POST: 2022-07-01T09:50:49+05:30

மானுடம் தாம் அல்லர் !

முதுமை நெருங்கத் தலைப்படும் போது உடம்பும் – உயிரும் பல தொல்லைகளுக்கு ஆளாகின்றன .

அந்த நிலையில் தான் மருத்துவர்கள் தலையிட்டுத் தக்க மருந்துகளைத் தந்து வாழ்நாளை நீட்டிக்கும் வல்லமை வாய்ந்தவர்களாக உலகெங்கும் விளங்குகின்றனர் .

ஆய்ந்தாய்ந்து மருந்துகளை அளிக்கும் மருத்துவர் – மாமனிதர்களாக போற்றப்படுகின்றனர் .

எப்படியோ ! மருத்துவரை அருளாற்றல் வாய்ந்தவராக நம்பி வைத்தியநாதன் – மருந்தீசன் என்றே தாங்கள் வழிபடும் கடவுளுக்குப் பெயரிட்டார்கள்.

மருத்துவம் நாளும் வளர்ச்சி பெறுவது மக்கள் நல்வாழ்வையே மருத்துவம் தன் நோக்காக இடையறாது வளர்ந்து கொண்டுள்ளது .

எனவே மருத்துவர்களைக் கண் கண்ட கடவுளர் என்றே கை தொழுது வணங்குகிறோம் .

என் அருமைத் துணைவியார் தாரா நடராசன் மழலையர் மருத்துவத்தில் மாமணியாக விளங்கினார் .

அவர் தந்த நல்லுணர்வால் எங்கள் ஒளவை குடும்பத்தில் மட்டுமே முப்பதுக்கு மேற்பட்ட மருத்துவர்கள் தாயகத்திலும் – அயல்நாடுகளிலும் புகழோடு பணியாற்றுகின்றனர் .

எனக்கு நேர்ந்த சர்க்கரை நோய் என்னை இன்று வரை எண்ணற்ற இடர்களுக்கு இடையில் வாழ வைத்திருப்பது மருத்துவர்களின் காக்கும் கரங்களே !

என் இதய நோய் மருத்துவத்திலகம் டாக்டர் சண்முகசுந்தரம் அவர்களை நாளுக்கு மூன்று முறையாவது நினைப்பதுண்டு .

சிறுநீரக மருத்துவம் செய்யும் மருத்துவச்சுடர் கேப்டன் ஏ சி மணி அவர்கள் ,திருச்சியில் புகழோங்கித் திகழும் டாக்டர் ஸ்ரீதர் விக்கிரமன் , சென்னையில் காது – மூக்கு – தொண்டை மருத்துவத்தில் சிகரமாக விளங்கும் டாக்டர் கே கே இராமலிங்கம் – டாக்டர் இரவி இராமலிங்கம் – டாக்டர் இரவி ராஜன் , டாக்டர் இராஜராஜன் ,
என் இளவல் மழலையர் நரம்பியல் மருத்துவர் மெய்கண்டான் .

என் மக்கட் செல்வங்கள் டாக்டர் கண்ணன் – டாக்டர் சாந்தி கண்ணன் – டாக்டர் தாரா நிகிதா கண்னன்,டாக்டர் பரதன் ,பல் மருத்துவர் டாக்டர் குமணன் ,சரும மருத்துவர் டாக்டர் தினேஷ் குமார் ,என்னுடைய குடும்ப நல மருத்துவர் டாக்டர் குமரன் ,டாக்டர் எழில் ,என்னுடைய பாதங்களை பாதுகாத்து மீட்டுத்தந்த டாக்டர் அரவிந்த் இராஜகோபாலன் .

நாள் தவறாமல் ஆறாண்டுகளாக வந்து என்னைத் தொட்டு நீவும் இலக்கியச் செறிவோடு – இயன்முறை மருத்துவராகவும் பத்மானந்தம் ,கண் மருத்துவர் ஜெயந்தி ஆனந்த் ,என்னை இன்று வரை கோவிட்டுத் தொற்றிலிருந்து மீட்டு மூச்சு விடச் செய்துள்ள டாக்டர் ரேலா , டாக்டர் பிரியா இராமச்சந்திரன் ,துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன் ,இவர்களையெல்லாம் நான் நினைவு கூர்ந்து நெகிழ்கிறேன் .

இன்றைய மருத்துவர் திருநாளில் (சூலை 1) இந்தக் கடவுளர்கள் நீடு வாழ – அச்சான்றோர் மாமுனிகள் நெடும் புகழ் ஓங்க !

வாழ்க ! என மனங்கனிந்து வாழ்த்துகிறேன் .

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *