களை அமர வைத்தோம்.
துணை மேயராகத் தோழர் சிவசங்கரன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
வகுப்புவாரி அடிப்படையில் மேயர் தேர்தலில் மாத்திரம் அவர்களுக்கு ஒரு முறை பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றாலும், கழகத்தின் சீரிய சமுதாயக் கொள்கையின் காரணமாகத் துணை மேயர் பதவிக்கு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அருமை நண்பர் சிவசங்கரன் அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கழகம் தன் தூய்மையைக் காட்டிக் கொண்டதைப் பலரும் பாராட்டினர்.
எளிய குடும்பத்தில் பிறந்தவர் ஒருவர் சென்னை மாநகரின் மேயராக வந்தது இதுவே முதல் தடவையாகும்.
இந்த மாநகராட்சி மன்றத் தேர்தலையொட்டி அண்ணா எனக்கு அளித்த கணையாழி கழகத் தோழர்களுடைய உள்ளத்தில் எல்லாம் மகிழ்ச்சியைப் பொங்க வைத்த தென்றாலும், அணுக்கமாக இருந்த சிலருடைய உள்ளத்தில் பெரிய காயத்தை ஏற்படுத்தியது. நண்பர் சம்பத்தும், அவரைச் சார்ந்தவர்களும் என் மீது பொறாமையும் அண்ணன் மீது வெறுப்பும் காட்டிக் கொள்ளக் கணையாழிப் பரிசும் ஒரு காரணமாயிற்று.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆயிரம் நிகழ்வுகள் நடந்தன
.வரலாற்றில் வைர வரிகளாகும் செய்திகள் ஆயிரம் கடந்தவை .காலமெல்லாம் கழகத்தின் வளர்ச்சிக்காக உழைத்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மார்பில் நூற்றுக்கணக்கான விழுப்புண்கள் நேர்ந்தன .
புண்கள் அல்ல இவை புகழின் கண்கள் என்ற மனோன்மணிய வரியைச் சொல்லியிருக்கிறார் .
அந்த வகையில் இதனோடு இணைந்த இந்தக்கட்டுரை ஒப்பற்றது . .
தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Add a Comment