POST: 2022-06-21T11:08:49+05:30

மாசிலா மணியே வலம்புரி முத்தே !
=================================

என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். தாத்தா என்று அழைத்துப் பழக்கப்பட்டேன். என் தந்தையாரின் தாய் மாமன் என்ற உறவு வகையில் பின்னி வருபவர். உழைப்புக்கு இன்னொருவரை என்னால் சான்று காட்ட முடியவில்லை.. மனம் வருந்தியதால் பிடிவாதமாகத் தன் இரு மக்கட் செல்வங்களையும் கையில் ஒரு மகளும், தோளில் ஒரு மகளுமாக நான் வளர்த்துக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து வந்து தன் வியர்வையையும், உதிரத்தையும், கண்ணீரையும் குடம் குடமாகச் சிந்தி ஒப்பற்ற மகளிர் திலகங்களாக இருவரையும் வளர்த்தார்.

என் உறவினர்கள் யாரும் எட்ட முடியாதிருந்த கான்வென்டு பள்ளியில் சேர்த்துத் தாயாகி, தந்தையாகித் தெய்வமாக ஒவ்வொரு நாளும் வளர்த்தார்.

சென்னையில் வாழ்ந்தபோது, அப்போதுதான் இரண்டாம் உலகப் போர் அச்சம் நிலவியது , சென்னையை விட்டு எல்லோரும் குடி பெயர்ந்தார்கள். பெயருக்கு ஏற்ற மாசிலாமணியாக திகழ்ந்த என் தாத்தா வேலூருக்கு குடிபெயர்ந்தார். வேலூரில், தன் மக்கட் செல்வங்களை நாளும் காலையில் கொண்டு போய்ப் பள்ளியில் விடுவதும், தாமே உணவு சமைத்து மதியம் பள்ளி வந்து ஊட்டுவதும் உருக்கம் தரும் காட்சியாகும்.

இந்நிலையிலும் கூட, விடியலில் எழுந்து தாம் வல்லவராக இருந்த தச்சுப் பணியில் தம் கை நோக உழைத்தார். உடன் இருந்தவர்கள் எல்லாம் இந்தப் பெண் மக்களுக்குப் பத்தாம் வகுப்பு போதாதா என்று கேட்டபோது, வெகுண்டு எவ்வளவு படிக்க விரும்புகிறார்களோ, எந்த உயரத்துக்கு எட்ட விரும்புகிறார்களோ அந்த அளவுக்கு உயிர் உள்ள வரையில் அவர்களை உயரே அமர்த்திப் பார்ப்பதுதான் நான் எடுத்துக் கொண்ட சபதம் என்று வாழ்ந்து காட்டினார். உழைப்புக்கும் உறுதிக்கும் ஒரே சான்று என் மாமன்தான் என்று என் தந்தை சொல்வார் . தாராவைப் பார்த்துத் தான் மரபார்ந்த எங்கள் குடும்பத்தினரும், உறவினரும், பெண் மக்களுக்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்கள்.

என் துணைவியார் தாரா ஒருவர் தான் எங்கள் மரபிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, பயின்று முதன் முதலில் வெற்றிச் சிறப்புப் பெற்றார். என் துணைவியார், மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத மனச் சோர்வு முதலில் வந்தது. ஆந்திர மாநிலத்து விசாகப்பட்டினத்தில் அவருக்கு இடம் தந்து அங்கே வரச் சொன்னார்கள். வேலூரில் இருந்து மீளவும் திரும்பிச் சென்னைக்கு வந்து துன்பக் கடலில் தாயில்லாத தனிமைத் துயரில் தவித்துக் கொண்டிருக்கும் நாங்கள் விசாகப்பட்டினத்துக்கு எப்படிச் செல்ல முடியும் ? ஒரு மகளைச் சென்னையிலும் மற்றொரு மகளை விசாகப்பட்டினத்திலும் நான் போய்ச் சேர்ப்பதா என்று எள்ளவும் என் மாமனார் மனம் கலங்கவில்லை.

மன உறுதி மட்டும் இருந்தால் போதும். மலைகளையும் கூடத் தகர்த்துவிடலாம் என்று தன் மகளை விசாகப்பட்டினத்துக்கு அழைத்துச் சென்றார். மொழி தெரியாத மாநிலம், உறவினர்கள் என்று ஒருவர் கூட இல்லாத நிலை. கை உழைப்பைத் தவிர வேறு கதி இல்லாத நிலை.

வீட்டுத் திண்ணை கிடைத்தால் போதும். என் கண்ணிலும் மடியிலும் வளர்ந்த மகளைத் தோளில் சுமந்தாவது துன்பம் வராமல் அவளைக் காப்பது என் கடமை என்ற உறுதிபூண்டார். ஒரு கதை படித்தது போல இருக்கும். தாரா அம்மையாரின் தளராத மனமும் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்கிற தனிப்பெரும் முயற்சியும் பத்து நாளில் சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே மாற்றம் பெற்று வந்து சேரும் ஆணையைப் பெற்றார்கள்.

ஓர் இனத்துக்கு மாசிலாமணி பிள்ளை போன்ற ஒரு கடமையாளர் இருந்தால் அந்த இனம் தலை நிமிர்ந்து நிற்கும்.

முதலில், என் திருமணம் அவர் மனத்துக்குப் பேரிடியாக இருந்தது. சென்னைக்கு நான் வந்து வாழத் தொடங்கியதும், பழகப் பழக மெல்ல மெல்ல என் மீது பரிவைக் கொட்டினார். என் கடமை முடிந்துவிட்டது. என் அருமை மகளைப் போல இன்னொரு திருமகளை நான் எந்தப் பிறவியில் பெறப் போகிறேன் என்றாலும், என் மகள் தான் எனக்குக் அன்னை. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் என் பிள்ளைகள் தான் எனக்குக் குலத் தெய்வங்கள் என்று புலம்பிய நிலையில் தான் அவர் உயிர் பிரிந்தது.

உலகின் எந்த நாடுகளுக்கு நீ போவதென்றாலும் நான் உடன் வருவேன் என்று செல்லி மலை போன்ற மனத்துணிவை மகளுக்கு ஊட்டினார். இப்போதும்கூட, என் மனைவியின் ஒளிப்படம் பார்த்து நான் பேசும்போதெல்லாம் என் மனக்கண்ணில் அவர் தான் நிற்கிறார்.

” தாயாகி, தந்தையாகி எம்மைத் தாங்கி நின்ற தெய்வம் ” என்ற தொடர் தான் அவர் கல்லறையில் எழுதப்பெற்றது.

அவர் வளர்த்த குடும்பக் கொடிகள் இன்று செழித்தோங்கி நிற்கிறது. மகனும், பெயர்த்தியும் எனக் குடும்பத்தினரும், உறவினரும் மருத்துவ மணிகளாகத் மிளிர்கிறார்கள். எந்த உயர்வு அவர்களுக்கு வந்தாலும் மாசிலாமணி அவர்களின் நினைவுக்குத்தான் காணிக்கையாக்குகின்றனர்.

ஒப்பற்ற ஒரு தந்தையாக உலகத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தார்.

இன்று அவரின் 52 ஆவது நினைவு நாளாகும்.

—– ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *