POST: 2022-06-26T10:58:56+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 115

தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் பெருங்கனவு!

முனைவர் ஔவை அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை

1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-

“A Shining Example of Self-Help:

… It must be recorded here that this type of spontaneity from many people was due largely to the confidence, faith and trust that the leaders like Messrs M.R. Moodley and Athie Nadasen Odayar generated.

As soon as plans drawn by the experienced architects Messrs Tollman and Partners were ready and approved, a prayer-service was held on the site on 19th June 1977.

The builders then moved on to the site.

Five days later at a solemn and auspicious function Mr Athie Nadasen Odayar laid the foundation stone for the building.

It was completed and paid for in nine months.

Mr Athie Nadasen Odayar advanced another R10 000,00 to purchase chairs, following in the philanthropic tradition of his late father he met all the Society’s financial shortfalls.

He took control and supervised the building of the dining hall sacrificing a great deal of his profitable business time.

In all he had advanced a loan of
R40 000,00.

All loans were duly repaid in accordance with the promises made.

The Merebank Tamil School Society was fortunate to have dedicated and honourable members with noble leaders at the helm.”

தென்னாப்பிரிக்க மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலை சபை அமைப்பின் பொன்விழா மலரில் இடம்பெறச் செய்வதற்காக, அவ்வமைப்பின் கௌரவ செயலாளர் திருமிகு சு.த. முதலி அவர்களுக்கு, 06.10.1986-ஆம் நாளன்று, அந்நாளைய மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் தீட்டிய வாழ்த்துச் செய்தி வருமாறு:-

“தென்னாப்பிரிக்காவில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்கள், 6,000 மைல்களுக்கு அப்பால், கடந்த 126 ஆண்டுகளாகத் தங்கள் கலைமரபைக் கட்டிக் காத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறிந்து நான் பெரிதும் மகிழ்கிறேன்.

இந்தியத் தமிழ்ப் பெருமக்கள் என்மீது தனியாக அன்பு கொண்டுள்ளதையும் அடிக்கடிக் கடிதம் எழுதி என்னை வினவுவதையும் நான் ஒரு பெரும் பேறாகக் கருதுகிறேன்.

ஆங்காங்கே தமிழ்க் கல்லூரிகளும், தமிழ்த் திருமுறைகளை ஓதுகின்ற பயிற்சி நிலையங்களையும், தமிழ்க்கலை பண்பாட்டுக் கூறுகளைப் போற்றி வளர்க்கின்ற முயற்சிகளையும், நான் மகிழ்ச்சியோடு பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

நான் வணங்கிப் போற்றுகின்ற தாய்க்குலத்தவர்களும் என் இரத்தத்தில் இரத்தமான உடன்பிறப்புகளும் உலகெங்கும் பரவி வாழ்கிறார்களென்ற உணர்ச்சி எனக்குப் பெரிய ஊக்கத்தைத் தருகிறது.

தமிழக அரசு உலகெங்கும் பரவியுள்ள தமிழ் மக்கருக்கு எல்லா வகையிலும் தமிழ், கலை, பண்பாட்டுக் கூறுகளை வளர்ப்பதற்குத் தன்னாலான முடிந்த உதவிகளை எப்போதும் செய்யும்.

எங்கிருந்தாலும் வாழ்க! உங்கள் இதயத்தில் தமிழ் உணர்ச்சி தலைசிறந்து ஓங்குக!

என்று நான் வாழ்த்துவதோடு, உலகத் தமிழ்ச்சங்க அமைப்பில் அயலகங்களில் வாழ்கிற தமிழர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து வளர்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடு உலகத் தமிழ்ச்சங்கம் உருவாகி வருகிறது.

தென்னாப்பிரிக்காவிலுள்ள தமிழ் நிறுவனங்கள் இப்பணிக்குத் துணைசெய்யுமென்று நம்புகிறேன்.

உங்கள் விருப்பங்களையும் கோட்பாடுகளையும் அங்கே விழாக்களில் பங்குபெற வரும் அரசு செயலாளர் டாக்டர் ஒளவை நடராசன் வழியாக எனக்கு அனுப்பி வைக்குமாறும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன்.

அண்ணா நாமம் வாழ்க! வாழ்க தமிழ்க்குலம்! என்று விரும்பி வாழ்த்துகிறேன்.

உலகெங்கும் வாழும் தமிழர் மகிழ்ச்சியோடும் வளத்தோடும் வாழ்ந்து சிறப்படைய என் தாயை நினைந்து வாழ்த்துகிறேன்.”

——————————-

பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (39)

பொருள் விளக்கம்

புலவர் பிசிராந்தையார் பாடிய ‘ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே’ (புறம் 191) என்பதற்கு மனமொழி மெய்களால் அடங்கிய எனினும் அமையும் என்று பொருள் கூறுவாரும் உளர் (பழைய உரை).

இதற்கு ஒளவை தரும் விளக்கம்:

‘ஆன்றவிந்தடங்கிய கொள்கை’ என்பது ஆன்றடங்கி அவிந்த கொள்கை என மாறிக் கூட்டுக;

குணங்களால் அமைந்த வழி அடக்கமும் அதுவே வாயிலாக ஐந்தவித்தலும் உண்டாதல் பற்றி இவ்வாறு உரை கூறப்பட்டது.

கிடந்தபடியே கொள்வார்க்கு இது பொருள் என்பார் ஆன்றவிந்தடங்கிய அமையும் என்றார்.

திருமுடிக்காரி கடையெழு வள்ளல்களுள் ஒருவன்;
இவனது குதிரைக்கும் இவன் தன் பெயரை வைத்துப் பேணினான்.

இதனை குதிரைகளும் காரியிவர்ந்து பேரமர்க் கடந்த மாரிஈகை மறப்போர் (158) என்றும் சான்றோர் கூறுவர்.

இதனால் பண்டை நாளில் தலைமக்கள் தம் பெயரையே தாம் வளர்த்து வரும் குதிரைக்கும் இட்டுப் போற்றுவர் என்பது விளங்குகிறது.

பாடவேறுபாடு – தெரிவு செய்தல்

“ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உளவென
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென்று
அறம் பாடிற்றே ஆயிழை கணவ”
என்னும் புறப்பாட்டினை (34)

ஆலத்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மேல் பாடியுள்ளார்.

இப்பாட்டின் மூன்றாம் அடி “பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்” என்று டாக்டர் உ.வே.சாமிநாதையர் பதிப்பில் உள்ளது.

இவ்வடியில் வரும் பார்ப்பார் எனும் சொல்லுக்குப் பாட வேறுபாடு எதையும் ஐயரவர்கள் குறிக்கவில்லை.

ஆனால் ஒளவையவர்கள் பதிப்பில்

‘குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்’ என்று இந்த அடி பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

மேலும் ‘குரவர்த் தப்பிய’ என்பது ‘பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கு’மெனத் திருத்தப்பட்டிருக்கிறது.

இத்திருத்தம் பரிமேலழகர் காலத்திலேயே செய்யப்பட்டிருக்கிறது என்பது திருக்குறளுரையாற் காணப்படுகிறது” என்று ஒளவையவர்கள் கூறியுள்ளனர்.

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு’
என்னும் திருக்குறளுக்குப் பரிமேலழகர் ‘பெரியவறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தினீங்கும் வாயில் உண்டாம்.

ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அது இல்லை’ என்று உரை கூறியுள்ளார்.

அதற்கு விளக்கமாகப் ‘பெரிய அறங்களைச் சிதைத்தலாவது ஆன்முலை அறுத்தலும் மகளிர் கருவினைச் சிதைத்தலும் பார்ப்பார்த் தபுதலும் முதலிய பாதகங்களைச் செய்தல்’ என்றுரைத்திருக்கிறார்.

திருக்குறண் மூலமும் பரிமேலழகர் உரையும் எனும் நூலைப் பதிப்பித்த ஆறுமுக நாவலர், இவ்வுரையின் அடிக்குறிப்பில் இப்பாட்டினை எடுத்துக்காட்டியுள்ளார்.

அதில் மூன்றாம் அடி ‘குரவர்த் தப்பிய’ என்றுதான் அமைந்துள்ளது.

சங்க இலக்கியங்கள் அச்சில் வருதற்கு ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்னரே அவற்றை ஓலைச்சுவடியிலிருந்து பெயர்தெழுதிப் படித்தவர் எஃப்.டபுள்யு.எல்லிஸ்.

அவர் திருக்குறளின் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

அக்கையெழுத்துச் சுவடியில் இப் பாடலின் மூன்றாம் அடி ‘குரவர்த் தப்பிய’ என்றே காணப்படுகிறது.

‘பார்ப்பார்த் தப்பிய’ என்ற பாடவேறுபாடும் உண்டு என்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

(நூலாசிரியரிடம் இச்செய்தியைத் தெரிவித்தவர், எல்லீசின் திருக்குறள் கையெழுத்துப் படியை நேரில் பார்த்து வந்த பேராசிரியர் ப. மருதநாயகம் அவர்கள்)

19 புறநானூற்றுச் சுவடிகளை ஆராய்ந்து அதை அழகிய முறையில் பதிப்பித்த டாக்டர் ஐயரவர்களின் பார்வையில் இப்பாடவேறுபாடு படாமல் தப்பியது வியப்பளிக்கிறது.

புலவர் பெயர் ஆராய்ச்சி
பெபயர் அறியப்பெறாத புலவர்களுக்குப் பெயர் சூட்டுதல்
டாக்டர் உ.வே.சா.வின் புறநானூற்றுப் பதிப்பில் 340, 361 ஆகிய பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர் காணப்படவில்லை;

ஆனால் ஔவை உரைநூலில் முறையே அள்ளூர் நன்முல்லையார், கயமனார் என்னும் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.

பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் நற்றிணைப் பதிப்பில் பெயரில்லாப் புலவர்கள் ஒளவையின் பதிப்பில் கண்ணகனார் (8), குடவாயிற் கீரத்தனார் (10), நல்வேட்டனார் (22), பாலை பாடிய பெருங்கடுங்கோ (84) எனப் பெயர் சூட்டப்பெறுகின்றனர்.

சங்க இலக்கியம் சமாசப்பதிப்பில் (1940) நற்றிணை – ஆசிரியர் பெயர் காணப்படாதவை என்று 56 பாடல்கள் சுட்டப்படுகின்றன.

ஒளவை பதிப்பில் அந்தப்புலவர்கள் மட்டுமன்றி நற்றிணையில் எல்லாப் புலவர்களும் பெயர் பெறுகின்றனர்.

புலவர் பெயர் – பாடவேறுபாடு தெரிவுசெய்தல்

புறம் 224 பாட்டைப் பாடியவர் கருங்குழலாதனார் என்று ஐயரும் கருங்குளவாதனார் என்று ஒளவையும் கொள்கின்றனர்.

இதற்கு அவர் தரும் விளக்கம் வருமாறு:

கருங்குளவாதனார் பெயர், கருங்குழலாதனார் என்று அச்சுப்படியில் காணப்படுகிறது.

அது பொருந்தாது.

கருங்குளம் என்னும் ஊரினரான ஆதனார் என்பது கருங்குளவாதனார் என்பதன் பொருள்.

கருங்குளம் பாண்டிய நாட்டில் இப்போது கோட்டைக் கருங்குளம் என வழங்குகிறது.

இது கருங்குளம் வளநாட்டுக் கரிகால சோழநல்லூர் ஆன கருங்குளம் (Annual Report on Epigraphy, No. 269/ 1928) எனப்பட்டது.

இதனால் இவ்வூர் கரிகாற்சோழனால் ஆதனாருக்குத் தன் பெயரால் தரப்பட்டது என்பது தெளிவாம்.

கருங்குளவாதனார் பெயரை, ஏடெழுதினோர் ‘ள’கரதை, ‘ழ’கரமாக்கி, ‘வ’கரத்தை ‘ல’கரமாகமாற்றிக் கருங்குழலாதனார் என மாற்றி விட்டனர்.

நற்றிணையில் 105ஆம் பாடலைப் பாடியவர் திருமாறன்; இப்புலவரை உறுப்புக் குறையுள்ளவராக்கி, அதற்கான கதையும் கூறி அவரை முடத்திருமாறன் என்று அழைத்து வந்தனர்;

ஒளவையவர்கள் தமது வரலாற்று அறிவின் துணைகொண்டு, மேற்சுட்டிய புலவர் முட்டம் என்னும் ஊரினர் என்பதை நிறுவி, அப்புலவரின் பெயரிலுள்ள முடத்தை நீக்கி, முட்டத் திருமாறன் என்னும் பெயர் சூட்டி, நிமிர்ந்த நடையுடன் உலாவச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர்-விளக்கம்

பதிற்றுப்பத்து நான்காம் பத்தின் பாட்டுடைத் தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். இச்சேரமன்னன் களங்காயால் கண்ணியும் நாரால் முடியும் செய்து அணிந்து கொண்டதால் அப்பெயர் பெற்றான்;

அதற்குக் காரணம் அவன் இளமையில் செய்த சூளுரை.

இவன் தாயத்தார் நன்னன் என்பவன் துணையுடன் இவனது நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர்;

அந்த மன்னனை வென்று நாட்டை மீட்கும் வரையில் காயையும் நார்முடியையும் அணிந்து இருந்தான்.

அவன் நன்னனின் காவல் மரத்தை வெட்டி நன்னனைக் கொன்று நாட்டை மீட்டான்; நார்முடி களைந்தான்; பொன்முடி சூட்டிக் கொண்டான்.

அதற்குப் பின்னரும் பழைய பெயராலேயே அம்மன்னன் அழைக்கப்பட்டான் எனத் தெளிவுறுத்துகின்றார்.

இதுபோன்ற – விளக்கத்தால், நெடுங்கழுத்துப்பரணர் நெடுங்களத்துப் பரணர் என்றும், போர்வைக் கோப்பெருநற்கிள்ளி போரவைக் கோப்பெருநற்கிள்ளி என்றும் பெயர் பெறுகின்றனர்.

நூல் முன்னுரையை முன்னரெல்லாம் ‘தமிழ்த்தாய் வாழ்க’ எனவும்,

பின்னர்க் கடவுள் வாழ்த்தொடு தொடங்குவதும், முடிப்பதும் அவர்களது வழக்கமாகும்.

அப்போதைய உரைகாரரரும் பதிப்பாசிரியன்மாரும் தமிழைத் தெய்வமாகவே போற்றினர்:

‘இம்முயற்சியில் புகுத்தி நடத்தி ஊக்கமளித்து அடியேனைப் பாதுகாத்தருளும் தமிழ்த்தெய்வத்தை அனவரதமும் வந்திக்கிறேன்”

வே. சாமிநாதையன் (30.12.1927 சிலம்பு, முகவுரை)

இரு பதிப்பாசிரியன்மாரும் தங்கள் ஐங்குறுநூறு பதிப்பைத் தத்தம் புரவலருக்கு உரிமை செய்திருப்பதையும், நன்றி நவின்றிருப்பதையும் காணலாம்.

தமிழுக்குக் கேடு சூழும் கெடுமதியாளரைச் சாடும் அறச் சீற்றம் ஒளவையவர்களின் உரையிடையே வருவதுண்டு.

பதிப்பு/உரை முயற்சிகளில் அவர்கள் எதிர்கொண்ட இடுக்கண்களும் இன்னல்களும் அச்சுறுத்தல்களும் அழிம்புகளுமே அதற்குக் காரணம் எனலாம்.

உரைவேந்தரின் உரைகள்/விளக்கங்கள் எல்லாம் புதியவை; பொருத்தமானவை; அறிவுக்கு விருந்தளிப்பவை; மேலும் சிந்திக்கவைப்பவை.

எதையும் கூர்ந்தும் ஆழ்ந்தும் நோக்கும் ஒளவையவர்களின் செழுந்தமிழ்ப் புலமை வளத்திற்கும், ‘கண்டறியாதன கண்டு’ அவற்றை உரையிடை விண்டுரைக்கும் திறத்திற்கும் சான்றாக அமைபவை.

ஔவையின் ஆய்வுநெறி ஔவையியம் எனத்
தனிப்பெருஞ் சிறப்புடன் திகழ்கிறது.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *