செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 58
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
செம்மொழிச் சிந்தனை !
செம்மொழி வாய்ப்புக் குறித்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய ஏழு மடல்கள் போற்றத்தக்க ஏடுகளாகும் .
இக்கடிதத்திலே தான், ” தமிழுக்குச் செம்மொழித் தகுதியும் – சால்பும் இயல்பாக உண்டு என்று குரல் கொடுத்த முதல் தமிழர் பரிதிமாற் கலைஞர் ‘ என்ற உண்மையை வெளிக் கொணர்ந்தவர் நம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான் என்ற பெருமிதத்தோடு உயர்தனிச் செம்மொழியாகத் தமிழ் பின்னாளில் அமைந்தது .
பரிதிமாற் கலைஞர் தொடங்கிய முயற்சியை முடித்து வைத்தவர் தாம் நம் டாக்டர் கலைஞர்.
தமிழில் நாடக இலக்கண நூல் இல்லாத குறையைப் போக்க விரும்பிய பரிதிமாற் கலைஞர் நாடகவியல் என்ற ஒரு தனி நால் எழுதி வெளியிட்டார்.
அவ்வாறே, நாடகம், திரைப்படம் ஆகிய துறைகளில் புகழக் கொடிகட்டிப் பறந்த நிலையில் உயர்ந்தவர் நமது கலைஞர்.
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் உட்பட்ட மொழிகளைப் பாடப் பகுதியிலிருந்து நீக்கிட முயன்ற செய்த போது பரிதிமாற்கலைஞர். பேராசிரியர் பூர்ணலிங்கம் பிள்ளையுடன் தமிழறிஞர்களின் வீடுதோறும் சென்று முயன்று பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியைப் பாடமொழியாக நிலைக்கச்
செய்தனர்.
நம் கலைஞரோ தமிழ்மொழி ஆட்சி மொழியாகத் திகழ்ந்திடத் தேவையான முயற்சிகளை கணப்பொழுதும் கண்ணுறங்காமல் நிறைவேற்றி வெற்றி பெற்றவர் .
” திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் வடமொழிச் சொற்களை அறவே அகற்றிவிட்டு உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் தமிழில் எளிதாக இயலும் ” என்று 1856 ஆம் ஆண்டில் தமிழ்ச் ” செம்மொழித் தகைமையை ” அறிவித்த முதல் அயல்நாட்டவர் இராபர்ட் கால்டுவெல் ஆவார்.
அவருக்குச் சென்னை கடற்கரையில் சிலை வைத்த செய்தியையும் அந்நாளில் , தமிழ்நாட்டில் சென்னை சைவ சித்தாந்த சமாஜத்தின் ஆதரவில் ஏறத்தாழ 400 தமிழறிஞர் கூடி ” திராவிட மொழிகளுள் தொன்மையும், சீர்மையும் தகைமையும் பெற்றொளிர்கின்ற உயர்தனிச் செம்மொழி , தமிழேயாம் ” என்று இயற்றிய தீர்மானத்தைப் பற்றி தஞ்சை கரந்தைத் தமிழ்ச்சங்கம் 24.5.1919 மற்றும் 25.5.1910 அன்று ” தமிழ் மொழியானது தொன்மையும் சீர்மையும் செம்மையும் வாய்ந்தது எனக் கொள்ளப்படுவதால் நாம் இது காறும் உறங்கியிருந்ததை விட்டுத் தமிழ் மொழி, ஓர் உயர் தனிச் செம்மொழி என்பதை ஒப்புக்கொண்டுப் பல்கலைக்கழகத்தில் அதற்கு முறைப்படி இசைவு வேண்டும் ” என்று முழங்கி வென்றதையும் நாம் என்றும் நினைவு கூரலாம் .
கி.பி. 1919 ஆம் ஆண்டில் நமது நீதிக்கட்சியின் தலைவர்கள் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் மூலமாகத் திருச்சியில் தீர்மானம் நிறைவேற்றினர். ”
சென்னைப் பல்கலைக்கழகமும் “, அரசுப் பணித் தேர்வாளர்களும், பாரசீகமொழி, அரேபிய மொழி, வடமொழி ஆகிய மொழிகளுக்குச் சமமாக, செறிவும் செழிப்பும் நிறைந்த மிகப் பழமை வாய்ந்த இலக்கியங்களைக் கொண்டுள்ள தமிழ்மொழியைச் செம்மொழியாக ஏற்க வேண்டும் ” என்று வலியுறுத்தினர் .
இதன் பின்னர் தேவநேயப் பாவாணர் அளித்த பதினைந்து சான்றுகள் ” தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவிக்கப் போதுமானவையாக இருந்தன.
பாவாணர் ஆங்கிலத்திலும், தமிழிலும் அளித்த பதினைந்து சான்றுகள் அன்று முதல் இன்று வரை பயன்பாடு மிக்கவையாக ஒளிர்ந்து இருக்கின்றன.
இருப்பினும், 1984 இல் தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழுக்குச் செம்மொழித் தகுதி பற்றி அறிவிக்கக் கோரும் கோப்பினை மைய அரசுத் துறைச் செயலரிடம் அனுப்பிய பொழுது அவர்கள் ” தமிழைச் செம்மொழியாக்கினால், தமிழை வழக்கொழிந்த மொழிகளின் பட்டியலில் சேர்த்ததாகிவிடும் என்பதால், இக்கோப்பு இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது ” என்ற முறையில் குறிப்பெழுதி முடித்து வைத்து விட்ட நிகழ்வு குறித்தும் நம் கலைஞர் அந்நாளைய அவலத்தைச் சுட்டிக் காட்டினார் .
கலைஞர் கரம் ஓங்கக் காலம் காத்திருந்தது .
The Oxford companion to English Language (Ed.) என்ற ஆங்கில அகராதியில் ‘with regard common belief that to be called classical, a language should be dead ” என்று விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பதே மேற்கண்ட நிகழ்வுக்குக் காரணமாகலாம்.
எனினும் இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு வேண்டுமானல் இது பொருத்தமாகலாம், தமிழுக்கு உயிரோடு உலாவரும் மொழிக்கு இவ்விளக்கம் பொருந்தாது என்பதை அமெரிக்க அறிஞர் ஏ கே. இராமானுசன் அவர்களின் விளக்கத்தோடு தெளிவுபடுத்தினார் நம் தலைவர் கலைஞர். ”
இந்தியாவின் இரண்டு செம்மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் மட்டுமே சமகால இந்திய வழக்கு மொழியாகும் என்றும், இது கடந்தகாலத் தொல் பழமையோடு தொடர்ந்து வழக்கு மொழியாக மக்களிடையே ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது என்றும் ” ஏ.கே. இராமானுசன் கூறியதையும், டாக்டர் கமில் சுவலபில் என்ற செக்கோஸ்லோவேகியப் பேராசிரியர் காட்டும் மூன்று கருத்துக்கள் தமிழைச் செம்மொழியாகப் பார்க்க உதவுவதையும், பழந் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ஆர்.டி. பானர்ஜி ஆரியர்கள் வருகை புரிந்த காலத்திற்குப் பல நூறு ஆண்டுகளுக்கும் முன்னரே அமைந்திருந்த சிந்துவெளி நாகரிகமானது, ஆரிய நாகரிகத்திற்கும் முந்தைய அதிசய நாகரிகம் , திராவிடப் பண்பாடு என்பதை நிலை நிறுத்தியுள்ளது என்றும்; அம்மக்களைத் திராவிடர்கள் அல்லது திராவிட இனத்தில் மூத்தவர்கள் ” எனக் கூறுவதையும் எடுத்துரைத்துக் கலைஞர் அவர்கள் தமது கடிதத்தை நிறைவு செய்தார்.
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1975 ஆம் ஆண்டு முதல் தமிழ்ப் பேராசிரிராகப் பணிபுரிந்த ஜார்ஜ் எல். ஹார்ட் என்பவர் வடமொழி, இலத்தீன், கிரேக்கம், இரஷ்ய ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளுடன் மலையாளம் ,இந்தி ஆகிய மொழிகளையும் கற்று அவற்றின் இலக்கியம் தோய்ந்தவர்.
இத்தனை சான்றாண்மையினையும், மொழிப் புலமையுனையும் , இலக்கியத் திறனையும் ஒருங்கே பெற்ற அவர்.
“தமிழ்மொழி உலகின் மிகவுயர்ந்த இலக்கியங்களையும், மரபுச் செல்வங்களையும் புகழும் உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்று என்று நான் எவ்விதத் தயக்கமும் இன்றித் தெளிவாக அறுதியிட்டுக் கூறுவேன்.
இவ்வாறு நான் கூறவதற்குக் காரணங்கள் பலவுள்ளன ” எனக் கூறியதை தலைவர் கலைஞர் தமக்கேயுரிய பாங்கில் அந்தக் கருத்தை அழகுற எடுத்துத் தெரிவித்துள்ளார்கள்
உலக மொழிகள் 600.
அதிலே இலக்கிய, இலக்கணம் உடைய மொழிகள் 300.
இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேற்பட்ட வரலாற்றை உடைய மொழிகள் 6 அவை தமிழ் சீனம், சமஸ்கிருதம், இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் ஆகியன.
அதிலே, இலத்தீனும் ஹீப்ருவும் ஏறத்தாழ இறந்த மொழிகள்.
எனினும் ஹீப்ருவுக்கு உயிரூட்டும் முயற்சியில் வெற்றி கண்டு வருகின்றனர் .
கிரேக்க மொழியோ இறப்பின் எல்லை வரை சென்று, அந்த நாடு விடுதலை பெற்றபின் புதுவாழ்வு பெற்று வருகிறது.
இந்தியாவிலுள்ள மூத்த மொழிகளுள் ஒன்றான சமஸ்கிருதம் எழுத்து வழக்கிற்காக உருவாக்கப் பட்டதேயன்றி அது எப்போதும் பேச்சு மொழியாக இருந்ததில்லை.
உயிரோடுள்ள சீனமொழியோ சித்திர எழுத்துக்களைக் கொண்டது. ”
தமிழ் மொழி ஒன்று தான், மனிதச் சிந்தனைகளை, நுண்ணிய உணர்வுகளைப் அழுத்தந்திருத்தமாக, துல்லியமாக உணர்த்தும் ஆற்றல் கொண்ட மொழி ” என்று மொழியியலின் தந்தை டாக்டர் எமனோ கூறிய கருத்துக்களையும் கலைஞர் தமது கடிதத்தில் எழுதிக் காட்டினார் .
செம்மொழிச் சூழலில் தாம் எழுதிய நிறைவுக்கட்டுரையில் ” காலத்தால் அழிக்கமுடியாத
செப்பேடுகளாகத் தமிழிலக்கியங்கள் விளங்குகின்றன என்பதைக் கலைஞர் அவர்களே குறிப்பிட்டாலும், அரசியல் நெறிப்படி தமிழைச் செம்மொழி ” என்று அறிவித்த அரசின் நடவடிக்கையால் ஒன்றிய அரசு தமிழைச் செம்மொழி என அறிவித்ததால்
1.இந்தியப் பல்கலைக்கழக நல்கைக்குழு அதனை ஏற்றது
2.அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் தமிழுக்குத் தனித்துறை உருவாகும்.
3.தமிழ் மொழி இலக்கிய ஆய்வுகள் முனைப்பாக நடைபெறும்.
4.இந்தியப் பல்கலைக்கழக நல்கைக்குழுவின் இசைவால் , உலகப் பல்கலைக்கழகங்கள் தமிழை ஏற்கும்.
5.தமிழுக்கென, ஓர் ஆண்டு அறிவிக்கப்படும்; அந்த ஆண்டைக் கொண்டாட பல கோடி ரூபாயை மைய அரசு ஒதுக்கும்
6.அத்தொகையில் பல நல்ல திட்டங்களைத் தமிழுக்காகச் செய்ய முடியும்.
7 இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், ஆங்கிலம்,பிரெஞ்சு போன்ற உலக மொழிகளிலும் தமிழ்
இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்படும்.
என்று அடுக்கடுக்காக, தமிழ்ச் செம்மொழித் தகுதி அறிவிப்பால் பெறப்போகும் அறிவிப்பால் ஆக்கத்தை நனவுக் கனவுகளோடு தலைவர் அவர்கள் வெளியிட்டிருப்பது அவரது தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது.
மதுரையிலும், சென்னையிலும் தமிழ்மொழி செம்மொழி என்று அறிவித்ததின் மகிழ்வை வெற்றியாகக் கொண்டாட கலைஞர் அவர்களின் தலைமையில் மிகப்பெரிய பாராட்டு விழாக்கள் நடந்தன.
சென்னையில் நடந்த விழாவில் கலைஞர் தமது சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயைச் செம்மொழி ஆணையம் தமிழாய்வு செய்திட அறிஞர்களுக்குப் பரிசில் வழங்க நல்கினார்.
இன்று நம் முதல்வர் அப்பதவியேற்றதும்
நிறைவேற்றும் விதமாகப் பரிசுகள் வழங்கியது ஒப்பற்ற சிறப்பாகும் .
தமிழே மூச்சாக வாழும் தமிழினத் தலைவர் கலைஞர் தமிழ் மொழியின் பெருமையை உலகெலாம் அறியும் வண்ண 2010, சூன், திங்கள் 23 முதல் – ஐந்து நாட்களுக்கு கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தினார் .
தமிழின் பல புதிய வளர்ச்சி நிலைகள் இம்மாநாட்டில் அரங்கேறின ,
பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையான தமிழின் சிறப்புக்கள் – செம்மொழி மாநாடு குறித்து சிறந்த கவிதைக்கு ரூபாய் ஒரு இலட்சம் பரிசும் வழங்கியது.
கலைஞரே செம்மொழி விடியல் என்று ஒரு கவிதை யாத்தார்.’
விழித்தெழுக ! ;
இதோ செம்மொழி விடியல் !
தமிழக வரலாறு கற்காலம் முதல் கனிந்து வந்துள்ள தற்காலம் வரையில்; காரிருள் ஆதிக்கம் தானே இருந்தது !
இப்போது அகன்று புதுவாழ்வு காண முடிகிறது !
அரிவையர் ஆடவர் அருங்கவிஞர்களாகி அருவித் தமிழால் ஆக்கிய இலக்கியங்களே –
தமிழர் ஆதிவரலாறு போதிக்கின்ற ஆதாரங்களாம்
அற்றை நாளில் கல்லில் செதுக்கிய எழுத்துக்களே – நமது அறிவு, ஆற்றல், காதல், வீரம், பண்பாடு அனைத்துக்கும் அழிக்க வொண்ணாச் சான்றுகளாம் –
விரிவாக்குவோம் அப்பணியை வாரீர்; விழித்தெழுவதற்கு;
இதோ ! செம்மொழி விடியல் !
செம்மொழியைக் கணினி மொழியாக அழகு பார்க்க ‘ விழைந்த கலைஞர் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார்.
முதுகலை வரை உலகில் எங்கிருந்தாலும் கணினி வழி தமிழ் கற்கத் தமிழில் உரையாட இத்தளம் உதவுகிறது.
செம்மொழி மாநாட்டில் தமிழ் இணைய தளத்திற்குத் தனித்துவமளித்து தனியாக அதுகுறித்து வாதங்கள், சிந்தனைகள் ,கட்டுரைகள் படிக்க ஏற்பாடு இப்படிச் செய்ததை அடுக்கிச் சொல்ல ஆயிரம் செய்திகள் உள்ளன .
இன்று நம் முதலமைச்சர் அருந்துணையால் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம் – ஒன்றிய அரசின் நல்கையோடு மாபெரும் அரங்கமாக வடிவெடுத்துள்ளது .
அந்த நெடுஞ்சாலைக்கு செம்மொழிச் சாலை என்றே நம் முதலமைச்சர் பெயரிட்டுள்ளார் .
தொடர்புக்கு : thamizhavvai@gmail.com

Add a Comment